இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே வி பி இன் பங்கும், சிக்கல்களும்

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே வி பி இன் பங்கும், சிக்கல்களும்

    — வி. சிவலிங்கம் — 

வாசகர்களே! 

இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் சிறிய கட்சிகளின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருப்பதை கடந்த கட்டுரையில் அவதானித்தோம். இக் கட்டுரை வெளியானதன் பின்னர் ஜே வி பி தொடர்பாக வெவ்வேறு விமர்சனங்கள் வெளியாகின. இப் பின்னணியில் மேலும் சில அம்சங்களோடு தொடர்ந்து செல்லலாம். 

ஆதரவுத்தளத்தை இழந்து வரும் பெரும் கட்சிகள் 

குறிப்பாக பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ தே கட்சி என்பன அவற்றின் ஆதரவுத் தளங்களைப் படிப்படியாக இழந்து வருகின்றன. அத்துடன் இக் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்ட ஆரம்ப நோக்கங்களுக்கும், அவை இன்று தேர்ந்தெடுத்துள்ள பாதைகளுக்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம், மக்களின் அரசியல் தேவைகளும், போக்குகளும் எனப் பல அம்சங்கள் மாற்றமடைந்துள்ளன. ஆனால் இக் கட்சிகளின் உட் கட்டுமானங்கள் இன்றைய சமூக மாற்றங்களுக்கு ஏற்றவாறான கொள்கைகளையும், உட்கட்டுமான மாற்றங்களையும் ஏற்படுத்தத் தவறியதால் மக்கள் அக் கட்சிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.  

இக் கட்டுரைகளில் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தினையும், நவதாராளவாத பொருளாதார செயற்பாடுகளையும் எடுத்துச் செல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக நவதாராளவாதம் சந்தை நடவடிக்கைளை மட்டுமல்ல, ஜனநாயகம் சார்ந்த அம்சங்களையும் தனது தேவை கருதி வற்புறுத்திச் செல்கிறது. ஆனால் சிங்கள பௌத்த இனமையவாதம் என்பது ஜனநாயகத்தைப் புறம் ஒதுக்கி சந்தைச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எண்ணுகிறது. இவ்வாறான சிக்கலான ஓர் வழிக்குள் இலங்கையின் பிரதான கட்சிகள் உள்ளன. அத்துடன் சிங்கள பௌத்த இனமையவாதம் என்பது பல்வேறு கட்சிகளின் கோட்பாடாக மாறியதால் பிரதான அரசியல் கட்சிகளை விட சிறிய கட்சிகள் சிங்கள பௌத்த இன மையவாதத்தினை மிகவும் அடிப்படைவாதமாக மாற்றி உள்ளன. அதாவது இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு எனவும், இலங்கையில் சிறுபான்மையினர் என்ற பிரிவினர் இல்லை எனவும், இவர்கள் ஆரம்பத்தில் பௌத்தர்கள் எனவும், இடைக் காலத்தில் மத மாற்றம் செய்யப்பட்டவர்கள் எனவும் கூறும் வரலாற்றுத் திரிபுகள் ஆரம்பமாகியுள்ளன.  

ஜேவிபி ஏற்படுத்திய அரசியல் தாக்கம் 

இத்தகைய வரலாற்றுப் பின்புலத்திலிருந்தே ஜே வி பியின் தோற்றமும், அதன் செயற்பாடுகளும் நோக்கப்பட வேண்டும். சுமார் 50 வருடகாலத்திற்கு மேற்பட்ட தனித்துவமான அரசியல் வரலாற்றினையுடைய ஓர் இயக்கத்தை அல்லது கட்சியை வெறுமனே இனவாதிகள் எனக் குறிப்பிடுவதன் மூலம் கடந்து செல்ல முடியாது. இக் கால இடைவெளியில் இக் கட்சியினர் ஏற்படுத்திய அரசியல் தாக்கங்கள் மிகவும் கவனத்திற்குரியவை. 1990 – 1993ம் ஆண்டு காலப் பகுதியில் முற்றாகவே அழிக்கப்பட்டதாகக் கருதி எதிர்காலத்தில் அவர்களால் எழுந்து நிற்க முடியாது எனப் பலர் ஆருடம் தெரிவித்த நிலையில் அடுத்த 5 ஆண்டு காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் அரசியல் கட்சியாக அவர்கள் மாற்றம் பெற்றனர்.  

1994ம் ஆண்டு ஒரே ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றனர். 2000ம் ஆண்டு 10 ஆசனங்களைப் பெற்றனர். 2001ம் ஆண்டு 16 ஆசனங்களைப் பெற்றனர். 2004ம் ஆண்டு 39 ஆசனங்களைப் பெற்றனர். ஆனால் தற்போது 3 ஆசனங்களையே பெற்றுள்ளனர். இதனைத் தோல்வி எனக் கருத முடியுமா? இம் மாற்றங்களை வெறுமனே உதாசீனம் செய்து அரசியல் பேச முடியாது. 2001 – 2004ம் ஆண்டு காலப் பகுதியில் நோர்வே அனுசரணையுடன் ரணில் தலைமையிலான அரசு விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய வேளையில் மிகவும் கடுமையான எதிர்ப்புகளை நாடு முழுவதும் நடத்தியதால் ஆட்சியைத் தோற்கடித்தார்கள். இங்கு இவ்வாறான அரசியல் நடவடிக்கைகள் சரியா? தவறா? என்பதை விட சிறிய கட்சி எனக் கருதப்படும் இவர்களால் ஆட்சியை மாற்ற எவ்வாறு முடிந்தது? என்பதே கவனத்திற்குரியது. ஏனெனில் ஜே வி பி இனது உட்கட்டமைப்பின் பலம் அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது எனில் எதிர்காலத்தில் தேசியப் பிரச்சனைகளில் அக் கட்சியுடன் பேசுவது அவசியமானது என்பதை நாம் உணர்தல் அவசியம்.  

2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இவர்கள் சமாதான முயற்சிகளுக்கு எதிராக மக்கள் அபிப்பிராயத்தை மாற்ற மிகவும் கடுமையான எத்தனிப்புகளை மேற்கொண்டனர். இதன் விளைவாகவே ரணில் தலைமையிலான அரசை நீக்கவும். 2004ம் ஆண்டு தேர்தலை நோக்கி நிலமைகளை மாற்றவும் முடிந்தது.  

மஹிந்த உருவாக்கத்தில் ஜேவிபி 

2005ம் ஆண்டு மகிந்த தலைமையிலான அரசைத் தோற்றுவிப்பதில் பிரதான பங்கினை வகித்தனர். ‘ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி’ என்ற பெயரில் உருவாகிய கூட்டணியில் காத்திரமான பங்கினை வகித்தனர். ‘மகிந்த சிந்தனை’ என்ற சித்தாந்தங்களுடன் இணைந்து பயணமாகினர். அவ் வேளையில் மகிந்த தரப்பினர் விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கு முயற்சித்தனர். ஆனால் அவ்வாறான முயற்சிகள் தொடர்வதற்கு முன்னர் மிகவும் கடுமையான முன் நிபந்தனைகளை விதித்தனர். விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்ட சுனாமி நிவாரணப் பணிகள் தொடர்பான இணைப்பு ஏற்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தனர். அதன் பின்னர் மாவிலாறு பிரச்சனைகள் ஆரம்பித்த வேளையில் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுகளை முற்றாக எதிர்த்ததோடு, ராணுவத் தீர்வுகளையே முன் தள்ளினர். ராணுவத்தினால் மிக மோசமாக இட்டுச் செல்லப்பட்ட இத் தரப்பினர், ராணுவம் என்பது முதலாளித்துவ கட்டுமானத்தின் ‘காவல் நாய்’ என வர்ணித்தவர்கள் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஒடுக்க ராணுவ பிரயோகித்தினை ஆதரித்து நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார்கள். இதன் காரணமாகவே 2006ம் ஆண்டு மீண்டும் போர் ஆரம்பித்தது.  

இலங்கையில் பல்வேறு கட்சிகள் செயற்பட்ட போதிலும் ஜே வி பி இனரின் அரசியல் செயற்பாடுகள் மிகவும் காத்திரமானதாக அமைந்தது. அரசின் போக்குகளை மாற்றும் அளவிற்கு அவர்களது ஆதிக்கம் பலமாக இருந்தது. இதற்கான காரணம் என்ன? இக் கட்சியினரின் மார்க்சிசம் தொடர்பான நம்பிக்கைகள் சிங்கள தேசியவாத்தினை மேலும் உக்கிரப்படுத்த மிகவும் உதவின. ஒரு புறத்தில் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் வளங்கள் அந்நியர்களால் சூறையாடப்படகிறது என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும், மறு புறத்தில் தேசிய இனப் பிரச்சனையில் இந்திய பங்களிப்பைக் காட்டி சிங்கள தேசியவாதத்தை உக்கிரப்படுத்தவும் மார்க்சிசம் உதவியது.  

இப் பிரச்சனை அதாவது தேசிய இனப் பிரச்சனை அல்லது தேசியவாதம் தொடர்பாக மார்க்சியவாதிகளின் நிலைப்பாடு குறித்து சர்வதேச அளவில் பெரும் விவாதங்கள் நிலவுகின்றன. தேசியவாதம் என்பது பற்றாக்குறை பொருளாதாரத்தின் விளைவே எனவும், முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் முதலாளித்துவம் இப் பிளவுகளைப் பயன்படுத்துவதாகவும், முதலாளித்துவ சமூகக் கட்டுமானத்தில் தேசியவாதம் என்பது ஒருவகைத் தோற்றப்பாடு எனவும், வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்தால் தேசியவாதம் அற்றுப் போகும் என சோசலிசவாதிகளின் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அதே போலவே உலகம் முழுவதற்குமான பொருளாதாரம் முழுமையாகத் திறக்கப்படுமாயின் அதாவது உலக அளவில் நவதாராளவாத பொருளாதாரம் பலப்படுமாயின் பல நாடுகளில் பொருளாதாரம் வளர்சியடையும்போது, பொருளாதாரப் பற்றாக்குறையின் உக்கிரம் தணிவதால் தேசியவாதம் படிப்படியாகத் தணிந்துவிடும் என தாராளவாத பொருளியலாளர்கள் கூறினர். இதனடிப்படையில் வர்க்கம் போராட்டம் என்பது முடிவுக்குச் சென்றுள்ளதாக சில தாராளவாத பொருளியல் அறிஞர்கள் கூறினர். ஆனால் நவதாராளவாத பொருளாதார செயற்பாடுகள் உலக அளவில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையிலிருந்த போதிலும் பல நாடுகளில் தேசியவாதம் முன்னரை விட மிகவும் உக்கிரமாக பரவி வரும் நிலையில் தேசியவாதம் அல்லது அடையாள அரசியல் என்பது குறித்து புதிய வாதங்கள் எழுந்துள்ளன.  

இவ்வாறான தத்துவார்த்தப் பின்னணியில் ஜே வி பி இனரின் செயற்பாடுகளை அவதானிக்கையில் இவர்களின் ஆரம்பகால செயற்பாடுகளில் முதலாளித்துவத்திற்கெதிரான வர்க்கம் சார்ந்த பிரச்சனைகளே முக்கியத்துவம் பெற்றன. சுரண்டலுக்கு எதிரான, தொழிலாளர் ஐக்கியத்தை உருவாக்குவதற்கான அல்லது தொழிலாளர் அரசைத் தோற்றுவிப்பதற்கான கருத்தியலே மிகவும் ஆதிக்கம் பெற்றிருந்தது. ஆனால் இன்று அவ்வாறன வற்புறுத்தல்கள் மறைந்து தேர்தல் அரசியலை நோக்கியதாக கோட்பாடுகள் மாற்றமடைந்துள்ளன. இத் தேர்தல் அரசியல் என்பது பாராளுமன்ற ஜனநாயக அடிப்படைகளை நோக்கியதாகவும், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான மென்மையான அரசியல் போக்குகளாகவும் மாறியுள்ளன.  

தேசியவாதம் குறித்த உலகளவிலான மாற்றங்கள் 

இம் மாற்றங்கள் என்பது நாட்டில் ஏற்கெனவே காணப்பட்ட சிங்கள தேசியவாதத்துடன் வர்க்கப் போராட்ட கூறுகளையும் இணைத்துச் செல்லும் அரசியலை நாம் காண முடிகிறது. இவை இலங்கையில் மட்டுமல்ல உலக அளவிலும் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது உலகில் பல நாடுகளில் தேசியவாதம் அங்குள்ள தொழிலாள வர்க்கத்தினால் பலமாக ஆதரிக்கப்படுகிறது. நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டதால் அந்நிய நாடுகளின் தொழிலாளர்கள் தமது தொழில்வாய்ப்புகளைப் பறிப்பதாகவும், அகதிகளின் வருகை தமது வாழ்க்கை வசதிகளைப் பின்தள்ளியுள்ளதாகவும் கூறி வலதுசாரி தேசியவாதிகளுடன் இணங்கிச் செல்கின்றனர். போராடுகின்றனர். இதே நிலமைகளையே ஜே வி பி இனரும் பயன்படுத்துகின்றனர். இவற்றை நாம் கோட்பாட்டு அடிப்படையில் சமூக ஜனநாயக மாற்றங்களாக, முதலாளித்துவ அல்லது தாராளவாத பொருளாதார தாக்கத்தின் விளைவாக நாம் அவதானிக்க முடிகிறது. இங்கு நவதாராளவாத எதிர்ப்புக் குரல் என்பது ஏற்கெனவே பலமடைந்துள்ள தேசியவாத அம்சங்களுடன் அல்லது இத் தேசியவாதத்துடன் மறைமுகமாகச் செயற்படும் இனவாதக் கூறுகளுடன் இணைந்து செல்கிறது. இவை குறித்து சுருக்கமாக நாம் பார்ப்பதானால் சமூக ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தினை மனித முகத்தை நோக்கித் திருப்புவதாகும். 

தேசியவாதத்திற்கும், இனவாதத்திற்குமிடையே மிகவும் சிறிய இடைவெளியே உள்ளது. ஜே வி பி இனர் தேசிய பொருளாதாரம் தொடர்பாக குறிப்பாக அந்நிய முதலீடுகளுக்கு எதிராக குரல் எழுப்பும் வேளையில் இனவாதிகளும் இணைகின்றனர். இதனால் ஜே வி பி மற்றும் இனவாதக் குரல்களுக்கிடையேயான வேறுபாடு மறைகிறது. அவை இனவாத ஊடகங்களால் மேலும் உக்கிரப்படுத்தப்படும்போது ஜே வி பி இனரால் தமது தனித்துவத்தைப் பேண முடிவதில்லை. அவர்களால் இனவாதத்திற்கு எதிராகவும் செயற்பட முடிவதில்லை. ஏனெனில் அவர்களது வாக்கு வங்கியும் அந்த மக்களாகவே உள்ளனர்.    

தற்போது நடைமுறையிலுள்ள நவதாராளவாத் பொருளாதாரக் கட்டுமானத்தில் அதன் நடைமுறைப்படுத்தல்களின் போது பாதிக்கப்படும் மக்கள் குறித்தோ அல்லது அம் மக்களின் பாதுகாப்புக் குறித்தோ எவையும் பேசப்படுவதில்லை. ஏனெனில் சந்தைப் பொருளாதாரம் அனைவருக்கும் தடையின்றித் திறக்கப்பட்டுள்ளதாகவும், மனிதர்கள் ஒவ்வொருவரும் சுயாதீனமாக அப் போட்டியில் இணைந்து ஈடுபடலாம் எனவும், அதன் மூலம் செல்வத்தைத் திரட்ட முடியும் எனவும், அவ்வாறு திரட்டப்படும் செல்வத்திற்கான பாதுகாப்பை அரசு வழங்குமென்றும் கூறி சொத்துக் குவிப்பது என்பது போட்டிப் பொருளாதாரத்தின் விளைபொருள் எனவும் இச் சுயாதீன சந்தை நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது எனவும் விளக்கப்பட்டது.  

ஆனால் அதன் மறு பக்கத்தில் கட்டுப்பாடற்ற வர்த்தகம் பெரும் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி ஒரு குறுகிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உலகின் பெரும் பொருளாதாரக் குவிப்பு அல்லது கட்டுப்பாடு செல்வதால் பொருளாதாரக் குவிப்பு, செல்வத் திரட்சி என்பவை குறித்து அரசு தலையிட்டு உற்பத்தியையும், விநியோகத்தையும் நியாயமாகச் செயற்படுத்த அரசின் தலையீடு அவசியம் எனவும். தொழிற்சங்கங்கள், மற்றும் மக்கள் அமைப்புகள் சுயாதீனமாகச் செயற்படும் வகையிலான ஜனநாயக கட்டுமானங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டுமென சமூக ஜனநாயக விதிகள் கூறுகின்றன. சமூக ஜனநாயக கோட்பாடுகள் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது சமூக அமைதியைக் குலைக்கும் நிலைக்குச் செல்லாதவாறு தடுத்து சமநிலையைப் பேணும் வகைகளை முன்வைக்கிறது.  

இவ்வாறான அரசியலை நோக்கியே ஜே வி பி இனது பயணம் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் அவை இன்னமும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. இவை வெறுமனே ஜே வி பி இற்கு மட்டுமே உரித்தான பயணம் அல்ல. சமீப காலமாக உலக நாடுகளில் உதாரணமாக பிரித்தானியாவிலுள்ள தொழிற்கட்சியும் அவ்வாறே அமெரிக்காவிலுள்ள ஜனநாயகக் கட்சியின் சில பிரிவினரும் குறிப்பாக பேர்னி சான்டேர்ஸ் போன்றவர்களும்  அப் பாதையையே வெவ்வேறு அளவில் முன்வைக்கின்றனர். இதே போக்கினையே தற்போது சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி அல்லது சமஜி பல வேகய என்ற எதிர்க் கட்சியினரும் சமூக ஜனநாயக நெறிகளையே தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். உதாரணமாக, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரம், ஒழுங்கமைக்கப்பட்ட வினைத்திறன் மிக்க போட்டிப் பொருளாதாரத்துடன் இப் போட்டிகளின் விளைவாக பாதிக்கப்படும் பிரிவினருக்கான பாதுகாப்புகளும், நலன்புரி கொடுப்பனவுகளும், சந்தைச் செயற்பாடுகள் குறித்த வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தின் அவசியம் எனப் பல யோசனைகள் தற்போது வெவ்வேறு விதங்களில் பேசப்படுகிறது. இவை பற்றி தனியாக நாம் ஆராயலாம்.  

குழம்பியிருக்கும் கொள்கைகள் 

புரட்சிகர மாற்றங்களை வற்புறுத்திய இக் கட்சியினர் படிப்படியாக பாராளுமன்ற அரசியலை நோக்கிச் செல்கையில் அதாவது பாராளுமன்ற ஆட்சிமுறை என்பது முதலாளித்துவ பொறிமுறை என வர்ணிக்ப்படுவதால் புரட்சி குறித்தும்,தமது மார்க்சிச அடிப்படைகள் குறித்தும் பெருமை கொள்பவர்கள் தற்போது மிகவும் நெருக்கடியான கோட்பாட்டு விவாதத்திற்குள் சிக்குண்டுள்ளனர். உதாரணமாக, தொழிலாளர் புரட்சி மூலம் சோசலிச சமுதாயத்தை நிர்மாணிக்கலாம் என எண்ணியவர்கள் தற்போது பாராளுமன்ற ஆட்சி முறை மூலம் எவ்வாறான சமூகத்தை உருவாக்க எத்தனிக்கின்றனர்? தற்போது பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமாக சர்வாதிகார ஆட்சியை நோக்கி நிலமைகள் மாற்றமடைந்து செல்கையில் பாராளுமன்ற ஆட்சியைப் பலப்படுத்த முன்வைக்கும் பாதைகள் என்ன? சிங்கள பெருந்தேசியவாதம், பெரும்பான்மைவாதம் என்பன இன்றைய அரசியலின் போக்கைத் தீர்மானிக்கையில் அவ்வாறான வழுக்கிச் செல்லும் போக்கை எவ்வாறு தடுப்பது? தேசிய சிறுபான்மை இனங்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுச் செல்லும் போக்கினை தடுப்பது எவ்வாறு? இங்குதான் தேசியவாதமும், மார்க்ஸிசவாதமும் மிகவும் சிக்கலான சந்திற்குள் அகப்படுகின்றன.   

 சீன மாதிரியை பின்பற்றும் ஜேவிபி 

இச் சிக்கல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள சீனாவின் மாதிரி அணுகுமுறையைத் தற்போது தமது நியாயமாகப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் அரசுக் கட்டுமானம் தற்போது அதன் தலைவர் மா சேதுங் காட்டிய வழியில் செல்லவில்லை. அங்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பு சோசலிசம் என்ற பெயரில் ஒரு கட்சி ஆட்சிக்குள் தோற்றுவிக்கப்படுகிறது. முதலாளித்துவமும், தனியார் முதலீடுகளும் உள்ளடக்கிய கலப்புப் பொருளாதாரத்தைக் கட்டி வருவதாகவும், அது கம்யூ. கட்சியின் தலைமையில் உருவாக்கப்படுவதாகவும் கூறுகிறது. ஆரம்பத்தில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும். தனியார் சொத்துக் குவித்தலுக்கு எதிராகவும், அவை சுரண்டல் வழிகள் எனப் போதித்தவர்கள், உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் எனவும், தொழிலாள, விவசாய மக்களினது பங்களிப்புடனான புரட்சியைத் தோற்றுவிப்பதாகக் கூறிய சீனக் கம்யூ. கட்சி தற்போது சீனாவின் நீண்ட வரலாற்றின் பின்னணியில் அமைந்த சோசலிச சமூகத்தைக் கட்டப் போவதாக தனது கோட்பாடுகளை மாற்றி அமைத்துள்ளது. இவற்றின் சில அம்சங்களை நாம் பார்க்கலாம்.                   

சீனக் கம்யூ. கட்சி 2002 இல் இடம்பெற்ற தனது கட்சியின் 16வது காங்கிரஸில் தனது கொள்கை நிலைப்பாட்டினை மாற்றியது. பொதுவாகவே மார்க்ஸிசம், லெனினிசம், மாவோயிசம் என்பவற்றை மட்டுமே கோடிட்டு வந்த அக் கட்சி இம் மாநாட்டில் புதிதாக ஒன்றை அறிவித்தது. 

அதன் பிரகாரம் கம்யூ. கட்சியின் தோற்றத்தின் பின்னர் கட்சி பெற்ற அனுபவங்களைக் கூறுகையில், கட்சி எப்போதுமே சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் முன்னேற்றத்தையும், சீனாவின் முன்னேறிவரும் கலாச்சாரத்தையும், அதன் அடிப்படைகளையும் பெரும்பான்மை சீன மக்களின் நலன்களையே கவனத்தில் கொள்வதாகவும் தெரிவிக்கிறது. இதன் பிரகாரம் இவற்றை முன்னெடுக்கையில் தவிர்க்க முடியாத வகையில் சோசலிச நிர்மாணத்தை இணைத்துச் செல்வதும் அவசியம் என்பதால் மேலும் கடுமையான ஆழமான பார்வை அவசியமாகிறது என்ற ஆரம்ப வரிகளோடு மாற்றம் தொடர்பான விபரங்கள் வெளியாகின. அதாவது முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் கோட்பாடுகளும் இந்தப் பயணத்தில் இணைக்கப்படுகின்றன.  

சீனத் தலைவர் மாசேதுங் மரணத்தின் பின்னர் நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்ற தலைவர் டெங் சியாவோ பிங் நாட்டின் பொருளாதாரத்தை தாராளமயப்படுத்த எண்ணினார். அதன் பிரகாரம் ஓரளவு சுதந்திரமான சந்தைச் செயற்பாடுகளை அனுமதிக்கத் திட்டமிட்டார். கிராமப்புற விவசாயிகளின் உற்பத்திகளை அவர்கள் சந்தைகளில் சுயாதீனமாக விற்பனை செய்யவும், அதன் வருமானங்களைப் பெற்றுக் கொள்ளவும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதே போன்று நாட்டின் பொருளாதாரத் தேவைகளைக் கருதி வெளிநாட்டு முதலீடுகள், தனியார் சொத்துகளை வைத்திருத்தல் எனப் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.  

இவ்வாறான மாற்றங்கள் என்பது தலைவர் மாவோ காலத்தில் சாத்தியப்படவில்லை. தனியார் சொத்துக்களை வைத்திருத்தல், நிலங்களை வைத்திருத்தல், வங்கிக் கணக்குளை வைத்திருத்தல் போன்ற முதலாளித்துவ பொருளாதார நடைமுறைகள் படிப்படியாகவே அனுமதிக்கப்பட்டன. இதனையே ‘சீன குணாம்சங்களுடன் கூடிய சோசலிசக் கட்டுமானம்’ என்றனர். அதாவது கம்யூ. கட்சிகளின் கோட்பாடுகள் தற்போது சர்வதேச பொது நோக்கு இல்லாமல் அல்லது சர்வதேச தொழிலாளர்களின் நலன்கள் என்பது பற்றிக் கவலைப்படாமல் தத்தமது நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார நிலமைகளுக்கு ஏற்ப தேசிய இலக்குகளை நிர்மாணித்தல் என்ற வரையறைகளை நோக்கிச் சென்றது. இவற்றின் விளைவாக சீனா மிகப் பெரும் வளர்ச்சியை சுமார் 30 ஆண்டு காலத்தில் எட்டியுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்துடன் மிகக் குறுகிய காலத்திலேயே போட்டியிடும் அளவிற்குப் பிரமாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது. பல மில்லியன் மக்கள் பட்டினியிலிருந்து மீட்கப்பட்டார்கள். அவர்களது வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்துள்ளது. மேற்கு நாடுகளை விட கல்வித் தரம், வாழ்க்கைத் தரம் என்பன வளர்ந்துள்ளன.  

அதாவது சீன சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வினைத் தவிர்க்க முடியாமல் ஏற்றனர். சுருக்கமாக் கூறில் பலமான மத்தியதர வர்க்கம் பொருளாதார மாற்றத்திற்குத் தேவையாகியது. தனியார் முதலீட்டின் மூலம் உருவாகும் போட்டிப் பொருளாதாரமே தேசிய பொருளாதாரத்தை விரைவாக வளர்ப்பதற்குப் பொருத்தமானது என்ற கோட்பாட்டினை முன்னிலைப்படுத்தினர்.   

சீனாவில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் தம்மை மார்ஸிசவாதிகளாகக் காட்டிக் கொண்ட ஜே வி பி இனரின் தேசியவாதத்துடன் இணைந்த மார்க்ஸிச கோட்பாடுகள் ‘இலங்கையின் தேசிய நிலைக்கு ஏற்றவாறான இடதுசாரிக் கோட்பாடுகள்’ என்ற விளக்கத்திற்குள் சென்றனர். இதனால் சிங்கள தேசியவாதத்துடன், தமது புதிதான மார்க்ஸிச விளக்கங்களையும் இணைத்து இன்னமும் தம்மை மார்க்ஸிஸ்டுகள் எனப் பெருமையுடன் அழைக்கின்றனர்.            

மிகவும் சிக்கலான அரசியல் கோட்பாடுகளுடன் பயணிக்கும் ஜே வி பி இனர் இலங்கையிலுள்ள பலமுள்ள தொழிற்சங்கங்களைத் தற்போது கட்டுப்படுத்துகின்றனர். புரட்சியை நடத்துவதற்காக தொழிற்சங்கங்களை உருவாக்குவதாகக் கூறிய அவர்கள் தற்போது பாராளுமன்ற அரசியலிற்குள் பிரவேசித்துள்ள நிலையில் தொழிற் சங்கங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்? தேசியவாதம், சிங்கள பௌத்த இனவாதம், மார்க்ஸிசவாதம் என்பன இணைந்து பயணிக்க முடியுமா? 

(தொடரும்)