முறிந்த பனையும் உடைந்த கதிரையும் (காலக்கண்ணாடி 25)

முறிந்த பனையும் உடைந்த கதிரையும் (காலக்கண்ணாடி 25)

  — அழகு குணசீலன் — 

“என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச் சமூகத்தில் வாழும், ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட, ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே இருக்கும்” 

1989 செப்டம்பர் 15ம் திகதி கலாநிதி ரஜனி திராணகம இறுதியாக தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வாசகங்கள் இவை. 

1989 செப்டம்பர் 21ம் திகதி ரஜனி ஆயுதத்தை பூசித்தவர்களால், மக்களின் உரிமைகளுக்காக போராடப்புறப்பட்டு மனித உரிமைகளை குழி தோண்டிப் புதைத்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

இவர்களும் வருடா வருடம் ஜெனிவாவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்கள். கோழி திருடியவனும் கூட இருந்து தேடும் தமிழர் அரசியல். 

ஈழப்போராட்டமானது ஆரம்பம் முதல் இறுதிவரை  மனித உரிமைகள் மீறப்பட்ட கறைபடிந்த அரசியல் வரலாற்றைக்கொண்டது. 

இந்த மீறல்களை சிறிலங்கா அரச பயங்கரவாதமும், அரச இயந்திரத்தைப் பாதுகாக்கின்ற அரச கூலிப்படைகளும் மட்டும் செய்யவில்லை.   

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக போராடப் புறப்பட்ட அனைத்து ஆயுதப்போராட்ட அமைப்புக்களும் செய்தன என்பது ஒழிவு மறைவற்ற ஒன்று. 

பாராளுமன்ற அரசியலும், ஊடகங்களும், சிவில், மத அமைப்புக்களும் கூட இந்த கொடுமையைத் தட்டிக் கேட்காமல் அதற்கு உடந்தையாக இருந்தனர். அல்லது தங்கள் வீட்டுக்கதவு தட்டப்படும் வரை காத்திருந்தார்கள். 

விதிவிலக்காக ரஜினியைப் போன்ற ஒரு சிலர் சகல தரப்பு மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்து தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள். துரோகிகள் என்று எழுதப்பட்ட ஒரு துண்டுக் கடதாசியை பார்த்தவுடன் மக்கள் மௌனித்தார்கள். 

எனவேதான் ஜெனிவாவில் இன்று மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற தாயக, புலம்பெயர்ந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களின் அமைப்புக்களும் இதன் பங்காளிகள் என்பதை காலக்கண்ணாடி காட்சிப்படுத்த முனைகிறது. 

தமிழ்த் தேசிய குறுந்தேசிய பயங்கரவாதம் “விடுதலை” என்ற போர்வையில் செய்ததை, சிங்கள பெருந்தேசிய பயங்கரவாதம் “தேசிய பாதுகாப்பு” என்ற போர்வையில் செய்தது. 

இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், போராட்ட அமைப்புகள் அனைத்தும் பொறுப்புக்கூறவேண்டிய ஒரு கொலை ரஜனியின் கொலை. நாங்கள் செய்தவற்றிற்கு பொறுப்பு ஏற்காது, சிங்கள அரசின் மீறல்களுக்கு பொறுப்பு ஏற்க கேட்கிறோம். 

எந்தத் தரப்பும் சுட்டுவிரலை நீட்டலாம் ஆனால் மற்றைய நான்கு விரல்களும் தங்கள் மனசாட்சியைத்தான் குறிவைக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் புரிந்து கொண்டு கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு.  

ஆக, முறிந்த பனை ஈழப்போராட்ட மனித உரிமை மீறல்களின் ஒரு குறியீடு என்றால், உடைந்த கதிரை ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த ஒரு குறியீடு. 

உடைந்தகதிரை…! 

ஜெனிவா ஐ.நா. சதுக்க வளாகத்தில் ஒரு கால் முறிந்த கதிரை. யுத்தத்தின் போது கண்ணிவெடிகளால் மக்களுக்கு ஏற்படும் கால் இழப்புக்களின் குறியீடாக நிறுவப்பட்டுள்ள ஒரு நினைவுச்சின்னம்.

இதன் உயரம் பன்னிரெண்டு மீற்றர். நிறை ஐந்தரைத் தொன். இந்த நினைவுச் சின்னத்தை 1997 இல் வடிவமைத்தவர் சிற்பக் கலைஞர் டானியல் பேர்செற் (DANIEL BERSET).  

கண்ணி வெடிக்கு காலை இழந்தவர்களின் சமநிலையற்ற ஒரு வாழ்வியலை இந்த மூன்று கால் கதிரை அடையாளப்படுத்தி நிற்கின்றது. நான்காவது கால் உடைந்த காலாக அரைகுறையாய் உள்ளது. 

தனிமனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகள் தவிர்க்கப்பட வேண்டிய ஐ.நா. பிரகடனம் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட போதும்  பல பெரும்புள்ளி நாடுகள் கூட இன்னும் ஒப்பந்தத்தில் ஒப்பமிடவில்லை. 

இன்றைய சமகால சர்வதேச சூழலில் மூன்று கால்களையும், ஒரு முறிந்த காலையும் கொண்டுள்ள இந்தத் இருக்கை வெறும் கண்ணிவெடி பாதிப்பை மட்டுமல்ல, முழு மனித உரிமை மீறல்களின் பாதிப்புக்களின் வெளிப்பாட்டுச் சின்னமாகவும் கொள்ளப்படுகிறது.  

கண்ணி வெடிகளை அரசாங்கங்களும், ஆயுதக்குழுக்களும் ஏட்டிக்குப் போட்டியாக ஐ.நா. பிரகடனத்தை மீறி தொடர்ந்தும் புதைத்து வருவது மட்டுமன்றி உற்பத்தி செய்தும், விற்பனை செய்தும் வருகின்றன. 

இது ஐ.நா. ஆணைக்குழுக்களின் தீர்மானங்கள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் சக்தி அற்றவை என்பதற்கு ஒரு உதாரணம். மனித உரிமைவிவகாரம். 

மேலாதிக்க அரசியல்படுத்தலின், நவகாலனித்துவத்தின் கரங்களில் சிக்குண்டுள்ளது ஐ.நா. கள்வனைப் பிடித்து விதானை வேலை கொடுத்த கதையாக இவர்களை நம்பி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். எமது அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக உள்ளனர். 

ஐ.நா. முன்மொழிவும்தமிழர் கோரிக்கையும் இரு வேறு சோடிச் சப்பாத்துகள்  

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் சிறிலங்கா குறித்து வெளியிட்ட அறிக்கையை ஈழத்தமிழர் தரப்பு உள்ளும், வெளியும் பாராட்டினார்கள்.  

தமிழ் ஊடகங்களும், பாராளுமன்ற அரசியல்வாதிகளும் போட்டிபோட்டு கருத்துக்களை வெளியிட்டார்கள். ஒட்டு மொத்தமாக சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் இனி தப்பவே முடியாது என்று தங்களுக்கு தாமே பொன்னாடை போர்த்திக்கொண்டார்கள். 

உண்மையில் அந்த அறிக்கையின் சாராம்சம் என்ன?  என்று கண்ணாடியைத் திருப்பினால் காட்சிகள் விழும். 

1. போர்க்குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது பயணத்தடை விதித்தல். 

2. போர்க்குற்றம் புரிந்தவர்களின் சொத்துக்களை முடக்குதல். 

3. வெளிநாடுகளில் இலங்கைப் படையினர் ஐ.நா. சமாதானப்படையாகச் செயற்படத் தடை. 

4. வெளிநாடுகளில் இலங்கைப்படையினர் பயிற்சி பெறுவதற்குத் தடை. 

5. தேவையேற்படின் இலங்கையை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தலாம். 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு நீதி மன்றம் அல்ல. அது சுயமாக விசாரணைகளை மேற்கொள்ளவோ தீர்ப்புக்களை வழங்கவோ முடியாது. 

ஐ.நா. உட்கட்டமைப்புக்களில் உள்ள மற்றைய பிரிவுகள் போன்று இதுவும் ஒரு அதிகாரம் அற்ற வல்லரசுகளின் தாளத்திற்கு ஏதாவது ஒரு காவடியைத் தூக்கிக் கொண்டு ஆடும்.  

கடந்த அமர்வில் மியான்மார், இம்முறை சிறிலங்கா. மியான்மாரில் எந்த மாற்றமும் இல்லை ஒன்றைத்தவிர. அதுதான் மீண்டும் இராணுவ ஆட்சி. 

சூ அம்மையார் மீண்டும் வீட்டுக்காவலில். 

மிச்சேல் பச்லெட்டின் இந்த முன்மொழிவுகள் எந்த அளவுக்கு ஈழத்தமிழரின் இழந்த உரிமைகளைப் பெற்றுத்தரும்? ஈழத்தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றான போர்க்குற்ற நீதிமன்ற விசாரணை கூட, இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதுடன் அதற்கும் “வேண்டுமானால்” என்ற வார்த்தையால் ஐ.நா. பாணியில் அலங்கரித்துள்ளார் அம்மையார். 

மிச்செல் பச்லெட்டின் அறிக்கை யாரைப் பாதுகாக்கிறது? சிறிலங்கா அரசையா?ஈழத்தமிழரையா? உப்புச் சப்பு இல்லாத செயற்திறன் அற்ற ஆலோசனைகளை பட்டியல் படுத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு கலர் அடித்து சிறிலங்கா அரசைப் பாதுகாக்கும் தந்திரம். 

நான்கு முன் மொழிவுகளும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பது போன்று காட்டி ஈழத்தமிழரை ஏமாற்றும் வழமையான மேற்கு மேலாதிக்க அரசியல்.  

பயணத்தடை, சொத்து முடக்கம், இராணுவப் பயிற்சி, சமாதானப்படைத் தடை இவைகள் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலை போக்கில் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்தான் என்ன? 

போர்க்குற்றவாளிகளை அடையாளம் கண்டு பயணத்தடையும், சொத்து முடக்கமும் – இது போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பையும் குறித்த குறியா?   அப்படியானால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மீதும் வீசப்படும் வலையாக இது உள்ளது.  

இனப்படுகொலை அங்கிகாரம், சர்வதேச நீதிமன்ற விசாரணை சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை, போன்ற தமிழர் தரப்புக் கோரிக்கைகள் எங்கோ கிடப்பில் போடப்பட்டுள்ளன? 

சிறிலங்கா அரசின் பதிலும் அணுகுமுறையும் ! 

மனித உரிமை விவகாரம் மேலாதிக்க அரசியலுக்கும்,  ஆயதப்போட்டிக்கும், பொருளாதார முலீட்டு, வர்த்தகப் போட்டிக்கும் அப்பாற்பட்டதல்ல.  

சொந்த நாட்டில் மனித உரிமைகளை மீறுகின்ற இந்த நாடுகளே, மனித உரிமைகளின் மீட்பர்களாக சிறிய நாடுகள் மீது தமது இராணுவ பொருளாதார நலன்களுக்காக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இங்கு இறுதியாக ஏமாற்றப்படுபவர்கள் அளவுக்கதிகம் இவர்களை நம்பும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களே. 

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் சிறிலங்கா மனித உரிமை விடயத்தில் அக்கறை காட்டுவதன் பின்னணி அவர்களின் சமூக, அரசியல், பொருளாதார நலன் சார்ந்த விடயம். 

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் மற்றும் இந்தியத் தமிழர்களின் வாக்குவங்கி தேவைப்படுகின்றது. தமிழ் நாட்டு அரசியலில் இந்தியாவிற்கும் இதுதான் குறி.  

இந்திய, சீன முதலீட்டுப் பக்கம் சிறிலங்கா இழுக்கப்படுவதை சற்று கட்டுப்படுத்த அமெரிக்கா காட்டும் சிவப்பு சிக்னல். அழுத்தம் கொடுத்து தன்பக்கம் ஈர்த்தல். 

அமெரிக்கா, கனடா வெளிநாட்டமைச்சர்களின் கருத்துக்களுக்கு சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் பதிலளித்துள்ளார். சிறிலங்காவின் இறைமை, சுயாதிக்கம் சார்ந்த பதில் அது.  

தினேஷ் குணவர்தனவின் பதிலில் உள்ள மற்றொரு அம்சம், திடீரென அவர் அணிசேரா நாடாக சிறிலங்காவை அடையாளப்படுத்தி இருப்பது. 

ரஷ்யா, சீனா, இந்தியா, வெனிசுவேலா, கியூபா, கிழக்கு ஐரோப்பிய ரஷ்ய அணியும், ஆபிரிக்க நாடுகளும் இங்கு முக்கியம். இதன் மூலம் மேற்குலகின் பக்கம் சிறிலங்கா இல்லை என்பதை ஒரு சைகையாக ஆசிய, ஆபிரக்க, தென்னமெரிக்க நாடுகளுக்கு காட்டியிருக்கிறார் தினேஷ் குணவர்த்தன. 

இங்கு ரஷ்யா, சீனா, இந்தியா என்பன தங்கள் விசுவாசிகளை சிறிலங்காவிற்கு ஆதரவாக செயற்படத் தூண்டப்பட்டுள்ளன. 

சிறிலங்கா விடயத்தில் இந்தியா அண்மைக்காலமாக இந்த நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றது. இந்திய வெளிநாட்டு அமைச்சரின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. 

யுத்தம் ஒன்றின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மற்றைய மனித உரிமைகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் என்ற தொனியில் பேசுகிறார் ஜெய்சங்கர். 

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று காட்டவும், மியான்மாருடன் இது ஒப்பிடமுடியாதது என்று காட்டவும், யுத்தத்தின் போது இருதரப்பும் மனித உரிமைகளை மீறியுள்ளதை கோடிடவும் இந்தியா முயற்சிக்கின்றது. 

அப்போதுதான் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான மனித உரிமைகளை அது நியாயப்படுத்த முடியும். ஆக, இந்தியா இறுதியில் எந்த முடிவை எடுக்கப்போகிறது …? அணிசேரா என்ற வார்த்தை நடுநிலைமை. இது இந்தியாவுக்கு புதிதல்ல.  

இந்தியாவின் இந்த நிலைப்பாடு விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ள நாடுகளுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய, நேட்டோ கூட்டுப்படை ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, ஐ.எஸ்.எஸ், ஈரான், யூகோசிலாவியா போன்றவற்றில் நீங்கள் செய்ததுதான் இது என்று சொல்லாமல் சொல்கிறாரா ஜெய்சங்கர்? 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறிலங்காவிற்கு விஷயம் செய்து திரும்பி விட்டார். ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐ.நாவின் பொருளாதார, சமூக கவுன்சிலின் கீழ் செயற்படும் ஒரு பிரிவு. 

இந்த கவுன்சிலின் தலைமைப் பதவியில் இருப்பவர் பாகிஸ்தான் நாட்டவரான முனிர் அக்ரம். இவர் ஐ.நா.விற்கான பாகிஸ்தான் தூதுவர். ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் வழக்குத் தொடுனர் கரீம் அகமட் கான். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத்தலைவர் கனடாவைச் சேர்ந்த பொப்ரே. மியான்மார் மனித உரிமை மீறல்களைக் கையாண்ட அனுபவமும் ஆளுமையும் மிக்கவர். 

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த 260 பேரைக் கொன்றது நீதியல்ல என்று கூறுகிறார் ஸரீபன் ராப். இவர் போர்க்குற்றங்களுக்கான அமெரிக்க முன்னாள் சிறப்பு தூதர். 

ஜெனிவாவில் மேற்குலக இராஜதந்திரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள சிறிலங்காவை, சிறைமீட்கப் போகின்ற பிராந்திய, அணிசேரா நாடுகளின் இராஜதந்திரம் என்ன? 

உண்மையில் இது ஈழத்தமிழர் நலன் சார்ந்த மனித உரிமை விவகாரம் அல்ல. மாறாக மனித உரிமைப் போர்வையில் நடாத்தப்படுகின்ற வல்லரசுப் போட்டி. 

அன்று சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்து தேசத்தை அழித்தவர்கள். 

இன்று அதற்குப் பிராயச்சித்தம் தேடுகிறார்கள். அவ்வளவுதான். 

அழிப்பதும் அவனே! ஆக்குவதும் அவனே!!