இன அழிப்பு..!(?) — மியான்மார்  தரும் பாடம்!! (காலக்கண்ணாடி -27)

இன அழிப்பு..!(?) — மியான்மார் தரும் பாடம்!! (காலக்கண்ணாடி -27)

— அழகு குணசீலன் — 

இன அழிப்பு! – இந்த வார்த்தை தமிழர் அரசியலில் சமகாலத்தில் சகஜமான பேசுபொருளாகி இருக்கிறது. 

இதன் அர்த்தம், உள்ளடக்கம், வியாக்கியானம், வரைவிலக்கணம், குறுக்கு, நெடுக்கு வெட்டுமுகங்கள், ஆழம், அகலம் எமக்கு தெரியுமோ தெரியாதோ நாம் எல்லோரும் பேசுகின்றோம். 

ஆனால் நாம் தவறான அர்த்தத்தில் அதனைப் பேசவில்லை. ஆம்! யுத்தத்தின் போது பெருந்தொகையாக கொல்லப்பட்ட ஒரு இன மக்கள் குறித்து பேசுகின்றோம். அந்த இழப்பைக் குறித்து பேசுகின்றோம். 

இங்கு சர்வதேசிய சட்டரீதியான வரையறைகள், வகைப்படுத்தல்கள், வரைவிலக்கணங்கள் எமக்கு அவசியமற்றது. யுத்தத்திற்கு உடன்பிறப்புகளை பலிகொடுத்த மக்களின் உணர்வு பூர்வமான வெளிப்படுத்தல் குறியீடு. மனித நேயத்தின் மறு மொழி இது. 

ஆனால் நிறுவன மயப்படுத்தப்பட்ட, சட்டங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசுகளினதும், சர்வதேச நிறுவனங்களினதும் பார்வையில் மனிதத்தை விடவும் வியாக்கியானங்களும், வரைவிலக்கணங்களும் முக்கியமானவை. சட்டவரைபுகளும், சரத்துக்களும், நடைமுறை ஒழுங்கு விதிகளும் முதன்மையானவை. 

இந்த இரு தரப்பு முரண்பாடான அணுகுமுறையே ஈழத்தமிழர்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் – சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியாக விரிந்து கிடக்கின்றது. இன அழிப்பு என்ற வார்த்தையின் புரிதலை விவாதத்திற்கு உட்படுத்துகின்றது. 

ஈழத்தில் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்றது இன அழிப்பா? இல்லையா?   

பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுத்த எடுப்பில் அது இன அழிப்பு. 

பாதிப்புக்கு காரணமானவர்களுக்கு அது இரு தரப்பு யுத்தமொன்றின் உயிர் இழப்பு. 

சர்வதேசமோ சட்டரீதியான வரையறைக்குள் நின்று சுழல்கிறது. 

விளைவு: சம்பந்தப்பட்ட இரு தரப்புக்குமே சர்வதேச அணுகுமுறையில் திருப்தியற்ற நிலை…….. 

இன அழிப்பு: சில வெட்டு முகங்கள்….! 

இன அழிப்பு என்ற வார்த்தை சர்வாதிகாரி ஹிட்லர் யூத இனமக்களை கொலை செய்ததைக் குறிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. 

இரண்டாம் உலகப்போரில் தப்பிய போலந்து அகதியும், யூத சட்டவாளருமான RAPHAEL LEMKIN இன அழிப்பு என்ற வார்த்தையை உபயோகித்தார். 

GENOS என்ற மக்கள் அல்லது இனத்தைக் குறிக்கின்ற கிரேக்க சொல்லினதும் CIDE என்ற கொல்லுதலைக் குறிக்கின்ற இலத்தின் சொல்லினதும் சேர்க்கை GENOCIDE -இன அழிப்பு அல்லது இனப்படுகொலை. 

மக்கள் சமூகம் ஒன்றை இனம், தேசியம், மொழி, மதம் போன்ற காரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக அல்லது பகுதியாக அழிப்பதை இன அழிப்பு என்பது பொதுவான வரையறையாக குறித்து நிற்கின்றது. 

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இதுவரையில் சர்வதேச மட்டத்தில் சட்டரீதியாக மூன்றே மூன்று இன அழிப்பு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.! 

1. கம்போடியாவில் 1975-1979 காலப்பகுதியில் பொல்பொட் ஆட்சியில் இடம்பெற்ற இன அழிப்பு. 

2. ருவாண்டாவில் 1994 இல் இன மோதல்களால் ஏற்பட்ட இன அழிப்பு. 

3. முன்னாள் யூகோசிலாவியாவின் சேர்பிய இராணுவம் பொஷ்னியாவில் 1995 இல் மேற்கொண்ட இன அழிப்பு. 

இவற்றைவிடவும் பல இன அழிப்புக்கள் பற்றி பேசப்படுகின்ற போதும் இவை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல என்பது மட்டுமன்றி இவை எல்லாமே போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டவையும் அல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

ஆனால் குற்றவியல், அரசியல், உளவியல், சமூகவியல், சட்டவியல் நிபுணர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட இனரீதியான பாரிய மக்கள் அழிவை இன அழிப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவை சர்வதேச சட்ட அங்கிகாரம் பெற்றவை அல்ல. ஐ.நா.வாலும் அங்கிகரிக்கப்பட்டவை அல்ல. 

உதாரணமாக: சதாம் ஹுசைனின் குர்தீஷ் மக்களுக்கு எதிரான கொலைகள், வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிந்தபோது வங்காள மக்கள் மீது பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட கொலைகள், மிகப்பிரபல்யமான ஆர்மேனிய மக்கள் அழிப்பு, சீனா திபேத்தில் மேற்கொண்ட கொலைகள், ஏன்? மியான்மாரில் றோகிஞ்ஞா முஸ்லீம்கள் மீதான இன அழிப்பு கூட சில தனிப்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதே அன்றி சர்வதேச அங்கீகாரத்தை பெற்றதல்ல. 

இந்த அனுபவங்களின் ஊடாகத்தான் ஈழத்தமிழர் மீதான இனஅழிப்பை(?) ஆய்வுக்கு உட்படுத்தமுடியும். இன அழிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதப் படுகொலைகள் சட்டரீதியான இன அழிப்பாகி விடுவதில்லை. 

இன்றைய உலகமயமாக்கல் நடைமுறை உலகில் இராணுவப் போட்டி, முதலீட்டுப்போட்டி, வர்த்தகப்போட்டி என்பன சர்வதேச, பிராந்திய வல்லரசு அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டு இன அழிப்பை நிர்ணயிக்கின்ற போக்கு முதன்மை பெற்றிருப்பது ஒரு கசப்பான உண்மையாகும். இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கேந்திந்திர முக்கியத்துவம் இந்தப் போட்டிகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாய் உள்ளது. 

இதற்கு ஈழத்தமிர்கள் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்ன?  

இந்த இழுபறிகள்தான் ஜெனிவாவின் இன்றைய அழியாத கோலங்கள். 

றோகிஞ்ஞாக்களும் ஈழத்தமிழர்களும்: 

மியான்மார் இராணுவம் றோகிஞ்ஞா முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு ஓரளவுக்கு சர்வதேசத்தை /ஐ.நா.வை எட்டியது. நீதிமன்றத்தையும் எட்டியது ஆனால் ஈழத்தமிழர் விடயம் இன்னும் அந்த அந்தஸ்த்தை அடையவில்லை. 

இதற்கு காரணம் என்ன

1. மியான்மாரில் இராணுவம் அப்பாவி மக்கள் மீது இனப்படுகொலைககளை கட்டவிழ்த்து விட்ட நிகழ்வு இலங்கையில் போன்று நீண்டகால இரு தரப்பு யுத்தம் ஒன்றின் போது ஏற்பட்டதல்ல. 

2. இன அழிப்பு விடயத்தை ஒரு நாடுதான் சம்பந்நப்பட்ட நாட்டுக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரிக்க வேண்டும். இதனை ஹாம்பியா என்ற நாடு மியான்மாருக்கு எதிராக செய்தது. இதைச் செய்வதற்கு தமிழருக்கு ஒரு நாடும் முன்வரவில்லை. 

3. 57 நாடுகளைக்கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு  ஹாம்பியாவுக்கு பின்னணியில் இருந்தது. இப்படி ஒரு பிராந்திய, சர்வதேசிய அமைப்பின் ஆதரவு தமிழர்களுக்கு இல்லை. கனடா, லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர்களும் றோங்ஞ்ஞாக்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். 

4. மியான்மார் இன அழிப்பை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு யுத்தமாக காட்டுவது கஷ்டமாக இருந்தது. இலங்கையில் நிலைமை வேறுபட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் எல்லை கடந்த பயங்கரவாத செயல்களும், மனித உரிமை மீறல்களும் நிறையவே ஐ.நா.வாலும், சர்வதேசத்தாலும் அறியப்பட்டவை. 

5. விடுதலைப்புலிகளைத் தடை செய்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, இந்தியா என்பன தமிழர் தரப்பு நினைப்பது போன்று  இனப்படுகொலை விடயத்தில் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். இதனைத்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மியான்மார் இனப்படுகொலைகளை இலங்கையின் இரு தரப்பு யுத்தம் ஒன்றின் இழப்புடன் ஒப்பிடமுடியாது என்று இரு வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். 

6. நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் நாடுகளுக்கு இடையிலான வழக்குகளைத்தான் விசாரிக்கமுடியும். சர்வதேச போர்க்குற்றவியல் நீதி மன்றம் இனப்படுகொலையை விசாரணை செய்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை, ஐ.நா.பொதுச்சபைக்கு இதனை கொண்டுவரவேண்டும். இங்கு இருக்கின்ற சிக்கல் வீட்டோ அதிகாரம். 

ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்கு ஆதரவாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தான் அண்மையில் பிரித்தானிய பிரதமர் சுட்டிக்காட்டி இருந்தார். 

7. போர்க்குற்ற விசாரணை என்ற நிலை ஏற்பட்டாலும், சூ அம்மையார் குறிப்பிட்ட காரணங்களை இலங்கையும் குறிப்பிட முடியும்.  

‘மியான்மாரின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு உள்ளிட்ட நேசத்தின் நலன் சார்ந்து நான் இங்கு ஆஜராகின்றேன். எமது இராணுவம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுகின்றது. 

அறகான் றொங்கியா சல்வேசன் இராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு ஒரு பிரிவினைவாத முஸ்லீம் அமைப்பு. இவர்கள் றாகாகிங் தனியரசு ஒன்றை அமைக்க செயற்படுகின்றனர். இவர்களின் நோக்கம் ஷரியா சட்ட அடிப்படையிலான இஸ்லாமிய அரசு ஒன்றை நிறுவுவது. 

மியான்மார் இராணுவம் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுகிறது’ 

இது சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற சூ அம்மையாரின் வாக்குமுலம். 

8. மியான்மாருக்கு ஐ.நா.வில் இல்லாத முக்கிய நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதும்  முக்கியமான ஒன்று. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், வெனிசுவேலா, துருக்கி, இந்தியா(?) போன்ற நாடுகளுக்குப் பின்னால் இன்னும் ஒரு தொகுதி நாடுகள் உள்ளன. 

9. இலங்கையில் பயங்கரவாதம் ஒரு பேசுபொருளாக இருப்பதும் தமிழர் தரப்புக்கு பாதகமானவிடயம், சர்வதேசம் இது விடயத்தில் மிகக் கவனமாக இருக்கிறது. அளந்து பேசுகின்றது. 

10. இது மியான்மார் குறித்த சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு: 

#. றொகிஞ்ஞா மக்களுக்கு தொடர்ந்தும் இனப்படுகொலை அச்சுறுத்தல் உண்டு. 

#. சிறுபான்மை முஸ்லீம்களின் இனப்படுகொலையைத் தடுக்க மியான்மார் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

#. இராணுவம் றொகிஞ்ஞாக்களை தொடர்வதையும், கண்காணிப்பதையும் கைவிடவேண்டும். 

#. சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு மியான்மார் கடப்பாடுடையது. 

#. நான்கு மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க வேண்டும். 

#. ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த வழக்குத்தான் நேரடியாக பிரச்சினையில் சம்பந்தப்படாத ஒரு நாடு தொடுத்த முதல் வழக்கு. அதுமட்டுமின்றி ஐ.நா. மனித உரிமைகள் இன அழிப்பு பிரகடனத்தின் கீழும் தொடுக்கப்பட்ட முதல் வழக்கும் இதுதான். 

இந்த தீர்ப்பு மியான்மார் றொகிஞ்ஞாக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்றைய இராணுவ ஆட்சியில் அது இன்னும் அர்த்தம் அற்றதாக உள்ளது. 

இந்த வரையறைக்கு மேல் சர்வதேச நீதிமன்றம் செல்ல முடியாதெனின் ஈழத்தமிழர் இவ்வாறான தீர்ப்பொன்றின் மூலம் அடையக்கூடிய நன்மைகளும் ஒரு வரையறைக்குள் உட்பட்டவைதான். இவை ஈழத்தமிழரை திருப்திப்படுத்த போதுமானதா. ….? 

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் …….! 

இன அழிப்பு தொடர்பாக பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் காட்டுகின்ற காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. பிரச்சார யுக்தியைக் கொண்டுள்ளன. 

மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பு! மிகைப்படுத்தப்பட்ட ஏமாற்றம்!! ஆம்! விரலுக்கு ஏற்ற வீக்கம் இல்லாததன் விளைவு. 

தன்னம்பிக்கையை விடவும் எஜமான்கள் மீதான நம்பிக்கையும் தங்கியிருத்தலும் அதிகம். 

சும்மா இருப்பதே சுகம் என்று பத்து வருடங்களாக காலத்தைக் கடத்திவிட்டு இப்போது சர்வதேசத்திடம் கையேந்தும் தமிழர் அரசியல். 

அண்மையில் தமிழர் அமைப்பு சகோதரி ஒருவர் குறிப்பிட்டது போல கொடி பிடிப்பதாலும், ஊர்வலம் போவதாலும், உண்ணாவிரதத்தாலும் அடைகின்ற இலக்கு அல்ல இது. 

இது சர்வதேச மட்டத்திலான இராஜதந்திர நகர்வு. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை எல்லாம் செய்வது பகுதி நேர அல்லது பருவகால வேலை. இது போதாது, காரணம் ஐ.நா. சர்வதேச பொறிமுறை குறித்த போதுமான தெளிவின்மை.  

சர்வதேச பூகோள அரசியலையும் அதன் காய் நகர்வுகளையும் விளங்கிக் கொள்ளாத தன்மை. 

இதனால் முதல் நாளில் கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, வடமசிடோனியா போன்றவை மலையைப்பிடுங்கி மாமரத்தில் சாத்துவதாக ஊதும் ஊடகங்கள் மறுநாள் பிரித்தானிய பிரதமர் ஏமாற்றிவிட்டார், இந்தியா கழுத்தறுத்து விட்டது, கனடா கடைக் கண்பார்வையை திருப்பி விட்டது என்று ஒப்பாரி வைக்கின்றன. 

இந்தச் சூழ்நிலையில் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று இருக்கின்ற அந்த மக்களுக்கு மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரியாக போலியான, ஜதார்த்தமற்ற, நடைமுறைச் சாத்தியமற்ற நம்பிக்கைகளை வழங்கி ஏமாற்றாது, ஜெனிவாவில் உள்ள உண்மையை இந்த ஊடகங்களும், அரசியல்வாதிகளும் பேசுவார்களா….? 

ஏமாற்றாதே……..! ஏமாறாதே……..!! 

கனம் ! கோட்டார்களே…….! 

நான்  சொல்வதெல்லாம் உண்மை!! 

உண்மையைத் தவிர வேறில்லை !!!