நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)

நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)

   — விஜி/ஸ்டாலின் — 

நீதிக்கட்சியின் தொடக்கம்  

தனது அரசியல் பாதையின் தொடக்கத்தில் முதல் ஆறாண்டு காலம் (1919-1925) இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றினார் பெரியார். காங்கிரசில் இருந்தபோது வைக்கம் போராட்டம், மதுவிலக்கு போராட்டம் போன்ற வெற்றிகரமான பணிகளை செய்திருந்தார். ஆனாலும் தீண்டாமை, சாதியொழிப்பு போன்ற விடயங்களில் காந்தியும் காங்கிரசும் பார்ப்பனர்களை சமாளித்துக்கொண்டு எடுத்து வந்த இரட்டை நிலைப்பாடுகளை விமர்சனம் செய்து வெளியேறும் நிலைக்கு வந்தார். அதன் பின்னரே சாதியொழிப்பை முதற்பணியாக கொண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பகுத்தறிவு கொள்கைகளை பிரச்சாரம் செய்யத்தொடங்கினார்.  

சுயமரியாதை இயக்கச் செயற்பாடுகளின்போது (1925-1935) ‘சுயமரியாதைத் திருமணம்’ அறிமுகம் செய்தமையிலும் நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, தேவதாசி ஒழிப்புச் சட்ட வரைபு போன்றவற்றை வெற்றிகொள்ளும் பணியிலும் பெரியாரின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கனவாகும்.  

இவ்வேளையில்தான் நீதிக்கட்சி என்பது யாது? அதற்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட தொடர்புகள் எத்தகையன? என்பது பற்றி சற்று விரிவான பதிவுகள் தேவையாகவுள்ளது.  

1900 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவெங்கும் பிராமணராதிக்கம் வியாபித்திருந்தது. ஆங்கிலம் கற்ற மேட்டுக்குடிகளாகவும் அரச பணிகளின் பெரும்பான்மையான இடங்களை வகிப்பவர்களாகவும் பிராமணர்களே இருந்தனர்.   

சென்னை மாகாணத்தை (தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிசா) பொறுத்த வரையில் 3 அல்லது 4 வீதமாகவே வாழ்ந்த பிராமணர்கள் அரசின் நீதி நிர்வாக பணிகளில் 70-80 வீதமான இடங்களை நிரப்பியிருந்தனர்.  

இத்தகைய போக்குகளை இதே காலப்பகுதியில் இலங்கையெங்கும் பரந்திருந்த யாழ்ப்பாண வேளாள- மேட்டுக்குடிகளின் அதிகார வர்க்கத்தோடு ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம்.  

இவ்வேளையில்தான் சி. நடேசனார் தலைமையில் 1912ஆம் ஆண்டு பிராமணரல்லாத அனைவரதும் நலன்கருதி ‘சென்னை மாகாண சங்கம்’ என்னும் பெயரில் ஓரமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பானது ‘பிராமணரல்லாதோர் சங்கம்’ என்றும் ‘திராவிடர் சங்கம்’ என்றும் அழைக்கப்பட்டது. 

1916ஆம் ஆண்டு  நவம்பர் 20ஆம் திகதி சி.நடேசனார் தன்னோடு பிட்டி. தியாகராயர், டி.எம். நாயர் போன்றோரையும் இணைத்துக்கொண்டு’ தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்’ என்னும் பெயரில் பிராமணர் அல்லாதோர் சங்கத்தை விரிவுபடுத்தினார். அதுவே அடுத்துவரும் நூறாண்டுகளுக்கு தமிழ் நாட்டில் யாராலும் நிராகரிக்க முடியாத சக்தியாக நிமிர்ந்து நிற்கப்போகும் சமூகநீதி கருவூலமாகும் என்பதை அன்று யாரும் முன்னுணர்ந்திருக்க முடியாது.  

இந்த தென்னிந்திய நலன்புரிச்சங்கத்தின் கொள்கையறிக்கையில் சொல்லப்பட்ட முக்கிய விடயங்களாக  

*’எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும் 

*’பார்ப்பனரல்லாதார் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவேண்டும்‘  

*’பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஒருவரை ஒருவர் உயர்வாகவோ தாழ்வாகவோ நடத்தக்கூடாது’ என்கிற வகையில் அமைந்திருந்தன. இதுவே ‘பிராமணர் அல்லாதோர் அறிக்கை’ (the non-brahmin manifesto) என அழைக்கப்படுகின்றது.   

இந்த சங்கத்தினர் தமது அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக மூன்று ஏடுகளை தொடங்கினர். தமிழில் வெளிவந்த ஏட்டுக்கு பெயர் ‘திராவிடன்’ தெலுங்கில் வெளிவந்த ஏட்டின் பெயர் ‘ஆந்திர பிரகாஷிகா’ ஆங்கிலத்தில் வெளிவந்த ஏட்டின் பெயர் ‘ஜஸ்டிஸ்’ என்பனவாக இருந்தன. இந்த ஜஸ்டிஸ் என்னும் பெயரைக் கொண்டே காலப்போக்கில் தென்னிந்திய நல புரிச்சங்கமானது ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்றும் ‘நீதிக்கட்சி’ என்றும் அழைக்கப்பட்டது. 

மொண்டேகு செல்ம்ஸ்போர்ட் (montahu-chelmsford reforms) சீர்சிருத்தத்தின் ஊடாக 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்குரிய முதலாவது தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலுக்கு முன்னர் அரசியலில் பிரமணரல்லாதோரின் வகிபாவத்தை உறுதி செய்யும் முயற்சியில் நீதிக்கட்சியினர் இறங்கினர். நீதிக்கட்சியினர் லண்டன் வரை சென்றுகூட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதன் பயனாக இட ஒதுக்கீட்டை பிரித்தானிய அரசு சென்னை மாகாணத்தில் அறிமுகம் செய்தது. இதன் பயனாக 127 இடங்களில் 28 இடங்கள் பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டன. இந்த வெற்றிதான் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை இன்றுவரை பிராமணர்கள் கைப்பற்ற முடியாது தடுத்து நிற்பதன் அடிப்படையாகும். 

சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு நாடாத்தப்பட்ட முதலாவது தேர்தலில் போட்டியிட்டு இந்த நீதிக்கட்சியினரே ஆட்சியமைத்தனர்.  

பிராமணராதிக்கத்தின் பிடியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசுக்கு மாற்றான ஒரு உறுதியான அமைப்பாக தென்னிந்திய அளவில் இந்த நீதிக்கட்சி செயற்படத் தொடங்கியது. 1920-1926 வரையிலும் பின்னர் 1930-1937 வரையிலுமாக 13 ஆண்டு காலம் சென்னை மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தில் இந்த நீதிக்கட்சியே இருந்து வந்தது. இந்த ஆட்சிகால சாதனைகளே தமிழ் நாட்டின் சமூக நீதிக்கான பலமான அடித்தளமாக இன்றுவரை இருந்து வருகின்றது. 

*1921ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்தில்தான் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது.  

* 1923ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக வளாகம் இந்தியாவின் மூன்றாவதும் தமிழ் நாட்டின் முதலாவதுமான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டது. தென்னிந்தியாவின் முதன்மை பல்கலைக்கழகங்களான ஆந்திரா பல்கலைக்கழக வளாகம், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் போன்றவை உருவாக்கப்பட்டன. 

*’பள்ளர்கள்’, ‘பறையர்’, ‘சக்கிலியர்கள்’ என்ற சொல்லாடல்கள் மாற்றியமைக்கப்பட்டு ‘ஆதி திராவிடர்கள்’ என்கின்ற சொல் ஆவணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.   

*பல்கலைக்கழக மருத்துவத்துறையில்  இணைவதற்கு சமஸ்கிரதம் சித்தியடைய வேண்டும் என்றிருந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டது.    

*பல்கலைக்கழக மட்டத்தில் (1910ஆம் ஆண்டு முதல்) தமிழ் பாடத்துக்கு பதிலாக சமஸ்கிருதம் புகுத்தப்பட்டிருந்தமையை மாற்றி மீண்டும் தமிழ் 1924 ஆம் ஆண்டு பதிலீடு செய்யப்பட்டது. 

*விவசாய நிலங்களுக்கு ஜமீன்தார்கள் வாங்கிவந்த குத்தகையை சட்டத்தினுடாக குறைத்து பெரும் பொருளாதார சுரண்டல் கட்டுப்படுத்தப்பட்டது. 

*1927ல் கோவில்கள், மடங்கள் போன்றவற்றின் பெயரில் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்த நிலவுடமை, மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் கண்காணிக்கவும் அவற்றின் பயன்பாடுகளை மக்கள் நலன் சார்ந்து உறுதி செய்யவும் “அறநிலையத் துறை” ஒன்று உருவாக்கப்பட்டது.  

*இந்தியாவில் முதல் தடவையாக 1930ல் தேவதாசி முறைமை ஒழிப்புச் சட்ட முன்வரைபு கொண்டுவரப்பட்டது என்று அவர் சார்ந்த செயற்பாடுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். 

இத்தகைய தாய்மொழி பாதுகாப்பு, சாதி ஒழிப்பு, மற்றும் சமூகநீதி செயற்பாடுகளில் நீதிக்கட்சியினரும் பெரியாரது சுயமரியாதை இயக்கமும் வெவ்வேறு பாதைகளில் ஆனால் ஒரே திசையில் இணைந்தும் பிரிந்தும் பயணித்து வந்தனர்.  

சிறைக்கு தேடிவந்த நீதிக்கட்சியின் தலைமைப் பதவி  

நீதிக்கட்சியானது எத்தனையோ அரும்பணிகளை ஆற்றிவந்தபோதிலும் மறுபுறம் அதிகரித்துவந்த காந்தியின் செல்வாக்கு காரணமாக காங்கிரஸ் கட்சி மக்களிடையே பெருமதிப்பு பெறத்தொடங்கியது. 

அதேவேளை நீதிக்கட்சியின் மூத்த தலைவர்கள் வயோதிபம் காரணமாக படிப்படியாக இறந்து கொண்டிருந்தமை, நீதிக்கட்சியினரின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவான குத்தகை குறைப்பு மசோதா கட்சிக்குள் இருந்த ஜமீன்தார்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை, நீதிக்கட்சியை ஆதரித்துவந்த ‘நாடார் மகாஜன சங்க’த்துக்குள் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக அதில் ஒருபகுதியினர் நீதிக்கட்சியை விட்டு விலகி காங்கிரசை ஆதரிக்கும் நிலைக்கு சென்றமை, பித்தாபுரம் ஜமீன்தார் போன்றவர்கள் பிரிந்து சென்று ஜனநாயக கட்சி என்னும் புதிய அமைப்புகளை உருவாக்கியமை என்கின்ற பல்வேறு விதமான காரணிகளால் நீதிக்கட்சியானது  பலவீனமடையத் தொடங்கியது.  

இந்நிலையில் 1927ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியினர் தமது பத்திரிகையான “திராவிடன்” இதழை தொடர்ந்து நடாத்தும் பொறுப்பை பெரியாரிடம் கையளித்திருந்தனர்.  

இத்தகைய பலவீனமான சூழலில்தான் நீதிக்கட்சியானது 1937 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவேண்டி வந்தது. அதேவேளை தேர்தல் நேரத்தில் சென்னை மாகாண முதல்வராகவும் நீதிக்கட்சியின் தலைவராகவும் இருந்த பொப்பிலி அரசர் ஐரோப்பிய பயணத்தில் இருக்கவேண்டிய சூழலும் இணைந்து அத்தேர்தலில் நீதிக்கட்சியை படுதோல்விக்கு தள்ளின. பெரியாரும் அவரது சுயமரியாதை இயக்கத்தினரும் கூட நீதிக்கட்சியினரின் தேர்தல் பிரச்சாரங்களில் முடிந்தவரை பங்கெடுத்து உழைத்தும் நீதிக்கட்சியை  காப்பாற்ற முடியவில்லை. 

அத்தேர்தலூடாக நீதிக்கட்சியினர் எதிர்கொள்ள நேர்ந்த படுதோல்வியும் அந்நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எழுச்சியடைந்த இந்திய தேசிய காங்கிரசின் வெற்றியும் சென்னை மாகாண அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வித்திடத்தொடங்கின. சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரி பதவியேற்றார்.  

வீழ்ந்த சரிவை ஈடுசெய்ய வேறு வழியேதுமின்றி நீதிக்கட்சியினர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராயிருந்த பெரியாரை 1938ஆம் ஆண்டு நீதிக்கட்சிக்கும் தலைவராக்கினர். பெரியார் அப்போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிலிருந்தமையால் அவரின் உருவப் படங்களை தூக்கிக்கொண்டு ‘பெரியாரே தலைவர்’ என்று  ஊர்வலம் போனார்கள் நீதிக்கட்சியினர்.  

(தொடரும்)