— வீரகத்தி தனபாலசிங்கம் —
நாட்டின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பொதுவாழ்வில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் தூய்மையைப் பேணவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவேண்டும் என்று முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அக்கறை அதிகரித்திருக்கும் ஒரு நேரத்தில் இந்தத் தடவை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பது முக்கியமான ஒரு மாற்றமாகும்.
தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் ஒழித்து புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவிடம் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள்.
பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பழைய பிரதான அரசியல் கட்சிகளை நிராகரித்து எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒரு இடதுசாரி இயக்கத் தலைவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலமாக மக்கள் வெளிக்காட்டிய மாற்றத்துக்கான வேட்கையை உரியமுறையில் புரிந்துகொண்டு தனது நிருவாகத்தை நடத்தவேண்டிய பாரிய பொறுப்பை ஜனாதிபதி திசாநாயக்க கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் உள்ள சவால்கள் மிகவும் பாரதூரமானவை.
பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மகத்தான வெற்றியைத் தருவதன் மூலமாக உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பதவிக்கு வந்த பின்னரான மூன்று வாரங்களில் அவரது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஊழலற்ற நிருவாகம் ஒன்றை நடத்துவதில் அவருக்கு இருக்கும் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுவனவாக அமைந்திருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவுக்கு அளித்த ஆதரவையும் விட கூடுதலான ஆதரவை மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்கு தயாராகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் பெருமளவுக்கு தெரிகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்குமா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்களும் மூண்டிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவுக்கும் மற்றைய இரு பிரதான வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது சாத்தியமில்லை என்று கூறியவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தால் அது ஆபத்தாக அமையும் என்று வேறு சிலர் எச்சரிக்கையும் செய்கிறார்கள்.
ஆனால், தற்போதைய அரசியல் நிலைவரத்தை நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா இல்லையா என்பது அவர்கள் சகல மாவட்டங்களிலும் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதிலேயே பெருமளவுக்கு தங்கியிருக்கிறது.
கடந்த வெள்ளிக் கிழமையுடன் நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவடைந்து விட்டன.
சிறந்த கல்வியையும் அனுபவத்தையும் கொண்ட ஊழலற்ற வேட்பாளர்களையே சகல தேர்தல் மாவட்டங்களிலும் தாங்கள் நிறுத்தியிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறினார்.
“நாம் களமிறக்கியிருக்கும் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரையில் அரசியலில் ஈடுபடாதவர்கள். புதிய பாராளுமன்றம் புதிய முகங்களையும் வித்தியாசமான அணியையும் கொண்டதாக அமையும். அவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். எமதுவேட்பாளர் பட்டியல்கள் கல்விமான்களையும் தொழில்சார் நிபுணர்களையும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களையும் கொண்டதாக இருக்கின்றது” என்று அவர் மேலும் கூறினார்.
இதுவரையில் பொதுவெளியில் தெரிந்திராத புதுமுகங்கள் பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்குவார்களா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. ஆனால், இதுவரை காலமும் பதவிகளில் இருந்த அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்படைந்திருக்கும் சூழ்நிலையில், புதியவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்வதில் கூடுதல் முனைப்பை அவர்கள் காட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனலாம்.
பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்தப் போவதாக சூளுரைத்திருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீதான நம்பிக்கையை வெளிக்காட்டும் முறையிலேயே மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் நடத்திய காடைத்தனங்களையும் மக்கள் மனதில் நிச்சயம் வைத்திருப்பார்கள். சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களை அனுமதிப்பதை சபாநாயகர் இடைநிறுத்திய ஒரு காலகட்டமும் இருந்தது.
மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் பிறகு அவற்றை உற்பத்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு பெரும்பணம் சம்பாதித்து இறுதியில் பாராளுமன்றத்திற்குள்ளும் வந்துவிட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு தடவை கூறியது நன்றாக நினைவிருக்கிறது.
மக்கள் தங்களை நிச்சயம் நிராகரிப்பார்கள் என்ற பயத்தில் பல அரசியல் வாதிகள் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களில் முப்பத்தைந்துக்கும் அதிகமானவர்கள் மீண்டும் போட்டியிட முன்வரவில்லை. அதேவேளை, சிலர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, சம்பிக்க ரணவக்கவின் ஐக்கிய குடியரசு முன்னணி போன்ற கட்சிகள் தேர்தலில் இருந்து முற்றாகவே ஒதுங்கிவிட்டன.
வயதுமுதிர்ந்தும் கூட அரசியலில் இருந்து ஓய்வுபெறவிரும்பாத சில அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, இளைய அரசியல்வாதிகள் சிலரும் கூட தங்களது கட்சிகளின் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு மீண்டும் வருவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி பெருமளவில் புதிய வேட்பாளர்களை களமிறக்கியதால் ஏனைய அரசியல் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்கள் தெரிவில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டன. ஆனால், பழைய பாரம்பரிய கட்சிகளினால் பெருமளவுக்கு புதியவர்களை களமிறக்கக்கூடியதாக இருக்கவில்லை. புதியவர்கள் அந்த கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பத்தைக் காண்பிக்கவில்லை. அதனால் அந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் பெருமளவுக்கு பழைய முகங்களால் நிறைந்தவையாகவே இருக்கின்றன.
ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு மக்கள் உறுதிபூண்டிருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் தரம்வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்காவிட்டால் பிரதான கட்சிகள் மக்களினால் முற்றாக நிராகரிக்கப்பட்டு வரலாறாகிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தன.
தேர்தல்களில் போட்டியிடுவதற்கு நேர்மையான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து இப்போதுதான் வருகிறது என்றில்லை. முன்னரும் மக்கள் அவ்வாறே விரும்பினார்கள். ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் விருப்பத்தை மதிக்கவில்லை. பொதுவாழ்வுக்கு பொருத்தமில்லாதவர்களையும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் அவர்கள் திரும்பத் திரும்ப வேட்பாளர்களாக நியமித்து பாராளுமன்றத்தின் தரத்தை குறைத்தார்கள்.
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் சில அரசியல்வாதிகள் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானதை நாம் கண்டிருக்கிறோம். பணபலமும் அடியாள் பலமும் கோலோச்சுகின்ற அரசியலில் பழிபாவத்துக்கு அஞ்சாத அத்தகைய பேர்வழிகள் கட்சிகளின் தலைவர்களுக்கு தேவைப்பட்டார்கள். பாதாள உலகக் கும்பல்களுக்கு அரசியல் உயர்மட்டத்தில் செல்வாக்கு இருப்பதற்கு அதுவே அடிப்படைக் காரணம்.
நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தில் அண்மைக்காலத்தில் அங்கம் வகித்தவர்களில் பலர் சபையில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்களை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாகவும் பாராளுமன்ற விவாதங்களில் உருப்படியான பங்களிப்பைச் செய்ய இயலாதவர்களாகவும் இருந்தனர். வெறுமனே அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகள் மீதான குருட்டுத்தனமான விசுவாசம் காரணமாகவே சட்டங்களுக்கு ஆதரவளித்தார்கள்.
கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கும் அதிகரிப்பதற்கும் என்று மாறிமாறி கொண்டு வரப்பட்ட ஐந்து அரசியலமைப்பு திருத்தங்களையும் மனச்சாட்சியின் உறுத்தலின்றி ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் கண்டோம். அவர்களில் சில சட்டமேதைகளும் இருந்தார்கள்.
நாட்டின் மிகவும் உயர்ந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்த பிறகு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் அரசியலில் ஈடுபடும் ஒரு தரந்தாழ்ந்த நடைமுறையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2015 பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்துவைத்தார். அதற்கு பிறகு இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும் 2020 தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்தார்.
தற்போது நாட்டில் ஐந்து முன்னாள் ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களில் திருமதி குமாரதுங்க பதவியில் இருந்து இறங்கிய பிறகு அரசியலில் ஆர்வம் காட்டினாலும் கூட பாராளுமன்றத்துக்கு வருவதற்கு ஒருபோதும் அவர் முயற்சிக்கவில்லை. மற்றையவர்களில் எவருமே இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மகிந்த மாத்திரமல்ல, சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு ராஜபக்ச சகோதரர்களில் எவருமே களத்தில் நிற்காத தேர்தலாகவும் இது அமைகிறது.
2022 மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு கிடைத்த முதல் வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் நல்ல பாடத்தை புகட்டியதன் காரணமாகவே இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு வரும் ஆசையை அடக்கிக் கொண்டார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேலும் பல அரசியல்வாதிகள் தங்களது ஓய்வை அறிவிப்பார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
தங்களது எதிர்காலத்தைப் பாழாக்காத ஒரு பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதில் மக்கள் இந்த தடவை மிகவும் விவேகத்துடன் நடந்துகொள்ளவேண்டும் . தங்களது தவறான ஆட்சிமுறைக்கு அரசியல்வாதிகள் மக்களைக் குறை கூறியதும் உண்டு.
மக்கள் கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் 2022 ஜூன் 9 ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாபகருமான பசில் ராஜபக்ச தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.
தங்களது தவறுகளுக்காக மக்கள் மீது ஊழல்தனமான அரசியல்வாதிகள் பழிசுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றபோதிலும், மீண்டும் மீண்டும் மக்கள் தவறான ஆட்சியாளர்களை தெரிவுசெய்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான காலப்பகுதியில் மக்களின் அரசியல் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றத்தை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தெளிவாகப் பிரதிபலித்தன.
அதன் பின்புலத்தில், மக்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெருமளவுக்கு விவேகமான முடிவை எடுப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. நேர்மையானவர்களை மாத்திரமல்ல, கொள்கை வகுக்கும் செயன்முறைகளில் பயனுறுதியுடைய பங்களிப்புகளை வழங்கக்கூடியதாக பாராளுமன்ற விவகாரங்களில் அறிவைக் கொண்டவர்களையும் மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்.
சட்டமூலங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையோ அல்லது சபையில் விவாதிக்கப்படும் விடயம் என்ன என்பதையோ விளக்கிக்கொள்ள முடியாதவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இருந்தார்கள். வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களுக்கு எடுபடுகின்ற போக்கில் இருந்து மக்கள் முற்றாக விடுபடவேண்டும்.
பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்துவதற்கு படிப்படியாக முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளில் மக்கள் விவேகமான முறையில் தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த தடவை பாராளுமன்ற தேர்தல் அமைகிறது.
(ஈழநாடு )
_______________