கண்மூடித்தனமான விசுவாசமும் கவனிக்கப்பட வேண்டியதும்

கண்மூடித்தனமான விசுவாசமும் கவனிக்கப்பட வேண்டியதும்

 — றியாஸ் குரானா —

அரசியல் என்பது, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு போராட்டம்.  அதற்காக அனைத்து தந்திரோபாய வழிமுறைகள், மரபான நடவடிக்கைகள், சதித் திட்டங்கள், பொய்கள், வாக்குறுதிகள் என அனைத்தையும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் பயன்படுத்தும் ஒரு செயல்முறையைக் கொண்டது என்பதை அநேக நேரங்களில் மக்கள் மறந்தே விடுகின்றனர். 

மக்கள் தங்களுக்கான நல்வாழ்வுக்காகவே இந்த கட்சிகளும் அரசியல் வாதிகளும் களத்தில் இறங்கி போராடுகிறார்கள் என நம்புகின்றனர். மக்களுக்கான நலன் என்பது, இந்த அதிகாரத்திற்கான காய் நகர்த்துதலில் ஒரு ஓரத்தில் வைக்கப்படுகின்றனவே ஒழிய, அதுவே மையப்பொருளாக இருப்பதில்லை. 

மக்களை அதிகம் எந்தத் தரப்பினர் நம்பச் செய்கிறார்களோ அவர்கள் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றனர். மக்களை நம்பச் செய்வதற்கு, தங்களால் சாத்தியமே இல்லை என்று அவர்களுக்குத் தெரிகின்ற ஆனால், மக்கள் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் கொள்ளும் அனைத்து வாக்குறுதிகளையும் அள்ளி வழங்குவது இயல்பே. அந்த வாக்குறுதிகளில் கணிசமான பகுதியை செயல்படுத்திவிட்டு, மீதியை செயல்படுத்த இன்னும் காலத்தை நீட்டிக் கேட்கின்ற தந்திரோபாய நடவடிக்கைக்கு இந்த அரசியல் முகாம்கள் தாவிவிடுகின்றன. தமது இயலாமையை மறைத்துக்கொள்வதற்காக மக்களின் ஆதரவு போதவில்லை என்ற காரணத்தையும் முன்வைத்துவிடுகின்றனர். எங்களுக்கு மேலும் அதிகாரத்தை வழங்குங்கள் நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் தீர்த்துவிடுவோம் என மக்களின் மீதே அனைத்துப் பாரங்களையும் சுமத்திவிடுகின்றனர். இதுவே தொடர்ச்சியாக நடைபெறக்கூடியது. நடைபெற வாய்ப்பும் உள்ளது. 

தோழர் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு, மாற்றம் குறித்த நம்பிக்கையை மக்களுக்கு வழங்கியது. அதை இலங்கை மக்களில் 42 வீதமானவர்களை நம்பச் செய்து அதிகாரத்தையும் கைப்பற்றியிருக்கின்றனர். இது முழுமையான அதிகாரமல்ல என்பதை அவர்களும் மக்களும் அறிவர். எனவேதான், பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 113 என்ற மாய இலக்கத்தையேனும் பெற வேண்டும் என்ற தேவை புதிய அரசுக்கு உண்டு. ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலின்போது தங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், மாற்றம் குறித்த நம்பிக்கைகளும் 50 வீதத்திற்கும் அதிகமான மக்களை நம்பச் செய்யும் படி இல்லை என்பதனால், இந்தப் பாராளுமன்ற தேர்தலில் மேலும் பல வாக்குறுதிகள் வழங்கப்படலாம். ஆனால், மாற்றம் குறித்து பேசிய என்பிபி என்னவகையான மாற்றம் என்பதை வெளிப்படையாக முன்வைக்கவில்லை. ஆனால், அரச இயந்திரம் தொடர்பிலான சீர்திருத்தங்கள் பற்றி வெகுவாக பிரச்சாரம் செய்தன. சீர் திருத்தம் என்பது, ஏற்கனவே இருக்கும் அரச இயந்திரத்தினதும், அதன் செயல்முறையினதும் இயக்கத்தை ஊழல், லஞ்சம், சலுகைகள் போற்றவற்றை நீக்குவதினூடாக ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டுவருவது என்பதே ஆகும். நமது எளிமையான உவமையில் கூறுவதானால், பழைய வாகனத்தை டிங்கரிங் செய்வதோடு சேவிஸ் செய்து ஓடச் செய்வதாகும். முற்றிலும் புதிய மாற்றமான ஒரு வாகனத்தை கொண்டுவருவதல்ல. ஆக, மாற்றம் என்பதை அடித்தளத்தில் நிகழ்த்துவதாக அவர்கள் கூறவில்லை என்பதை அறியமுடியும். இருப்பதை சரிசெய்வது, ஆனால், அதையே ‘மாற்றம்” என்ற தவறான கருத்துரைப்பாலும் அதைப் பிரச்சாரம் செய்வதினூடாகவும் மக்களை நம்பச் செய்யும் தந்திரோபாயம் என்பிபிக்கு கைகூடிவந்திருக்கிறது. அந்த நம்பிக்கை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கான பிரதான காரணம் கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்களின் கவனயீனமான போக்குகளே ஆதாரமாக அமைந்திருக்கிறது. 

குறைந்த பட்சமான இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும், பாராளுமன்றத்தையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் எல்லையற்ற சலுகைகளையும் மையப்படுத்தியே என்பிபி கவனத்திற்கொண்டது. அதுவே கடுமையான பிரச்சாரங்களாக மேலெழுந்தன. ஊழல், லஞ்சம், சலுகைகள் என்பன பாராளுமன்றத்தையும் எல்லையற்ற அதிகாரத்தையும் கொண்ட ஜனாதிபதியையும் சுற்றி மட்டுமே அமைந்திருக்கவில்லை. இராணுவம், பொலிஸ், அரசுக்கு நிதிவழங்கும் முதலாளித்துவ நிறுவனங்கள், என அனைத்து அரச இயந்திரங்களிலும் மலிந்துகிடக்கின்றன. அவை குறித்த எந்த தகவல்களையும் ஊழல் லஞ்சம் சலுகைகள் பற்றிய பைல்கள் எவற்றையும் பிரதானமான பிரச்சாரங்களாக என்பிபி கையிலெடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். சீர் திருத்தம் என்பதும் கூட, தங்கள் அதிகாரத்தை பெறுவதற்கு தேவையான பகுதிகளை, தங்களுக்கு போட்டியான தளங்களில் மட்டுமே அக்கறைகொண்டிருக்கின்றனர் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே, இது முழுமையான சீர் திருத்தம் என்ற எண்ணப்பாட்டையும் கொண்டதல்ல. அதிகாரத்தை தமதாக்கிக்கொள்வதற்குத் தேவையானதும், மக்களை நம்பச் செய்வதற்கு போதுமான எல்லைகளுக்குள் மட்டுப்படுத்திக்கொண்டதையும் ஆழமாக கவனிக்க வேண்டும். எனவே, இது மாற்றத்திற்கான புதிய ஆட்சியுமல்ல. அதே நேரம், முழுமையான சீர்திருத்தம் பற்றிய விழிப்புணர்வுமல்ல. அதற்காக இப்படி நடப்பதை அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாய நடவடிக்கை என்ற அளவிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டுமே ஒழிய, புதிய மாற்றம் என அதீதமாக நம்பும் மனநிலையிலிருந்து விடுபட்டு சிந்திக்க வேண்டும் என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து, இந்திய ஊடகங்கள் இடதுசாரி முகாம் ஒன்று இலங்கையின் ஆட்சியை கைப்பற்றப்போகிறது என்றும், கைப்பற்றிய பின் இடதுசாரிகள் தென் ஆசியாவிற்குள்ளும் முளைத்துவிட்டனர் என்ற பிரச்சாரங்களினூடாகவும் மேற்குலகை இலங்கையின் மீது அதிக கவனத்தையும் எச்சரிக்கை உணர்வையும் மிக பரவலாக பரப்பிவிட்டிருக்கிறது. அதுவேதான், ஆட்சியைக் கைப்பற்றி 10 நாட்களே ஆவதற்கு முன், கொஞ்சம் மூச்சுவிடுவதற்கு முன்னே மேற்குலக நாடுகள் அடிக்கடி புதிய ஜனாதிபதியை சந்தித்து தொந்தரவுகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டன. சீனத் தூதரகத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில், முன்னாள் இலங்கை ஆட்சியாளர்கள் அனைவரும் இருக்கும் தருணமொன்றில், புதிய அரசின் அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வொன்றினையும் நடத்தியிருந்தது. அங்கு என்ன பேசப்பட்டது என்பது வெளியே வராதபோதும், அந்தச் சந்திப்பின் பின்னர் நாமல் ராஜபக்ஷ மிக வெளிப்படையாகவே, புதிய அரசு சொன்னதைப்போன்று விசாரணைகளை நடத்தி நாங்கள் குற்றம் செய்திருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்டதையும் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். 

சர்வதேச நாணய நிதியம் நேற்று புதிய ஜனாதிபதியை சந்தித்திருந்தது. அங்கு கூட என்ன பேசப்பட்டது என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆனால், ஜனாதிபதி சொன்னதாக, மக்களை சிரமப்படுத்தாத வகையில், வரிகளை அதிகரிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்தாக ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் உடனான உடன்படிக்கையை ‘மீளமைப்பாக்கம்” செய்வதெனில், கடன் வழங்கும் நாடுகளும், நிதி நிறுவனங்களும் ஏற்க வேண்டும். அதை பரிசீலிப்பதில் அதிக நாட்கள் போகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

அதாவது, சர்வதேச நாணய நிதியம் தரும் கடனை மீளச் செலுத்துவதற்கான வழிமுறைகளை புதிய அரசு நிச்சயமாக முன்வைக்க வேண்டும். அவை சாத்தியமானதுதான் என சர்வதேச நாணய நிதியம் ஏற்கும் வகையில் அமைந்திருக்கவும் வேண்டும். ஆக, வரிகளைக் குறைத்தால், தனியார் நிறுவனங்களுக்கு சொத்துக்களை விற்றோ, குத்தகைக்கு கொடுத்தோ பணத்தை சேகரிக்க மறுத்தால், வேறு எங்கிருந்து கடனை மீளச் செலுத்தும் பணத்தை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்? என்ற கேள்வி நிச்சயமாக கேட்கப்பட்டிருக்கும். அதற்கான பதில் புதிய அரசிடம் இல்லை. 

இதை மிகத் தெளிவாக கூறுவதாயின், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனைக் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடும் சமாச்சாரமல்ல. அந்தக் கடனை மீள செலுத்துவதற்கான வழிமுறைகள், பற்றிய சாத்தியமான திட்டங்களையும் கூடவேதான் இலங்கைக்கு வழங்கும். அதற்கு இலங்கையில் எங்கிருந்து பணத்தைப் பெற முடியும் என்ற ஆராச்சியின் பின்னர்தான் கடன் வழங்கவே முன்வரும். எனவே, அந்தத் திட்டங்களில் எந்த மாற்றங்களையும் மயிரளவும் செய்ய முடியாது. அப்படிச் செய்வதானால், பணம் நிறுத்தப்படும். எனவே, பாராளுமன்றத் தேர்தல் முடியும்வரை ‘மக்களின் சுமையைக் குறைப்பது, வரியை அதிகரிக்காமல் இருப்பது” போன்ற கோசங்களை வெளிப்படையாக பயன்படுத்த சிறியதொரு சலுகையை முன்வைத்திருக்க வாய்ப்புள்ளது. அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கேற்ப ஒழுகுவது என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கலாம். இந்த நிலைப்பாடு என்பது, சர்வதேச நாடுகளுக்கு அவசியமான ஒன்று. இடதுசாரி சாய்வுடைய நாடாக அல்லது அரசாக இருந்தபோதிலும், தங்கள் மூக்கணாங்கயிற்றின் பிடிக்குள் இருப்பதையே மேற்குலகு விரும்பும். உலகிலுள்ள பிற இடதுசாரி நாடுகளுடனான நெருக்கத்தை கண்காணிப்பதற்கும், குறைப்பதற்கும் இந்த கடனுதவி என்ற பிடிமானத்தை கவனமாக பாவிக்கும். 

இரண்டாவது விசயம், இந்தியா உடனடியாக இலங்கை வந்து பல விசயங்கள் பேசியிருந்தாலும், 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அழுத்தமான நிலைப்பாட்டை பதிவு செய்திருக்கிறது. இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என சொல்லும் துணிச்சல் புதிய அரசிடமும் இல்லை. உங்கள் நாடாக இருந்தபோதும், எங்களால் கையாளக்கூடிய ஒரு விசயம் உங்கள் நாட்டில் எங்களுக்கிருக்கிறது என்பதை மேலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்தியா. அதேநேரம், 58 வீதமாக இருக்கும் “மாற்றத்தை நம்பிக்கைகொள்ளாத தரப்பினர்” அனைவரையும் சந்தித்திருக்கிறது. புதிய அரசிடமே வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை சொன்ன இந்தியா, தென்னிலங்கை மற்றும் வட கிழக்கு கட்சிகள் அனைத்தையும் புதிய அரசுக்கான அழுத்தச் சக்தியாக பராமரிக்க நட்புக்கரத்தை அவர்களிடமும் நீட்டியிருக்கிறது. 

சாதாரணமாக பார்க்கும் என்பிபியின் ஆதரவாளர்களுக்கு இந்தச் செயற்பாடுகள் மாற்றத்துக்கு எதிரான கூட்டுச் சதி போல தோன்றக் கூடும். அரசியல் விளையாட்டு இது. எப்படி புதிய அரசு தமக்கு ஆதரவாக மக்களை ஒன்றிணைப்பதற்கு வாக்குறுதிகளை வழங்குகிறதோ அதே போன்றுதான். பிறதிதொரு முகாம் தமக்கு ஆதரவான சூழலை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான அரசியல் விளையாட்டுக்களில் இதுவும் அடங்கும். 

இலங்கையில் அரசமைக்கக் கூடியதாக கருதப்படும் தென்னிலங்கைக் கட்சிகள் எப்போதும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டவையல்ல. ஒரே நாடு, அந்த நாட்டுக்குட்பட்டவர்கள் குறித்த அரசுக்கும் கட்டுப்பட்டவர்கள். ஆயினும் பெரும்பான்மை மக்களின் விருப்பங்களுக்கு அடிபணிந்து நடந்துகொள்ள வேண்டும் என்ற அடித்தளத்திலிருந்து சிந்திப்பவை. நடந்துகொள்பவை. இந்தக் கோஷங்களில் மாற்றங்கள் இல்லாமலேயே வித்தியாசங்களோடு கூடிய சமூகங்களை தமது பிடிக்குள் வைத்திருக்க முயன்றன. வலையை வீசி பிடித்துக்கொள்ள முயன்றன. அதில் கணிசமான அளவு மக்களையும் பிடித்துக்கொண்டன. ஏற்கனவே இருந்த அனைத்துக் கட்சிகளும் செய்த பணிதான் இது. ஆயினும், பிற சமூகங்கள் தங்கள் தனித்துவத்தை எப்போதும் விட்டுக்கொடுத்ததே இல்லை. பன்மைத்துவத்தை கைவிடக் கூடிய அனைத்து வரையறைகளையும் மீறியதே இல்லை. சில சலுகைகளுக்காகவும், அபிவிருத்திகளுக்காகவும் அமைச்சுப் பதவிகளுக்காகவும் பல சந்தர்பங்களில் அரசுகளோடு இணைந்து செயல்பட்டபோதும் தங்கள் தனித்துவத்தை முற்றாக இழந்து, அரசோடு சங்கமிக்கும் நிலைக்குச் சென்றதில்லை. தனித்துவம் என்பது சலுகைகளாக சமரசம் செய்யப்பட்ட போதிலும், வேண்டிய நேரம் இணையவும், வேண்டிய நேரம் பிரியவுமான சுதந்திரத்தை கைவிட்டதில்லை. இது ஒருவகை ஒப்பந்திற்கு சாத்தியமான வழிமுறையை கைவிட்டு அரசுசார்பான கட்சிகளின் நிலையான உறுப்பினர்களாக மாறிவிடவில்லை. 

எதற்காக பிற சமூகங்கள் கட்சிகளை அமைத்து தமது தனித்துவங்களை மீள மீள வலியுறுத்துகின்றவோ அதற்கான தேவைகள் இன்றுமுள்ளன. அவை தீர்க்கப்படவுமில்லை. அதே நேரம், என்பிபிதான் உலகம் அழியும்வரை ஆட்சி செய்யும் என்றில்லை என்பதனால், என்பிபியினர் நல்லவர்கள், அனைத்து சமூகங்களையும் சமமாக பாவிக்கக்கூடியவர்கள் என்பதற்காக தங்கள் தனித்துவங்களை இழந்து அவர்களோடு, அவர்களின் வலையின் கண்ணிகளாக மாறிக்கொள்ள முடியாது. அரசியல் யாப்பில் கூட குறைந்த பட்சம் பிற சமூகங்களுக்கான சட்டரீதியிலான இடம் கூட இன்னுமில்லை. அவர்களின் ஆட்சி முடிந்து பிறிதொரு ஆட்சி வரும்போது என்ன செய்வது? இந்தக் கே்ளவிக்கான பதிலே, பிற சமூகங்கள் தங்கள் தனித்துவங்களை இழக்காத ஆனால், பொதுவான நலன்களுக்கு ஆதரவு செய்வதும், பன்மைத்துவமும் தனித்துவமும் பாதிப்பிற்குட்படும்போது எதிர்க்கவுமான தனியான முகாம்கள் அவசியம். இதை புதிய ஜனாதிபதி கூட தமது பதவி ஏற்பு உரையில், அரசியல் தேவைகளுக்காக பன்முகத்தன்மையையும், அவசிமான தேர்வுகளையும் எடுக்கும் பிற சமூகங்களின் நிலைப்பாட்டை ஏற்பதாக கூறியிருப்பார். 

முஸ்லிம்களின் சமூக வெளியில், இந்த தனித்துவத்திற்கு எதிரான குரல்கள் மேலெழுந்திருக்கின்றன. அவை அதிகமாக புதிய இளைஞர்களினதும் மத தீவிரப் பற்றாளர்களின் பக்கத்திலிருந்தும் வருபவை அன்றி வேறில்லை. நபியும் சகாபாக்களும் போன்று ஒரு நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை பரப்புகின்றனர். எந்தக் கட்சியாக இருந்தாலும் அவை அரசியல் அதிகாரத்திற்கான போட்டியில் பங்கேற்கின்ற நிறுவனம் என்பதை மறந்துவிடுகின்றனர். உணர்ச்சிவசப்பட்டு, இணைந்துகொள்கின்றனர். இலங்கையில் சீர் திருத்தங்களை முதன்முதலில் முன்வைத்த அமைப்புக்கள் அனைத்தும் மதப் பெருமையும், மதநம்பிக்கை போன்ற உணர்ச்சிசார்ந்த நிலைப்பாட்டிலுமே அடித்தளத்தை அமைத்துக்கொண்டன. அநாகரிக தர்மபால தொடக்கம் ஆறுமுக நாவலர்வரை இதை கவனிக்கலாம். 

ஊழல், லஞ்சம், சலுகை குறைப்பு போன்ற கோசங்கள் சீர்திருத்தம், புனிதப்படுத்தல், ஒழுக்கவாதம் போன்றவற்றோடு தொடர்புடையது. இந்த புனிதப்படுத்தலை பிரக்ஞையற்று ஏற்றக்கொள்ளும் முஸ்லிம் தரப்பின் இளைஞர்களும், ஒழுக்கவாதத்தை அதிகம் தூக்கிப்பிடிக்கும் இயக்கவாதிகளும் எண்ணிக்கையளவில் கண்மூடித்தனமான நம்பிக்கையின் பால் ஈர்க்கப்பட்டு நிற்பதை பார்க்க முடிகிறது. 

தனித்துவத்தை பேணுவதோடு பன்மைத்துவத்தை முதன்மைப்படுத்துவதற்காக , முஸ்லிம்களின் மத்தியிலுள்ள கட்சிகளை ஆதரிக்க வேண்டுமா எனக் கேட்டால் அது மிகச் சிக்கலானது. இதற்கான பதிலை உறுதியாக கூறுமளவு இந்தக் கட்சிகள் இதுவரை நடந்துகொள்ளவில்லை. கட்சிகளுக்குள்ளேயே உள்ளக சீரமைப்பும், ஜனநாயகச் சூழலும் அவசியமானது. இந்தக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான பலமான சமூக அழுத்தக் குழுக்கள் எப்போதும் அவசியமானவை. ஆனால், சலுகைகளுக்காக சார்பு நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய சலுகைக் குழுக்களே இங்கு அதிகமுண்டு. எந்த ஒரு சமூகமும் அரசியல் சார்புடைய கட்சிகளுக்கும், நிறுவனங்களுக்கும் வெளியே இயங்கும் அறிவுபூர்வமான அழுத்தக் குழுக்களினதும், ஊடகங்களினதும் தேவை இன்னுமுள்ளது. அவற்றை அமைக்காமல், அப்படியான சமூகப் பணியை செயலுக்கு கொண்டுவராமல் ஒரு கட்சி தவறு செய்கிறது என்பதன் காரணமாக, அந்தக் கட்சி எந்த சமூகத்தின் தனித்துவத்தை சாரமாக கொண்டிருக்கிறதோ அதைக் கைவிட வேண்டும் என கூக்குரலிடுவது மிகவும் ஆபத்தானது. தண்ணீரோடு கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் இருக்க முடிவெடுப்பதைப் போன்றது. 

பாராளுமன்றத் தேர்தலில், மாற்றம் குறித்த தந்திரோபாய நடவடிக்கைகளைக் பரப்புரை செய்யும் என்பிபி, அளவில் பாதிக்கும் அதிகமாக இருக்கும் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துமா? சம அளவு 50 வீதமானவர்களை களத்தில் இறக்குமா? சமூகப் பன்மைத்துவத்திற்கு ஏற்ப, விகிதாசார அடிப்படையில் பிற சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையும் களத்தில் இறக்குமா? குறைந்த பட்சம் இன்னும் ஒரு வாரத்திற்குள், என்பிபியின் பன்மைத்துவத்தையும், சம அந்தஸ்தையும், பிற சமூகங்களுக்கான இடத்தையும், பெண்களுக்கான வகிபாகத்தையும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு மீதிக் கதைகளை பேச முடியும். ஏலவே ஆட்சி செய்த கட்சிகளை விட இவர்களால் என்ன மாற்றத்தைத்தான் கொண்டுவந்துவிட முடியும்? காலம் இரக்கமற்றது அனைத்தையும் வெளியே தூக்கி எறிந்துவிடும். 

ஆக, மாற்றம் என்பது மிகப் பெரிய அரசியல் ஏமாற்று. ஆனால், பிற ஆட்சியாளர்களிலிருந்து குறைந்தளவு சீரான அரச இயங்குதலை வேண்டுமானால் இவர்களால் வழங்க முடியும் என்பதுதான் உண்மை. இதை அடிப்படையாக வைத்து அரசியலைப் புரிந்துகொள்ள முயலுங்கள். 

இன்னுமொரு உறுதிப்படுத்தப்படாத செய்தி, விவசாயிகள், வனத் தோட்டப்பாதுகாப்பாளர்கள் என அனைவருக்கும் கொடுக்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்கச் சொல்லியிருப்பதாக ஒரு தகவலை அறிந்துகொண்டேன். இது உண்மையா என்பதை தெரிந்தவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். எதற்காக இப்படி மீளப் பெறுகிறார்கள்? மீண்டும் புதியவர்களுக்கு அந்த துப்பாக்கிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதா? என்பதையும் அறியத்தாருங்கள். தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் அது குறித்தும் ஒரு பதிவை எதிர்பார்க்கலாம். 

தமிழ் தரப்பு வெளியில், தேசியம் அவசியமற்றது அதை கைவிட வேண்டும் என்பதைப்போன்ற கருத்துக்களும் மெல்ல மேல் கிழம்புவதைக் காண முடிகிறது. தேசியம் என்பது புதிய கருத்தியல் நிலைப்பாடுகள், உலக இயங்கியல் இன்றையத் தேவைகள் போன்றவற்றை உள்ளிணைத்து மீள் கருத்துருவாகம் செய்யப்பட வேண்டியதே ஒழிய, தேவையற்றது என்றவகையில் கைவிட வேண்டிய ஒன்றல்ல. உலகளவில் நாடுகளும், அதன் எல்லைகளும், அவற்றை நிர்வகிக்கும் அதிகாரங்களும் உள்ளவரை, தேசியம் தனது உள்ளடக்கத்தில் மாறுதல்களை செரித்துக்கொண்டு செழுமைப்படுமே தவிர, அழிந்துவிடாது. அதை கைவிட்டுவிடவும் முடியாது. தமிழ் தேசியத்தை கைவிட வேண்டும் எனக் கூறுபவர்கள், சிங்கள தேசியத்தையும் கைவிட வேண்டும் எனக் கூற வேண்டும். அது சாத்தியமில்லையே!. தேசியம் நெகிழ்ச்சியற்ற ஒரு இறுக்கமான கட்டமைப்பு அல்ல. பென் ஆண்டர்சன் சொல்வதைப்போன்று அது ஒரு கற்பிதம். தேவைக்கும் சாத்தியத்திற்கும் உட்பட்டு மாற்றமடையக்கூடிய ஒன்றே. அந்த நெகிழ்ச்சியின் வடிவமாக இருக்கும்வரைத்தான் அதன் பயன் சமூகங்களுக்கும் மக்கள் கூட்டத்தினருக்கும் அவசியமான அரசியல் வழிமுறையாக இருக்கும். 

எதைக் கைவிட வேண்டும் என்பது, ஒரு சமூகம் எதிர்கொள்ளும் சமூக பண்பாட்டு அரசியல் தேவைகளின் அடியாக நிகழும் ஒன்று. எதை ஒரு சமூகம் கைவிட வேண்டும் என்பதை அந்த சமூகமும் மக்கள் கூட்டமும் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய, தீடிரென ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தென்பட்டுவிட்டது. எனவே, அனைத்தும் சரியாகிப்போய்விட்டது என்று மதச்சாய்வான உணர்ச்சிசார்ந்த நம்பிக்கை வகைப்பட்டதல்ல. ஒரு அரசு எப்படி நடந்துகொள்கிறதோ அதற்கேற்ப அனைத்தும் உதிர்ந்துவிடும். அது மெல்ல மெல்ல நிகழும் ஒன்று. நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிந்துவிட்டது, அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு வாருங்கள் சங்கமமாகிவிடுவோம் எனக் கோரிக்கை விடுவது மிக ஆபத்தானது. புத்திசாலித்தனமானதும் அல்ல. அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அனைத்தும் மெதுவாக உதிர்ந்துவிடும். எவ்ளவவு பிடிவாதமாக இருந்த போதும். மக்களை போலியான நம்பிக்கையின் மூலம் பலவீனமாக மாற்ற வேண்டியதில்லை. என்பிபியின் மீது அதீத நம்பிக்கை வைத்தவர்கள், அவர்களின் பினாமிகளாக பிரச்சாரங்களுக்கு பணியில் அமர்த்தப்பட்டவர்கள் வேண்டுமானால் இந்த நம்பிக்கையை வெற்றிலைத் தட்டில் ஏந்திக்கொண்டும், குர் ஆன், ஹதீஸ் இலக்கியங்களில் கண்டுபிடித்துக்கொண்டும் உங்கள் முன் வரலாம். அவற்றின் மீது அவதானமாக இருங்கள். பிரச்சினைகளைத் தீர்க்க தீர்க்க, அந்தப் பிரச்சினைக்கான காரணங்களும் மறைந்துகொண்டு வரும். அதற்காக பெரும் பதட்டத்தை அடையவேண்டியதில்லை. பொங்கி எழவேண்டியதும் இல்லை. சமூகங்களிடையிலான ஒப்பந்தம் எப்போதும் அவசியமானது. அதற்காக தனித்துவங்களை இழந்து பிறிதொரு சாயத்தை பூசிக்கொள்ள வேண்டியதில்லை. 

புதிய அரசை நம்பிக்கையீனமாக பார்க்க வேண்டியதுமில்லை. எச்சரிக்கை உணர்வோடு அணுக வேண்டியதும், ஆழமான அரசியல் உள்ளடக்கத்தோடு பார்க்கவேண்டியதும் அவசியம். பொங்கி எழும் உணர்ச்சியுடனும், அபரிமிதமான காதலுடனும், அளவுக்கு மீறிய நம்பிக்கையோடும் ஏற்பது என்பது சரியானதொரு நடைமுறையில்லை. அதை அரசாகவும், மக்களை கட்டுப்படுத்தும் நிறுவனமாகவும் பார்க்கத்தவற வேண்டியதில்லை. ஒரு தலைகீழ் அரசாக (உலகில் உள்ள அரசுகள்) பார்க்க வேண்டியதில்லை. அரசின் அனைத்து சலுகைகளும், அடக்குமுறைகளும், வன்முறைகளும், மக்கள் விரோத நடவடிக்கைகளும் உலகிலுள்ள அனைத்து அரசுகளைப்போன்றுதான் இந்த அரசிலும் இருக்கும். அதிலும், பிற உலக நாடுகளையும், உள்ளூர் போட்டி அரசியல் கட்சிகளையும், அதிக தேவையை எதிர்பார்க்கும் மக்களையும் எப்படிக் கையாள வேண்டுமோ அதற்கான புதிய அரசின் நடவடிக்கைகள்தான் கவனிக்கப்பட வேண்டியதே ஒழிய. கண்மூடித்தனமான விசுவாசம் அல்ல. 

பிற சமூகங்கள் தங்களின் அனைத்தையும் இழந்து, என்பிபியை நம்ப வேண்டும் எனக் கோருவது நேர்மையானதல்ல. உங்கள் அரசின் செயல்பாடுகளே பிற சமூகங்களின் கோரிக்கைகளை கைவிட வேண்டிய நிலைக்கு கொண்டு போகவேண்டும். அந்த நம்பிக்கையை உருவாக்கும்வரை, அந்தவகையான ஒரு ஆட்சி நிலைநிறுத்தப்படும்வரை கோரிக்கைகளை கைவிடக் கூடாது என்பதைத்தான் என்பிபி பிற சமூகங்களுக்கு முன்னே வைக்க வேண்டும். அதுதான் நேர்மையானது. மாற்றத்திற்கான சரியான புள்ளியும் கூட.