— அகரன் —
அ. முத்துலிங்கம் – இந்த மனிதர் எழுதுவது எல்லாமே இலக்கியமாகிவிடுகிறதே! என்ற அதீத பொறாமையை எனக்குள் பூக்கச் செய்தது இப்புத்தகம்.
இந்நூல் எந்த வகை? என்று சொல்லும் வல்லமை என்னிடம் இல்லை. பேட்டிகள், மொழிபெயர்ப்பு, அனுபவங்கள், சிறுகதை என்று சொல்லத்தக்க ஆச்சரியக்கதைகள், கடும் பசியோடு உள்ள வயிறுக்கு பாட்டி பழஞ்சோறும் கருவாட்டுக் குழம்பும் குழைத்து தந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ‘அ.மு’ வின் எழுத்துக்க குழையல்.
எல்லாவற்றுக்கும் மேலாக பெருங்கலைஞன் வடிவேலின் நடிப்பை பார்ப்பது போல எழுத்து. வடிவேல் இப்போது நடிக்காததால் அ.மு எழுத்து என்னை பாதுகாக்கிறது.
‘ஊபர்’ என்ற கட்டுரை/கதை அதற்கு சிறிய எடுத்துக்காட்டு. அ.மு சிரிக்கும்போதும் ஆழமான தகவல்களை பன்னீர் தெளிப்பதுபோல தெளித்துவிடுகிறார்.
கனடாவின் வீதிகளை அறியாத ஆபிரிக்க மனிதனின் டாக்ஸியில் ஏறிவிடுகிறார், 28 டாலர் பயணத்துக்கு 72 டாலர் வரை அவன் கூட்டிச்சென்றான். இறுதியில் அ.முவே அவனுக்கு வழிகாட்டி வீடு வந்து விடுகிறார். அவன் டாக்ஸிக்குள் ‘யேசு துணை வருவார்’ என்ற பாடல் ஒலித்தவாறே இருக்கிறது.
இறுதியாக பணம் கொடுத்த பின்னர் அவன் கேட்கிறான் அ.முவிடம் ‘ஐயா, நான் எப்படித் திரும்பிப்போவது? அதற்கு அ.மு இப்படி சொல்கிறார்..
‘நான் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ சாரதிகளிடம் வழிகேட்டிருக்கிறேன். முதன் முறையாக என்னிடம் ஒரு வாகன ஓட்டி வழிகேட்கிறார் ‘’வந்த மாரித்தான். ஏசு உங்களுடன் வருகிறார்’’என்றேன்’ என்கிறார்.
‘’ஐயாவின் கணக்குப் புத்தகம்‘’ என்ற கதை ஒரு திரைப்படத்துக்கான அத்தனை அழகில், கவித்துவம் நனைந்த கதை.
‘’மோசமான விடைபெறுதல்’’ என்பது அ.மு படித்த ஆங்கில இலக்கியம், அதை மொழிபெயர்த்துள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு வீரன் காதலியிடம் இருந்து புகையிரத நிலையத்தில் விடைபெறுவது பற்றியது. இந்தப் பெண் பூக்கள் உலக அளவில் ஒன்றான உளவியலோ? என்று எண்ணத்தோன்றும் கதை.
‘இரண்டு சம்பவங்கள்’ கனடாவில் இரவு ஒருமணிக்கு தொலைபேசியில் யாரோ அழைத்து அ.முவிடம் பேசவேண்டும் என்கிறார்கள்.
« அது நான்தான் சொல்லுங்கள்
கேட்கிறதா, கேட்கிறதா ?
எல்லாம் கேட்கிறது. சொல்லுங்கள்.
குரலே சரியில்லையே?
நான் ஒன்றும் செய்ய முடியாது அந்தக் குரலுடன்தான் பிறந்தேன் உங்களுக்கு என்ன வேண்டும்? »இப்படிப்பட்ட உதடுகள் சிரித்துக்கொண்டே வாசிக்கத் தக்க புத்தகம் இது.
வயலில் பலகை அடித்ததும் விதைக்கப்பட்டுக் கிடக்கும் விதை நெல்போல இந்த புத்தகத்தில் விதைக்கப்பட்ட சேதிகள் அதிகம்..
*ஆர்மேனியர்கள் ‘சானெட் ரானெம்’ என்றே வணக்கம் செலுத்துவார்கள் அதன் அர்த்தம் ’உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்பதாகும்.
*The man – Eater of Punanai என்ற கிறிஸ்டாபர் ஒண்டாச்சி அவர்களுடைய நாவலில் வெள்ளைக் காகம் என்ற அத்தியாயம் ‘தமிழர்களை பட்டினி போட்டால் சிங்களவர்க்கு மகிழ்ச்சி’ என்று சொன்ன ஜே.ஆர் பற்றியது.
*2016 இல் அனுக் அருட்பிரகாசம் என்ற ஈழத்தை சேர்ந்த இளைஞர் எழுதிய நாவல் THE STORE OF A BRIEF MARIAGE தெற்காசிய இலக்கிய நடுவத்தால் 25000 டொலர் பரிசு வழங்கப்பட்டது. The wall street journal 2016 மகத்தான 10 நாவலில் இதுவும் ஒன்று என்று அறிவித்தது.
*19 வயதில் கனடா சென்ற தர்மதுரை லோகதாசன் 100000 டொலர் பெறுமதியான நாவலை எழுதியுள்ளார் (THE SADNESS OF GEOGRAPHY) ஆங்கில உலகில் அதிர்வை தரும் நாவல்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலக அனுபவங்களையும், ஆங்கில உலகின் இலக்கியங்களையும் நிறையவே சேமிப்பில் வைத்திருக்கும் அ.மு தமிழ் மட்டுமே தெரிந்த என்போன்ற வெறும் சாக்குகளை நிரப்பும் நெல் மணிகளை தருகிறார். நிரப்புவதும் நிறைவதும் அவரவர் விருப்பம்.
குறிப்பு :- தாம்பூலம் என்ற கட்டுரை கலைஞரைப் பற்றியது. எல்லாவற்றிலும் நிறைகளை மட்டும் காணும் அ.மு அவர் சிறப்பை எழுதியுள்ளார். பால் பானையில் ஒரு நஞ்சு கலந்தாலும் அது தலைமுறை நஞ்சென்பேன் நான் !!!