(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
மரியசிங்கம் என்ஜினியரின் வெளிர்நீல ‘வக்ஸ்வகன்’ காரை அவரே ஓட்டிவர முன் ஆசனத்தில் நல்லரட்ணமும் பின் ஆசனத்தில் கோகுலனும் இருந்தபடி கார் முன்னே செல்லப் பின்னால் பரந்தன் ராஜன் குழுவினர் ‘வான்’ னில் பின்தொடர வாழைச்சேனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கோகுலன் பேச்சை ஆரம்பித்தான்.
“மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்திலிரிந்து வெளியேத்தப்பட்ட யாழ்ப்பாணத்துப் பொடியனுகள ராஜன் செல்வநாயகம் கூப்பிட்டுப் புகலிடம் குடுத்திரிக்கிறாராம்” என்றான்.
“ஓம்! கோகுலன், நானும் அறிஞ்சநான். செல்வநாயகம் ஞாபகார்த்த மண்டபத்தில வடபகுதியிலிரிந்து வந்த தொண்டர்கள் தங்கியிரிக்கிறாங்க. ராஜன் செல்வநாயகத்திர மாமனாரும் மாமியும் திரு.திருமதி அலெக்சாண்டர் தெரியும்தானே. சூறாவளியில கட்டிடம் தகர்ந்து விழுந்து ரெண்டுபேரும் இறந்திட்டாங்க. அதுக்குள்ளேயும் ராஜன் செல்வநாயகம் முன்வந்து வடபகுதித் தொண்டர்களுக்குப் புகலிடம் குடுத்ததப் பாராட்ட வேணும்” என்றார் நல்லரட்ணம்.
“ஓம்!. நானும் அதத்தான் சொல்லவந்தனான்” என்ற கோகுலனின் பதிலுடன் பேச்சு இராஜன் செல்வநாயகத்தின் அரசியலின் பக்கம் திசைமாறி வீசிற்று.
இராஜன் செல்வநாயத்தின் பூர்வீகம் யாழ்ப்பாணம்தான். அவரது தந்தை ‘புறோக்கர்’ செல்வநாயகம் கிழக்கு மகாணத்தில் அமைந்த மெதடிஸ்தமிசன் பாடசாலைகளினதும் மெதடிஸ்தமிசன் சபைக்குரிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களினதும் முகாமையாளராகப் பணிபுரிந்தார். ‘புறோக்கர்’ செல்வநாயகத்தின் மனைவியின் தமயனார் நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராசா ஆவார். யாழ்ப்பாணம் தொண்டமானாற்றில் பிரபல்யமான குடும்பம். பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தின் குடும்பத்தைப் போலவே மட்டக்களப்பில் முப்பது நாற்பது வருடங்களாக வாழ்ந்து இராஜன் செல்வநாயத்தின் குடும்பமும் மட்டக்களப்பாராகிப்போன குடும்பம்.
1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது எம்.பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தாலும் தேவநாயத்தின் ஆதரவுடன் ஜக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையுடன்தான் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார். அப்போது தேவநாயகத்தை ஆதரித்து ‘ஆரையூர் அமரன்’ என அழைக்கப்பெற்ற அமரசிங்கம் மாஸ்ரர் மற்றும் மட்டக்களப்புத் தாமரைக்கேணியைச் சேர்ந்த மாலா இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து தேர்தல் காலத்தில் வெளியிட்ட ‘மின்னல்’ எனும் பத்திரிகை இராஜன் செல்வநாயகத்திற்காகவும் பிரச்சாரம் செய்தது. ஜக்கிய தேசியக் கட்சியின் ‘பச்சை’ நிறத்திலேயே ‘மின்னல்’ பத்திரிகை அச்சிடப் பெற்றது.
1970 இல் ஜக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு மட்டக்களப்புத் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இராஜன் செல்வநாயகம் பின்னர் 1970 இல் அரசாங்கம் அமைத்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.
பிரதமர் திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா இராஜன் செல்வநாயகத்தைச் சிங்களத்தில் ‘புத்தா’(மகனே!) என்று விளிக்கும் அளவுக்குப் பிரதமருடன் நெருக்கமானார். மட்டக்களப்பு மாவட்ட ‘அரசியல் அதிகாரி’ யாகவும் நியமிக்கப்பெற்றார்
1972 இல் சிறிமாவோ அரசாங்கம் நிறைவேற்றிய குடியரசு அரசியலமைப்பை ஆதரித்து வாக்களித்த வடக்கு, கிழக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரில் இராஜன் செல்வநாயகமும் ஒருவர். இராஜன் செல்வநாயகம் மற்றும் இவ்வாறு வாக்களித்த தமிழ்க்காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த வடமாகாணத்தின் நல்லூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலம்-வட்டுக்கோட்டைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா-தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.எக்ஸ். மார்ட்டின் ஆகியோரின் பெயர்களைத் தமிழரசுக் கட்சிப் பத்திரிகையான ‘சுதந்திரன்’ ‘தமிழினத்துரோகிகள்’ என நாமகரணமிட்டு வெளியிட்டது.
1972 அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த இவர்களுக்கு இயற்கை மரணம் கிட்டாது எனக் கவிஞர் காசி ஆனந்தன் பகிரங்கமாகப் பேசியும் அறிக்கையுமிட்டிருந்தார். ‘தமிழர் கூட்டணி’ மன்னாரில் நடத்திய பொதுக் கூட்டமொன்றில் வைத்துக் கவிஞர் காசி ஆனந்தன், இலங்கைப் பொலிசாரினால் கைது செய்யப்படுவதற்கு இதுவுமொரு காரணமாகக் கூறப்பட்டது. ஏனெனில், மன்னார்க் கூட்டத்திற்கு முதல்நாள்தான் வட்டுக் கோட்டைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா கொழும்பில் அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத தமிழ் இளைஞர்களால் சுடப்பட்டு உயர் தப்பியுமிருந்தார். காசி ஆனந்தன் முதன் முதலாகக் கைது செய்யப்பட்டது இச்சம்பவத்தில்தான். காசிஆனந்தனுக்கும் இச்சம்பவத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த அரசியல் விவகாரங்களெல்லாம் கார் ஓடிக்கொண்டிருக்கையிலேயே நடைபெற்ற நல்லரட்ணத்திற்கும் கோகுலனுக்குமிடையிலான உரையாடலில் வெளிப்பட்டன.
நல்லரட்ணம்,
“கோகுலன். ராஜன் செல்வநாயகத்திர அரசியல் கொள்கையில்லாத அரசியல்தான். கொள்கையெண்டா என்னெண்டே அவருக்குத் தெரியாது. ஊருக்குள்ள அவரது அரசியல ‘நட்டாமுட்டி’ அரசியல் எண்டுதான் எல்லாரும் சொல்லிறாங்க” என்றார்.
“அது சரிதான். ஆனா ராசதுரையப் போலக் கொள்கய மட்டும் இத்தின இருபத்தைஞ்சு வருசமாக மேடையில பேசினதோட ஒப்பிட்டா ஏதாவது உருப்படியான வேலயச் செய்யிற ராஜன் செல்வநாயகம் ஒப்பீட்டளவில திறமில்லயா,” என்றான் கோகுலன்.
“அதுக்கு ராஜன் செல்வநாயகத்திற்கு மேடையில பேசவும் தெரியணுமே” என்று கூறிச் சிரித்தார் நல்லரட்ணம்.
“ராஜன் செல்வநாயகத்திட்டக் கொள்கை அரசியல் இல்ல. அவரிர அரசியல் சண்டித்தனம் காட்டிற ‘நட்டாமுட்டி’ அரசியல். 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்ப ஆதரிச்சி பாராளுமன்றத்தில அவர் வாக்களிச்சது பிழதான். அவருக்கு மேடையில பேசத் தெரியாது. இதெல்லாத்தயும் நானும்தான் ஏத்துக் கொள்ளிறன். ஆனா ராஜன் செல்வநாயகம்தானே மட்டக்களப்பு புளியந்தீவப் படுவான்கரையோட இணைக்கிற மிக முக்கியமான வவணதீவுப் பாலத்தக் கட்டினதும் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீத்தக் குளத்தச் சுத்தி ‘சீமெந்து’ அணை கட்டினதும் ராஜன்தானே. 1970 இலிருந்து 1977 வரை ராஜன் எம்பியா இரிக்கக்கொள்ளதானே இதெல்லாம் நடந்த. இராசதுரை 1956 ஆம் ஆண்டிலிரிந்து 1977 வரை எம்.பி.யாக இரிந்து மேடையில பேசி என்னத்தச் செய்தவர்”.
கோகுலன் இவ்வாறு கூறியதைக் கேட்ட நல்லரட்ணம் “1977 ஆம் ஆண்டுத் தேர்தலில மட்டக்களப்புத் தொகுதியில ராஜன் செல்வநாயகம் எப்பிடிப் பிரச்சாரம் பண்ணினவர் எண்டு தெரியுமா?” என்று கேட்டார்.
“சொல்லுங்க” என்றான் கோகுலன்.
“தமிழ் ஆக்கள் இராசதுரைக்கு வோட்டுப் போட்டு வெல்லவைச்சா அவர் கொழும்பில போய் இரிந்திரிவார். காசி ஆனந்தனுக்கு வோட்டு போட்டு அவர வெல்லவச்சயளெண்டா அவர் போராட்டத்தில ஈடுபட்டுச் சிறைக்குப் போயிருவார். ஆனா நான் அப்பிடியில்ல. ஊரிலதான் இரிப்பன். ஆனபடியா ஊரில இரிக்கப்போற எனக்கு வோட்டுப் போட்டு என்ன வெல்லவைங்க எண்டு பிரச்சாரம் பண்ணினவர்.” என்றார் நல்லரட்ணம்.
இதைக் கேட்டு மரியசிங்கம், நல்லரட்ணம், கோகுலன் மூன்று பேரும் சேர்ந்து பலமாகச் சிரித்தார்கள்.
பின் கோகுலன், ” 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில ராஜன் செல்வநாயகம் இராசதுரையோடயும் காசி ஆனந்தனோடையும் அரசியலில முண்டுப்பட்டாலும் அப்பவும் இப்பவும் தேவநாயகத்தின்மீது நல்ல மதிப்பும் மரியாதையும் வைச்சி நடக்கிறதாத்தான் நான் கேள்வி” என்றான் கோகுலன்.
“அது உண்மதான்” என்று ஆமோதித்தார் நல்லரட்ணம்.
“தேவநாயகத்தில மட்டுமல்ல. நல்லையா மாஸ்ரரிலயும் நல்ல மதிப்பு ராஜனுக்கு இரிந்தது. நல்லையா மாஸ்ரரிர ‘அஸ்தி’ ய மட்டக்களப்பில ஊர்வலமா எடுத்துப் போனவர் ராஜன் இல்லையா!” என்ற கோகுலன்,
“நல்லையா மாஸ்ரர் 22.12.1976 இல கொழும்பில இறந்தவர். நல்லையா மாஸ்ரர நினைவுகூர்ந்து அவரிர ‘அஸ்தி’ய மட்டக்களப்பில ஊர்வலமாகக் கொண்டு போனது நல்ல விசயம்தான். ஆனா ராஜன் செல்வநாயகம் இராசதுரைக்கு எதிரான தன்ர அரசியலுக்காகத்தான். அதச் செய்த” என்று முடித்தான்.
“அதுவும் ஒத்துக்கொள்ளக் கூடியதுதான்” என்றார் நல்லரட்ணம்.
“ராசதுரை அமிர்தலிங்கத்திலயும் காசி ஆனந்தனிலயும் ராஜன் செல்வநாயகத்திலயும் கொண்ட தனிப்பட்ட ஆத்திரத்தில யாழ்ப்பாணத்தில இரிந்து சூறாவளி நிவாரண வேலைக்கு மட்டக்களப்புக்கு ஆட்கள் வரப்படாது எண்டு சொல்லிறது பிழதானே. இராசதுரையோட சேந்துநிண்டு தேவநாயகமுமல்லோ அப்படிச் சொல்லிறார்” என்று குறைபட்டான் கோகுலன்.
மட்டக்களப்பில் ஞானசூரியம் சதுக்கத்தில் மரியசிங்கம் என்ஜினியர் வீட்டில் வைத்து நல்லரடணத்திற்கும் கோகுலனுக்குமிடையே நடந்த உரையாடலையும் பின் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிக் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது காரைச் செலுத்தியபடியே நல்லரட்ணத்திற்கும் கோகுலனுக்குமிடையே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் உரையாடலையும் அமைதியாகவும் ஆர்வமுடனும் எந்தக் குறுக்கீடுகளும் செய்யாது கேட்டுக் கொண்டிருந்த மரியசிங்கம் தேவநாயகத்தின் கதை வந்தபோது,
“தம்பிமாரே. நான் சொல்லிறத்தயும் கொஞ்சம் கேளுங்க . தேவநாயகம் நல்ல மனுசன் தம்பி. கல்குடாத் தொகுதியில அவர் செய்திரிக்கிற அபிவிருத்தி வேலகளப் போல வேற எவரும் செய்யல்ல. ஏன் முழு மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் அவர் வேலை செய்திரிக்கிறார். ராசதுரையப் போலக் காலத்த ஓட்டல்ல அவர்.” என்று இடைமறித்துக் கூறினார். அத்துடன் அமைச்சர் தேவநாயகத்தின் பெருந்தன்மையைக் காட்டுவதற்கான சம்பவமொன்றையும் சொன்னார்.
செங்கலடியிலிருந்த அமைச்சரின் வீடும் சூறாவளியால் பாதிக்கப்பட்டது. கூரை இழந்தோருக்கு விநியோகிப்பதற்காகப் பல நாடுகள் கூரைப்படங்குகளை அன்பளிப்புச் செய்திருந்தன. அமைச்சரின் வீட்டுக் கூரைக்கு முதன் முதலில் கூரைப்படங்குகளை விரித்துச் செப்பனிடச் சூறாவளி நிவாரணக்குழு முயன்றபோது, அமைச்சர் தேவநாயகம் அவர்கள் மறுத்துவிட்டார்.” எவ்வளவோ மக்கள் இருக்க இடமின்றித் தவிக்க, என் வீட்டிற்குக் கூரையா? பழுதடையாமல் எஞ்சியிருக்கும் வீடே எங்களுக்குப் போதும்” என்று கூறிவிட்டார்.
”உங்களிடம் தங்கள் குறைகளைச் சொல்லி உதவி கேட்க வரும் மக்களுக்காவது முன்பக்கத்தைச் சீர்படுத்துவோம்” என்று பலர் வற்புறுத்தியதன் பேரில்தான், அமைச்சர் ஒத்துக் கொண்டார்.
இந்தச் சம்பவத்தைச் சொன்ன மரியசிங்கம் “ராசதுரையிர குற்றச்சாட்டிற நோக்கம் வேற. அவர் அமிர்தலிங்கத்திலயும் காசி ஆனந்தனிலயும் ராஜன் செல்வாநாயகத்திலயும் கொண்ட தனிப்பட்ட ஆத்திரத்தாலதான் அப்பிடிக் கதைக்கார். ஆனா தேவநாயகம் அப்பிடியில்ல.
எலக்சன் காலத்தில மட்டக்களப்பில வேல செய்யிற அரசாங்க ஊழியர்களெண்டாலும் சரிதான் கடை வச்சிரிக்கிற வர்த்தகர்களென்றாலும் சரிதான் எல்லா யாழ்ப்பாணத்தாக்களும் ஒண்டா நின்று தமிழரசுக் கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் வேலை செய்யிறாங்க. செங்கலடியில இரிந்த யாழ்ப்பாணத்து ஆட்களெல்லாம் தேவநாயகத்திற்கு எதிராகத்தான் ஒவ்வொரு தேர்தலிலயும் வேல செய்யிறவங்க. அது எனக்கு நல்லாத் தெரியும். அதுதான் அவருக்கு யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகளைப் பிடிக்கிறதில்ல. யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகளப் பிடிக்காத விஷயம் இப்ப புதுசா வந்ததில்ல தம்பி. நல்லையா மாஸ்டர் காலத்திலேயே அது இரிந்தது. அந்தக் காலத்திலே ஜி. ஜி. பொன்னம்பலம் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கிளைய நிறுவ மட்டக்களப்புக்கு வந்து கூட்டம் நடந்த முயன்றபோது நல்லையா மாஸ்டர் தலைமையில திரண்ட மட்டக்களப்பு மக்கள் கூட்டத்தை நடக்க விடாம ஆக்கினார்கள். இத புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘உள்ளதும் நல்லதும்’ என்ற கட்டுரப் புத்தகத்திலயும் பதிவு செஞ்சு வச்சிருக்கார்” என்றார்
“அப்ப ஏன் சேர்! தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் தொண்டமானும் அடங்காத் தமிழன் சுந்தரலிங்கமும் சேர்ந்து அமைச்ச ‘தமிழர் கூட்டணி’ யில 1972 இல் போய்ச் சேர்ந்து அரசியல் செய்தவர் தேவநாயகம்” என்ற சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கேள்வியைத் தூக்கி போட்டான் கோகுலன்.
அது கோகுலன்! 1972 இல பிரதமர் சிறிமாவோட அரசாங்கம் குடியரசு அரசியலமைப்பக் கொண்டுவந்தோன்ன அதத் தமிழர்கள் ஏத்துக் கொள்ளல்ல எண்டுதான் ‘தமிழர் கூட்ணி’ உருவானது. அப்ப யூ.என்.பி. எதிர்க்கட்சி. ஜே.ஆர்தான் எதிர்க் கட்சித் தலைவர். சிறிமாவோட அரசாங்கத்த எதிர்த்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலமயிலான யூ.என்.பிக் கட்சியச் சேர்ந்த தேவநாயகத்தக் கூட்டணியோட சேர்ந்து வேலை செய்யச் சொல்லி ஜே.ஆர். அனுமதி குடுத்துத்தான் அது நடந்த. ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற அரசியல்தான் இது. புறகு தமிழர் கூட்டணி 1976 இல வட்டுக் கோட்டையில மாநாடு நடாத்தி தமிழர்கூட்டணியைத் ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ எனப் பெயரையும் மாத்தி தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானத்த நிறைவேற்றின உடனே தொண்டமானைப் போல தேவநாயகமும் தனிநாட்டுத் தீர்மானம் சரிவராதெண்டு கூட்டணியை விட்டு வெளியேறித்தார்” என்றார் மரியசிங்கம்.
“இல்லையே சேர். தனிநாட்டுத் தீர்மானம் வந்த 1976 இல அதுக்கு முந்தி மன்னார் எம்.பி யாக இருந்த தமிழரசுக் கட்சி எம்.பி. அழகக்கோன் இறந்தோண்ன 1974 இல நடந்த இடத்தேர்தலில மன்னார் தொகுதியில யூ.என்.பி. யிர வேட்பாளராகப் போட்டியிட்ட ‘அப்துல் றகீம்’ ம ஆதரிச்சுக் கூட்டணிக்கு எதிராகத் தேவநாயகம் பிரச்சாரம் மேற்கொண்டபோதே அவர் கூட்டணியிலிருந்து வெளியேறித்தார்.” என்றான்.
“அது சரிதான் கோகுலன். நீ நல்லா அரசியலக் கரைச்சுக் குடிச்சு வச்சிருக்காய். உன்னோட அரசியல் கதைக்கிற தெண்டாக் கவனமாகத்தான் கதைக்க வேணும்” என்று சொல்லிச் சிரித்தார்.
“சேர்! நானும் உங்கட பக்கம்தான். யாழ் மேலாதிக்க அரசியலுக்கு நானும் எதிரானவன்தான். கிழக்கு மாகாணத் தமிழ் தமிழ்மக்களின் விவகாரங்களில கிழக்கு மாகாணத் தமிழர்கள்தான் தீர்மானம் எடுக்க வேணும். யாழ்ப்பாணத்தில இரிந்து கொண்டு தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தங்கடபாட்டில தீர்மானம் எடுக்க விடேலாது. கனகரட்ணத்த ஆர் சுட்ட. மட்டக்களப்பு ஆட்களா? இல்லையே. உமாமகேஸ்வரனும் தந்தை செல்வாட கார் ‘றைவர்’ ஆக இரிந்த வாமதேவனும்தான் அவரச் சுட்ட ஆக்கள். அம்பாறை மாவட்ட தமிழர்களிர பிரச்சின இவனுகளுக்குத் தெரியுமா? அம்பாறை மாவட்டத் தமிழர்களுடைய எதிர்காலத்த யோசித்திருந்தா அதச் செய்திரிப்பானுகளா? என்று சற்று ஆத்திரமுற்ற தொனியில் கோகுலன் கூறியதைக் கேட்ட மரியசிங்கம், இடைமறித்து
“கோகுலன்! கனகரட்ணத்தை இவங்கள்தான் சுட்ட எண்டு எப்படித் தெரியும் உனக்கு?” என்று கேட்டார்.
“நம்பத் தகுந்த ஆட்களிட்ட இரிந்துதான் சேர் இத் தகவல அறிஞ்ச நான். இந்தச் சம்பவம் நடக்கக்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம். அரசாங்கத்தில ‘சேவயராக’ வேலை பார்த்த உமா மகேஸ்வரன்தான் சம்பவம் நடக்கக்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திர தலைவர். வாமதேவனும் புலி உறுப்பினன்தான். அதுக்கு முந்தி தமிழ் இளைஞர் பேரவையிர கொழும்புக் கிளையில உறுப்பினராகத் தீவிரமாகச் செயற்பட்ட ஆள்தான் உமா மகேஸ்வரன். கனகரட்ணத்தின் இளைய மகன் றஞ்சனும் புலி இயக்கத்தில சேர்ந்திரிந்தவன்தான். அதாலதான் கனகரட்ணம் சுடப்பட்டோன்ன அவரிர இளைய மகன்தான் சுட்ட எண்டு பொய்யான ‘வதந்தி’ ஒண்டு எழும்பின” என்றான் கோகுலன்.
“உமா மகேஸ்வரன உனக்குத் தெரியுமா? என்று கோகுலனைக் கேட்டார் மரியசிங்கம்.
“ஓம்! சேர். உமா மகேஸ்வரன் மட்டக்களப்பில ‘சேவையரா’ வேலை செய்யக்குள்ள கல்முனைக்கு அந்தோனிப்பிள்ள சேவயரிட்ட வந்து போறது எனக்குத் தெரியும். 1975 ஆம் ஆண்டு அப்ப சாகாமக் குளத்துக்குப் பொறுப்பான ரி.ஏ.ஆகவும் இரிந்தநான். அக்கரப்பற்றிலயும் தம்பிலுவில் திருக்கோவில் பகுதியிலயும் கொஞ்ச ‘சேவயர்’ மார் இரிந்தாங்க. அவங்களுக்கு அக்கரைப்பற்றில முஸ்லிம் நண்பர்களும் இரிந்த. வாரவிடுமுறை நாக்களில உமா மகேஸ்வரனும் அக்கரைப்பற்று தம்பிலுவில் திருக்கோவிலில இரிக்கிற ‘சேவயர்’ மாரும் முஸ்லிம் நண்பர்களுமாகச் சேந்து சாகாமம் ‘இரிக்கேசன் குவாட்டஸ்’ க்கு வருவாங்க. ‘பார்ட்டி’ போட்டு முசுப்பாத்தியா இரிகிறதிக்கு. சாகாமக் குளத்தடியிலதானே சேர் ‘குவாட்டஸ்’ இரிந்த. வளவு நிறையப் புளியமரம். நல்ல நிழல். அமைதியான இடம்.உல்லாசப் பயணத்திற்கு சோக்கான இடம். ‘இரிக்கேசன் குவாட்டஸ்’ இக்குக் காவலாளியாக இரிந்த கதிரவேற்பிள்ளை என்றிராள் நல்லாச் சமைப்பார். உமா மகேஸ்வரன மட்டுமல்ல அக்கரைப்பற்று தம்பிலுவில் திருக்கோவில இரிந்த ‘சேவயர்’ மார் எல்லாரையும் எனக்குத் தெரியும். எல்லோரும் எனக்கும் நண்பர்கள்தான். அதனால அடிக்கடி ‘பார்ட்டி’ போடுறதுக்கு பகலிலயும் சிலவேள இரவு நடுச்சாமத்திலயும் சாகாமத்துக்கு என்னிட்ட சாமான் சக்கட்டுகளோட வந்து இறங்குவாங்க. அப்ப எல்லாம் உமா மகேஸ்வரன் இப்படியான ஆள் இல்ல. தானுண்டு தன்ர வேலையுண்டு என்றிருந்தவன். ‘பார்ட்டி’ நடக்கக்கொள்ள மற்றெல்லா ‘சேவயர்’ மாரும் நல்லா குடிப்பானுகள். உமா மகேஸ்வரன் தொடவே மாட்டான். எல்லோரோடயும் சேர்ந்திருந்து ‘கார்ட்ஸ்’ விளையாடுவான். பாட்டுப் படிச்சி எழும்பி நின்று ஆடக்குள்ள உமா மகேஸ்வரனும் எழும்பி ஒரு ஓரமா நிண்டு கை தட்டிக் கொண்டிருப்பான். அவ்வளவுதான். ஆள் ஒரு அமைதியான போக்கு என்றான் கோகுலன்.
“அப்ப எப்ப தம்பி இயக்கத்துக்குப் போனவன்?” என்று கேட்டார் மரியசிங்கம்.
“1977 ஆம் ஆண்டு நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் நடந்ததானே. அப்ப கொழும்பில பாதிக்கப்பட்ட தமிழ் ஆக்களேல்லாம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதி முகாமிலதான் தஞ்சம் புகுந்த. அப்பிடித் தஞ்சம் புகுந்த ஆட்களப் புறகு இந்தியா உதவியாகக் குடுத்த ‘லங்காராணி’ எண்ட கப்பலில ஏத்தித்தான் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்குப் பாதுகாப்பாக அனுப்பின.
பம்பலப்பிட்டி அகதி முகாமத் தொடங்கி நடத்தினவர் கே.சி.நித்தியானந்தா. அந்த முகாமில உமாமகேஸ்வரன் – ஊர்மிளா – அருட்பிரகாசம் என்றிர அருளர் – மண்டூர் மகேந்திரன் – காரைதீவுக் கந்தசாமி எண்டு இளைஞர்கள் தொண்டர்களாக வேலை செய்தவங்க. அப்படி வேலை செய்த ஆக்களில உமா மகேஸ்வரனும், ஊர்மிளாவும், அருளரும் சேர்ந்துதான் அந்தக் கப்பலில யாழ்ப்பாணம் போனவங்க.
இந்தக் கப்பலில போக்கொள்ளதான் ஆயுதப் போராட்டச் சிந்தனைகள் இவர்களிடம் முளைவிட்டன.
புறகு உமாமகேஸ்வரன் வவனியாவுக்க வந்து ‘காந்தீயம்’ அமைப்பில சேர்ந்தான். ‘காந்தீயம்’ அமைப்ப டேவிட் ஐயா மற்ற டாக்டர் ராஜசுந்தரம் ஆக்கள்தான் நடத்திக் கொண்டிருந்தாங்க.
கலவரத்தால பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துவந்து கிளிநொச்சி, வவனியாவில வந்து குடியேறின மலையகத் தமிழர்களுக்கு வாழ்வாதார வசதிகள ஏற்படுத்திக் கொடுக்கிறதில ‘காந்தீயம்’ ஈடுபட்டிருந்தது. உமாமகேஸ்வரனும் ஆட்களும் காந்தீயத்தில சேர்ந்த புறகு ரகசியமாகக் காந்தீயம் நடத்தின விவசாயப் பண்ணைகளில ஆயுதப் பயிற்சி எடுக்கத் தொடங்கிவிட்டாங்க. ‘காந்தீயம்’ ஒரு அமைதிவழி அமைப்பு. இத அறிஞ்சோன்ன டாக்டர் இராஜசுந்தரம் ஆட்கள் உமாமகேஸ்வரன் ஆட்களக் காந்தீயத்திலிருந்து கழட்டி விட்டுத்தாங்க.
அதுக்குப் புறகு உமாமகேஸ்வரன் யாழ்ப்பாணம் போய்ச் சிறு குழுவாக இயங்கிக் கொண்டிருந்த பிரபாகரன் ஆக்களோட போய்ச் சேர்ந்தான். பிரபாகரன் 1972 இல ஆரம்பிச்ச ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்றிர அமைப்பத் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ எனப் பெயர் மாத்தி இயங்கிக் கொண்டிருக்ககொள்ளத்தான் 1977ம் ஆண்டு கடசிப் பகுதியில பிரபாகரன்ட குழுவில போய்ச் சேர்ந்தான். அப்படிச் சேர்ந்தபோதுதான் பிரபாகரன் குழுவினர் தங்கட ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’ இயக்கத்துக்குத் தலைவனாக உமா மகேஸ்வரனைத் தேர்ந்தெடுத்தாங்க. இதுதான் சேர்! உமாமகேஸ்வரன் இயக்கத்தில சேர்நத சுருக்கமான கத” என்று சொல்லி முடித்தான் கோகுலன்.
பின் கோகுலன் ‘எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்த்தம் என்ன சேர்” என்றவன் அவன் விட்ட இடத்திலிருந்து யாழ் மேலாதிக்க அரசியலைக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள முடியாதென்ற விடயத்தை மீண்டும் தொடர்ந்தான்.
“சேர்! யாழ் மேலாதிக்க அரசியலுக்கு நான் எதிரானவன். கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் தனித்துவமான அரசியல் வேண்டுமென்று யாசிப்பவன். அழுதும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும். கிழக்கு மாகாணத் தமிழர்கள் தாம் எதிர்நோக்கும் சமூக பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தேடுவதற்கும் நாடுவதற்கும் எமக்கென்று தனித்துமான அரசியல் பாதையொன்று தேவை. அதை நாம்தான் இனிமேல் உருவாக்கவும் வேண்டும்.
இதை நல்லையா மாஸ்ரர் உருவாக்கத் தவறிவிட்டார். தேவநாயகமும் உருவாக்கத் தவறிவிட்டார். இனியும் அவர் உருவாக்கப் போவதில்லை. இவர்கள் எல்லோரும் யூ.என்.பி இல் இருந்துதான் அரசியல் செய்தார்கள். கனகரட்ணத்தின் அரசியல் அது வேறு. அரசியலுக்கு வந்த தான் தனக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்து விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிற அரசியல் துறவி அவர். அடுத்த தேர்தலைப் பற்றி அக்கறைப்படாத ஓர் அரசியல்வாதி அவர். கிழக்கு மாகாணத் தமிழ்மக்களுக்குரிய தனித்துவமான அரசியல் தலைமைத்துவமொன்றை அவரும் உருவாக்கப் போவதில்லை. இராசதுரையும் இப்போது தமிழர் விடுதலைக்கூட்டணியோடு குழம்பிப்போய்த்தான் நிற்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணி அவரைக் கட்சியால விலக்கப்போகுதாம் என்றும் கதை. அவர் அரசாங்கத்தின் பக்கம் தாவத்தான் திட்டம் வைத்திருக்கிறார். ஆனபடியா அவரும் தமிழர் விடுதலைக் கூட்ணியிலிருந்து விலகிவந்தாலும் சரி விலக்கப்பட்டாலும் சரி கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் தனித்துவமான அரசியல் தலமையை வழங்கப் போவதில்லை” என்று மேடைப் பேச்சுப் பாணியில் தனது உள்ளக் கிடக்கையை கொட்டினான். கோகுலன்.
இதனைக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த நல்லரட்ணம், “நீங்க சொல்வது எல்லாம் சரிதான். நல்லையா மாஸ்ரர் – தேவநாயகம் – இராஜன் செல்வநாயகம் – கனகரட்ணம் இவர்களோடு இப்போது இராசதுரையயும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள் எல்லோரும் வடபகுதி அரசியல் வாதிகளை எதிர்த்துத் தங்களுடைய அரசியலச் செய்தாலும்கூட இவர்கள் அனைவருமே யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். இவர்களில் எவராது கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கெனத் தனித்துவமான அரசியல் தலைமையொன்றினை உருவாக்கப் போவதில்லை. அப்படி உருவாக்கினாலும் அத்தலைமை முழுமையான கிழக்கு மாகாணத் தமிழர்களின் தலமையாகவும் அமையமாட்டாது. ஆனபடியால் கிழக்கைத் தளமாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் ஆளுமையின் கீழ்தான் அத்தகைய தனித்துவமான அரசியல் தலைமை சாத்தியமானது” எனத் தனது கருத்தைத் தெளிவாகவும் உறுதியாகவும் முன் வைத்தார். அதனைத் தலையசைத்து முழுமையாக ஏற்றுக் கொண்ட கோகுலன்,
.“இதனை நம்மைப் போன்றவர்கள்தான் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும். பூனைக்கு மணி கட்டவும் ஆட்கள் தேவைதானே. அப்படி மணிகட்டுகின்றவர்களாக நாம் இருப்போம். ஆனால் கிழக்கு மாகாணத்துக்கான தனித்துவமான அரசியல் என்பது காலவோட்டத்தில் யாழ்ப்பாணம்-மட்டக்களப்பு என்று பிரதேசவாதமாகப் பிறழ்வடைந்துவிடக்கூடாது என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேணும். அப்படி பிறழ்வடைந்து விட்டால் அது பொதுஎதிரிக்கு வாய்ப்பாகிவிடும். யாழ் மேலாதிக்க அரசியலுக்கு எதிரான அரசியலைக் கம்பியிலே நடப்பது போல மிகக் கவனமாகக் கையாளவேண்டும். அதில் நமக்குத் தெளிவு வேண்டும். வடமாகாண அரசியல்வாதிகளும் புரிந்துணர்வுடன் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று மேடையில் பேசுவதுபோலக் கோகுலன் ’லெக்சர்’ அடித்தான்.
“அது சரிதான்!” என மரியசிங்கமும் நல்லரட்ணமும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
அத்துடன் அவர்களுக்கிடையிலான அரசியல் சம்பாஷணை முடிவுக்கு வந்தது. காரும் வாழைச்சேனை நகரை அண்மித்துவிட்டது.
(தொடரும் …… அங்கம் – 52)