காதல் நிலவு ஊர் திரும்ப 45000 ஆண்டுகள் (சிறுகதை)

காதல் நிலவு ஊர் திரும்ப 45000 ஆண்டுகள் (சிறுகதை)

   — அகரன் —-

(குறிப்பு :-இது ஒரு காதல் கதை அல்ல. அதனையும் தாண்டி விரும்பினால் படியுங்கள். உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.) 

அவனுக்கு மூன்று பெண்களும் முக்கியமானவர்கள். ஒரு பெண் அருகில் வாழ்வது அவஸ்தையானதுதான். அதை சரி செய்ய அவனால் இனி முடியாது. அவன் இதை தீர்மானிக்கவில்லை. அந்த மூன்று பெண்களும் தான் அவனைத் தீர்மானித்தார்கள். ஆதாமின் எதிர்காலத்தை ஏவாள் தீர்மானித்தது போல. 

இங்கே அதில் ஒரு பெண்ணை பற்றி தான் சொல்லப் போகிறேன். ஏனென்றால் அவள் நிலவு. அவன் இருட்டாய் இருந்த போது சுடாத வெளிச்சத்தை கொடுத்தவள். மற்ற பெண்களில் ஒருத்தி பூமி போன்றவள். மற்றவள் சூரியன் போன்றவள். 

அந்த நிலவுக்கு பெயர் ‘பஸ்கலின்’.சோவியத் யூனியனிலிருந்து உடைந்த நிலத்தை பூர்விகமாகக் கொண்ட, உடையாத நிலவு அவள். அப்போது பாரிஸ் நகரத்தை அழகாகக்கிக்கொண்டிருந்தாள். பேரழகி பட்டத்துக்கான எல்லா விதிகளுக்கும் தயாராகிக் கொண்டிருந்தது அவளது உடல்.  

பல்கலைப் படிப்பை ஒரு வருடம் ஆறப்போட்டு விட்டு தன் கல்வியை தொடர இந்தப் ‘பணம்’ என்ற பேயை விரட்டி பிடிக்க அந்த உணவகத்தில் பரிசாரகியாக வேலை செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு 18+ ஆனதும் பெற்றோர் கூண்டிலிருந்து தட்டிவிடும் தாய்ப்பறவை போல் வார்த்தைகளால் தள்ளிவிட்டார்கள். அவளே அவள் இறகுகளை தயாரித்துக்கொண்டிருந்தாள். 

** 

தாசன், இலங்கையின் வடக்குப் பகுதியில் குண்டு சத்தங்களின் இடையே பிறந்தவன். அந்த அரசாங்கம் இவன் பகுதிகளுக்கு விமானங்களை அனுப்பிக் கொண்டிருந்தது. எங்கு குண்டு போட்டாலும் அரசாங்கத்துக்கு நட்டமில்லை. அங்கு தமிழர்கள் மட்டுமே இருந்தனர். இவனும் நீண்ட சீவன் எல்லா குண்டுகளிலிருந்தும் மீண்டு, பரீசின் உணவு விடுதியில் வேலைக்கும் சேர்ந்துவிட்டான்.. 

பரிசில் அகதித்தமிழர்கள் உணவகங்களில் சமையல் வேலையில் சேர்ந்து விடுவதில் விற்பன்னர்கள். ஊரில் ‘கறிக்கு உப்பு போடுவதா?’ என்று கேட்பவனும் இங்கு சில ஆண்டுகளில் தலைமை சமயலாளனாகி விடுவான்.  

அவர்கள் தலையில் தேங்கி உள்ள கடனும், பிரெஞ்சு மொழி தெரியாததால் சமையலறை கொடுக்கும் மொழிப் பாதுகாப்பும், அவர்களை அந்த வேலையை தேடி படையெடுக்கச் செய்தன. 

தாசன் வேலைக்கு செல்லும் ஆரம்ப நாட்களில் அந்த உணவகத்தின் பிரதான வாயிலால் சொல்வதை அறவே விரும்புவதில்லை. கள்ளவாசலை தேடி பின்பக்கத்தால் நுழைந்து தன் வேலை அறைக்குள் சென்று விடுவான். அது அவனுக்கு பழக்கப்பட்டதுதான். நாட்டை விட்டு வெளியேறிய பின் எத்தனை கதவுகளை அவன் கடந்து இருக்கிறான்? எல்லாவற்றிற்கும் ஒரு பயம் தான் காரணம்.  

பிரதான வாயிலால் சென்றால் அங்கு நிற்கும் இளம் பரிசாரகிகளுக்கு bonjours (வணக்கம்) சொல்வது மட்டுமில்லாமல் அவர்கள் கன்னங்களில் தன் கன்னங்களால் ஒத்தடம் கொடுத்து உதடுகளால் பல்லி சத்தமிடுவது போல மெல்லிய சத்தமிட்டுச் salut ça va ? (நலமா) என்று கேட்பது பிரெஞ்சு மக்களின் நடைமுறை. 

சம வயது பெண்களோடு பேசினாலே பிள்ளை வந்துவிடும் என்ற அசையாத நம்பிக்கை கொண்ட தாசனால் இது முடியவில்லை. 

** 

இவன், தங்களை சந்திக்காமல் எப்படி உணவகத்துக்குள் நுழைகிறான் என்பதை நோட்டமிட்டு, இவன் உளவியல் ஜாதகத்தை எல்லோருக்கும் தலைப்புச்செய்தி ஆக்கிய பெருமை பஸ்கலினுக்கு உண்டு. அந்த சம்பவத்திலிருந்து இருவருக்கும் ஒரு பற்றுதல் உருவானது. 

எதற்கெடுத்தாலும் தாசன் ஆங்கிலத்தில் பேச முற்பட்டான். ஒரு நாள் அவள் உதடுகளால் கொடுத்த அறையிலிருந்து ஆங்கிலத்தில் பேசுவதை கைவிட்டுவிட்டான். 

அவள் சொன்னாள், 

‘’ நீ இப்போது வாழ்வது பிரான்ஸ், இங்கு எப்படி நீ ஆங்கிலம் பேசுவதை எதிர்பார்க்க முடியும்?‘’ 

‘’ என் நாட்டை பிரஞ்சுக்காறர் ஆழவில்லையே?’ 

‘’தாசன் உன் ஒருவனுக்காக பிரஞ்சசுக்காரர் ஆங்கிலம் கற்க முடியாது. எனது பெற்றோர் உக்கிறேனில் உள்ள செர்ணோபிள் பகுதியைச் சேர்ந்தவர்கள். நாங்களும் அகதி தான். இந்த மண்ணின் மொழியைத் தானே நாம் பேச வேண்டும்?‘’ 

‘’சரி நீ எனக்கு உதவ முடியுமா?‘’ 

‘நிச்சயம்!‘ 

இப்படித்தான் அவர்கள் உறவு ஆரம்பித்தது. 

** 

அவள் ஒரு பிரஞ்சுக்காறி இல்லை. ‘வெள்ளையாய் இருப்பவர் எல்லோரும் ஆங்கிலேயர்’ என்ற சிந்தனை சிதறியது போல, பிரான்சில் வெள்ளையாய் இருப்பவர் எல்லோரும் பிரஞ்சுக்காரர் இல்லை என்ற அறியாமையும் அகன்றது.  

தாசனிடம் அத்திவாரம் இட்டிருந்த கலாச்சார, மொழிக் கூச்சத்தை பஸ்கலின் சிதறடித்து கொண்டிருந்தாள். தன்னைவிட நான்கு வயது குறைந்த பெண்ணால் இத்தனை தைரியமாக இருந்துவிட முடிந்தது அவனை ஆடவைத்தது. 

ஒரு அகதியின் மனநிலையை அறிந்து கைதேர்ந்த சாத்திரக்காறிபோல் செயற்பட்டாள். 

அந்தக் உணவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக மக்கள் வரமாட்டார்கள். அமைதியாக இருக்கும். அந்த நாட்களில் சமையலறையில் தாசன் மட்டுமே வேலை செய்தான். சில நாட்கள் செல்ல தானே விரும்பி ஞாயிற்றுக்கிழமையில் பஸ்கலின் வேலை செய்ய ஆரம்பித்தாள். அங்கு அவர்கள் இருவரும் வேலை செய்தார்கள்; அதை விட நிறைய கதைகளை பகிர்ந்தார்கள். 

அவளை முழுமையாக அறிய ஞாயிற்றுக்கிழமைகள் உதவின. 

** 

அவளுக்கு ஒரு வயதாக இருந்தபோது சோவியத் யூனியன் என்ற சிகப்பு பேரரசு உடையும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. உக்ரைன் பகுதியில் அவர்கள் வாழ்ந்தாலும் அங்கும் அகதியாகவே இருந்தனர். அவர்கள் பெற்றோர் சேர்நோபில் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள். 1986 சித்திரை 26 இரவு 1 மணி 53 வது நிமிடத்தில் வெடித்த அணு உலையால் அவர்கள் விஞ்ஞான அகதிகளாக வாழ்ந்து வந்தனர். 

தாயும் தந்தையும் பிள்ளை பெற்றுக்கொள்ள மூன்று வருடமாக பயந்திருந்தனர். அணுக்கதிர்தாக்கத்தால் செர்னோபில் மக்களின் குழந்தைகள் அங்கக் குறைகளோடு அதிகமாக பிறந்ததே அதற்கு காரணம். 

1989இல் பஸ்களின் பிறந்து அவள் ‘பூரண பெண்ணாய்’ இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான் அவளது தாய் உண்மையான மூச்சை விட்டாள். அதன் பின்னர் அவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. 

அணுவுலை வெடித்தபோது, திருமணமாகி வயிற்றில் 6 மாத சிசுவை அவளது சித்தி ‘லூட்மில்லா’ தாங்கி இருந்தாள். அவள் காதல் கணவன் தீயணைப்பு படையில் வேலை செய்த அன்றைய சோவியத்தின் அழகான இளம் வீரர். அணு உலை தீயை அணைக்கச் சென்ற அவரும் அவர் குழுவும் ஒரு மாதத்தில் மொஸ்கோவில் அணுக்கதிர் வைத்திய சாலையில் இறந்து போனார்கள். 

அவர் இறக்கும் தருணம் மட்டும் வைத்தியர்களுக்கு தனது வயிற்றில் குழந்தை இருப்பதை காட்டி கொள்ளாமல் தன் கணவரை உடன் இருந்து பார்த்துக்கொண்டாள் லூட்மில்லா. அவள் கணவன் இறக்கும்போது அந்த உடல் 1800 கதிரலையை காட்டியது. 400 கதிரலையே ஆபத்தானது. 

லூட்மில்லாவுக்கு அப்போது 23 வயது. வயிற்றில் வளர்ந்த குழந்தை 800 கதிரலையோடு பிறந்து 4 மணிநேரமே உயிர்வாழ்ந்தது. 

அந்தக் கொடும் அனர்ந்தத்தால் ஏழு மில்லியன் செர்ணோபிள் மக்கள், எந்தப் பொருட்களையும் எடுக்காமல் ஏதிலிகளாக வெளியேற்றப்பட்டனர். 

இப்படியான தனது கதைகளை அவள் கூறும்போது மணமகள் கைகளில் மலர்கொத்து இருப்பதைப் போல அவள் கைகளில் நுரை நிறைந்த பீர் (beer) இருக்கும். சோவியத் யூனியனில் பொறியியலாளராக இருந்த தன் தந்தை இங்கே பாரவூர்தி ஓட்டுனராக மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார் என் அம்மாவோடு. என்று சொல்லி முடிப்பாள். சிரித்துக்கொண்டே. கண்கள் சிவந்திருக்கும் அந்தி வானம் போல. அது பீர் இன் விளையாட்டா? நிலமிழந்த வலியின் விளையாட்டா? என கடைசிவரை அறிய முடியவில்லை. 

** 

வழமையாக தாசன் இரவு 11h 42க்கு இறுதி மின்வண்டியை பிடித்துவிடுவான். அதிகாலை 1h 30 நிமிடத்திற்கு தங்குமிடம் சென்றடைவான். அன்று வேகமாக ஓடிச்சென்று தடை தாண்டிய போதும் மின்வண்டி கதவை பூட்டி விட்டது. அடுத்த வண்டி குளிர் இரவில் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டும். வேறு வழியற்று ‘உணவகத்தில் தங்குவோம்’ என்று திரும்பி வந்தான். உணவு விடுதியை பூட்டிவிட்டு பஸ்கலின் வெளியேறிக்கொண்டிருந்தாள். 

‘’ என்னை உள்ளேவிட்டு பூட்டிவிடு’’ 

‘’ ஏன்’’ 

‘’என் மின்வண்டி (le train) சென்றுவிட்டது’’ 

‘’ மன்னித்துவிடு, எனக்கு அதற்கு அனுமதியில்லை’’  

‘’ அப்படியா’’ 

‘’ நீ ஏன் என் அறையில் இந்த இரவை போக்கக்கூடாது? ‘’  

‘’ இல்லை.. இல்லை.. நான் வேறு வழி பார்க்கிறேன், நன்றி’’ 

‘’என்ன வழி சொல்லு’’ 

‘’புகையிரத நிலையத்தில் (la gare) நிற்ப்பேன். ‘’  

‘’ இரவு பூராவுமா? ‘’ 

‘’ உனக்கு உண்மையான நோய்தான்’’ 

‘’ இல்லை.. இல்லை.. ‘’ 

‘’ தாசன்! என் அறை அருகில்தான் இருக்கிறது. நீ தாராளமாகத் தங்கலாம். உன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. வந்துவிடு. நான் உன்னை சாப்பிடப்போவதில்லை’’ 

-என்று பனிக்கட்டிச் சிரிப்பை பெய்தாள்.  

அவன் மீண்டும் மறுத்தான். பால் கறப்பதற்கு கன்றை இழுத்துக்கட்டுவதுபோல அவனை இழுத்துக்கொண்டு போனாள். அவன் உள்ளங்காலும் வியர்த்தது. 

அவளைப் போல் அவள் அறை மிக நேர்த்தியாக இருந்தது. சிறிய இடத்தில் நிறைந்த ஒழுங்குகளோடு அறையை அமைத்திருந்தாள். புத்தகங்களும், ஓவியங்களும் நிறைந்திருந்தது. அவன் வாழ்நாளில் கண்ட அழகான அறை அதுதான் உறுதியாகச் சொல்லலாம். 

இரண்டு அழகான குவளையில் பீர்றும், இறைச்சி வத்தல்களோடும் வந்தாள்.  

‘’ இல்லை நான் பீர் குடிப்பதில்லை. ‘’ 

‘’வைன் இருக்கிறது தரவா? ‘’  

‘’ இல்லை இல்லை நான் அற்ககோல் பாவிப்பதில்லை’’ 

உலகிலேயே அதுவரை பார்த்திராத அதிசயப் பூச்சியை பார்ப்பது போல பார்த்தாள். 

‘’தாசன் நீ இன்னும் பாரிசில் வாழவில்லை. நீ இன்று பீர் குடிக்கிறாய்! என் அறை பீர் குடிக்காதவர்களை விரும்புவதில்லை. நீ ‘பக் பக்’ அதிசயம்தான்’’. (பிரான்சில் இந்தியத்தோலை குறிக்க பயன்படும் குறிச்சொல் பக் பக்,  இது பாகிஸ்தானியரால் தோன்றியது) 

அழகான சூழலில் அதிசய பொழுதில் தன் வாழ்வின் முதல் பீரை தாசன் அருந்தினான். அப்போது அவள் கேட்டாள்,  

’ ஏன் நீ அகதியானாய்? ‘’  

‘’நான் பிறந்து மூன்று மாதத்தில் என் தந்தை வயலிலிருந்து உழவு வண்டியில் வந்த போது ராணுவம் சுட்டு விட்டு அவரை ‘போராளி’ என்று அறிவித்தது. அவர் ஏற்றிவந்த நெல் கதிரை போட்டு அவரை எரித்து விட்டார்கள். 

அப்போது என் அக்காவிற்கு நான்கு வயது. அவள் 18 வயதுக்கு சில மாதம் இருந்தபோது போராளிகளுடன் சேர்ந்து விட்டாள். ‘அத்தனை அமைதியானவளா ஆயுதம் தூக்கினாள்?’ என்பதை என்னால் இன்றுவரை நம்ப முடியவில்லை. அவளுக்கு இப்போ எட்டுவருட போராட்ட அனுபவம். 

என் தாய் ‘எங்கேயோ போய் உயிர் வாழ்’ என என்னை அனுப்பி விட்டாள். யுத்தம் அங்கு ஆரம்பம் ஆகிவிட்டது. இந்த ஆண்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை முறித்து ‘போராளிகளை அழிப்போம்‘ என்று சத்தியம் செய்து இருக்கிறது. நான் கோழை போல உயிரைக் காத்து உன்னோடு பீர் குடிக்கிறேன்.’’ 

அவன் கண்களை விட அவள் கண்கள் கலங்கி இருந்தது. அவள் அவனுடைய கரங்களைப் பற்றித் தன் சிவந்த உதடுகளால் உயிரின் ஆழமான ஒரு முத்தத்தை வைத்தாள். 

பீர் குறையக் குறைய மூன்று மொழிகளை குழைத்து தன் கதைகளை புரியவைத்தான். 

‘இலங்கை தீவில் இத்தனை கொடூரங்களா?’ தான் அறியவில்லையே என்று அவதிப்பட்டாள். 

பசியில் வாடிய பிள்ளை பால் குடித்ததுபோல பீரை உள்ளிழுத்து ‘’உன் போராளிகள் வெற்றி பெற்றால் நீ சென்றுவிடுவாயா ?‘’ என்றாள். 

‘’ஆம் நிச்சயம். நம் நாட்டை கட்டியமைக்க நிறைய மனிதர் தேவை நீயும் வரலாம்’’ என்றான். அடுத்த ஆண்டோடு பேரழிவு நிகழ்ந்து போராட்டம் மௌனமாவதை அறியாமல். 

அதற்குமேல் தாசனுக்கு நினைவுகள் இல்லை. விடிந்தபோது காற்று அடைத்த மெத்தையில் தூங்கவைக்கப்பட்டிருந்தான். 

மின்சாரம் தாக்கியவனைப்போல புறப்பட தயாரானான். 

தேவதைபோல கையில் தேநீரோடு வந்தாள். 

‘’உன் கதைகளைக் கேட்டு உன் இரவை நோக வைத்துவிட்டேன்’’ என்றாள்.  

தாசன், மனமின்றி படியிறங்கி வரும்போது, கையசைத்து இறுதியாய் இதயத்தால் ஒன்று சொன்னாள், 

’’ஒரு நாள் உன் நிலத்தை நீ அடைவாய்’’ 

(நிலவின் கதை முடிந்தது) 

தாசனாலும் அவளுக்கு ‘’நீயும் ஒரு நாள் உன்னிலத்தை அடைவாய்’’ என்று சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவள் செர்ணோபிள் செல்வதானால் 45000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 

அதைவிட- 

அன்றுதான் அவளைப் பார்ப்பது கடைசித்தடவை என்று அவனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் வெக்கத்தை விட்டு அவளை அணைத்து மொத்த அன்பை தெரிவித்திருக்கலாம்.