— அழகு குணசீலன் —
அம்பிகா சற்குணநாதன்.
இவரை இரண்டு வழிகளில் தமிழ்மக்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள்.
ஒருவழியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளராக.
மறுவழியில் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் எம்.ஏ.சுமந்திரனால் தமிழித்தேசியக் கூட்டமைப்பில் பெண் வேட்பாளராக களமிறக்க முயற்சிக்கப்பட்டவர் என்ற வகையில்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு சமூக ஊடகப்பதிவு ஒன்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு “அட்வைஸ்” பண்ணி பதிவொன்றை இட்டிருக்கிறார் அம்பிகா சற்குணநாதன்.
இது பற்றி யாழ்ப்பாணத்தை தலைமையகமாகக்கொண்ட பத்திரிகை ஒன்றும் செய்திவெளியிட்டுள்ளது.
அம்பிகாவின் ஜனாதிபதி அநுரவுக்கான “அட்வைஸ்” பட்டியலில் இருந்து…….!
* தமிழர்களின் நம்பிக்கையை பெற விரும்பினால் சிங்கள பௌத்த தேசிய வாதிகளை கவரும் முயற்சிகளை கைவிடுங்கள். கடும்போக்குடைய சிங்கள பௌத்த தேசிய வாதிகளை வசீகரித்தால் தேசிய மக்கள் சக்தி “புதிய ராஜபக்சாக்களாக” மாறும்.
* ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான நிகழ்வுகள் “நல்லாட்சி -2” ஐ நினைவூட்டுகிறது.
* இலங்கையில் கூட்டணி அரசாங்கங்கள் சிறந்த வரலாற்றை கொண்டிருக்கவில்லை.
* ஜனாதிபதியை விமர்சிப்பவர்களை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் நியாயமற்ற விதத்தில் தாக்குவதும், கண்டிப்பதும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தப்போவதில்லை.
*தேசிய மக்கள் சக்தி கருத்து வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளாத வழிபாட்டு மனப்பான்மை உள்ள குழு என்ற எண்ணங்களை இது வலுப்படுத்துவதாகும்.
* 1994 -2000, 2005, மற்றும் 2022 இலும் சிவில் சமூக அமைப்புகள் முறைசாரா ஆலோசகர்களாக மாறி, நிழலில் செயற்பட்டன. ராஜபக்சாக்களை விமர்சித்தவர்கள் ரணில் விக்கிரமசிங்க மனித உரிமைகளை மீறிய போது விமர்சிக்க வில்லை. மாறாக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார்கள். இவர்கள் அதே பாணியில் இன்றும் அநுரவை விமர்சிக்க கூடாது, அது அவரை பலவீனப்படுத்தும், அவருக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்கிறார்கள்.
* உங்களுடைய தனிப்பட்ட தொடர்புகளுக்காக , உரிய தகுதியற்றவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கவேண்டாம். உதாரணமாக ஜனாதிபதி ஊடகப்பிரிவுக்கு ஒரு மருத்துவர் நியமனம்.
* அரசியல் அமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டாம். நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்ததில் இருந்து ஆரம்பியுங்கள்.
* யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கவேண்டாம்.
இவ்வாறு கிட்டத்தட்ட பத்து “அட்வைஸ்களை” ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார் அம்பிகா சற்குணநாதன்.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, பதவியேற்றதன் பின்னர் கொழும்பிலும், தென்னிலங்கையிலும் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராக அவதானிக்கப்பட்ட சமகால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே அவரின் இந்த பதிவு இடம்பெற்றுள்ளது என்று கொள்ளமுடியும். மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்ற வகையில் இந்த கருத்துக்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை/ செயற்பாட்டாளர்களை எட்டியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்று முற்றாக தட்டிக்கழிக்கவும் முடியாது.
சிங்கள பௌத்த தேசிய வாதிகள் குறித்த அம்பிகாவின் அச்சம் இலங்கை அரசியல் வரலாற்றில் நியாயப்படுத்தக்கூடியதே. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் அவருக்கும், பௌத்த பீடங்களுக்குமான தொடர்பு அதிகரித்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அரசியல் அமைப்பின் புத்தசாசன நடைமுறைகளை அனுசரித்து செயற்படவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனால் ஒரு இடதுசாரி என்றவகையில் அவர் மீது குறிப்பாக சிறுபான்மை தேசிய இனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது வீணடிக்கக்கூடாது.
இலங்கை சிறுபான்மை தேசிய இனங்கள் காரணம் இல்லாமல் அச்சம் கொள்ளவில்லை. கடந்த கால சிங்கள பௌத்த தேசிய கட்சி அரசியலில் பெற்றுக்கொண்ட அனுபவங்களே இதற்கு காரணம். அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்கு உரம்சேர்ப்பதாக சில தினங்களுக்கு முன்னர் பௌத்த மதத்தலைவர்களை ஜனாதிபதி சந்தித்தபோது அவர்கள் கூறிய ஆலோசனையும் அமைகிறது. அரசியல் வாதிகளையும், கட்சி ஆதரவாளர்களையும் அமைச்சின் செயலாளர்களாக, மாகாண ஆளுநர்களாக, வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்க வேண்டாம் என்று அவர்கள் ஜனாதிபதிபதியை கேட்டுக்கொண்டார்கள். இப்போதைக்கு தற்காலிகமாகவேனும் கொழும்பு நகர்வுகள் எப்படி உள்ளன? என்றால் இப்படித்தான்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுக்கு துறைசார் நிபுணத்துவமற்ற மருத்துவர் ஒருவரின் நியமனம் ஊடக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யுத்த குற்ற சந்தேக நபர்களின் உயர் நியமனங்களும் மாற்றத்திற்கான திசையை காட்டுவதாக இல்லை என்ற விமர்சனம் உண்டு. ஜனாதிபதியை விமர்சனம் செய்வது அவரை பலவீனப்படுத்தும், அவருக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற கருத்துக்களை இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளராக, மனித உரிமைகள் ஆணையாளாராக செயற்பட்ட கடந்த கால அனுபவங்களில் இருந்தே அம்பிகா சற்குணநாதன் நிராகரிக்கிறார் என்று கொள்ளவேண்டி உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான மாற்று கட்சி ஆதரவாளர்கள் மீதான தென்னிலங்கை வன்முறைகளைப்பற்றி குறிப்பிடும் அவரின் மாற்று கருத்து விமர்சன ஜனநாயக கலாச்சாரம், கட்சித் தலைமை மீதான வழிபாட்டு பிரமை பற்றி பதிவிடுகிறார். இவை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம், அல்லது பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரத்தினால் சட்டம் நிறைவேற்றி செயற்படுத்த வேண்டியவை அல்ல. கட்டுக்கோப்பான ஒரு இடதுசாரி அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள்/ஆதரவாளர்களுக்கான அடிப்படை அரசியல் புரிந்துணர்வு, அரசியல் ஒழுக்கம், தோழமை சார்ந்தவை.
மேலும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்த அம்பிகாவின் கருத்து முக்கிய கவன ஈர்ப்பை பெறுகிறது. அவர் நல்லாட்சி காலத்து நடவடிக்கைகளை தொடருங்கள் என்று கோருகிறார். இதற்கான காரணங்கள் எவை என்று நோக்கவேண்டி உள்ளது. முதலாவது அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை முடிவாக அன்றி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜிதகேரத் புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், அவை மக்கள் முன் அங்கீகாரத்திற்காக வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஊடகங்கள் அதை சர்வஜன வாக்கெடுப்பு என்றே குறிப்பிட்டிருந்தன. அரசதரப்பு இதுவரை இந்த செய்தியை மறுக்கவில்லை. இதை நாடுதளுவிய சர்வஜன வாக்கெடுப்பு என்றே கொள்ளவேண்டி உள்ளது.
இந்த நிலையில் அம்பிகா சற்குணநாதன் நல்லாட்சி விட்ட இடத்திலிருந்து தொடங்குங்கள் என்று கோருவதன் பின்னணி என்ன? நல்லாட்சி விட்ட இடம் என்பது முன்னாள் பா.உ. எம்.ஏ.சுமந்திரனின் தனிநபர் பிரேரணையை உள்ளடக்கிய சட்ட திருத்தம். இதை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முக்கிய கட்சிகள் அனைத்தும் எதிர்க்கவில்லை என்பதால் இந்த வழிமுறையில் இலகுவாக இலக்கை அடையலாம் என்ற தமிழ்த்தேசிய அரசியல் நம்பிக்கைக்கும், சுமந்திரனின் செயற்பாட்டிற்குமான அங்கீகாரமாக அம்பிகாவின் இந்தக் கருத்தை கொள்ள வேண்டியுள்ளது.
புதிய அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பு என்று வந்தால் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வீழ்ந்து விடுவார் என்று அம்பிகா சந்தேகிக்கின்றாரா? அதற்காகத்தான் தனது பதிவில் சிங்கள பௌத்த தேசிய வாதிகளை வசீகரித்தால் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறமுடியாது என்று இலங்கையின் அரசியல் வரலாற்றையும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகளையும், அதில் ஜே.வி.பி.யின் கடந்த கால அரசியலையும் கணக்குப்போட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டாரா?
ஆனால் ஜே.வி.பி.- என்.பி.பி. ஜனாதிபதி அநுரகுமார குமார திசாநாயக்க தலைமையில் அவர்களுக்கு இருக்கின்ற கட்சி கட்டமைப்புக்கூடாக மிகக் கடுமையாக சர்வஜன வாக்கெடுப்பில் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக சிங்கள மக்கள் மத்தியில் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தால், அவர்களோடு சிறுபான்மை தேசிய இனங்களும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் இதற்காக உழைத்தால் புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு சமத்துவ தீர்வை அடைவது கஷ்டமானதாக இருக்கப்போவதில்லை. அதில் ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய மிகப் பாரிய சவால் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதாக இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான புதிய அரசியலமைப்பு ஒன்றில் ஒரு சமத்துவமான, சமூக நீதியான அரசியல் தீர்வை சிறுபான்மை தேசிய இனங்கள் அவர்களின் அடையாளங்களோடு எதிர்பார்க்கிறார்கள். இன, மத அடையாளங்களை கடந்த இலங்கை தேசியத்தில் சிறுபான்மையினர் பங்காளிகளாக வேண்டும் என்றால் சிங்கள, பௌத்த அடையாளங்களும், முன்னுரிமைகளும் அற்ற மதசார்பற்ற, மொழிப்பாகுபாடுகளை கடந்த இலங்கைக்கு தங்களை அர்ப்பணிக்க சிறுபான்மை தேசிய இனங்கள் இணங்குவார்கள். இன,மத,மொழி, பிரதேச வேலிகளை கடந்த ஒரே இலங்கை சமூக கனவு நனவாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை சாதித்து புதிய வரலாற்றை எழுத வேண்டும்…….!