— இரா.வி.ராஜ் —
சுதந்திரத்துக்குப் பின்னதான இலங்கை அரசியலில் சூழ்நிலைகள் என்பது மாறிக்கொண்டே போகின்றதைக் காண்கின்றோம், அதே போலவே இலங்கை மக்களின் அரசியல் நாட்டம் என்பதும் பல வகைகளில் மாற்றம் பெற்றுவிட்டது. தமிழ் மக்களைப்போலவே சிங்கள மக்களின் அரசியலிலும் இனப்பிரச்சினையும், யுத்தமும் பெருமளவில் தாக்கத்தைச் செலுத்தியிருந்தாலும் அவர்களின் பெரும் பகுதியினர் எப்போதும் கட்சி அரசியல் ரீதியில் இரண்டு தெரிவுகளை வைத்திருந்தனர்.
அதில் சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன பிரதானமாக இருந்தன. ஆனால் அது மகிந்த ராஜபக்ஷ இலங்கை அரசியலில் பிரதான தாக்கம் செலுத்த ஆரம்பித்ததில் இருந்து, மெல்ல கட்சி அரசியலை விட்டு விலகிய நிலைக்கு வந்திருக்கின்றது என்று சொல்லலாம்.
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜே.வி.பி உடன் கூட்டு வைத்து வெற்றி பெற்றதன் பின்னர், “உருவாகிய ஒரு குறுகிய காலத்துக்குள் மாபெரும் வெற்றியை பெற்றிருகின்ற” பொதுஜன பெரமுன, அடுத்த இடத்தில் இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி என்கின்ற ஒற்றைப் பெயருடைய கூட்டுக்கட்சிகளால், இலங்கையின் பெரும் வரலாற்றை உடைய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திரகட்சி ஆகியவை இலங்கை அரசியலில் வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவை எக்கூட்டு வைத்துக்கொண்டாலும் கட்சி ரீதியில் மேலெழ முடியாத பரிதாப நிலைக்கு வந்துள்ளன என்பதும் இன்றைய தென்னிலங்கை நிலைமை.
இவை நிகழ்வதற்கு வெறும் தென்னிலங்கை அரசியற் தலைவர்கள் மாத்திரம் காரணம் அல்ல. மக்களின் மனநிலையும் காரணம். இலங்கையில் வேறு ஒரு பூதாகர பிரச்சினை மேலெழும்பினாலே ஒழிய, இனப்பிரச்சினையும், யுத்தமும் அல்லது யுத்த வெற்றியும் சிங்கள மக்கள் மத்தியில் இனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே சொல்லலாம் .
வளர்ந்துவரும் நாடுகளில் வாழும் மக்களின் மனநிலையைப் போலவே சிங்கள மக்களும் அபிவிருத்தியைப் பிரதானமாக பார்க்கின்றதாலேயே, நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசு அபிவிருத்திப் பாதையில் பெரும் பார்வையைச் செலுத்தாததினாலும், யுத்த வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும் மகிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் கடன் வாங்கியேனும் குறிப்பிட்ட அபிவிருத்தியை மக்களுக்கு காட்டியதாலுமே அவர்களிடம் குறை இருக்கின்றது என்று தெரிந்தும், மீண்டும் ஜனாதிபதியையும், அரசையும் அவர்களிடத்திலிருந்தே தேர்தெடுத்திருக்கின்றனர். ஆனால் ஆட்சியாளர்களின் தெரிவு என்பது கடந்த காலத்தைப்போல் மாறலாம், ஆனால் அதில் மக்களின், நாட்டின் அபிவிருத்தி என்பது பிரதானமாக இருக்கப்போகின்றது.
இந்த நிலையில் தமிழ்த் தரப்பான நாம் என்ன செய்யப்போகின்றோம்? இப்பொழுது ஒருவகையில் தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் உரிமை சார்ந்து நிற்கின்றனர், மறு பகுதி அபிவிருத்தி சார்ந்து, பிரிந்துவிட்டனர் என்கின்ற ஜதார்த்தத்தினை மறுக்க முடியாது. இதில் அபிவிருத்தியை தனிநபர் மேன்பாட்டினைக் காட்டி மேலும் ஒரு பகுதி மக்களை அபிவிருத்தியை பிரதானப்படுத்தும் தரப்பினர் ஈர்க்கும் வாய்ப்புக்களே அதிகம் இருக்கின்றதே தவிர, உரிமை சார்ந்த அரசியலை செய்பவர்கள் எந்த வகையில் இன்னும் மக்களை தன் பக்கம் வைத்திருக்கப்போகின்றனர்? என்கின்ற பெரும் கேள்வியுடனேயே தாயக அரசியல் இருக்கின்றது.
புலம்பெயர் மக்களின் மனநிலையில் அபிவிருத்தி அரசியல் பெரும் தாக்கம் செலுத்தாது என்றாலும், தாயகத்தில் வாழும் மக்கள் தமது நாளாந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது, அவர்களின் முன்னேற்றத்துக்கு அபிவிருத்தி சார்ந்த அரசியல் உதவும்போது அந்த அரசியல் மீதே மக்கள் நம்பிக்கை வைப்பர். தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற கட்சிகள் சில விடயங்களில் கூட்டு வைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய கட்சிகள் என்று ஒன்றிணைந்து செயற்படுவதைப்போல் காட்டிக்கொண்டாலும் #P2P க்கு பின் அவை பிளவு பட்டு இருப்பதையே ஊடகங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது .
இங்கு நான்கு- ஐந்து முனைப் போட்டி ஒன்றே இந்த ஒற்றுமையை சீரழிப்பதாகத் தெரிகின்றது. இதில் திரு.சம்பந்தன் அவர்கள் ஓய்வு பெற்ற அரசியல்வாதிபோல் ஆகிவிட்டார் அல்லது மூத்த அரசியல்வாதி என்கின்ற மதிக்கப்படும் நிலையோடு அவர் வகிப்பாகம் மட்டுப்படுத்தப்பட்டதுபோல் தெரிகின்றது. அடுத்த கட்டத்தில் சுமந்திரன்-சாணக்கியன் எதிர் கஜேந்திரன்கள், சுரேஸ்பிரேமச்சந்திரன் எதிர் சுமந்திரன் எதிர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவை சேனாதிராஜா அணி எதிர் சுமந்திரன், கூட்டமைப்பு எதிர் விக்ணேஷ்வரன் என்று ஆளை ஆள் இழுக்கும் இந்தக் கப்பல் எங்கு சென்று சேரப்போகின்றது என்கின்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றனர்.
அடுத்த அரசியலுக்கு ஒரு யோசனை
இன்றைய நிலையில் உள்ளது போலத்தான் தமிழர்களுக்கான அரசியற் சூழல் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் இருக்கும் என்றால் நாம் “மற்றவனின் பற்களை நம்பாமல் நம் முரசே சிறந்தது“ என்கின்ற நிலைக்கு திரும்பவேண்டி இருக்கின்றது.
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற கட்சிகள் எதிர்ப்பு அரசியல் அதன் மூலம் முடிந்ததை சாதிப்பது அல்லது தமிழ் மக்களுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் யுத்தியுடந்தான் தொடர்ந்து நகரப்போகின்றதென்றால் உண்மையில் விக்னேஸ்வரன் தலமையிலானவர்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானவர்கள் எனும் இந்த இரண்டு தரப்பினரே அதை செய்யப் போதுமானவர்கள். அதனை அவர்கள் உள் நாட்டிலும், புலம் பெயர் தரப்பிலிருந்தும் தொடர்து செய்துகொண்டிருப்பர்.
கூட்டமைப்பினர் அல்லது எஞ்சிய தரப்பினர் 10-20 வருட காலத் திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச நாடுகளுக்கும் அறிவித்து, இலங்கை அரசுடன் அமைச்சரவை உட்பட ஆட்சி அதிகாரம் பகிரும் தரப்பாக மாறலாம். வட–கிழக்கில் இருக்கும் அனைத்து அரசு, தனியார் சார்பு விடயங்களில் அதிகாரம் செலுத்தும் தரப்பாக அவர்கள் மாறவேண்டும் (நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருந்ததை போலல்ல) இவை நடைமுறை சாத்தியமான பிரச்சினைகளுக்குக் குறுகிய, நீண்டகால அடிப்படையில் தீர்வு காண முனையவேண்டும். முக்கியமாக சட்ட ரீதியிலான வட–கிழக்கு மீழ்கட்டுமானத்துக்கான நிதியம் ஒன்று அமைக்கப்பட்டு அவை நேரடியாக வடகிழக்குக்கு செல்லும் கட்டமைப்பு அமைக்கப்படவேண்டும். இந்த நிதியத்துக்காக இலங்கை அரசின் அனுசரணையுடன் தமிழ்த் தரப்பு உலக நாடுகளிடம் பெருமளவு நன்கொடையும், திரும்ப செலுத்த சாத்தியமான கடன் தொகையையும், பாதகமில்லா முதலீடுகளையும் திரட்டிவந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் திட்டங்களுக்கும், உட்கட்டுமானங்களுக்கும் பயன்படுத்தி குறுகிய கால பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தவேண்டும். இவை சாத்தியம் இல்லாத ஒன்று என்று தோன்றவில்லை.
இதை ஒத்த கருத்தாடல்கள் விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகசபை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றும் இருந்தவைதான். ஆனால் இன்றைய கள நிலவரம் வேறு. அன்று இராணுவப்பலத்தை மையமாகக்கொண்ட இரு தரப்புக்கள் பேசிக்கொண்டன. ஆனால் அவர்களின் பிரதான நோக்கம், இராணுவயுத்தி சார்ந்ததாக இருந்தது. ஓய்வெடுத்தல், தம் இராணுவபலத்தை கூட்டுவது, சர்வதேச தொடர்பை விரிவுபடுத்துவது, மக்கள் மத்தியில் செல்வது, சர்வதேசத்தைக் கவர்வது, பலப்படுதிக்கொண்டு மீண்டும் சண்டையிடுவது போன்றன பிரதான எண்ணமாக இருந்ததே தவிர, இன்றிருப்பதுபோல் இராணுவப்பலம் பற்றியோசிக்கும் தேவை இல்லாத தரப்பொன்று தமிழ்த் தரப்பில் இருந்ததில்லை. அன்று வரலாறு ஒரு சந்தர்ப்பத்தை தந்தது. இன்று ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி ஒரு வரலாறு ஆக்கலாம். தமிழ்த் தரப்பு சரியான நீண்டகாலப் பார்வையோடு அரசியலை நகர்தினால் இது சாத்தியம்.
தமிழ்த் தரப்பு தமக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதோடு, இந்தியாவின் ஆதரவு என்பதில் இரட்டை நிலையைக் கையாளவேண்டும். மத்திய அரசுடன் அயல் நாடு என்கின்ற ரீதியிலும், தமிழ் நாடு அரசுடன் ஒரே இனம் என்கின்ற ரீதியிலும் நாம் உறவை இன, மொழி, கலை, கலாச்சார, கல்வி, வர்த்தகம் என்கின்றரீதியில் மிக வலுவாக்கப் பாடுபடுவதோடு மிகப்பெரும் இணைப்பொன்றுக்கான வேலையைச் செய்யவேண்டும்.
அதுவே இன்றிருப்பது போலல்லாமல் உண்மையான இன ஆதரவைப்பெற வழிவகுப்பதோடு ஒரு வகையில் எமக்குப் பாதுகாப்பையும் கொடுக்கும்.
பாரதிய ஜனதா கட்சியை இலங்கையில் உருவாக்குவது என்பது அல்லது வேறு நாட்டின் பிரதான கட்சி ஒன்றை ஒரு நாட்டுக்குள் உருவாக்குவதென்பது நாட்டின் இறையான்மைக்கு பங்கம் விளைவிப்பது மட்டுமல்லாமல் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது ஒரு தேசத்துரோகமாக கருதப்பட்டால் கூட அது பிழை என்று சொல்ல முடியாது.
இன்று யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி உருவானால் இன்னும் சில நாட்களில் சீனக் கம்யூனிஸ கட்சி ஒன்று பௌத்த அடிப்படையில் உருவானதாக அறிவிக்கலாம். ஆக இந்தத் தரப்புகளுக்கு இலங்கை அரசும் சரி, தமிழ்த் தரப்பும் சரி, இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவைக் கொடுத்துவிடக்கூடாது. இவை முற்றாக நிராகரிக்கப்படவேண்டும்.
சீனா தன் பொருளாதாரப் பலத்தினால் வறிய ஆபிரிக்க நாடுகளில் காட்டும் ஆட்டம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடுகளின் அரசியல் பொருளாதாரம் என்பது சீனாவின் கைகளுக்குள் சிக்கித்தவிக்கின்றன. அதேபோலவே அமேரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் பிடியிலும் சில நாடுகள் குழம்பிக்கிடப்பதும் உலகம் அறிந்தது. இந்த நிலையில்தான் சர்வதேச அரசியல் விடயத்தில் கவனமாக நடக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது தமிழ்த் தரப்புக்கும் இருக்கின்றது. இன்றைய நிலையில் சரி, பிழைக்கு அப்பால், நம் இலங்கை போன்ற சிறிய கேந்திர முக்கியத்துவம் என்கின்ற சாதகமான நிலைமையை வைத்துக்கொண்டு, இந்தியா, சீனா, அமேரிக்கா, ரஷ்யா என எந்த நாடும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தாதவாறு நாட்டின் அரசியலைக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கின்றன. “ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்“ என்பது இலங்கை விடயத்தில் சரியாகவே இருந்தது வல்லரசுகளின் பார்வையில் செப்டெம்பர் அமேரிக்க தாக்குதல்வரை. அவை ஒவ்வொன்றும் இலங்கைப் போரை ஒவ்வொரு விதமாய் கையாண்டன. 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டு வந்ததற்குப் பின் அவை பொருளாதார, அரசியல் ரீதியில் தாக்கம் செலுத்தப்பார்க்கின்றன என்பதுதான் யதார்த்தம்.
தமிழ் நாட்டு அரசுடனான உறவை வளர்ப்பது என்பது நாம் தமிழ் நாட்டின் கட்சியை வட கிழக்குக்கு கொண்டுவருவது என்றதல்ல. எல்லோரும் சொல்வதுபோல் உலகின் பழைமையான இனம், உலகம் எல்லாம் பரந்திருந்தும் தமக்காக ஒரு நாடு இல்லாத இனம் என்றிருக்கையில், அருகில் இருக்கும் எம் இனத்தோடு உறவினை வலுப்படுத்துவதுடன் எமக்கான ஒருவகை பாதுகாப்பைப் பலப்படுத்துவது சம்பந்தமானது.
தமிழர் திட்டமிட்ட 10-20 வருட கால இடைவெளியில் நம் மக்களை முடிந்தவரை உயர்த்திவிடுவதுடன், வருங்கால சந்ததிக்கான அரசியல், கல்வி, பொருளாதார அடித்தளத்தினை இடுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம். எமது அடிப்படை பிரச்சினையைப்ப புரிந்துகொள்ளாத சிங்கள மக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் புரியவைக்கும் செயற்பாட்டிலும் இறங்கலாம், அத்தோடு எமது நிலம், அதிகாரத்தினை முடிந்தவரை பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை அரசியல் ரீதியில் சாதிக்க முயலலாம். இதைத் தாண்டி தென்னிலங்கை அரசு எம்மை எவ்வகையில் தட்டிக்கொடுக்கின்றது, தட்டி வீழ்த்துகின்றது, எங்கெல்லாம் மறுக்கின்றது என்பதனை சர்வதேசம் கண்காணிக்கும் வாய்ப்பை நடைமுறையில் செய்து காட்டலாம். இவ்வகையில் நாம் மீண்டும் சர்வதேசத்திடம் சென்று நிற்கலாம். நாம் இனணந்து பயனித்தோம் இவ்வகையில் எல்லாம் பிரச்சினைகள் இருக்கின்றதென்பதனை மீண்டுமொருமுறை ஆதாரத்துடன் நிரூபித்து, சர்வதேசத்தின் கருணையைப் பெற்றுக்கொண்டு, மேலும் அதிகாரத்தைப் பெறுவது, என்பதை நோக்கி அரசியலை நகர்த்தலாம்.
இதைத்தாண்டி இனங்களுக்கிடையிலான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்படுமிடத்தில் எமது பிரச்சினை தொடர்பில் ஆதரவு தரும் சிங்கள, முஸ்லீம் மக்களின் ஒரு தொகுதி மக்களின் ஆதரவினையும் சம்பாதிக்கலாம். இவை எல்லாம் தமிழ்த்தரப்பின் பல இணக்கப்பாடுகளுடன் தமிழ் மக்களிடம் தெளிவுபடுத்தப்பட்டு நகர்த்தவேண்டும். அரச எதிர்த் தரப்புக்கும், அரசுடன் இணைந்து பயணிக்கும் தரபினருடனான உறவினைச் சிவில் அமைப்பு கையாளலாம். ஒரு சிலர் இதை கற்பனையாய் பார்ப்பீர்கள் என்றாலும் இவை நடைமுறையில் செய்து பார்க்கக்கூடிவை.
இன்று அரசுடன் இணைந்து பயணிக்கும் தரப்பினரும் மேற்குறிப்பிட்ட சாயல் பலவற்றுடனேயே தம் அரசியலைச் செய்கின்றனர் என்று சொல்லலாம் ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அரசியலைக் கையாள்பவர்கள். இதில் சிலரே கட்சி ரீதியில் அல்லது பிரதேச ரீதியில் தமக்கான ஆதரவை நிலைத்துவைக்கக்கூடிய கட்டமைக்கப்பட்ட அரசியலைச் செய்கின்றனர். எப்படி ஒரு சிங்களப் பேரினவாதம் பேசுபவர்களிடம் ஒரு அரசியல் ஒழிந்திருக்கின்றதோ, தமிழ்த் தேசியம் பேசுபவர்களிடம் ஒரு அரசியல் ஒழிந்துள்ளதோ, அதேபோலவே பிரதேசவாதம் பேசுபவர்களிடமும் ஒரு அரசியல் ஒழிந்துள்ளது என்கின்ற ஜதார்த்தத்தினை அவரவர்கள் பக்கத்திலிருந்தும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். சிங்களப் பேரினவாதம் பிழை என்கின்றது ஒரு தரப்பு. ஆனால் ஒரு தரப்பு ஏற்றுக்கொள்கின்றது. தமிழ்த் தேசியவாதம் அல்லது இனவாதம் பிழை என்கின்றது ஒரு தரப்பு ஆனால் ஒரு தரப்பு ஏற்றுக்கொள்கின்றது. பிரதேசவாதம் பிழை என்கின்றது ஒரு தரப்பு, ஆனால் ஒரு தரப்பு அதை ஏற்றுக்கொள்கின்றது. இவ்அமைப்புகளின் ஆதரவுத்தளங்கள் என்பது சில நிகழ்வுகளின் அடிப்படையிலும், உணர்வுகளின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. இவ் ஆதரவுத்தளங்களை யாரும் இலகுவாக நீக்கிவிட முடியாது என்பதே யதார்த்தம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழ் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற அமைப்பொன்று அரசுடன் இணைந்து பயணித்தால் ஏற்கனவே அரசுடன் இணைந்து பயனித்த சிலர் வெற்றி பெறுவது கேள்விக் குறியாக்கப்படலாம்.
இப்படியாக தமிழ்த் தரப்பு அரசியற் பாதையில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். இல்லையேல் வரும் சந்ததிக்கான அரசியல் மிகவும் சிக்கலானதாகவே இருக்கும்.
தமிழ் அரசியற் தரப்பு எந்தளவுக்கு மக்கள் நலம் சார்ந்து அர்பணிப்புடன் செயற்படுகின்றது என்பதைப் பொறுத்தே எம் இனத்தின் அரசியல் மக்களுக்கான முன்னேற்றத்தைக் கொடுக்கும் அரசியலாக இருக்குமே தவிர, கடந்த காலத்தைப்போல் தம் கட்சியை வளர்க்கும் செயற்பாட்டிலேயே தமிழ்க்கட்சிகள் தொடர்ந்து பயணிக்குமாயின். உண்மையில், அதிகார அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களும், யுத்த இழப்பை சந்தித்த மக்களும், படித்தும் வேலை இல்லாத இளைஞர்களும் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்படும் நிலையே தொடர்ந்து நீடிக்கும்.
ஒரு முறை மகாத்மா காந்தியிடம் ஒரு பெண் தனது குழந்தையுடன் வந்திருந்தாராம், அவர் “என் குழந்தை அதிகம் இனிப்பு சாப்பிடுகின்றாள் அவளுக்கு அறிவுரை கூறுங்கள்” என்று கேட்டாராம். அதற்கு காந்தி
“இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்” என்று அனுப்பிவைத்தாராம். அவரும் குழந்தையுடன் இரண்டு நாட்கள் கழித்து காந்தியிடம் வந்தபோது அவர் குழந்தையைப் பார்த்து “இனிப்பு சாப்பிடக்கூடாது. இந்தந்தத் தாக்கங்கள் எல்லாம் வரும்” என்று அறிவுரை கூறினாராம் .
அந்தப் பெண் காந்தியிடம் “இதை அன்றே கூறியிருக்கலாமே எதற்கு இரண்டு நாள் அவகாசம்” எனக் கேட்க. காந்தி “நான் இந்த இரண்டு நாட்களில் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டேன்” என்றாராம்.
தமிழ் மக்களுக்கான அரசியலைக் கையில் எடுக்க நினைப்பவர்கள் தம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டு அதற்கான அருகதையுடனேயே மக்கள் பிரதி நிதிகளாக முயற்சிக்க வேண்டும் பின்னர் தொடர்ந்து அரசியலை நடத்தவேண்டும்.!