தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு அபாய எச்சரிக்கை

தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு அபாய எச்சரிக்கை

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

இலங்கையில் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலமும் ஈடேற்றமும் எப்படியிருக்கும்? என்ற கேள்வி, சமூகத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திப்போரின் கவலையோடுள்ளது. ஏனென்றால், அரசியல், கல்வி, பொருளாதாரம், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் பலவீனமானதொரு நிலையிலேயே தமிழ்ச்சமூகம் இன்றிருக்கிறது.  

இதை எவரும் மறுக்கவே முடியாது. இதிலிருந்து இப்போதைக்கு மீளக்கூடிய நிலை தென்படவேயில்லை. இதையும் நீங்கள் மறுக்கவியலாது. இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகிப் பின்னடைந்து விடும். இதையெல்லாம் எளிதில் யாரும் கடந்து செல்ல முடியாது. அப்படி விளையாட்டுத்தனமாகக் கடந்து செல்ல முற்பட்டால் அதற்கான தண்டனையை – நெருக்கடியையும் பின்னடைவையும் – தமிழ்ச்சமூகம் சந்தித்தே ஆக வேண்டும். 

முதலில் தமிழ்ச்சமூகம் இன்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டுக் கொள்வோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, நிலம் மற்றும் தனியார் காணி அபகரிப்புப் பிரச்சினை, படைகளின் நிலை கொள்ளல், கடல் ஆக்கிரமிப்பும் கடலோரத்தில் தொழில் ஆக்கிரமிப்பும், அரசியற் கைதிகள் விவகாரம், ஜனநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்படும் அச்சறுத்தலும் ஏற்படுத்தப்படும் நெருக்கடியும், மரபுரிமைகள் மீறப்படுதல், தொல்லடையாள மையங்களை இனங்காணுதல் என்ற பேரில் முன்னெடுக்கப்படும் அடையாள அழிப்பு முயற்சிகள், வரலாற்று மறுதலிப்புகள், தொழில்வாய்ப்பின்மை, தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கான ஆதவற்ற நிலை, பிரதேசங்களின் அபிவிருத்தியில் சுயாதீனமற்ற தன்மையும் இடையீடுகளும், பிரதேச அபிவிருத்திக் குறைபாடுகளும் தவறுகளும் அரச நிர்வாகத்தில் அதிகரித்துக் காணப்படும் அரசியல் தலையீடுகளும் மத்தியின் அழுத்தமும், மாகாணசபையை சரியாக இயங்க விடாமல் செய்தல், அதற்கான அதிகாரப் போதாமைகள், இயற்கை வளச் சுரண்டலைக் கட்டுப்படுத்தாமை, அதை மேலும் ஊக்குவிக்கும் தவறான போக்கு, இளையோருக்கு எதன் பொருட்டும் வழிகாட்ட முடியாத நிலைமை, இனமேலாதிக்கப் பிரச்சினைகள், சமூக முரண்பாடுகள், சமூக நீதியைப் பேணமுடியாமை, ஜனநாயகப் போதாமை, போராளிகளின் போருக்குப் பிந்திய நிலைமை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் தொடரும் அவலத்துக்கான நிரந்தரத் தீர்வு, போரில் உளச் சிதைவடைந்தோரின் பாதுகாப்பும் மீள் வாழ்க்கையும், போராளிப் பெண்கள் பருவ வயதைக் கடந்தும் வாழ்வில் நிலைகொள்ள முடியாத நிலைமை, போரினால் உடல் உறுப்புகளை இழந்தோர் (மாற்றுவலுவுடையோரின் சிக்கல்கள்…) போர்க் குற்றம் தொடர்பான விவகாரம், மீள நிகழாமைக்கான உத்தரவாதம், அரசியல் அதிகாரம் என ஒரு நீண்ட பிரச்சினைகளின் பட்டியல் உண்டு. இவற்றை விட இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. 

இதில் பலவற்றுக்கு அரசு தீர்வைக் காண வேண்டும். சிலவற்றுக்கு அரசும் அரசுடன் இணைந்துமே தீர்வைக் காண முடியும். சிலவற்றுக்குத் தமிழ்ச்சமூகம் தனக்குள் தீர்வைக் காணலாம். ஆனால், இவை எதற்கும் எந்த நிலையிலும் தீர்வு காணப்படவில்லை. தீர்வைக் காணக் கூடிய முயற்சிகளும் விசுவாசமாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான ஏதுநிலைகளும் (நம்பிக்கையும்) திட்டங்களும் இல்லை. புலம்பெயர் கட்டமைப்புகள் மற்றும் மக்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடிய விசயங்களும் உரிய திட்டமிடலும் செயல்முறையும் இல்லாமல் வீணாயின. மாகாணசபையின் மூலமாக தீர்க்கப்பட்டிருக்கக் கூடிய விசயங்கள் கூட உரியமுறையில் கவனிக்கப்படவில்லை.  

இதைக்குறித்தெல்லாம் பல்வேறு உரையாடல்கள், கவனப்படுத்தல்கள், சிறிய அளவிலான முயற்சிகள் நடந்தாலும் முழுக்காயத்தையும் ஆற்றக் கூடிய எந்த விதமான (உருப்படியான) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. 

என்பதால்தான் நம்முடைய காலடியிலேயே அத்தனை பிரச்சினைகளும் அப்படியே எரியும் நெருப்பாகவும் கனலும் தணலாகவும் உள்ளன. வரவரப் புதிய புதிய பிரச்சினைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அரசும் ஆட்சியாளர்களும் அவர்கள் மையப்பிரச்சினையைச் சுற்றி புதிய அயற் பிரச்சினைகளை – உப பிரச்சினைகளை உற்பத்தி செய்து அவற்றின் மூலம் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது ஒரு உபாயமாகும். அந்த உபாயத்தில் அவர்கள் வெற்றியடைந்தே உள்ளனர். 

ஆனால், நாம்? 

யுத்தத்திற்குப் பிறகு தமிழ்ச் சமூகம் எத்தகைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது? அரசியலில்?பொருளாதாரத்தில்? பண்பாட்டில்? ஜனநாயக அடிப்படையில்? சமூக வளர்ச்சியில்? பிரதேசங்களின் அபிவிருத்தியில்? தன்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் வகையில்….? 

சில பிரச்சினைகளுக்காக அங்கங்கே அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இவற்றில் பலவும் மக்கள் அல்லது மாணவர்கள் நடத்தியது. இதில் பின்னர் தலைவர்களும் கட்சிகளும் பின்னிணைப்பாக இணைந்து கொண்டதே நடந்தது. 

இதைத் தவிர, ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்றம், பொறுப்புக் கூறல், நீதி பரிகாரம் போன்றவற்றுக்கான அழுத்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இவையெல்லாம் எந்த அளவுக்கு தமிழ்ச்சமூகத்தின் எதிர்பார்க்கைகளை நிறைவேற்றியுள்ளன? இவற்றின் மூலம் எந்தப் பிரச்சினை தீர்வுக்கு வந்துள்ளது? அல்லது தீரக் கூடிய நிலையில் உள்ளது என்பதை எவராவது அறுதியிட்டுக் கூற முடியுமா? 

யுத்தத்திற்குப் பிறகு வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டும் கூட அரசாங்கத்தின் (மகிந்த – மைத்திரி– ரணில் – கோத்தபாய ஆட்சிகளின்போது) தீர்மானம், நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதே தவிர, தமிழ்ச்சமூகத்தின் விருப்பு, ஆலோசனை, தேவைப்பாடுகளின் தார்மீகத் தன்மைகளோடு முன்னெடுக்கப்படவில்லை. ஆகவேதான் இன்னும் யுத்த நிலைமையை ஒத்ததாக வடக்குக் கிழக்கின் சூழல் உள்ளது. மக்களுடைய மனதிலும் பாரம் குறையவில்லை. இவற்றை இப்படியே வைத்திருக்கவும் தொடரவும் தொடர்ந்து அனுமதிக்கவும் முடியுமா? 

இதை ஏன் இங்கே கேட்க வேண்டியுள்ளது என்றால், தமிழ்ச்சமூகத்தின் இருப்பு தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு அபாய நிலைக்குள்ளாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே. யுத்தத்திற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச எதிர்ப்பு – அரச ஆதரவு அரசியல் இரண்டுமே போதாக்குறைகளையும் பலவீனத்தையுமே வெளிப்படுத்தியுள்ளன. சரியான வழி எது? சரியான தரப்பு எது என்பதை விஞ்ஞானபூர்வமாக (கட்சி, அமைப்பு விசுவாசங்களுக்கு அப்பால், மக்கள் நலன், சமூகத்தின் எதிர்காலம் என்ற அடிப்படையில்) பகுத்தாராயந்து பார்த்தால் இந்த உண்மைகள் எளிதிற் புரியும். ஆனால், இந்த அபாய நிலையைக் குறித்துப் புரிந்து கொண்டவர்கள் பலர் இருக்கின்ற போதும் அவர்கள் பகிரங்கமாக எதையும் சொல்லத் துணிவதில்லை. ஒன்று அவர்களுடைய கருத்துகள் நிராகரிக்கப்படுவதோடு அவர்கள் அவமதிக்கப்படுவார்கள். இரண்டாவது, யாரிடம் இதை எடுத்துச் சொல்வது என்ற கேள்வி. 

இங்கே கவலையளிக்கும் விசயம் என்னவென்றால் இதெல்லாம் ஒடுக்கும் அரசுக்கும் மேலாதிக்க சிங்கள இனவாதத்திற்கும் வாய்ப்பளிப்பதேயாம். தமிழ்ச்சமூகம் தன்னைத் தயார்ப்படுத்திப் புதுமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அது தொடர்ந்தும் பலவீனங்களுடன் இருக்குமாக இருந்தால் ஒடுக்குவோருக்கும் பலவீனப்படுத்த விழைவோருக்குமே வாய்ப்பாகும். முக்கியமாக தமிழர்கள் இலங்கைக்கு ஆபத்தானவர்கள், அவர்கள் எப்போதும் இந்தியாவுடன் அல்லது மேற்குலகத்துடன் சேர்ந்து கொண்டு இலங்கையைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற ஒரு தோற்றமயக்கத்தை சிங்கள மக்களிடம் அரசாங்கமும் ஆளும் தரப்புகளும் செய்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக் கோரிக்கையையும் அதிலுள்ள நியாயத்தையும் ஏற்கக் கூடாது என்ற மனநிலையை அவர்களிடம் தொடர்ந்தும் வளர்த்து வருகின்றன. இதுவும் ஒரு சூழ்ச்சிப் பொறியே. 

ஆகவேதான் இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக தமிழ்ச்சமூகம் முற்றிலும் புதிய சிந்தனைக்கும் செயல்முறைக்கும் செல்ல வேண்டும் என்கிறோம். அப்படியென்றால் தற்போதுள்ள அரசியல் சக்திகளும் அவற்றின் செயற்பாடுகளும் என்ற கேள்வியை நீங்கள் எழுப்பக் கூடும். கடந்த பதினொரு ஆண்டுகள் அதற்குச் சாட்சியம். இதற்கான பதில் அதில் உண்டு. இது சரியென்றால், இதை விட –தற்போதைய நிலையை விட அடுத்த பத்தாண்டுகள் மிகக் கடினமான –கீழ்நோக்கிய காலமாகவே அமையும். அதற்குப் பிறகான காலம் அதைவிடச் சரியும்.