— கருணாகரன் —
அனுரகுமார திசநாயக்கவின் வெற்றி, புதிய அலையொன்றை அல்லது புதிய சூழலொன்றை உருவாக்கியுள்ளது. அது சிங்களம், முஸ்லிம், தமிழ், மலையகம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் நாடுமுழுவதிலும் உருவாகியிருக்கும் புதிய அலையாகும். இதனால் சிங்களத் தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத் தேசியம் என்பவற்றைக் கடந்து பெருவாரியான மக்கள் NPP எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரளும் நிலை உருவாகியிருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால், அனுரவின் பக்கமாகத் திரள்கிறது என்பதே சரியாகும். ஏனெனில் இந்த அலையோ, இந்தத் திரட்சியோ JVP அல்லது NPP என்பவற்றின் சித்தாந்தத்தைப் புரிந்து கொண்டு எழுந்ததில்லை. இதுவரையிலான அரசியற் செல்நெறியில் ஒரு மாற்றம் வேண்டும், அதை அனுர தரப்புச் செயற்படுத்தும், அதற்கொரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்ப்போம் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்டிருப்பது. இதையே பெரும்பாலான அனுர ஆதரவாளர்கள் வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.
ஜனாதிபதித் தேர்தலின்போது “நாடு அனுரவோடு” என்ற வாக்கியத்தைக் கொண்ட சுவரொட்டிகள் நாடெங்கும் காணப்பட்டன. அது உண்மையோ என்று யோசிக்கக் கூடிய அளவுக்கே தற்போதைய சூழல் உள்ளது. வரலாறு சிலவேளை இப்படியான வரலாற்றுப் பாத்திரங்களின் வழியாக அதிசயங்களை நிகழ்த்துவதுண்டு. “அனுர” என்ற இந்த வரலாற்றுப் பாத்திரம், அப்படியான அதிசயத்தை உருவாக்குகிறது போலும். அல்லது வரலாற்றுப் பாத்திரமாக அனுர மாறவும் கூடும். இந்த மதிப்பீட்டுக்கு நாம் இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.
அனுரவின் மூலம் தேசிய மக்கள் சக்தி (NPP) க்கு இதுவரையில்லாத அளவுக்குப் பேராதரவு பெருகியிருக்கிறது என்பது உண்மையே! இன்னொரு நிலையில் இது தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களத் தேசியங்கள் என்ற அடையாளக் கோடுகளைத் தகர்த்து, ஐக்கிய இலங்கை என்ற பொதுப் பரப்பிற்குள் சொல்லாமற் கொள்ளாமல் எல்லோரையும் இழுத்து விடப்பார்க்கிறது. இது, இதுவரையிலும் ஆட்சியிலிருந்தோர் ஐக்கிய இலங்கைக்குள் – ஒன்று பட்ட இலங்கைக்குள் – அனைத்துத் தேசிய இனங்களையும் கட்டிப்போடுவது எனச் சூழ்ச்சிகளின் மூலம் மேற்கொண்ட முயற்சிகளை விட இலகுவாக அனுர விக்கெற்றுகளை வீழ்த்தியிருக்கிறார் எனலாம். இதை விளங்கியோ விளங்காமலோ தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்கள் அனுர அலையில் உள்ளீர்க்கப்படுகின்றன. இதற்கு இன்னொரு காரணம், தெற்கிலே உள்ள ஏனைய அரசியற் சக்திகள் தோற்றதைப்போல தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் தோற்றுப் போனதுமாகும். அதாவது அவற்றின் நம்பகத்தன்மை குறைவடைந்தமையாகும்.
இதனால் தற்போது உருவாகியிருக்கும் NPP க்கு ஆதரவான அலையைக் குறித்தோ அல்லது NPP ஐப் பற்றியோ யாரும் விமர்சிக்கவும் முடியாது. மதம், அரசியல், கலை போன்றவற்றில் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, அது தீவிரப் பற்றாக வளர்ச்சியடைந்து பேரபிமானமாக மாறிவிடுவதுண்டு. இந்த ஈர்ப்பு அமைப்புகள், கட்சிகளிடம் மட்டுமல்ல, தனி நபர்களில் மீதும் உருவாகும். அப்படி உருவாகி விட்டால் அதற்குப் பிறகு அந்த அமைப்பையோ, அந்தத் தலைவரையோ யாரும் கேள்வி கேட்கவும் முடியாது, விமர்சிக்கவும் முடியாது. அப்படி விமர்சித்தால் அல்லது கேள்வி கேட்டால், விமர்சிப்போரும் கேள்வி கேட்போரும் துரோகிகளாகவே நோக்கப்படுவர். இப்படியான ஒரு நிலை இப்போது உருவாகியுள்ளது. அந்தளவுக்கு NPP மீதான பேரபிமானம் சகல தரப்பு மக்களிடமும் மேலோங்கியுள்ளது.
இந்த அபிமானம் நாட்டிற்குள் மட்டுமல்ல, நாட்டுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களிடத்திலும் பரவியுள்ளது. இதனால் பாராளுமன்றத் தேர்தலில் NPP ஐ வெற்றியடைய வைப்பதற்குக் களப்பணியாற்றுவதற்கென்று இலங்கைக்குப் பயணித்துக் கொண்டுள்ளனர்.
இந்தப் பேரார்வத்துக்குக் காரணம், இலங்கையில் மாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும். புதிய அரசியற் பண்பாடொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விருப்பமேயாகும். இந்த விருப்பம் நீண்ட காலமாகப் பலருடைய மனதிலும் நிறைவேறாமலிருந்த மாபெரும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்குவதற்கான வரலாற்றுத் தருணம் இதுவெனப் பலரும் கருதுகின்றனர். ஆகவேதான் அதற்கான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று செயலாற்ற விளைகின்றனர்.
இந்த நிலையை உருவாக்கியது கடந்த காலத்தில் ஆட்சியதிகாரத்திலிருந்த தரப்புகளேயாகும். அவற்றின் கூட்டுத் தவறுகளே “அரகலய” (எழுச்சி). அதுவே NPP க்கான மாபெரும் ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இப்போது NPP எதிர்பாத்திராத அளவுக்கு இந்த அலை உச்சமடைகிறது. NPP சும்மா இருக்கவே வேலை நடக்கிறது என்று சொல்வார்களல்லவா, அப்படிச் சொல்லுமளவுக்கான நிலைமை – சூழல் – NPP க்குச் சாதகமாக உருவாகியுள்ளது.
பேராளுமைகள் அல்லது வரலாற்றுச் சூழலைக் கையாளத் தெரிந்த ஆற்றலர்கள் எழுச்சியடையும்போது இவ்வாறான “மாற்றச் சூழல்” (Condition of Change)அமைவதுண்டு. இது எப்படி அமையும் என்பது NPP யின் அடுத்த கட்ட நகர்வைப் பொறுத்தே தெரியும். ஏனென்றால், NPP யோ அனுரவோ புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. தேர்தல் ஜனநாயக விதிமுறைகளின் வழியாகவே – சட்ட வரம்புக்குட்பட்டே (Legal definition) – ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த விதிகளின்படி, அந்த வரையறைகளுக்குட்பட்டே மாற்றங்களை நிகழ்த்த முடியும். அதற்குக் கால அவகாசமும் வரையறுக்கப்பட்ட மட்டுப்பாடுகளும் இருக்கும்.
ஆனாலும் தமக்குக் கிடைத்த வரலாற்றுத் தருணத்தை அனுரவும் NPP யும் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன? எவ்வாறு மதிப்பைக் கூட்டப்போகின்றன என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இதற்கு அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டும்.
இப்போது அனுர தலைமையிலான மூவர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் அதிரடியாகச் சில வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றக் கலைப்பு, அமைச்சரவை நியமனம், அமைச்சுச் செயலாளர்கள் நியமனம், இழுபறியிலிருந்து பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம், சுற்றுலாப்பயணிகளுக்கு விசா பெறுவதில் இருந்த நெருக்கடிகளை மாற்றியமைத்தமை, அநாவசியச் செலவுகளைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள், மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் விலைக்குறைப்பு, உர மானியம் போன்றவற்றை வழங்குவதற்கான ஏற்பாடு போன்றவற்றைப் புதிய அமைச்சரவை செய்துள்ளது. இது NPP க்கு மேலும் ஒரு சிறிய கவர்ச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது.
ஆனாலும் எதிர்பார்க்கப்பட்ட ஊழல்வாதிளின் மீதான நடவடிக்கை, ஈஸ்டர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளைக் கண்டறிவதும் நடவடிக்கை எடுப்பதும் போன்றவற்றில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. அதைப்போல வடக்குக் கிழக்கில் உள்ள படைத்தரப்பின் உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் போன்றவற்றிலும் எந்த மாற்றமும் முன்னேற்றமும் நிகழவில்லை. அதைப்பற்றி அனுர – NPP யின் நிலைப்பாடு என்னவென்றும் தெரியாது. ஏனென்றால் அதைப்பற்றிய பேச்சுகளே அந்தத் தரப்பின் வாயிலிருந்து வரவில்லை. பதிலாக பௌத்த பீடங்களிடம் ஆசி வாங்கும் அனுசரணையைப் பெறும் காட்சிகளே வெளியாகின்றன.
இது அனுரவும் NPP யும் மக்களை முன்னிலைப்படுத்துவதை விடவும் பௌத்த பீடங்களைக் குளிர்ச்சியடையச் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் பிரயத்தனத்தைக் காட்டுகிறது. அப்படியானால் மாற்றம் எந்த அடிப்படையில் நிகழப்போகிறது? அதனுடைய எல்லைகள் எப்படியாக இருக்கப்போகின்றன என்ற ஒரு தெளிவான காட்சியை இப்பொழுதே நாம் உணரக் கூடியதாக உள்ளது.
ஆனாலும் இதையெல்லாம் கடந்து இப்பொழுது பலருடைய வாயிலும் உச்சரிக்கப்படும் பெயராக அனுரகுமார திசநாயக்க மாறியிருக்கிறார். “AKD” என்று அனுரவைச் செல்லமாக – உரிமையோடு அழைக்கிறார்கள். தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப்போல அல்லது நெருங்கிய நண்பரைப்போல அனுரவைப் பற்றி நெருக்கமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் அவருடைய Profile ஐ தேடி அறிந்து கொண்டிருக்கிறார்கள். அனுரவின் வீடிருக்கும் “தம்பேத்கம” என்ற சிறிய – ஆழக் கிராமத்தை நோக்கி YouTuper’s குவிகின்றனர். சமூக வலைத்தளங்களில் அனுரவின் படங்களும் நிகழ் காட்சிகளும் செய்திகளுமே நிறைந்து கிடக்கின்றன. ஒரு YouTupe காட்சியில் அவருக்கு MakeUp போடுகின்ற காட்சியைக் கூடப் பார்க்கக் கூடியதாக இருந்தது. சினிமாக் கதாநாயகர்களுக்கிருக்கும் கவர்ச்சிக்கு நிகரானது இது. தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் ஜனாதிபதியாகியது மட்டுமல்ல, ஒரே நாளில் பெரியதொரு கதாநாயகனாகவே அனுரகுமார திசநாயக்கவின் பிம்பம் மேலெழுந்துள்ளது.
ஆம், இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக உச்சமான செல்வாக்கைப் பெற்ற தலைவராகியிருக்கிறார் அனுர. இப்படி அனுர புகழடைந்த அளவுக்கு அவருடைய தேசிய மக்கள் சக்தி அறிமுகமாகிருக்கிறதா? புகழடைந்திருக்கிறதா? அதனுடைய கொள்கை தெளிவாக்கப்பட்டிருக்கிறதா? என்றால், இன்னுமில்லையென்றே சொல்ல வேண்டும்.
இன்னும் அதற்கு நாடு முழுவதிலும் கட்டமைக்கப்பட்ட செல்வாக்கு மண்டலம் உருவாகவில்லை. இன்னும் அதைப்பற்றிய தெளிவான சித்திரம் பலருக்கும் தெரியாது. ஆக இதொரு திடீர் வீக்கமாகவே உள்ளது. என்னதான் ஆதரவு அலை NPP க்கு உருவாகியிருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அது பொருத்தமான ஆட்களை தேடிக்கொண்டேயிருக்க வேண்டிய நிலை. இதனால் வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் அரசியலே என்னவென்று தெரியாதவர்களும் சில பிரமுகர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். தெற்கில் ஓரளவுக்குச் சமாளிக்கக் கூடியதாக இருந்தாலும் வடக்குக் கிழக்கில் தகுதியான ஆட்களைத் தேடுவதில் அதற்குப் பிரச்சினை உண்டு. இதனால் வடிகட்டலைச் செய்ய முடியாமல் போய் விட்டது NPP க்கு.
ஆக அனுரவின் மூலம், அவருடைய வெற்றியின் வழியே இப்பொழுது தேசிய மக்கள் சக்தி (NPP) பரவலாக அறியப்பட்டு வருகிறது. அதாவது ஏற்கனவே அது பெற்றிருந்த அறிமுகப் பரப்பை விட இப்போழுது அதனுடைய பரப்பெல்லை விரிவடைந்துள்ளது என்பது உண்மையே. பலரும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு முற்படுகின்றனர். இதனால் அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அது எந்தளவுக்கு என்பதை இப்பொழுது சரியாக மதிப்பிட முடியாது விட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெறும் என்பது உறுதி. அதில் வடக்குக் கிழக்கு வாக்குகளும் சேரக் கூடிய சூழலுண்டு. இது வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியவாதச் சக்திகளைப் பின்னுக்குத் தள்ளக் கூடியதாக அமையும்.
ஆகவே NPP ஆட்சியை வலுப்படுத்தக் கூடிய நிலையை நோக்கி நகர்கிறது எனலாம். அப்படி அமைந்தால் அது எப்படியான நிலை இலங்கையில் உருவாகும்? என்ற கேள்வி முக்கியமானது. “வலுவான ஆதரவுத் தளம் இருந்தால்தான் NPP குறிப்பிட்டதைப்போல அல்லது திட்டமிட்டிருப்பதைப்போல மாற்றத்தை நோக்கிய முழுமையான ஆட்சியை வழங்க முடியும். மாற்று அரசியல் பண்பாடொன்று எழுச்சியடையும். ஊழல்வாதிகளின்மீது துணிந்து நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். அப்படி அமையவில்லை என்றால், பலவீனமான அரசாங்கத்தினால் எதையும் செய்ய முடியாது போய்விடும். இழுபறிகளே தொடரும். அது இலங்கைக்கு நல்லதல்ல. பதிலாகப் பிராந்திய சக்திகளுக்கும் வல்லரசுகளுக்குமே (பிற சக்திகளுக்கு) மிக வாய்ப்பாகி விடும். இதை நோக்கியே இந்தியாவும் அமெரிக்காவும் காய்களை நகர்த்துகின்றன” என்பது ஒரு சாராருடைய கருத்து. இதில் உண்மையுண்டு. இப்போதே பிராந்திய சக்திகளும் சர்வதேச வல்லரசுகளும் அதைச் செய்யத் தொடங்கி விட்டன.
இதற்கு மாற்றுப் பார்வையுமுண்டு.
NPP க்குப் பேராதரவு கிடைக்குமாக இருந்தால் அது இரண்டு விதமாக நிலைமையை உருவாக்கும். ஒன்று, 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்குக் கிடைத்த பலத்தைப்போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு கேள்விக்கிடமில்லாத வகையில் அது தனக்கேற்ற வகையில் அனைத்துத் தீர்மானங்களையும் அனைத்துத்திட்டங்களையும் தனித்து முன்னெடுக்கும். அதை விமர்சிக்கவோ தவறெனில் தடுத்து நிறுத்தவோ பிற சக்திகளால் இயலாமற் போய் விடும். இதனால் ஜனநாயகச் சூழல் கெட்டுவிடும்.
NPP யின் வரலாறு என்பது ஜே.வி.பியினுடைய வரலாறாகும். ஜே.வி.பி என்பது ஆயுதம் தாங்கியதோர் அமைப்பு. ஆயுதம் தாங்கிய அமைப்பில் என்னதான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினாலும் அதற்கப்பால் அதற்குள் ஒரு மூடுண்ட நிலை எப்போதுமிருக்கும். ஜே.வி.வி ஆயுத அரசியலை விட்டுப் பல ஆண்டுகளாகினாலும் அதனிடத்தில் இன்னும் அந்தக் கூறுகள் நிறைய உண்டு. அதாவது ஆயுதமேந்திய இயக்கம் என்ற உள்ளுணர்வு. தன்னையே புனிதத் தரப்பாகக் கட்டமைத்துக்கொள்ளும் தன்மை. தாம் திட்டமிடுவதும் தீர்மானிப்பதுமே சரி. மற்றதெல்லாம் தவறு என்ற உணர்வு அவர்களிடம் எப்போதுமுண்டு. இதனால்தான் அது எவரோடும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் தனித்தே நிற்கிறது. தன்னைத்தூய்மையானதாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது.
இதெல்லாம் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் தரப்பினருக்கு (கட்சியினருக்கு) பொருத்தமானதல்ல. ஆனாலும் இதைப் புரிந்து கொண்டு தம்மை விரித்துக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தியினால் முடியாதிருக்கிறது. இந்த நிலையைக் கடக்க வேண்டிய யதார்த்தை NPP எதிர்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வெளியே நின்று பேசுவது இலகு. ஆட்சியில் செயற்படுவது கடினம் என்ற உண்மையை NPP இப்பொழுது உணர வேண்டும்.
இதேவேளை இப்பொழுது நாட்டில் இரண்டு வகையான அரசியல் போக்கு உருவாகியுள்ளது. NPP யின் எழுச்சி அல்லது அலை. இந்தப் போக்கே இனிச் சில காலத்துக்குத் தொடரும். அடுத்த தேர்தலிலும் இந்த அடிப்படையிலான தேர்வே உண்டு. எப்படியென்றால் –
ஊழல்வாதிகள் – நேர்மையானோர்
சரியானவர்கள் – தப்பானவர்கள்
நல்லவர்கள் – கெட்டவர்கள்
கறுப்பு – வெள்ளை
தனித்துத் தனித்துவமாக நிற்போர் – கூட்டு வைத்திருப்போர் கூட்டணிகள் என.
இந்த எதிரொலிப்பு நாடு முழுவதிலும் பரவியுள்ளது. இதனால்தான் பல தலைவர்கள் தேர்தலிலேயே போட்டியிடாமலே ஒதுங்கியிருக்கின்றனர். மிஞ்சியோர் தேர்தல் மூலமாக ஓரங்கட்டப்படுவர். தமிழ்ப்பரப்பிலும் NPP யின் தாக்கத்தை உணர முடிகிறது. மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரன் போன்றோர் ஒதுங்கியதும் இந்தத் தாக்கத்தினால்தான். இப்போது தமிழ்த்தேசியக் கட்சிகளே NPP யைக் கண்டு அஞ்சுகின்றன. நிச்சயமாக பொதுத் தேர்தலில் இதனுடைய பிரதிபலிப்பைக் காணலாம்.
அடுத்த வரப்போகிற மாகாணசபை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் எப்படியான தெரிவை மக்கள் செய்யப்போகிறார்கள்? என்பதே இலங்கையின் – NPP யின் – அனுரவின் வெற்றி – தோல்வியை முழுதாகத் தீர்மானிக்கும்.