— கருணாகரன் —
உண்மையாகவே இலங்கை ஒரு கூட்டுத் தண்டனைக்குள்ளாகியுள்ளது. இதைச் சொல்லும்போது உங்களுக்குப் பலவிதமான யோசனைகள் அல்லது கேள்விகள் எழலாம். அல்லது ஒன்றுமே புரியாத குழப்பமாகவும் இருக்கக் கூடும். இந்தக் கூட்டுத் தண்டனை என்பது இலங்கையர்கள் அனைவரும் விட்ட, விட்டுக் கொண்டிருக்கும் தவறுகளுக்கான தண்டனையாகும்.
இதனால் இதுவரையிலும் இருந்ததைப் போலன்றி, இப்பொழுது நேரடியாகவே வெளிச்சக்திகளின் தலையீடும் நெருக்கடியும் இலங்கையில் அதிகரித்திருக்கின்றன.
இந்தியா, சீனா, மேற்குலகம் என்ற மூன்று முனை இழுவிசைக்குள் கடுமையாகச் சிக்குண்டிருக்கிறது நாடு. இதில் யாரும் யாரையும் குறை சொல்லியோ குற்றம் சாட்டியோ பயனில்லை. எல்லோரும் குற்றவாளிகளே. இன்றைய உலக அரசியல் (பூகோள அரசியல்) எப்படியானது என்று விளங்கிக் கொள்ளாமல் விளையாடியதால், விளையாடிக் கொண்டிருப்பதால் வந்திருக்கும் வினை இது. இந்த அரசியலின் பொருளதாரப் போட்டிக்கு அல்லது பொருளாதார அரசியலின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டிருக்கிறது.
இதற்கு இலங்கையைச் சரியான முறையில் வழிநடத்தத் தவறிய இலங்கையரின் அரசியலே காரணமாகும். இந்தத் தவறான அரசியலை முன்னெடுத்த இலங்கையில் உள்ள ஆளும் தரப்பு – எதிர்த்தரப்பு – போராடும் தரப்பு – போராடிய தரப்பு என அனைத்துத் தரப்பையும் சாரும். இவற்றுக்குப் பின்னால் விரும்பியும் விரும்பாமலும் ஆதரித்தும் இழுபட்டும் சென்ற மக்களையும் சேரும். முக்கியமாக ஒரு சிறிய தேசமான இலங்கையில் உள்ள இரண்டு கோடி மக்களுக்கிடையில் உள்ள அகப் பிளவையும் அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவையும் மனித உரிமைகள் விவகாரங்களையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன இந்த வெளிச் சக்திகள்.
உள்ளும் புறமும் முரண்
இதன் விளைவாக இப்பொழுது உள்நாட்டிலும் நிலைமை சீரில்லை. வெளியிலிலும் நிலைமை சீரில்லை. அதாவது வெளிச்சக்திகளோடும் நிலைமை சீரில்லை என்ற நிலைமையே காணப்படுகிறது.
பிரிவினை யுத்தம் முடிந்து விட்டது. ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, மீளிணக்கம், நல்லெண்ணச் செயற்பாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டாலும், திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் நாடு உள ரீதியாகவும் நடைமுறையிலும் பிளவுபட்ட நிலையிலேயே உள்ளது. சமூகங்களுக்கிடையிலான இடைவெளி வரவர அதிகரித்துக் கொண்டு போகிறது. இதன் விளைவாகப் பொருளாதாரம் படு வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. முன்பு யுத்தத்தினால் பெருமளவு நிதியும் வளமும் இழக்கப்பட்டன. கூடவே பொருளாதார மேம்பாட்டுக்கு உழைக்கக்கூடிய இளைய தலைமுறையினர் போரில் தங்கள் சக்தியை இழந்தனர். அல்லது வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போயினர். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சத்துக்கும் அதிகமானோர் உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர். இதனால் ஒரு காலகட்டத்தின் உழைப்பாளிகள் இல்லை என்றாகியது. மிஞ்சியிருப்போருக்கும் உரிய, ஒழுங்கான தொழிற்துறைகள் இல்லை.
உணவுத்தட்டுப்பாடு
குறிப்பாக உற்பத்தித்துறை இல்லை. இதனால் இன்று மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியும் கடன் பொறியும் நம்மைச் சூழ்ந்திருக்குகிறது. மக்கள் நாளாந்த உணவைப் பெற்றுக் கொள்வதற்கே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது தங்களுடைய நாளாந்த உணவில் அவர்கள் சேர்த்துக் கொள்ளும் தானியங்களின் அளவு மிகமிகக் குறைந்து விட்டது. குறிப்பாக உழுந்து, பயறு, கடலை, கௌப்பி, எள்ளு போன்றவை எல்லாம் படு பயங்கரமான விலைக்குத் தாவிச் சென்று விட்டன. தானியங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக உணவுப் பயன்பாட்டில் வருகிறதோ அந்தளவுக்கு மக்களின் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். உடல் ஆரோக்கியம் இல்லாத மக்களால் உழைக்கவும் முடியாது. புதியதாக –வினைத்திறனுடன் சிந்திக்கவும் முடியாது. ஆற்றற்குறைபாடுடைய மக்களைக் கொண்ட தேசமாக இலங்கை மாறிக் கொண்டிருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு உணவில் எடுத்துக் கொண்ட தானியங்களின் வகையும் தொகையும் இன்றில்லை. அதற்கு முன்னர், நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய முப்பதுக்கு மேற்பட்ட தானியங்களை மக்கள் உணவில் எடுத்தனர். அதற்கு முன்பு ஏறக்குறைய ஐம்பதுக்கும் அதிகமான தானியங்களை எடுத்தனர். அதற்கு முன்னர் இன்னும் கூடுதலான தானியங்கள். இப்பொழுது தானியங்களுக்குப் பதிலாக மாத்திரைகளையும் ரொனிக்குகளையும் எடுத்துக் கொள்கிறோம். இது எந்த வகையில் சரியானதாகும். வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுடையை மக்களின் உடல் ஆரோக்கியத்திலும் சமூக ஆரோக்கியத்திலும் (சமூக ஆரோக்கியம் என்பது ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவை) கூடுதல் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இலங்கையோ, தீராத சாபம் பெற்ற நாட்டைப்போல வரவர நெருக்கடிகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது. தானே உருவாக்கும் நெருக்கடி வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது.
அனைத்து இனமக்களும் சிக்கலில்
ஆகவேதான் அழுத்திச் சொல்கிறோம், யுத்தம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளாகிய பிறகும் நாடு இன்னும் சீரடையவில்லை என. நாடும் மக்களும் ஏராளம் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியே உள்ளது என. இதில் தமிழ்த் தரப்புத்தான் பிரச்சினைகளால் பாடாய்ப்படுகிறது என்றில்லை. சிங்களத்தரப்பும் இதே நிலையில்தான் உள்ளது. அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. சில பிரச்சினைகள் வேறு விதமானவை. அவ்வளவுதான். ஏன், மலையக மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெறுவதே பெரிய பிரச்சினையாக – பெரும் சவாலாக உள்ளது. முஸ்லிம் மக்களுக்கு சமகாலத்தில் ஏற்படுத்தப்படும் –ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடிகள். இப்படி ஒவ்வொரு சமூகத்தினருக்கும் என்று பிரத்தியோகமாகவும் இலங்கையர்கள் என்ற வகையில் பொதுவாகவும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.
இதற்குத் தனியே ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும்தான் காரணம் என்றில்லை. மக்களும் காரணம். மக்கள் இயக்கங்கள், அரசியற் தரப்பினரையும் மக்களையும் சரியாக வழிப்படுத்தியிருக்க வேண்டிய ஊடகங்கள், மத அமைப்புகள் மற்றும் மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்துத் தரப்புமே பொறுப்பு. இதை ஏன் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது என்றால், திரும்பத்திரும்பத் தவறுகள் நடப்பதால் நாமும் தவிர்க்க முடியாமல் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது.
தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் பிழைகள் கூடிச் செல்லும். பிழைகள் கூடிக் கொண்டு போனால் எல்லாமே பாழாகி விடும். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்லும். பின்னர், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அதுவும் இதேபோலத்தான் தவறுகளையே செய்து கொண்டிருக்கும். அதை ஏனைய தரப்புகள் எதிர்க்கும். இப்படியே அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு சில தரப்பினரும் அதை எதிர்த்துக் கொண்டு சில தரப்பினரும் என்று ஒரே சமன்பாட்டில் (Formula) காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகளும் சக்திகளும் சரியான முடிவை எடுக்க முடியாமல், வரலாற்றிலிருந்தும் பட்டறிவிலிருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முடியாமலும் இழுபட்டுக்கொண்டிருக்கின்றன.
அனைத்துக்கும் காரணமான இனவாதம்
இதனால்தான் நாடு யுத்த காலத்தைப்போல, யுத்தத்துக்கு முந்திய காலத்தைப்போல சீரழிந்த நிலையில் உள்ளது. உண்மையில் யுத்தம் நடந்து முடிந்த நாடுகள் அதற்குப் பிறகு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. ஆனால் இலங்கைதான் இன்னும் இருண்ட புதைகுழிக்குள் சிக்கியிருக்கிறது. இதற்கு அது தொடர்ந்தும் முன்னெடுக்கும் இனவாத அரசியலே காரணம். இந்த இனவாத அரசியலில் அனைவரும் பங்காளிகள். இதில் சிங்களத் தரப்பு, தமிழ்த்தரப்பு, முஸ்லிம் தரப்பு என்ற எந்த வேறுபாடுகளுமே இல்லை.
இப்பொழுது பாருங்கள், அரசாங்கத்தை ஜெனிவாவில் நெருக்கடிக்குள்ளாக்கிக் காட்டுகிறோம் என்று தமிழ்த்தரப்பினர் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இலங்கைக்குத் தண்டனையை வாங்கியே தருவோம் என. முடிந்தால் அதைச் செய்து பாருங்கள் என்று அரசாங்கமும் சிங்களத் தரப்பும் சொல்கிறது. வேண்டுமானால் இதற்குப் பதிலாக இன்னும் இன்னும் நெருக்கடியை – கூட்டுத்தண்டனையை உங்களுக்குத் தருவோம் என்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படித்தான் அரசாங்கத்தைக் கூட்டுக்குள் அடைக்க அல்லது கட்டுப்படுத்திக் கொள்ள முஸ்லிம் தரப்பு முயற்சிக்கிறது. முஸ்லிம் தரப்பைக் கட்டி வைக்க அரசாங்கமும் சிங்களத் தரப்பும் முயற்சிக்கின்றன. இப்படியே ஆளாளுக்குப் பொறி வைக்கிற காரியங்களும் முனைப்பும் நடக்கிறதே தவிர, நாட்டை முன்னேற்றுவதைப் பற்றியோ, அதைப் பாதுகாப்பதைப் பற்றியோ யாரும் சிந்திக்கவில்லை. இதற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான நியாயங்களைச் சொல்வர். அதில் உண்மையும் உண்டு. நியாயமும் உண்டு. ஆனால், அந்த நியாயங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காணவே முடியாது.
முக்கியமாக எவரும் எந்த ஒரு தரப்பையும் மட்டும் திருப்திப்படுத்திக் கொண்டு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் நெருக்கடிகளைக் குறைக்கவும் முடியாது. இலங்கையை மீட்டெடுத்துக் காப்பாற்றவும் முடியாது. இன்றைய நிலையில் இலங்கைத்தீவு வெளிச்சக்திகளிடமிருந்தும் உள்நாட்டின் சீரழிவுச் சக்திகளிடமிருந்தும் காப்பாற்றப்பட்டால் மட்டுமே இலங்கையர்களுக்கு மீட்சி. இல்லையெனில் மிகப் பெரிய ஆபத்தே ஏற்படும்.
அனைத்து ஆபத்தும் மக்களுக்கே
ஏனென்றால், நாட்டுக்கு வரும் ஆபத்தும் நெருக்கடியும் அனைவருக்கும் பொதுவானவை. அத்தனை சுமையையும் மக்கள்தான் ஏற்க வேண்டும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. அதில் தமிழர்கள் வேறு. சிங்களவர் வேறு. முஸ்லிம்களும் மலைய மக்களும் வேறு என்று எந்தப் பேதங்களும் இல்லை. ஒரு எளிய உண்மை. இப்பொழுது ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையினால் ஏதாவது நெருக்கடிகள் அல்லது இலங்கைக்குத் தண்டனை என்று வந்தாலும் அது முதலில் ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் மீதான நெருக்கடியாகவும் அழுத்தமாகவுமே இருக்கும். ஒரு சில தனி நபர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். அதற்கு அப்பால் ஏனைய அனைத்தும் சகல மக்களுக்குமானவையே.
அதேவேளை பாதிக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்பது அவசியமானதே. அது யாராக இருந்தாலும். இதில் செய்ய வேண்டியது பிறத்தியாரின் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் நாமே உரிய பரிகாரங்களை – நேர்மையாகவும் விசுவாசமாகவும் மேற்கொள்வதேயாகும். இதற்குத் துணிச்சலான மனமும் உறுதியான நடவடிக்கையும் அவசியம். அதைச் செய்வதே சரி. அவர்களே உண்மையான தலைவர்கள். சரிகளைச் செய்வதற்கு எதன் பொருட்டும் தயங்குவோரும் சாட்டுகளைச் சொல்லிக் காலத்தைக் கடத்துவோரும் தலைவர்களே அல்ல. இலங்கைக்குத் தேவையானது துணிச்சல் மிக்க தலைவர்களே. அனைவரையும் சமத்துவமாக நோக்கக் கூடிய –இலங்கை ஒரு சோசலிஸ ஜனநாயகக் குடியரசு என்ற பெயருக்குத் தக்கமாதிரி நடந்து கொள்ளக் கூடிய தலைவர்களே.
அவர்களால்தான் எல்லாவகையான நெருக்கடிகளையும் தீர்வுக்குக் கொண்டு வர முடியும். பொருளாதார நெருக்கடிகளை கடன்பட்டு ஒரு போதும் தீர்க்க முடியாது. படுகின்ற கடனை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம். அப்படிப் பயன்படுத்துவதற்கு எப்படியான ஒழுங்குளை மேற்கொள்ளப்போகிறோம். அந்த ஒழுங்கில் எல்லோரையும் எப்படி உட்படுத்தப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். அதை விடுத்து அன்றன்றைய பிரச்சினையை மட்டும் பார்ப்போம் என்றால் நாடு இதையும் விட மோசமான நிலைக்கு செல்லும். இப்போது சில இடங்களில் ஒரு வருத்தத்திற்குரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல இடங்களிலும் உள்ள பெயர்ப்பலகைகளிலும் அறிவிப்புப் பதாகைககளிலும் சிங்களம், சீன மொழி, ஆங்கிலம் என்றே அவை அமைக்கப்படுகின்றன. இது எதைக் காட்டுகிறது? உள்ளுரில் – ஒரு வீட்டுக்குள் அண்ணன் தம்பிகளாக –அக்கா தங்கைகளாக இருக்கத் தயாரில்லை. பதிலாக யாரையோ தயவு பண்ணி, அவர்களுக்குக் கீழே இருக்கத் தயாராக இருக்கிறோம் என. இதுதான் தமிழ்ப்பரப்பிலும் நிகழ்கிறது. ஒரு தேசியக் கொடியின் கீழே நிற்க முடியாதவர்கள் இன்று உலகெங்கும் உள்ள கொடிகளின் கீழே நிற்கிறார்கள். இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன? இதிலிருந்து மீள்வது எப்போது? அது எப்படி?