— அழகு குணசீலன் —
மலிந்தால் எல்லாம் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள். அதுதான் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய போலி அரசியலுக்கு நடந்திருக்கிறது. சகல தமிழ்த்தேசிய போலிகளும் தனித்தும், கூட்டாகவும் கொள்ளி கொத்துவது போன்று கொத்து…கொத்து…எனக் கொத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் பிளந்து தமிழரசுக்கு கொள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து சந்திச்சந்தையில் விட்டிருக்கிறார்கள்.
ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிந்த பழைய கதையை விடுவோம். அதற்கு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட ஒரு நியாயமான காரணம் வெளியில் சொல்லுவதற்கு இருந்தது. அண்மைய கடந்த 20 ஆண்டுகளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் இருந்து பார்த்தால் புலிகள் இருக்கும் வரை அவர்களின் அனைத்து அடாவடித்தனங்களையும் தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள் தமிழரசுக்கட்சி/தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர்.
அறவழிப் போராட்டம் தோற்றது அதனால் ஆயுதப்போராட்டம் என்றார்கள். அதுவும் முள்ளிவாய்க்காலில் முடிந்த பின்னர். போராட்டம் ஓயாது அதன் வழிமுறைகள்தான் மாறும் என்று பாராளுமன்ற அரசியலுக்கு திரும்புகிறோம் என்று கூறினார்கள். அந்த வழியில் இதுவரை ஒரு எள்ளளவும் சாதித்ததில்லை. ஒன்றை மட்டும் கின்னஸ் சாதனையாகச் சொல்லலாம், அதுதான் தமிழ்த்தேசிய கட்சி அரசியலில் பிரிந்து, கட்சிக்குள் பிரிந்து சாதனை படைத்திருப்பது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கதிரைக்கணக்கும், கனவும் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.
தமிழ்தேசிய ஊடகவியலாளர்கள் சிலர் மனனம் செய்து ஆரம்பப்பள்ளி சிறுபிள்ளைகள் போன்று வாத்தியாருக்கு முன்னால் ஒப்புவித்த “ஊடகப்பாணி” தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழர்திரட்சி, தமிழ்தேசிய திரட்சி, தேசத்தின் திரட்சி , அரசற்ற மக்கள், தேசியத்தை கட்டி எழுப்பதல் போன்ற மாயமந்திர வார்த்தைகள் அடிபட்டு போய்விட்டன. ஆனாலும் வீழ்ந்தோம் என்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொதுவேட்பாளரின் முற்றுமுழுதான தோல்விக்கு வியாக்கியானம் வேறு சொல்கிறார்கள். உண்மையும், நேர்மையும், சுய விமர்சனமும் அற்ற இவர்களின் செயற்பாடுகளும் தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய நிலைக்கு காரணம்.
சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் சபை, தமிழ்த்தேசிய பொதுக் கூட்டமைப்பு, P2P, காவி, வெள்ளை மேலங்கி சாமியார்கள் எல்லோரும் தமிழரசுக்கட்சியின் இன்றைய அவலத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள். பௌத்த பிக்குகள் அரசியலில் தலையிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டு தாங்களும் தங்கள் இருப்பை காப்பாற்ற மத ஒழுக்க நெறிகளுக்கு மாறாக அரசியல் செய்கிறார்கள் இந்த தமிழர் மத ஆசாமிகள். கிறிஸ்தவ மதத்தையே தமிழ், சிங்களம் என்று பதவிக்காக பிரித்தவர்கள் இவர்கள். அன்று மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு பலி கொடுத்தவர்கள். இன்று போலித்தேசியத்தை வழிநடத்தி, கட்சிகளை சிதைத்து, தென்னிலங்கை கட்சிகள் வடக்கு, கிழக்கில் குடியேற வீட்டுக்கதவை திறந்து விட்டிருக்கிறார்கள் .
தமிழரசுக்கட்சி சின்னா பின்னமாகப் போனதற்கு முன்னாள் பா.உ. சுமந்திரன் மட்டும்தான் காரணமா? இல்லை, புலிகளின் தோல்விக்கு பின்னரான ஒட்டு மொத்த அரசியலும் வெறும் கதிரை அரசியலாக மாறியது காரணமா? உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது “பொறிமுறை” என்ற சுமந்திரனின் வார்த்தை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாகக் காரணமானது. திருகோணமலை கட்சி மாநாட்டில் இடம்பெற்ற தலைவர் தேர்வு சுமந்திரன், சிறிதரன் என்ற இரு அணிகளை உருவாக்கியது. பொறிமுறை பற்றி பேசிய அதே வாய்கள் தலைவர் தேர்வில் “ஜனநாயக வாக்கெடுப்பு” என்றன. ஆனால் நடந்தவை அனைத்தும் ஜனநாயகத்திற்கு முரணானவை. இறுதியில் இந்த பதவிச்சண்டை தமிழரசுக்கட்சியை குற்றக் கூண்டில் ஏற்றியிருக்கிறது.
ஆக முதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளிட்ட ஒரு அணியும், கஜேந்திரகுமார் அணியும் பிரிந்தன. இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட இரட்டைக்குட்டிகள். பின்னர் விக்கினேஸ்வரன் பிரிந்து தமிழ் மக்கள் முன்னணியை அமைத்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட அடுத்த குட்டி இது. குத்து விளக்கில் இருந்து சங்காக மாறியிருப்பது கூட்டமைப்பு போட்ட நான்காவது குட்டி. ஜனாதிபதி தேர்தல் வந்தது. வந்ததும் வந்தார் பொதுவேட்பாளர், அவருக்கு பின்னால் நின்றது தமிழ்ப்பொது அமைப்பு. இது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியின் பிரதிபலிப்பு. சம்பந்தர் -சுமந்திரன் அணி பொதுவேட்பாளரை நிராகரித்தது. சிறிதரன் அணி பொதுவேட்பாளரை ஆதரித்தது. மாவை எல்லாப்பாட்டுக்கும் பாடினார்.
மண்கௌவியும், மீசையில் மண்ஒட்டவில்லை என்று ஊடகச்சந்திப்புக்களில் மக்களுக்கு கதை விடுகின்ற தமிழ் பொதுக்கூட்டமைப்பும், ஊடகவியலாளர்களும், பொதுவேட்பாளரும் கூட தமிழரசின் தற்போதைய உடைவுக்கு காரணமானவர்கள். பொதுவேட்பாளர் விடயம் “கௌரவப்பிரச்சினையாகி” சுமந்திரன் அணியும், பொதுஅமைப்பு, சிறிதரன் அணியும் விட்டுக்கொடுக்காததினால் ஏற்பட்ட விரிசல் அதிகரித்து வேட்பாளர் தேர்வில் பிரதிபலித்துள்ளது. கே.வி. தவராஜா தலைமையிலான தற்போதைய வெளியேற்றம் -ஜனநாயக தமிழரசுக்கூட்டமைப்பின் தோற்றம். இது தமிழரசு/ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட ஐந்தாவது குட்டி. இதற்கு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் நியமனம் உடனடிக்காரணமாக அமைந்தாலும் இந்த முரண்பாடு நீண்ட கால பின்னணியைக் கொண்டது.
தமிழரசுக்கட்சிக்குள் ஒரு குழுவும் அந்த குழுவின் வாதங்களும் முன்னுரிமை பெற்று இருந்தது வெளிப்படை. இதற்கு இரா.சம்பந்தர் போனாலும் போவேன் ஆனால் பதவியை கட்டிக்கொண்டுதான் போவேன் என்று கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை சவப்பெட்டிக்குள் போகும்வரை கட்டிப்பிடித்து கொண்டு படுத்த படுக்கையாய்க்கிடந்ததும் ஒரு காரணம். சம்பந்தர் நினைத்ததைச் செய்துவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார். தனக்கு பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இருக்காது, தலைமைத்துவமும் இருக்காது. தீர்க்கதரிசனம் மிக்க தமிழ்த்தேசிய தலைமை ஒன்றின் செயலா இது? தமிழரசுக்கட்சியின் இந்த நிலைக்கு சம்பந்தர் தான் முழுப்பொறுப்பு என்றால், செத்தவர் மீது பழியைப்போடுகிறான் என்று “கொடுக்குக்கட்டுவார்கள்”.
எம்.ஏ. சுமந்திரன் அப்போது சம்பந்தரை இராஜினாமாச் செய்ய கோரியபோது அதற்கு எதிராக குரல் கொடுத்த மாவை, சிறிதரன், தவராஜா, யோகேஸ்வரன்,சிறிநேசன், சிவஞானம், துரைராசசிங்கம் …. போன்ற பலரும், மௌன விரதம் பூண்டவர்களும் தமிழரசின் இன்றைய நிலைக்கும் பொறுப்பானவர்கள். இவர்கள் சம்பந்தர் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை செயற்றிறனுடன் செய்ய முடியாது என்று தெரிந்தும் முதுமை, பாரம்பரியம், மரியாதை போன்ற அரசியல் சாரா மனிதாபிமான வார்த்தைகளை பயன்படுத்தி வெறுமனே சுமந்திரன் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியினால், சுமந்திரனுக்கு அந்த பதவி கிடைத்துவிடும் என்ற அச்சத்தினால் எதிர்த்தவர்கள். இந்த சுய இலாப நட்ட கணக்கு தான் தமிழரசை இன்றைய நிலைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்த நாடுகளில் அண்மைக்காலமாக ஒரு விடயத்தை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. அதுதான் புலி எதிர்ப்பு முன்னாள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனின் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், புலிகளின் கடும்போக்காளர்கள் சுமந்திரனை எதிர்ப்பதுமாகும். புலிகளால் துரோகி பட்டம் சூட்டப்பட்டு, தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் சுமந்திரனை ஆதரிக்கிறார்கள். புலிகளின் தேசபக்த புனிதர்கள் சுமந்திரனை எதிர்க்கிறார்கள். ஆதரிப்பதற்கு ஒரு காரணம் சுமந்திரன் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கருதுவதும், இனவழிப்பை கேள்விக்குட்படுத்துவதும், கொழும்பு, டெல்கி, சர்வதேசத்தோடு ஒத்தோடுவதுமாக இருக்க முடியும்.
தீவிர தமிழ்த்தேசிய டயஸ்போரா சுமந்திரனை விமர்சனம் செய்யலாம், சிறிதரன் போன்ற தேசபக்கர்களை கொண்டு சுமந்திரனுக்கு குறுக்கே நிறுத்தலாம், தேர்தலில் சுமந்திரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் ஆனால் தீர்மானம் எடுக்கும் சக்தியாக இன்னும் சுமந்திரனே இருக்கிறார். சுமந்திரன் தன்னைச் சூழ ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கிவிட்டார். இதற்கு காரணம் தமிழரசுக்கட்சியின் பலவீனமான யாப்பு -நிர்வாகக்கட்டமைப்பும், ஒப்பீட்டளவில் சுமந்திரன்,சாணக்கியனை விடவும் எல்லாவகையிலும் பலவீனமான எம்.பி.க்களும் கட்சி முக்கியஸ்தர்களும். இவர்கள் “பட்டியாக” பின்னால் போகிறார்கள்.
கே.வி. தவராஜா கூட இவ்வளவு காலமும் செய்ய வேண்டியதை செய்யாமல் இப்போது வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதால் களத்தில் நிற்கிறார். ஆனால் காலம் கடந்து பிறந்த ஞானம் இது. சுமந்திரன் பஸ்சை கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக கோ பைலட் இன்றி தனியாக ஓட்டுகிறார். அப்போது விபத்து ஏற்படும் என்று தெரிந்தும் இவர்கள் அனைவரும் அந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்தவர்கள். இப்போது பஸ் அடிபட்டுக்கிடக்கிறது இறங்கி ஓடுகிறார்கள் . இருக்க சீற் இல்லையாம். மீண்டும் சீற் கிடைத்தால் இறங்கியவர்கள் அனைவரும் முண்டியடித்து ஏறத்தயங்க மாட்டார்கள்.
2020 பாராளுமன்ற தேர்தலில் நடந்த சில நிகழ்வுகளுக்கு 2024 தேர்தல் வேட்பாளர் நியமனத்தால் பதிலளிக்கிறார் சுமந்திரன். 2020 ல் கொழும்பில் இருந்து தனக்கு வேண்டிய இரு பெண்களை வேட்பாளர்களாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் நியமிக்க சுமந்திரன் திட்டம் தீட்டினார். ஆனால் பல்வேறு தரப்பாலும் காட்டப்பட்ட எதிர்ப்பினால் அது தடைப்பட்டது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் காக்காவின் கடும் எதிர்ப்புக்கு சுமந்திரன் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகளை பெறுவேன் என்ற சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகளின் எதிர்ப்பிரச்சாரம் அரைவாசியாகக் குறைத்தது.
2020 யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சசிகலா ரவிராஜ் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். சுமந்திரனால் இதைத்தடுக்க முடியவில்லை. ஆனால் மட்டக்களப்பில் ஞா.சிறிநேசன், மா.உதயகுமார் ஆகியோரின் ஆதரவுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த மங்களா சங்கருக்கான நியமனவாய்ப்பை சுமந்திரனாலும்,சாணக்கியனாலும் தடுக்க முடிந்தது. வேறு வழியின்றி தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவில் தேர்தலில் பேட்டியிட்டார் மங்களா. இதே நிலைதான் இன்று சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது. சுமந்தினால் தவிர்க்கப்பட்ட அவர் வேறு வழியின்றி சங்கு அணியில் போட்டியிடுகிறார். தவராஜா அணியினர் சற்று துரிதமாக செயற்பட்டிருந்தால் சசிகலாவின் சின்னம் சங்குக்குப்பதிலாக மாம்பழமாக இருந்திருக்கும்.
2020 இல் தவராஜா கொழும்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் மனோகணேசனுடன் சுமந்திரனுக்கு இருந்த டீல் அதைத்தடுத்தது. இம்முறையும் அவர் யாழ்ப்பாணம் இல்லையேல் கொழும்பை விரும்பினார் என்று கூறப்படுகிறது. கொழும்பில் யாழ்ப்பாணம் போன்று ஒரு பாராளுமன்ற அங்கத்துவம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மனோ கணேசனின் தேர்வை அது கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அதுவும் ஒரு டீலில் கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பில் தமிழரசுக்கட்சி போட்டியிடும் என்று அறிவித்த சுமந்திரன் சஜீத்- மனோ – ஹக்கீம் கூட்டணிக்கு சார்பாக கொழும்பில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டார்.
கே.வி.தவராஜா தமிழ்த்தேசிய அரசியலில் 1970 களில் இருந்து ஈடுபாடுடையவர். கொழும்பு தமிழ் இளைஞர் பேரவையில் உமாமகேஸ்வரன், பால சிறிதரன், ஊர்மிளா காலத்தில் இருந்து சட்டக்கல்லூரியில் கற்கும்போதே செயற்பட்டவர். அப்படி இருந்தும் 2010 தேசியப்பட்டியலில் தமிழ்த்தேசிய போராட்ட இழப்போ,பங்களிப்போ இன்றி சம்பந்தரால் புலிகள் இல்லாத நிலையில் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர்.
சசிகலாவுக்கும் ஒரு போராட்டவரலாற்று தொடர்பு இருக்கிறது. யாழ்.பல்கலைக்கழகத்தில் புலிகளின் ஜனநாயக மறுப்புக்களை கண்டித்து ஒரு உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது. அன்றைய நிலையில் இதை புளோட் முன்னின்று நடாத்தியது. உண்ணாவிரதத்தை குழப்பும் வகையில் புலிகள் உண்ணாவிரதம் இருந்த பல்கலைக்கழக மாணவிகளை கடத்தி இந்தியாவுக்கு கொண்டு சென்றனர். அன்று உண்ணாவிரதம் இருந்து சசிகலாவுடன் கடத்தப்பட்ட மற்றவர் மதிவதனி. இவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி.
இந்த வரலாற்று நிகழ்வுகளையும், கடந்த கால தமிழ்த்தேசிய வரலாற்று சுவடுகளையும் மறுத்து செயற்படும் ஒருவராக சுமந்திரன் தொடர்ந்தும் செயற்படுவார். இந்த சுவடுகள் தனக்கு தடையாக அமையும் என்று அவர் கருதுகிறார். அதனால் தட்டவேண்டிய இடத்தில் தட்டி வழியை கிளியர் பண்ணுகிறார். ஆனாலும் தமிழரசு நிர்வாகம் சுமந்திரனுக்கு பின்னாலேயே நிற்கிறது.
தமிழரசை வருகின்ற தேர்தலில் மக்கள் சுமந்திரனிடம் இருந்து
மீட்கப்போகிறார்களா ………? அடவு வைக்கப்போகிறார்களா…?