— இரா.வி.ராஜ் —
தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்காக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தினை அல்லது பிரச்சினைகளைத் தீர்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதற்காக கூட்டாக இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை அல்லது வேறு பெயருடனோ இனப்பிரச்சினையினைக் கையாள நினைப்பவர்கள் பல விடயங்களில் தன் நலம் சாரா விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாரான பின்னரே தம்மை தமிழர்களின் பிரதிநிதிகளாக பிரகடனப்படுத்தவேண்டியது கட்டாயமானது .
இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் எமக்கு நடந்த அநீதிகளுக்கான நீதியினையும், அதற்கான தண்டனையினையும், நஷ்டஈட்டினையும் பெற போராடும் ஒரு மக்கள் அமைப்பாக அல்லது மக்களின் பிரதிநிதிகளாக நாம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் காட்டுவதற்கான தகுதியினைப் பெறுவதற்கு முதலில் நாம் உண்மையில் மக்கள் நலம் சார்ந்த பிரதிநிதிகளாக மட்டும் இருக்கவேண்டும்.
அதனைப் பெரும்பான்மை தமிழ் மக்கள் உண்மையாக நம்பவேண்டும் அல்லது மக்கள் நம்புவதைப்போல் நாம் வெளிப்படையாக நடக்கவேண்டும். தமிழ்ச் சமூகம் அனைத்துத் தரப்பிலிருந்தும் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு புதிய வடிவில், புதிய பெயரில், ஒரு பொது அமைப்பாக பிரகடனப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பு மக்களுக்குப் புதிதாகவே தெரியவேண்டும்.
இங்கு பிரச்சினை என்னவென்றால் இப்புதிய அமைப்பில் இணைந்திருக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் அல்லது அமைப்புக்குமான கடந்த கால வரலாறுகள் மங்கி தெரியவேண்டும் அல்லது அந்த வரலாறுகளை தூக்கிக்கொண்டு புதிய அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதை முற்றாக தடை விதிப்பதற்கான ஏற்பாடுகள் யாப்புரீதியில் செய்யப்படவேண்டும். ஆக அமைப்பில் இருக்கும் அனைவரும் புதிய அமைப்பின் பிரதி நிதிகளாகவே தம்மை எந்த சந்தர்ப்பத்திலும் காட்டிக்கொள்ள வேண்டுமே தவிர கட்சி, அமைப்பு ரீதியில் தம்மை காட்டிக்கொள்ளாத ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் .
புதிய அமைப்பாக ஒன்றிணைந்து மக்களுக்காக போராட நினைப்பவர்களுக்கு பழைய அமைப்புக்கள் தேவையா?!
ஈழப்போராட்ட வரலாற்றில் ஆயுதப்போராட்டதில் இருந்து பின் முழு அரசியலுக்கு திரும்பிய அமைப்புக்களாக இருந்தாலும் சரி, ஆரம்பத்தில் இருந்து அரசியல் போராட்டம் நடத்தும் கட்சிகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான ஆளுமையையும், விமர்சனங்களையும் கொண்டவையாக இருக்கின்றன. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுமை இழக்கப்பட்ட 2009க்கு பின்னரான தமிழ் அரசியற் சூழலில், தமிழ் தரப்பில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்திவரும் பல கட்சிகள் இணைந்த பதிவு செய்யப்படாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலவீனங்களில் முக்கியமானது, மக்கள் தொடர்ச்சியாக அவதானித்துவரும் உட்கட்சி ஒற்றுமையின்மை.
இங்கு ஒரு கட்சி தம்மை மிகப்பிரதானமாக முன் நிறுத்துவதும், மற்ற கட்சிகள் வேறு வழி இன்றி சேர்ந்திருப்பதும், சில முரண்பட்டு வெளியேறுவதும் சகஜமாகிவிட்டது. வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக்கப்படுவது, ஊடக அறிக்கைப்போர் என்று பல முரண்பாடுகளுக்கான காரணம் பொதுவானது. ஒன்றாய் இருந்தும் தம் கட்சி, தனிநபர் ஆதிக்கத்தை அதிகரிக்க பிரயத்தனப்படுகையிலேயே இம் முரண்பாடுகள் வெளிவருகின்றன. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் போல் ஒரு கூட்டாகவே தமிழ்த் தேசியப் பேரவை இருக்கப்போகின்றது என்றால் அது மக்களுக்கு எவ் வகையிலும் தீர்வு தேடும் அமைப்பாக இருக்காது.
உண்மையில் ஒரு புதிய அமைப்பாக மக்களுக்காக தமிழ் தேசியப் பேரவையாக இயங்கப்போகின்றீர்கள் என்றால் “முதலில் உங்களுக்கு என்று ஏற்கனவே வைத்திருக்கின்ற கட்சிகளை கலைத்துவிடுங்கள்“. சாதாரண தனி மனிதர்களாக பேரவையோடு இணைந்துகொள்ளுங்கள். அங்கிருந்து உங்களை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள். உங்கள், உங்கள் அமைப்புக்கான விமர்சனங்கள் இல்லாமற் போகவும், உங்கள் ஆளுமை, மக்களின் உங்கள் மீதான ஆதரவும் கூடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.
#P2Pக்கு ஆதரவு தந்ததன் மூலம் மக்கள் சொல்லி இருக்கின்றனர் புதிய அமைப்பை நாங்கள் வரவேற்க தயார் என்று. ஆனால் நீங்கள் உங்கள் பழைய ஆடைகளைக் கழைந்து புதிய ஆடையுடன் மக்கள் முன் தோன்றினாலே அந்த ஆதரவு கிடைக்கும். ஏனெனில் #P2P முடியும் தருவாயிலும் முடிந்த பின்னும் அரசியல்வாதிகள் உங்கள் புத்தியினை காட்டியுள்ளீர்கள். தமிழ் அரசியற் கட்சிகளின் ஒன்றுமை நம்ப முடியாதது என்பதனை மக்கள் அடி மனதில் பதிந்துள்ளனர்.
தமிழ் அரசியற் கட்சிகளில் EPRLF இன் ஒரு பிரிவாக செயற்பட்டு வந்த வரதராஜப்பெருமாள், சுகு எனப்படும் சிறிதரன் தலைமையிலான அமைப்பு மாத்திரமே EPRLF என்கின்ற பெயரினை நீக்கிவிட்டு தமிழர் சமூக ஜனநாயக கட்சி (SDPT) என்கின்ற புதிய பெயரில் தம்மைப் புதிப்பிக்க முயற்சி செய்தது. தனித்து அவர்களின் முயற்சி இன்றளவில் வெற்றியளித்ததா என்கின்ற ஒரு கேள்வி ஒரு பக்கம் இருக்க, அந்த முயற்சியை முன்னுதாரணமானதாக எடுத்துக்கொள்ளலாம். அந்த தைரியம், சாத்தியம் கவனிக்கப்படவேண்டியதும், மற்றவர்களாலும் செய்யக்கூடியது என்பதனையும் இன்னும் தம் அமைப்பினைப் பற்றிக்கொண்டிருப்பவர்கள் கவனிக்கவேண்டும்.
புலிகளின் கொடிகளை தவிருங்கள்
அடுத்து புலம்பெயர் தமிழரை இணைத்துப் பயணிக்க நினைக்கும் புதிய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் இல்லாத போராட்டத்தினை உலகம் பூராவும் நடத்தும் நிலமையினைக் கொண்டுவருவார்களாக இருந்தால் அது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு வலுச்சேர்க்கும். ஆனால் அதனை புலம்பெயர் மக்களுக்குச் சொல்லக்கூடிய தைரியம் புதிய பேரவைக்கு இருக்கின்றதா?! என்கின்ற மிகப்பெரும் கேள்வி இருக்கின்றது.
புலம்பெயர் தமிழர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் உங்களின் தமிழீழ விடுதலைப் புலிகளின் அல்லது அதன் தலைவரின் மீதான ஆதரவு இதய பூர்வமானது, உண்மையானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உங்களின் பலரின் வீடுகளுக்குள் இருக்கும் புலிக்கொடியும், புலிகளின் தலைவரின் புகைப்படமும். நீங்கள் கடந்த காலத்தில் வழங்கிய பெருளாதார உதவியுமே அதற்குச் சான்று.
“ஒரு ஆயுத, அரசியல் போராட்ட அமைப்புக்கு ஒரு தொகுதி மக்கள் கூட்டம் ஆதரவளிப்பது என்பது ஏளனமான விடையமல்ல, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஆதரவாளர்கள் தாம் ஆதரவளிக்கும் இயக்கத்தை ஒரு மதத்தை பின்பற்றுவதைப்போலவே இதய பூர்வமாக அவற்றோடு ஒன்றிக்கிடக்கின்றனர். இது புலிகள் ஆதரவாளர்களின் மன நிலையோடு மட்டுமல்ல ஒவ்வொரு ஈழப்போராட்ட இயக்கங்களின், பழம் தமிழ் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் மன நிலையோடும் பொருத்திப்பார்க்கலாம். இறுதியில் அனைவரும் ஒரு குடையின் கீழ்தான் வருவர். தாம் ஆதரிக்கும் அமைப்பை தூக்கி பேசுவதிலும் சரி, உதவி செய்வதிலும் சரி, மற்ற அமைப்பை தாழ்த்தி தாம் ஆதரிக்கும் அமைப்பை உயர்த்திப்பார்ப்பதிலும் சரி, தாம் ஆதரித்த இயக்கம் செய்த அனைத்தையும் நியாயப்படுத்துவதிலும் சரி, மற்றவர்களின் குற்றங்களை பகிரங்கப்படுத்துவதிலும், தாம் செய்த தவறுகளை ஏற்க மறுத்தலிலும் அதனை அதை நியாயப்படுத்துவதிலும் சரி, தாம் ஆதரிக்கும் அமைப்பினை விமர்சனத்துக்கு உட்படுத்துவதில் காட்டும் தயக்கத்திலும் சரி, ஒரு இயக்கத்துக்கு மற்ற இயக்கம் மாறி மாறி செய்துகொண்ட துரோகங்களை சுயவிமர்சனம் செய்யாததிலும் சரி, ஒரு காலத்தில் ஒரு நோக்கத்துக்காக பேராடியவர்களாக இருப்பினும், அவற்றிலிருந்து விலகியதற்கான, விலகாமைக்கான காரணங்களை வைத்து. எதிர் எதிர் தரப்பு நியாயங்களை புரிந்து கொண்டு போராட்டத்தை சரியான பாதையில் கொண்டு செல்லாமையிலும் சரி, இயக்க உறுப்பினர்கள் போல், அவர்களின் ஆதரவாளர்கள் எவரும் சளைத்தவர்களும் அல்ல தம்மை தாமே புனிதப்பட்டம் சூட்டுமளவுக்கு தகுதியானவர்களா என்கின்ற கேள்விக்குட்பட்டவர்கள். இப்படி எத்தனையோ வித விமர்சனங்களுக்கு மத்தியில்தான், நாம் தான் நல்லவர்கள் என்கின்ற சுய பட்டத்துடன் எவரையும் கெட்டவராக்கவும் தயங்காதவர்களாக ஒவ்வொரு இயக்க ஆதரவாளரும் வெறும் கருத்தியல் மோதலுக்குள் அகப்பட்டு கிடக்கின்றனர்.
“தமிழ்த்தேசிய ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளும் புலம்பெயர் தமிழர்கள் மிகப்பெரும் போராட்டங்களில் எல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் கொடிகளை ஏந்தியதனை இலங்கை அரசாங்கங்கள் தமக்குச் சாதகமாக பல சமயங்களில் மாற்றிக்கொண்டதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவை என்றும் மனதில் வைத்துக்கொண்டு . பொதுவான மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுகையில் புலிகளின் கொடிகளை தவிர்த்துவிடலாமே. (தாயகத்தில் பயன்படுத்த முடியாது என்றாலும்) அப்படியே தாயகத்தில் மக்கள் பேராட்டம் நடத்துகின்றனர் ஏன் அதனை புலம் பெயர் தமிழ்ச் சமூகம் பின்பற்றக்கூடாது.? இதனை புலம் பெயர் சமூகம் அறிவு பூர்வமாக, தந்திரோபாய ரீதியில் மக்களுக்கு உண்மையான நன்மை சேர்க்கும் விடயங்கள் பற்றி ஆராய வேண்டும்.
கடந்த போராட்டங்களின் போட்டோ பிரதி தேவையில்லை
மேற் குறிப்பிட்ட அமைப்புக்களைக் கலைப்பதென்பது தமிழிழ விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்புக்களைக் கலைத்து புதியவர்களாக புதிய பேரவையில் இணையவேண்டும் என்பதும் இன்றியமையாதது. கடந்த காலங்களில் நடந்த போரட்டங்களின் போட்டோ பிரதியாகவே புலம் பெயர் போராட்டம் தொடருமானால் அது மக்களுக்கு முழுமையாக நன்மையளிக்காது. மாறாக “குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவதாகவே” அமையும். புலம்பெயர் போராட்ட வடிவம் மாறாமல் எந்தப்பேரவை உருவானாலும் மக்களுக்கான போராட்டம் வெற்றியை நோக்கி நகராது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மிகப்பெரும் திட்டமிடலுடன் காய்களை நகர்த்தவேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கின்றனர்.
கண்ணதாசன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கின்றேன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லக்கூடிய யோக்கிரதை எனக்கிருக்கின்றது என்று அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதினான்.
எப்படியெல்லாம் போராட்டம் நட்டத்தவேண்டுமோ, நடத்தக்கூடாதோ அப்படியெல்லாம் நாம் போராட்டம் நடத்தியிருக்கின்றோம். இப்படித்தான் போராட்டம் நடத்த வேண்டும் எங்கின்ற அறிவு நமக்கு வந்திருக்கவேண்டுமே!!!??