— ஸர்மிளா ஸெய்யித் —
சர்வதேச நெருக்கடி குழுவின் கண்காணிப்புப் பட்டியலில் 2020 இல் இடம்பெற்றிருக்கும் ஒரே ஆசிய நாடு இலங்கை.
2019 நவம்பரில் நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் ஆழ்ந்த துருவங்களாக நாடு கூறுபோடப்பட்டிருப்பதைப் பிரதிபலித்தன. முன்பே இருந்த பிரிவினைதான். இடைவெளி அதிகரித்துள்ளது. கோதபாய ராஜபக்ச சிங்கள தேசியவாத மேடைகளில் ”சிங்கள மக்களின் ஆதரவினால் மட்டும் வெல்வேன்” என்று கோஷம் செய்தார். முன்னொருபோதும் இல்லாத வகையில் பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களிடமிருந்து ஆதரவைப்பெற்றார். அதே நேரத்தில் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் அவரை நிராகரித்தனர். இந்த நிராகரிப்புச் செயற்பாடு புத்திசாலித்தனமானதில்லை என்றபோதும் சிறுபான்மைச் சமூகத்தைப் பிரிநிதித்துவப்படுத்தும் தேசியவாதிகள் மக்களை இம்முடிவுக்கு இட்டுச்சென்றனர். பிரிவினையை மேலும் அகலப்படுத்துவது முரண்பாட்டு தீர்வுக்கான முயற்சிகளை மழுங்கடிக்கும். மட்டுமல்ல, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ராஜபக்சேவின் அமைச்சரவையில் 54 அமைச்சர்களில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஒரேயொரு முஸ்லிம் நீதியமைச்சராக உள்ளார். கோதபாய ஜனாதிபதியாகுவதற்கு முன்பு அவருக்கு எதிராக இருந்த 14ற்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளில் வாதாடிய மிகத்திறமையான சட்டத்தரணி அலி சப்றியை தேசியப்பட்டியல் வழியாக வளைத்து நீதியமைச்சராக்கினார்கள்.
இவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவரில்லை. இவரை மக்கள் தெரிவு செய்யவில்லை. 1948 இல் இலங்கை நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதல் முறையாக, சிறுபான்மை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அற்ற ஒரு அமைச்சரவையை ராஜபக்ச அரசு உருவாக்கியிருக்கிறது.
20வது திருத்தம்
பெரும்பான்மை ஆதரவுடன் 20வது அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இலங்கை அரசியலமைப்பில் மிச்ச சொச்சமிருந்த ஜனநாயக தன்மைகளையும் நீக்கம் செய்த குடும்ப ஆவணமாக இலங்கை அரசியலமைப்பு மாற்றப்பட்டது. எதேச்சாதிகாரமிக்க அரசை நிறுவுவது தவிர இந்த அரசியலமைப்புத் திருத்தத்தினால் ஒரு பயனுமில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, அரசியலமைப்புப் பேரவை ஆகியன நீக்கப்பட்டன. தேர்தல் ஆணைக் குழு, தேசிய பொலிஸ் ஆணைக் குழு ஆகியவற்றின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இரட்டைப் பிரஜா உரிமை உள்ளவர்களும் நாடாளுமன்றம் செல்ல வழிகோலப்பட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு அரசியலமைப்பு மதிக்கப்படுதலை உறுதிப்படுத்தல், தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் ஜனாதிபதியின் கடப்பாடுகள் நீக்கப்பட்டன. ஜனாதிபதி தன்னுடைய அதிகாரங்கள், கடமைகள், செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியதில்லை, ஜனாதிபதிக்கு எதிராக எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்ய முடியாது. அடிப்படை மனிதஉரிமை வழக்கு உட்பட. எந்தவொரு ஆணைக் குழுவிற்கும் அங்கத்தவர்களை நியமிக்கவும் பதிவி நீக்கம் செய்யவும் ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது.
மேலும், மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதையும் ராஜபக்ச நிராகரிக்கிறார். இதன் மூலம் சிறுபான்மை இனங்களுக்கு சுயநிர்வாக உரிமைகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை இல்லாமலாக்கும் நிழல் நடவடிக்கைகள் தொடருகின்றன. வடக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதை “இயற்கைக்கு மாறானது” என்று கோத்தபாய கூறிய கடந்தகால அறிக்கைகள், மக்கள்தொகை வரைபை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட இராணுவ – அரசு ஆதரவு பரிமாற்றத்தின் அச்சங்களை உயர்த்துகின்றன.
இந்த விரும்பத்தகாத வேறுபாடுகளுடன், நில அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மறுப்பு, அவசரகாலச் சட்ட நீடிப்பு என்று நாட்டில் அநீதிகளின் கொடிகள் பறக்கின்றன. உலகிற்கு கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய், இலங்கை நாட்டைத்தவிர. இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் தீவிரவாதிகளைப் போல இராணுவ நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள்
நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார சூழ்நிலைகளின் முழுத் தாக்கங்களிலும் பங்கேற்பாளர்களாக இருக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இறுக்கமான பாகுபாட்டையும் ஆபத்துக்களையும் எதிர்கொண்டிருக்கிறது. கோதபாய ராஜபக்சவின் ஆதரவைப் பெற்றிருந்த சிங்களக் கிளர்ச்சியாளர்கள் முஸ்லிம்களுக்குப் பொருளாதாரச் சேதங்களை ஏற்படுத்துவதைக் கடந்த காலங்களில் செய்து வந்தனர். இந்த முஸ்லிம்- விரோத வன்முறைக்காக கைதுசெய்யப்பட்ட அனைத்து சிங்களநபர்களும் விடுவிக்கப்பட்டனர். எந்தவொரு வழக்குகளும் இல்லை. அதேநேரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களது மத நம்பிக்கைக்கு விரோதமாகவும் கலாசார பண்பாட்டு உரிமைகளை மீறும்படியாகவும் தகனம் செய்வது கொள்கையாக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருகை புரிந்த பிறகு கொரோனா தொற்றினால் இறப்போரை தகனம் செய்வதாக முன்னர் அறிவிக்கப்பட்ட சுற்றுநிருபத்தில் எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்று வெளியான புதிய திருத்தம், இலங்கை கடந்த காலங்களில் தொடர்புகளை தளங்களை முன்னிலைப்படுத்தி பாக்கிஸ்தானுடன் இருந்தது போன்று இணக்கமாகப் பணியாற்ற முயல்வதை வெளிப்படுத்தியிருக்கிறது. இவ்விரு நாடுகளுக்கிடையேயான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் 2005ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது கவனிக்கத்தக்கது.
மக்களின் உரிமைகளும் கெளரவங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடை மட்டுமே. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும்இதுவே நிகழ்ந்து வருகிறது.
பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான பேரணி, எழுச்சிக்கு ஒன்றுக்குத் தயார் நிலையில் இருந்த பொதுமக்களின் உணர்வெழுச்சி அரசியலாக்கப்பட்டதற்கான உதாரணம்.
மக்கள் அதிருப்தியின் வெளிப்பாடு
அரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்தியும் வெறுப்பும் கொண்டிருக்கும் மக்களின் நீதிக்கான தாகத்தை இந்தப் பேரணியில் காண முடிந்தது. நில ஆக்கிரமிப்பு, வடக்கிலும் கிழக்கிலும் பரவலாகிவரும் பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு – கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை வலுப்படுத்தியிருந்தனர். அரசியல்வாதிகளின் தலையீடு, அவர்களுக்கிருந்த தன்முனைப்பு, பிரத்தியேக நிகழ்ச்சி நிரல்கள், கருத்து மோதல்கள், உட்பூசல்களால் இந்தப் போராட்டத்தின் ஆத்மா சிதைக்கப்பட்டது.
ஒரு போராட்டத்தின் முக்கிய கூறாக இருக்கவேண்டிய உயரடுக்கினரின் பங்குபற்றுதல் இந்தப் பேரணியில் இல்லை. சமூக அநீதிக்கு எதிரான எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அந்ததந்தச் சமூகங்களிலிருந்து உழைக்கும் வர்க்கமே முதனிலைப் போராளிகளாக முன்நிறுதப்படுவது தற்செயலானதில்லை. உயரடுக்கினர் என்போர் பண வசதிபடைத்தவர்களாகவோ, செல்வந்தர்களாகவோ, உயர் கல்வி கற்றவர்களாகவோ, துறைசார் அல்லது தொழில்நுட்ப விற்பன்னர்களாகவோ, அதிகாரத்தை அணுகக்கூடிய எந்தவகையிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடியவர்களாகவோ இருக்கலாம். இந்த உயரடுக்குகளில் இருக்கக்கூடிய சிலர் அரசாங்கத்திற்கு எதிராக உறுப்பினர்களைத் தூண்டக்கூடியவர்களாக இருக்கலாம். தொழில்நுட்ப ஆற்றலால் மக்களை அணிதிரட்டக் கூடியவர்களாக இருக்கலாம். இவர்களை அதிகாரத்திற்குத் துணைபோகின்ற சக்திகள் என்று வெறுமனே ஒதுக்கிவிடமுடியாது. சமூக அநீதியைப் பற்றிய இவர்களது கருதுகோள் முக்கியம். இவர்களது கருதுகோள்களை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், இவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களைச் செய்யாமல் வெறுமனே இவர்களைப் புறக்கணித்துவிட்டு அன்றாடம் சோற்றுக்கு அல்லாடும் மக்களின் வயிறுகளில் அடிக்கும் போராட்டக்களிலிருந்து உருவாகும் மாற்றங்களை, நலன்களை இந்த உயரடுக்கினரும் தான் அனுபவிக்கப்போகிறார்கள். இந்த உயரடுக்கினரின் பொறுப்பு என்ன? அவர்கள் சமுதாயத்தை பற்றியும் சமூகத்தில் பெருந்தொகையான மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதைப் பற்றியும் என்ன கருதுகிறார்கள்? ஏன் ஒரு தொகை மக்கள் பாதிக்கப்படும்போது உயரடுக்கினர் இவற்றில் பங்காற்றாமல் ஒதுங்கியிருக்கிறார்கள்? உயரடுக்கினரின் சௌகரிய வளையத்தை உடைப்பதற்கான முயற்சிகள் மிகமுக்கியமானது. அது எவ்வளவு வெற்றியைத் தந்தாலும் அல்லது தரவேயில்லை என்றாலும்.
சமூக நீதியின் பேரில் மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும்
சமூக நீதிப் போராட்டத்திற்கான சக்திவாய்ந்த உந்துதல்களின் இருப்பு அதாவது, முக்கிய வகுப்புகளை வெட்டி ஒரு சமூகத்தின் பெருந்தொகையான மக்களை சமூக நீதியின் குறிக்கோளுக்கு பின்னால் ஒன்றிணைப்பது. இனத்தால் மதத்தால் சாதி, வகுப்பு பேதங்களால் இலங்கைச் சமூகம் பிரிந்து நிற்கின்றது. மதம் இவர்கள் ஒன்றுபடுவதற்குத் தடையாக இருக்கின்றது. தமிழ்ச்ச சமூகத்திற்குள் சாதிப் பிரிவினைகள் புரையோடிப்போயுள்ளன. மலையகத் தமிழர்களைப் பிரித்தாளும் தந்திரங்கள், இந்த எல்லா சமூகத்திற்குள்ளும் காணப்படும் வகுப்புவாதங்கள், சமூகத்தை மேலும் பல உள்ளடுக்குகளாகப்ப பிரித்துப்போட்டிருக்கின்றன.
நீதிக்கான மக்களின் போராட்டம் என்பது சிவில் நிர்வாக நடவடிக்கைகளை முடக்கக் கூடிய இடம்வரைக்கும் செல்லவேண்டும். இந்தப் பேரணி சிவில் நிர்வாக செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சியையும் மக்கள் திரளையும் திறம்பட சமாளிக்க முடியாமல் அரசு அதன் இயல்பான செயல்பாடுகளைச் செய்ய இயலாமல் நிலை குலையவேண்டும். இலங்கை வரலாற்றில் அப்படிச் சொல்லத்தக்க உதாரணமாக 1961 சத்தியாக்கிரகம் உள்ளது. ”சிங்களம் மட்டும்” மொழிச் சட்டத்தைத் தொடர்ந்து, வேலை வாய்ப்பில் தமிழ்மொழி பேசுவோர் புறக்கணிப்பு அரசாங்க கருமங்களைத் தமிழ் மொழியில் ஆற்றும் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக தந்தை செல்வநாயகம் தொடங்கிய இந்தப்போராட்டம் மக்களின் ஒத்துழைப்புடன் முக்கியமாக தமிழ் முஸ்லிம் மக்களின் ஒருமித்த பங்களிப்புடன் வடக்கு கிழக்கு முழுவதிலும் சிவில் நிர்வாகங்கள் முடங்கும் நிலை வரையும் சென்றது. ”அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது”.
கடந்த காலப் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பது, அல்லது சமூக இயங்கியலை மாற்றுவதற்கான அடிப்படைச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் ரொமாண்டிசைஸ் பண்ணுவதென்று இரு வகையினரே சமகாலத்தில் பெருந்தொகையினராக உள்ளனர். ஆனால் எதிர்த்தலுக்காக எழுந்து நிற்கவேண்டிய காலத்தில் வாழ்கிறோம். நமது நிகழ்காலம் உலகளாவிய எழுச்சியால் மட்டுமல்ல, இன்னும் தீர்க்கமாக, உலகளாவிய எழுச்சியின் திறந்த முடிவால் வரையறுக்கப்பட்டுள்ளது. இன்று எழுச்சியைப் பற்றி பேசுவது இனி ஒரு நிகழ்வையோ அல்லது தருணத்தையோ பேசுவதல்ல. நீடித்த, இடைவிடாத தற்காலிகத்தைப் பற்றியது. பல புலன்களில் எழுச்சி என்பது நமது நிகழ்காலம் பற்றியதாகவும் சாத்தியமான வழிகளின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
பெரிய அளவிலான மாற்றம் இனி சாத்தியமில்லாத ஒரு உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்று சொல்வது மிகவும் எளிதானது. ஆனால், கூட்டுச் செயற்பாடுகளையும் அதன் விளைவுகளையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பான கட்டத்தை அடைந்தும் அங்கிருந்து நகராமலேயே இருக்கிறோம்.
காயங்கள் ஆறாத தமிழீழ விடுதலைப் போராட்டம்
சமூக நீதிக்காகத் தொடங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் விதிகளிலிருந்தும் மத்தியஸ்த முறைகளிலிருந்தும் பிறழ்ந்துபோனதால் உண்டான காயங்கள் ஒரு தசாப்தம் கடந்தும் ஆற்றப்படவில்லை.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, சட்டவாட்சி, குடியுரிமைகள், இன நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு உருவாகியிருக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக, ஐ.நாவில்ஒப்புக் கொண்ட பொறுப்புக்கூறல் நிகழ்ச்சி நிரலை நிலை நிறுத்தத் தவறிவரும் இலங்கை மீது அதன் உதவித்திட்டங்கள், வர்த்தக சலுகைகள், இலங்கைக்கான பயங்கரவாத எதிர்ப்பு உதவிகளை மறு ஆய்வு செய்யவும் ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நாடுகள் சபையின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் ஒரு தனித்த உலகைப்போல தன்னிச்சையாகச் செயற்பட இலங்கை அரசைத் துணியச் செய்வது எது?
மறுப்பு, எதிர்ப்பு, கீழ்ப்படியாமை போன்ற வடிவங்களின் இடைவிடாத சங்கிலியை நாம் என்னவாக அழைக்கிறோம்? அதை எவ்வாறு வரலாற்றுப்படுத்துவது?
எழுச்சிகர இயக்கங்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய காரணிகளில் பிரதானமானது, ஒரு சமூகத்தின் மக்களிடையே காணப்படும் சமத்துவமின்மையும் வறுமையும். எந்த அளவிற்கு மக்கள் இன அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறார்களோ அந்தளவுக்கு, அரசாங்க அதிகாரிகளிடையே ஊழல் பற்றிய கருதுகோள்கள் மாறும். அரசாங்கத்தின் இராணுவப் படைகளின் விசுவாசத்தின் அளவு மாறும்.
மக்களின் பிரிவினையே பேரினவாத அரசாங்கத்தின் வெற்றி
முஸ்லிம்கள், தமிழர்கள், மலையகத்தமிழர்கள் என்று கூறுகளாகப் பிரிந்துகிடக்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் சிங்கள சிவில் சமூகமான கலாச்சார மரபுகள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டிருக்கின்றன. மலையகத்தமிழர்கள் சம்பள உயர்வுக்காகவும், பெருந்தோட்டத் துறைகளில் நடக்கும் அநீதிகளை எதிர்ப்பதற்குமான வழிமுறைகளைத் தாங்களே கண்டடைந்து போராடவேண்டியிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும், நில அபகரிப்புகளுக்காகவும் தமிழ்மக்கள் தனியாகப் போராடுகின்றனர். ஜனாசா எதிர்ப்புக்கு எதிராக முஸ்லிம்களே போராடினர். இந்த விடயத்தில் கிறிஸ்தவ கத்தோலிக்கர்களும் இணைந்தார்கள். இறந்த உடல்களை தகனம் செய்வது அவர்களது மத நம்பிக்கைக்கும் எதிரானதாக இருந்த காரணத்தினால்.
சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டத்தில் ஏன் மக்கள் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், மொழியாலும் வேறுபட்டு நிற்கவேண்டும்? சமூக நீதி மறுப்பு மனித வாழ்வுக்கு அச்சுறுதலை ஏற்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வதில் என்ன தடை? இந்த வேறுபாடுதான் இன்றைய பேரினவாத அரசாங்கத்தின் மிகப் பெரிய வெற்றி.
ஒரு நாட்டின் உடல் அளவு, அதன் நிலப்பரப்பின் தன்மை, மக்கள் இயக்கத்தின் வளர்ச்சி என்பன சமூக அநீதியை எதிர்ப்பதற்கான வழிமுறைகளின் கலாசார மரபுகளைத் தீர்மானிக்கக் கூடியன. அத்துடன், ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் பிற நாடுகளின் கவனமும் ஈடுபாடும் கவனத்திற் கொள்ளத்தக்கது.
30 வருட உள்நாட்டு யுத்தம் மக்களின் சுயாதீன எழுச்சி நரம்புகளை மரத்துப்போகச் செய்துவிட்டதென்று சொல்வதைவிடவும் இலங்கைச் சமுதாயம் விடுதலைக்கான ஆன்மா அற்றது என்று சொல்வதே பொருந்தும்.
காலனித்துவ ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15 விடுதலை அடைந்தது. மகாத்மா காந்தி தலைமையில் இன்னும் பல சுதந்திரத் தியாகிகளும் கூட்டாக அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், உப்புச்சத்தியாக்கிரகம், சுதேச கொள்கை போன்ற வடிவங்களில் முறைமையுள்ள ஒரு போராட்டத்தைச் செய்தனர். சுமார் 3 தசாப்த காலமாக இந்திய நாட்டில் இடம்பெற்ற இந்த எழுச்சிச் செயற்பாட்டால் மக்களின் நாடி, நரம்பு, ரத்தம் அனைத்திலும் சுதந்திர தாகம் ஊறித் ததும்பியது. இனம், மதம், மொழி, சாதி வேறுபாடுகளைக் கடந்து சுதந்திரத்திற்காகப் போராடிய இந்திய மக்களிடம் இன்றைக்கும் அந்த மரபு உள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்திய காலங்களில் இடம்பெற்ற சமூக நீதிக்கான பல போராட்டங்களால் இந்திய சமூகங்கள் இதனை நிரூபித்திருக்கின்றன.
சுதந்திரப் போராட்ட வரலாறு இலங்கைக்கு இல்லை. இந்தியாவை இந்தியர்களிடம் கையளித்த பிறகு இலங்கையை நிர்வாகம் செய்வதிலிருந்த சவால்கள் காரணமாக ஆறு மாதங்களுக்குள்ளாக பிரித்தானியர் இலங்கையையும் கிழக்கிந்திய வர்த்தக நடவடிக்கைகளையும் முற்றாகக்கைவிட்டனர். இந்த வரலாற்று வேரிலிருந்தே இலங்கைச் சமூகங்கள் நீதிக்கான போராட்டங்களுக்கு ஒன்றிணையத் தடையாக இருக்கும் காரணங்களைப் பார்க்கவேண்டியிருக்கிறது. சமூக நீதி என்பதைக் குடியுரிமையாக இலங்கை சமூகங்கள் கருதவில்லை. அவ்வாறு கருதுவதற்கான எந்த முனைப்பும் இலங்கையின் கல்வி முறையில் இல்லை. சமூக நீதியின் குறிக்கோளுக்குப் பின்னால் மக்களை ஒன்றிணைக்கக்கூடிய மக்கள் இயக்கங்கள் இல்லை. பாடசாலைக் காலத்திலிருந்தே சமூக நீதியை வலியுறுத்தி உரையாடி ஒவ்வொருவரும் ஒன்றிணையக்கூடிய தளங்களில்லை. இந்தத் தளங்கள் இனங்களுக்கிடையே இல்லாமல்போனதற்கு சிங்களம் – தமிழ் மொழி இடைவெளியை நியாயப்படுத்தலாம். ஆனால் இனங்களுக்குள்ளே இருந்ததா? தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் இருந்ததா? குறைந்தபட்சம் அந்தந்த இனங்களுக்குள் இருந்ததா? தமிழ்ச் சமூகங்களுக்குள் இருந்த சுதந்திர உணர்வும் வேட்கையும் அவர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டது. முஸ்லிம் சமூகத்திற்குள் மத அடிப்படைவாத சிந்தனைகள் வளர்ந்த அளவுக்கு முற்போக்கு சக்திகள் வளரவில்லை. அதற்கான தளங்களென்று சொல்வதற்கு எதுவுமேயில்லை.
பிரித்தாழும் தேசியவாதங்கள்
மேலும், இலங்கைச் சமூகங்களுக்கு முன்மாதிரியான தலைவர்கள் இல்லை. இருந்தவர்கள் தேசியவாதிகள். தமிழ்த்தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம். இவை இரண்டுமே பிரித்தாழுபவை. சிறுபான்மைச் சமூகங்களை ஒடுக்கும் சிங்கள தேசியவாதத்தை சிறுபான்மைத் தேசியவாதங்களைக் கட்டியெழுப்பி முறியடிக்க முடியும் என்பது அபத்தமான நலிந்த வியூகம். மொத்தத்தில் தனித்துவம் என்ற பெயரில் சமூகங்களைத் தனிமைப்படுத்தும் காரியங்களையே இவர்கள் செயல்படுத்தினார்கள். தேசியவாத சிந்தனைகளால் அரசியல்வாதிகள் மட்டுமே பயனடைந்தனர். பயனடைந்துவருகின்றனர்.
சிங்கள பௌத்த பேரினவாதம் மட்டுமல்ல சிறுபான்மைத் தேசியவாதங்களாலும்தான் இலங்கையில் இனமுரண்பாடு தீர்த்துக் கொள்ளமுடியாத கணக்காக நீட்சி பெற்ற வரலாறாகி வருகின்றது.
தேசியவாதங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இனியாவது சுதந்திரத்திற்குப் போராட இலங்கைச் சமூகங்கள் தயாரா என்பதே இப்போதுள்ள கேள்வி.