அரசியல் விபத்து….!       இடதுபக்கம் சிக்னல் போட்டு வலதுபக்கம் திரும்பும் அரசியல்..…!(வெளிச்சம்: 014)

அரசியல் விபத்து….!  இடதுபக்கம் சிக்னல் போட்டு வலதுபக்கம் திரும்பும் அரசியல்..…!(வெளிச்சம்: 014)

  — அழகு குணசீலன் —

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம்  இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம். ஒரு அரசியல் விபத்து. ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமராக, ஜனாதிபதியாக‌  இப்படி ஒரு விபத்தையே சந்தித்திருந்தார். 

       ஆனால் கடந்த கால ஜே.வி.பி.யின்  ஆயுத அரசியல் வரலாற்றையும் என்.பி.பி.யின் பாராளுமன்ற ஜனநாயக அரசியல் வரலாற்றையும் திரும்பிப் பார்க்கையில் அவர்கள் தங்கள் அரசியல் பயணத்தில் பெருமளவுக்கு இடதுபக்கம் சிக்னல் போட்டு வலதுபக்கம் திரும்பும் அரசியல் பயணத்தையே மேற்கொண்டுள்ளனர். இதற்கு ஜனாதிபதி அநுரகுமார விதிவிலக்காக இருக்க முடியாது.

மரபுவழி இடதுசாரி பாராளுமன்ற அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமாஜமாஜக்கட்சி, நவ சமாஜமாஜக்கட்சி,… போன்ற கட்சிகளும், அவர்களின் தலைமைகளும்  ஒப்பீட்டளவில் சிறுபான்மை மக்களுக்கு விட்டுச் சென்றுள்ள சாதகமான  நினைவுகளை  ஜே.வி.பி.யின் 1970கள் முதலான கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் காணமுடியவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் நினைவுகள் கசப்பானவையாகவே உள்ளன. ஜெனிவா தீர்மானத்தை அநுர ஆட்சி நிராகரித்திருப்பது இதன் மிகப் பிந்திய வெளிப்பாடு. சிங்கள பௌத்த தீவிர தேசிய வாத வலதுசாரி நிலைப்பாட்டிற்கு சிறந்த உதாரணம்.

பீட்டர் கெனமன், கொல்வின் ஆர். டி. சில்வா, சரத்முத்தட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரெட்ண…. போன்றவர்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்களில் குறிப்பிடத்தக்க இடதுசாரிகள். இவர்களில் பலர் பிற்காலத்தில் சிங்கள, பௌத்த இனவாத சேற்றை தாங்களாகவே அள்ளிப் பூசிக்கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட காலம்  சிறுபான்மை மக்கள் அவர்களை ஆதரிக்காதபோதும் ஒரு இடதுசாரி அரசியல் கடமையை செய்திருக்கிறார்கள். 

ஒரு இளம் இடதுசாரி கட்சியாக ஜே.வி.பி.யிடம் சிறுபான்மை சமூகங்கள் திரும்பிப்பார்க்கவும் முன்னோக்கி பார்ப்பதற்கும் இதுவரை எதுவும் இல்லை. 

மிகவும் கசப்பான, இடதுசாரி தத்துவார்த்தத்திற்கு முரணான, இனவாத பதிவுகளையே ஜே.வி.பி.யிடம் பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் மக்கள் காணக்கூடியதாக இருந்துள்ளது. இருக்கிறது.

பழமையான பாரம்பரிய யு.என்.பி. , எஸ்.எல்.எப்.பி. தமிழ்க் காங்கிரஸ், தமிழரசு , இ.தொ.கா. , முஸ்லீம் காங்கிரஸ்  மற்றும் பின்னர் இவற்றில் இருந்து பிரிந்தும், சேர்ந்தும், புதிய பெயர்களுக்குள் புகுந்தும் இருக்கின்ற கட்சிகள் எல்லாம் தொடர்ச்சியாக விட்டு வந்த அரசியல் தவறுகளுக்கான கணக்கை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஜே.வி.பி.க்கு தீர்த்திருக்கிறார்கள். ஆனால் அது கூட மக்களின் ஒரு “பதிலீடு” மட்டுமே. மாற்று ஒன்றை தேடியபோது வழியில் குறுக்கே வந்த ஒன்றை தெரிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த தேர்வை வழக்கமான மரபுவழி தேர்தல் வாக்குறுதிகள் அடிப்படையில் தான் செய்திருக்கிறார்கள். ஊழல் ஒழிப்பு, வரிக்குறைப்பு, விலைக் குறைப்பு, மானியங்கள், சலுகைகள், சம்பள உயர்வு, நீதி, நிர்வாக சீர்திருத்தங்கள். இவை ஜே.வி.பி.யின் வாக்கு சேகரிப்புக்கு உதவியவை. கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக மற்றைய வேட்பாளர்களும், அவர்களின் கட்சிகளும் இவற்றையே கூறியபோதும் அவர்களால் மக்களின் நம்பிக்கையை  பெறமுடியவில்லை.

இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது குறித்து குறிப்பாக ஆசிய, மேற்குலக ஊடகங்கள் அவரை ஒரு இடதுசாரியாகவும், சோஷலிஸ்ட் ஆகவும் .. மேலும்   படிபோய் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவும் உருவகப்படுத்தி செய்திகளை வெளியிடுகின்றன. இதற்கு பின்னால் இரண்டு செய்திகள் உண்டு.

ஒன்று: அநுரகுமார ஆட்சிக்கு அளவுக்கு அதிகமாக சிவப்பு சாயம் பூசுவதன் மூலம் பிராந்தியத்திற்கும், சர்வதேசத்திற்கும் ஒரு எச்சரிக்கையை வழங்குதல். அதன் மூலம் ஜே.வி.பி. போட்ட/போடும் இடது பக்கம் திரும்பும் சிக்னலை வலது பக்கத்திற்கு திசைமாற்றம் செய்தல்.

இரண்டு: இலங்கை  ஊடகங்களும், அவற்றின் பத்தியாளர்களும் ரஷ்யா, கியூபா, சீனா, வியட்னாம், நேபாளம் மற்றும் தென்னமெரிக்க புரட்சிகளையும், சீர்திருத்தங்களையும்  , அவற்றின் வெற்றிகரமான (?) பொருளாதார முன்னேற்றங்களையும் பட்டியலிட்டு அநுரகுமார ஆட்சியை ஒரு புரட்சிகர இடதுசாரி ஆட்சியாக மிகைப்படுத்தி விளம்பரம் செய்தல். அது  போட்ட சிக்னல் படி இடதுபக்கம் தான் திரும்புகிறது என்று மக்களை நம்பப்பண்ணல். ஆனால், இரண்டுமே வலது பக்க நகர்வை சார்ந்தவை.

இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த பத்தியாளர்கள் பேசுகின்ற சோஷலிச புரட்சிகளின் காலம், அந்தந்த நாடுகளில் இருந்த அன்றைய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு-சூழல்,  அன்றைய பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல், அன்றைய முதன்மையான பொருளாதார -அரசியல் கோட்பாடுகள் என்பனவாகும். இவை அனைத்தும் சமகால நிலைமைகளுக்கு எந்த அளவுக்கு பொருத்தமானவை/பொருத்தமற்றவை என்பது நோக்கப்பட வேண்டும்.

 எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் மனநிலையில், வாழ்வியல் மாதிரியில், எதிர்பார்ப்புக்களில்  ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இவற்றை புறந்தள்ளி 100,75,50,25 ஆண்டுகள் கடந்த, ஒரு வகையில் காலாவதியான இல்லாத  பூகோள சூழலையும், பகுதியளவில் காலாவதியானதும், திருத்தங்களை உள்வாங்கியும், உள்வாங்கவேண்டிய  நிலையில் உள்ள கோட்பாடுகளையும்  கவனத்தில் கொள்ளாமல் விடுவது காலத்திற்கு ஒவ்வாத சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வாகவே அமைய முடியும்.

அன்றைய ஏட்டிக்குப் போட்டியான இரண்டு முகாம்கள் இன்று இல்லை. இரண்டு முகாம்களுக்கும் இடையே இருந்த அணிசேரா அமைப்பு செயலிழந்து விட்டது அல்லது பக்கம் சார்ந்து விட்டது.  அன்றைய காலனித்துவத்தின் மறுவடிவமாக  மாறு வேடத்தில் நவகாலனித்துவம் நகர்கிறது. சோவியத் யூனியன் கோர்பர்ச்சேவின் சீர்திருத்தங்களின் பின்னர் பலம் இழந்து விட்டது. அன்று மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, கோஷிமின் மற்றும் ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளின் இடது சாரி தலைமைகளுக்கு இருந்த கைகொடுப்பும்,  பலமான கொள்கை சார்ந்த ஆதரவும் இன்று இல்லை. 

உலகம் உலகமயமாக்கத்தையும், கட்டற்ற இலத்திரனியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் சுற்றி சுழல்கிறது. இதனால் வறிய நாடுகளில் கூட ஏற்படுத்தப்பட்டுள்ள நுகர்வுக் கலாச்சாரம் தாராள பொருளாதார கொள்கையை மக்கள் மீது திணித்துள்ளது.  சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரி அரசாங்கம்  மக்களால் தோற்கடிக்கப்பட்டு, தாராள பொருளாதார முன்மொழிவை ஆதரித்து மக்கள் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமைமை ஏற்றுக்கொள்ள அதுவே காரணம். இதனால் பாரம்பரிய உற்பத்திமுறைகள் அழிக்கப்பட்டு, சுற்றாடல் பாதுகாப்பை புறக்கணித்து, இயற்கை சமநிலை தகர்க்கப்பட்டுள்ளது.  மூன்றாம் மண்டல,  அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற வார்த்தைகள் எல்லாம் இப்போது வழக்கற்றுப் போய்விட்டன.

ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சி இடதுசாரி ஆட்சிக்கு அத்திவாரமிட்ட  அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதே அன்றி முதலாளித்துவ அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதல்ல. இரண்டாவது கிளர்ச்சி இந்திய எதிர்ப்பு என்ற நிறந்தீட்டலில் இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கு எதிராக அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை மறுத்து மேற்கொள்ளப்பட்டது.  மிகக் கொடூரமான முறையில் விஜய குமாரதுங்க போன்ற மாற்று அரசியல் கருத்தாளர்கள், மனித உரிமையாளர்கள், ஜனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இந்த கறைபடிந்த வரலாற்றில் இருந்து ஜே.வி.பி. திருந்தி விட்டது என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் இது போன்ற கொலைகளுக்கு மக்கள் ஜே.வி.பி.யிடம் நீதி கோரி நிற்பதும் ஒரு முரண்பாடு தான்.

  இன்றைய பொருளாதார கட்டமைப்பில் முதலாளி வர்க்கம், தொழிலாளர் வர்க்க வேறுபாடுகள் அகல விரிந்துள்ளபோதும், கீழ் இருந்து மேல் வர்க்கத்தை நோக்கி பாய்கின்ற நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகிவிட்டது. இது முதலாளி வர்க்கத்தின் பக்கம் சரிந்து இயங்குகின்றது.  தொழிலாளர் வர்க்கம்  தானும் நடுத்தர வர்க்கமாக தரமுயர்வு பெற உழைக்கிறது. இன்றைய உலகின் நவீன தொழில் நுட்ப நலன்களையும், பொருளாதார நலன்களையும் எல்லையற்று அனுபவிக்கின்றதும், நுகர்வு கலாச்சாரத்தின் மேற்குலக சந்தையின் காப்பரண்ணாகவும் இந்த நடுத்தர வர்க்கமே உள்ளது.

 இந்த  புதிய நடுத்தர வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்துடன் இணைந்து தொழிலாளர், விவசாயிகள், மீனவர்களை, அன்றாட கூலி உழைப்பாளர்களை புறந்தள்ளி ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கின்றது. அந்த வர்க்கமே அநுரகுமாரவையும் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது.

இவர்கள் தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை என்றால் அதை அடையக்கூடிய இன்னொரு மாற்றை தேடுவார்கள். இது தான் “மாற்றம்” குறித்து இந்த பிரிவினரின் புரிந்துணர்வு. இதையே ஜே.வி.பி .பேசுகின்ற “மாற்றம்” குறிக்கிறது. இது ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு சிக்னலை மாற்றி வலதுபக்கம்  பயணிப்பதற்கு எதிர்காலத்தில் மிகவும் இலகுவானதாக இருக்கும்.

ஜே.வி.பி. அரசாங்கத்தை ஒரு சோஷலிச அரசாங்கமாக காட்டமுயற்சிக்கின்ற ஆய்வாளர்கள் ரஷ்யா முதல்  லாவோஸ்,நேபாளம் வரை காட்டுகின்ற உதாரணங்கள் மேற்கூறிய அடிப்படையில் இன்றைய இலங்கைக்கு பொருத்தமற்றவை. ஒரு காலத்தில் அவை சோஷலிச கருத்தியலை கொண்டிருந்தாலும் இன்று பெருமளவுக்கு முதலாளித்துவ முதலீட்டை உள்வாங்கி,  இலாப நோக்கிலான தாராள சந்தைப் பொருளாதாரத்திற்கு உரம் சேர்க்கின்றன.  அந்த நாடுகளின் கருத்துப்படி வரையறுக்கப்பட்ட சமூக முதலீடு, சந்தை பொருளாதாரம். அரச நெறிப்படுத்தலுடன் கூடிய கட்டுப்பாடு. இவை வளப்பங்கீட்டு சமத்துவத்திற்கு மாறாக அல்லது அதையும் விடவும் வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதை அடிப்படையாகக்கொண்டவை. ஏற்றுமதி சந்தையை அடிப்படையாகக்கொண்டவை. 

இதன்மூலம் புள்ளிவிபரரீதியான பொருளாதார வளர்ச்சி வீதம், தனிநபர் வருமானம், தேசிய வருமானம், உள்நாட்டு உற்பத்தி என்பவை அதிகரிக்கலாம். ஆனால் இது  உண்மையான அபிவிருத்தி அல்ல. இந்த முன்னேற்றங்கள் மக்களுக்கு பங்கிடப்படாதவரை இதை மக்களுக்கான  மக்கள் பொருளாதாரமாக கொள்ளமுடியாது.  மாறாக வெளிநாட்டு முதலீட்டை கவர்வதற்காக எண்ணற்ற சலுகைகளும், பெரும் செலவிலான அடிப்படை கட்டுமானங்களும் செய்யப்படுகின்றன. குறைந்த சம்பளம், தொழிலாளர் நலன் கவனத்தில் கொள்ளப்படாமை, ஜனநாயக, மனித உரிமைகள் மீறப்படுதல், தொழிற்சங்க உரிமைகள் மறுப்பு, அதிகரித்த வேலைநேரம் போன்ற பல விடயங்களும் சமூகச் சீரழிவுகளும் இந்த நாடுகளில் உண்டு. மத்திய கிழக்கு முதல் வங்காளதேசம், இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் இவை சர்வசாதாரணமாகி விட்டன. லாவோஸ், வியட்னாம், வங்காளதேச, இலங்கை ஆடைத் தொழிற்சாலைகள் இவற்றில் இருந்து வேறுபட்டவை அல்ல.

பொதுவாக அமெரிக்கா மற்றும் மேற்குலகம் மட்டும் அன்றி சீனா, இந்தியா போன்றவைகள் தொடர்ந்து தேசிய அரசாங்கங்களின் இராஜதந்திரங்களை கண்காணிக்கின்றன.  சோஷலிச நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதற்கும், சோஷலிச முறைமை தோல்வியடைந்துள்ளது என்று காட்டுவதற்கும் இந்த நாடுகளில் பிரச்சினைகள் உண்டு என்று காட்டுவதற்கும் முயற்சிக்கின்றன. பிராந்திய, சர்வதேச நிறுவனங்கள் ஊடாக அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. இந்த ஜதார்த்த நிலையில் இடதுசாரி வழியில் பயணிக்கவுள்ளது என்று நம்பவைக்கப்படுகின்ற இலங்கை போன்ற இளம்நாடுகள் இந்த சவால்களை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டுள்ளனவா? அப்படி இல்லை எனில் மாற்று வழி என்ன?  இதற்கு உலகமயமாக்க இன்றைய சூழலில் உலகநாடுகளின் நேர்மையான பதில் ஒத்து ஓடுவதாகத்தான் இருக்க முடியும். ஆக, அநுரகுமாரவும் ஒத்து ஓடத்தான் வேண்டும்.

அரச கட்டுப்பாட்டு பொருளாதாரத்திற்கும், சந்தைப் பொருளாதாரத்திற்கும் இடையிலான ஒரு சமநிலையும், அத்தோடு மிகவும் அதிகமான சமூக நலன்கள் சார்ந்த செயல்பாட்டிலும் இந்த நாடுகள் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். இது இன்றைய சூழலில் ஓரளவு வளர்ந்த, வல்லரசு இயல்பை கொண்ட நவீன சீனாவுக்கு அல்லது இந்தியாவுக்கு அல்லது பிரேசிலுக்கு சாத்தியமானதாக இருக்கலாம்.

ஆனால் இலங்கை போன்ற பொருளாதாரம் சீர்குலைந்துள்ள ஒரு நாட்டில்  இந்த சோஷலிச சாயம் பூசுவது அதுவும் போலியாக பூசுவது  வில்லங்கமான காரியம். தராசு எப்போதும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்,  கடன் வழங்குவோர் -நிறுவனங்கள் பக்கமே சரிவதாக இருக்கும்.

இலங்கை  தனக்கான பொருளாதார நலன்கள்  பற்றி எவ்வளவுக்கு அதிகமாக பேசுகிறதோ  அவ்வளவுக்கு அதிகமாக  பிராந்தியமும், மேற்குலகமும் தேடித்தேடி தங்களுக்கு தேவையான, அழுத்தங்களை கொடுக்கக்கூடிய மனித உரிமைகள், ஜனநாயகமயப்படுத்தல் போன்றவற்றையே ஆயுதமாகக் பயன்படுத்துவார்கள். இந்தியா வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் வரையறுக்கப்பட்ட வகையில் அழுத்தமாக பயன்படுத்தும்.

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றாலும் இந்த இடுக்கில் இருந்து விடுபடுவது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்ட இடதுபக்க சிக்னலை அவர் பாராளுமன்ற தேர்தலிலே வலதுபக்கம் மாற்ற வேண்டி ஏற்படும்.  இப்போது திசைகாட்டி வலது பக்கத்தையே  காட்டியாக வேண்டும்.