— ஆரதி —
கமல்ஹாசனும் கௌதமியும் நடித்திருந்த பாபநாசம் உங்களுக்கு நினைவிருக்கும். அது முதலில் “த்ருஷ்யம்” என்ற பெயரில் மலையாளத்தில் வந்திருந்தது. அதில் கமலுக்குப் பதிலாக மோகன்லாலும் கௌதமியின் பாத்திரத்தில் மீனாவும் நடித்திருந்தனர். அப்போதே பாபநாசத்தையும் விட, த்ருஷ்யம் பற்றியே அதிகமாகப் பேசப்பட்டது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியையும் அது பெற்றது.
இப்பொழுது த்ருஷ்யம் – 02 வந்திருக்கிறது. இது முதல் படத்தின் மீதி அல்லது தொடர்ச்சியாகும். இந்த மாதிரி முன்பும் சில படங்கள் வந்ததுண்டு. நீயா படத்தின் தொடர்ச்சியாக நானே வருவேன், கல்யாணராமனின் தொடர்ச்சி யப்பானில் கல்யாணராமன் என்றெல்லாம். ஆனால் முதல் படத்தின் வெற்றியையும் கவர்ச்சியையும் பிறகு வந்த தொடர்ச்சிப்படங்கள் பெறவில்லை. ஆனால், த்ருஷ்யத்தின் கதை வேறு. அது முதல் படத்தையும் விடக் கூடுதல் வெற்றியைப்பெற்றிருக்கிறது. இப்பொழுதே அதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு பெரிது. பார்வையாளர்களும் அதிகம். விமர்சனங்கள், பாராட்டுகளும் அதிகம்.
அடிப்படையில் பாபநாசமும் த்ருஷ்யமும் த்ரில்லர் வகைப்படங்களே. கொலையின் மர்மத்தோடு காவல்துறையினர் மல்லுக் கட்டுகின்ற படங்கள். ஆனால், படத்தில் வழமையைப் போல காவல்துறை இங்கே நாயக அந்தஸ்தைப் பெறவில்லை. பதிலாக தன்னுடைய குடும்பத்தை கொலைக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காகப் பாடுபடும் –சவால்களை எதிர்கொண்டு, அதை முறியடிக்கும் சாதாரண குடும்பமொன்றின் தலைமைப் பாத்திரமே முன்னிலைப்படுத்தப்பட்டது. அதிலும் முக்கியமாக பெண் பிள்ளைகளைப் பெற்ற அல்லது வளர்ந்த பெண் பிள்ளைகளை உடைய குடும்பத்தின் சவால்களைப் பேசுகிறது என்ற வகையில் இதற்குக் கூடுதல் ஈர்ப்பிருந்தது. ஒரு பக்கம் குடும்பக் கதைப் படமாகவும் மறுபக்கத்தில் த்ரில்லர் படமாகவும் இருந்து சுவாரஷ்யத்தைக் கொடுத்தது.
முதல் படம் (முதல் பாகம்) கொலையைக் கண்டு பிடிக்காமலே – கொலையாளி யார் என்று உணர்ந்தாலும் அதை நிரூபிக்க முடியாமலிருக்கும் காவல்துறையின் இயலாமையோடு முடிந்தது. இரண்டாவது படம் (த்ருஷ்யம்02) அந்தக் கொலையாளியை நீதிமன்றில் நிறுத்துவதாக உள்ளது. இது ஒரு சவாலான காரியம். அதே தொடர்ச்சி அறாமல் கதையையும் காட்சிகளையும் நடிகர்களையும் வைத்து இதைச் சாதிக்க வேண்டும். இதில் வெற்றியும் பெற வேண்டும் என்றால், கத்தியின் மேல் நடக்கின்ற வித்தையே. கரணம் தப்பினால் மரணம். ஆனால், இந்த வித்தையில் மோகன்லாலும் இயக்குநர் ஜித்து யோசப்பும் வென்றிருக்கிறார்கள்.
முதல் படத்தில் கொலையுண்ட இளைஞனின் தாய், காவல்துறை அதிகாரி என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இயல்பாகவே இந்த மாதிரிக் கொலைக் கேஸில் காவல்துறை உறங்குவதில்லை. இதில் கொல்லப்பட்டவனின் அம்மாவே பொலிஸ் அதிகாரியாக இருக்கிறாரென்றால் காவல்துறை என்ன செய்யும்? அது காத்திருக்கும்? ஆனால், கேஸைக் கைவிட்டதைப்போல நடிக்கும். பதிலாக சந்தேகத்தைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கும். அதற்கான புலனாய்வு வேலைகள் நடக்கும். எப்போதாவது ஒரு நாள் கொலை செய்தவன் சிக்குவான், உண்மையை ஒப்புக் கொள்வான் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கொல்லப்பட்டவனின் உடல் கிடைக்க வேண்டும். அல்லது கொலை செய்தவன் உண்மையைச் சொல்லி விவரங்களைக் காட்ட வேண்டும். இரண்டுமே சவாலானவை. இதைப் படத்தில் வரும் ஒரு வசனத்தில் சரியாகச் சொல்லிவிடுகிறது, “சார். எனக்கு இது வெறும்கேஸ் அல்ல, யுத்தம்” என்று கொலையுண்டவனின் தகப்பனிடம் சொல்லும் காவல் அதிகாரியின் பாத்திரம்.
ஒரு கட்டத்தில் அந்தப் பையனின் உடல் கிடைத்து விடுகிறது. மீண்டும் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்) கைது செய்யப்படுகிறார். காவல்துறை இம்முறை ஜார்ஜ்குட்டிக்கும், அவன் குடும்பத்திற்கும் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக பெரிய வலை ஒன்றை விரிக்கிறது. அதில், ஜார்ஜ்குட்டி சிக்குவான் என்று எல்லாரும் எதிர்நோக்கி இருக்க, அங்கே ஒரு மர்மம் யுத்தமாகிறது. இந்தப் போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதை.
நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஜார்ஜ்குட்டியும் அவன் குடும்பமும், அந்த ஊரில் இருக்கும் தேநீர் கடை, ஆட்டோ ஓட்டுனர்கள், போலீஸ்காரர்கள் என எல்லாரும் இயல்பாக மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஆண்டுகள் சென்றாலும் கொலைக் குற்றப்பதற்றம் மாறாமல் ஜோர்ஜ்குட்டியின் குடும்பம் உள்ளது. எந்தக் காவல்துறை அதிகாரியைக் கண்டாலும் அல்லது காவல்துறை வாகனத்தை கண்டாலும் ஜோர்ஜ்குட்டியின் குடும்பத்தார் பயப்படுகிறார்கள். முன்பு தொலைக்காட்சி இணைப்புகளை வழங்கும் ஜார்ஜ்குட்டி இப்போது திரையரங்கொன்றின் உரிமையாளர். கூடவே சினிமா ஒன்றை எடுக்கவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், முன்பு ஜோர்ஜ்குட்டியைத் தங்களில் ஒருவராக பார்த்த ஊர்ச் சனங்கள் இப்போது அப்படிப் பார்க்கவில்லை. அந்நியமாகப் பார்க்க தொடங்கிவிட்டனர். கால மாற்றம் அப்படியான நிலையை உருவாக்கியுள்ளது.
ஜோர்ஜ் குட்டி படிக்காத பாமரன்தான். ஆனால் கூர்ந்த மதி கொண்டவன். தன்னுடைய குடும்பத்தாருக்கு பிரச்சினை ஏற்படும்போது அவனை மிஞ்சும் அறிவாளி உலகில் இல்லை என்பதைப்போல் நடந்துகொள்வான் என்பது முதல் படத்தில் சொல்லப்பட்டது அல்லவா.
இது தங்களுடைய பிள்ளைகைளைப் பாதுகாப்பதற்கு நம்முடைய கடந்த காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் பட்ட அவஸ்தைகளைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. தன்னுடைய கன்றுக்கோ குட்டிக்கோ குஞ்சுக்கோ ஆபத்து என்றால் எந்த விலங்கும் பறவையும் அதைப் பொறுத்துக் கொள்ளாது. இங்கும் ஜோர்ஜ் குட்டிக்கு ஏற்படுகின்ற அபாயச் சவால் அவனை கடைசி எல்லைவரை விரட்டுகிறது. இது உயிரினங்களின் இயல்பு.
என்றாலும் மனித வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது. நாம் நினைப்பதைப்போல அது எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. ஜோர்ஜ் குட்டிக்கு ஏற்படும் குடிப்பழக்கம் எல்லாவற்றையும் அவருடைய வாயினால் வெளிப்படுத்தி விட பிரச்சினை வேறு கோணத்தில் வந்து விடுகிறது. படத்தின் மையக் கண்ணி இதுவே. இதில் குடிப்பழக்கத்தினால் உண்டான சிறியதொரு பிசிறு எப்படிப் பெரிய பிரச்சினையை உருவாக்குகிறது என்ற சேதி முன்வைக்கப்படுகிறது.
படத்திற்கான பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும்அருமை. வழமையாகவே மலையாளப் படங்களில் கமெரா வியப்பூட்டுவதாக இருக்கும். அது தனியாகக் கதை சொல்லுவதுண்டு. எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன.
உண்மையில் ‘த்ரிஷ்யம்’ மாதிரியான திரைப்படங்கள் இந்திய சினிமாவில் எப்போதேனும் தோன்றும் அரிய படைப்புகள். நல்ல பொக்கிஷங்கள். அதன் அழகைச் சிதைக்காமல், கண்டுணராமல் அதற்கு இரண்டாம் பாகம் எடுப்பது உண்மையிலேயே மிகச் சிரமமான காரியம். அதை இயக்குனர் ஜித்து ஜோசப் சாதித்திருக்கிறார். படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும். அது ஒரு தத்துவமாகவே நம்மைத்த திணறடித்து சிந்திக்கவைக்கும். இங்கே குற்றமும் தண்டனையும் குறித்த புரிதலும் நமக்குக் கிட்டும்.
படத்தை நீங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்!
இதேவேளை ஒரு கேள்வியுண்டு. பாபநாசத்தின் இரண்டாவது பாகமும் வெளிவருமா என்று. அப்படி வந்தாலும் அதில் கௌதமியின் இடத்தில் யார் இருக்கக் கூடும் எனவும்.