எமது நூலகங்களின் வளர்ச்சிக்கு உழைத்த உன்னதமான நூலகர்

எமது நூலகங்களின் வளர்ச்சிக்கு உழைத்த உன்னதமான நூலகர்

  — நூலகவியலாளர் என்.செல்வராஜா (லண்டன்) — 

சாமுவேல் ஜோன் செல்வராஜா (14.11.1945-01.03.1989) 

யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் பிரதேசத்தில் நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சாமுவேல் ஜோன் செல்வராஜா. 14.11.1945இல் பிறந்த இவர், நவாலி அமெரிக்கன் மிஷன் தமிழ்ப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றவர். பின்னர் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் தனது உயர்கல்வியைப் பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை பட்டினசபை பொது நூலகத்தில் நூலகராகப் பணியையேற்று அங்கு சிலகாலம் கடமைபுரிந்தார். பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு மாற்றலாகி வந்து நெல்லியடி பொது நூலகத்திலும், சங்கானை பட்டினசபை நூலகத்திலும் பணியாற்றிய பின்னர் மீண்டும் கிழக்கின் மட்டக்களப்பு மாநகரசபை நூலகத்துக்கு மாற்றலாகிச் சென்றிருந்தார்.  

சா.ஜோ. செல்வராஜா பணியாற்றிய நூலகங்கள் அனைத்தும் அவரது காலகட்டத்தில் தீவிர வளர்ச்சி கண்டதையும் அவர் அங்கு பணியாற்றிய காலகட்ட அபிவிருத்திகள், இன்றும் தமக்கு அவரை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாக அங்கு பின்னாளில் பணியாற்றிய நூலகர்கள் குறிப்பிடுவதையும் அவதானித்துள்ளேன். சக நூலகர்களால் மாத்திரமன்றி உள்ளூராட்சி மன்ற நிர்வாகிகளாலும் மதிப்புடன் நோக்கப்பட்ட ஒரு நூலகராகவே சா.ஜோ. செல்வராஜா எம்மிடையே நடமாடிவந்தார். இன்றும் அழியாத அவரது நினைவுகளும் மனத்திரையில் அவ்வாறே நடமாடி வருகின்றன. 

ஒன்பது ஆண்டுகள் வரையிலான வயது  இடைவெளியிருந்த போதிலும், எனக்கும் ஜோன் செல்வராஜாவுக்கும் இடையில் அயலூர்க்காரர் என்ற வகையிலும், யாழ்ப்பாணக் கல்லூரி பழையமாணவர் என்ற வகையிலும், ஒரே நூலகத் துறையில் பணியாற்றிவர்கள் என்ற வகையிலும் யாழ்ப்பாணத்தில் நூலக விஞ்ஞானக் கல்வியைக் கற்ற காலத்திலிருந்தே அவரது இறுதி ஊர்வலம் வரையில் தொடர்பு இருந்து வந்துள்ளது. 

பெரும்பாலான நூலகர்கள் தாம் பணியாற்றும் நூலகத்துடன் தமது சேவையை மட்டுப்படுத்திக்கொள்வதை வழமையாகக் கொள்கின்றார்கள். தமது பிரதேசத்திலுள்ள எழுத்தாளர்களுடனோ, அறிவுஜீவிகளுடனோ, சமூக சேவை நிறுவனங்களுடனோ தொடர்பினைப் பேணித் தமது வேலையை அதிகரித்துக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. இன்று நூலக ஜாம்பவான்களாக நாம் காணும் அனைவரும், தாம் பணியாற்றும் நூலகத்திற்கு அப்பாலும் நூலக சேவையை எடுத்துச் சென்றவர்களாகவே உள்ளார்கள்.  

1891இல் தொடங்கப்பெற்ற வரலாற்றுப் பழமைமிக்க, நவாலி வாலிப கிறிஸ்தவ சங்கத்தின் (Y.M.C.A.) முக்கிய பொறுப்புகளை வகித்த ஜோன் செல்வராஜா, திரு. ஜே.ஜே.தம்பிராஜா அவர்கள் நவாலி வாலிப கிறிஸ்தவ சங்கத்தின் தலைவராகவிருந்த அந்த எண்பதுகளின் இறுதிக் காலப்பகுதியில், அதன் சிறுவர் அபிவிருத்தி உப குழுவின் தலைவராகப் (Chairman-Children Development Sub-Committee) பணியாற்றிவந்தார்.  

1979இல் 250 நூல்களுடன் உருவாக்கப்பட்ட நவாலி வாலிப கிறிஸ்தவ சங்கத்தின் (Navaly Y.M.C.A.) இரவல் வழங்கும் நூலகம், செல்வராஜாவின் பணிக்காலத்தின் போது 2500 நூல்களுடன் வளர்ந்திருந்தது. (தகவல்: 15.2.1986இல் வெளியிடப்பட்ட 1985ம் ஆண்டுக்குரிய வை.எம்.சீ.ஏ. ஆண்டறிக்கை) வை.எம்.சீ.ஏயின் நுலகத்தில், இளையோரின் பாவனைக்காக சிறுவர் நூலகப் பிரிவொன்றின் தேவையை அடிக்கடி நிர்வாகத்தினரிடம் எடுத்துக்கூறிவந்த ஜோன் செல்வராஜா இறுதியில் வெற்றிகண்டார். சிறுவர் நூலகப் பிரிவொன்றை 4.10.1986 அன்று தனது தீவிர உழைப்பின் பெறுபேறாக, யாழ். ஆயர், அதி வண. D.J.அம்பலவாணர் அவர்களின் பிரசன்னத்தில் சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைத்திருந்தார்.  

அந்நாட்களில் கனடாவிலுள்ள CODE (Canadian Organisation for Development through Education) நிறுவனத்தின் வாயிலாக சிறுவர்களுக்கான ஆங்கில நூல்களை கப்பல் மூலம் எடுப்பித்து, நூல் பற்றாக்குறையால் நலிவடைந்திருந்த தமிழ்ப் பிரதேசப் பாடசாலைகளுக்கும், சனசமூக நிலையங்களுக்கும், அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் வாயிலாக அவ்வப்போது விநியோகித்து வந்திருந்தேன். நண்பர் ஜோன் செல்வராஜாவின் வேண்டுகோளின்பேரில் சிறுவர்களுக்கானதும் இடைநிலைக் கல்விக்குரியதுமான 200 ஆங்கில நுல்களை அவர் உருவாக்கியிருந்த சிறுவர் நூலகத்திற்கு வழங்கவும் ஒழுங்கு செய்திருந்தேன்.  

நவாலி வை.எம்.சீ.ஏயில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கு செய்து நாம் வழங்கியிருந்த 200 புதிய நூல்களையும் காட்சிப்படுத்தியிருந்ததுடன் 15.12.1986இல் அதனை ஒரு கிராமிய விழாவாக ஒழுங்கு செய்திருந்ததை ஆச்சரியத்துடன் உள்வாங்கியிருந்தேன். மேலும், அன்றைய வைபவத்தை என் மூலமாகவே அங்குரார்ப்பணம் செய்துவைத்து மனம் மகிழ்ந்தார். 20.12.1986 அன்று வெளிவந்த ஈழநாடு பத்திரிகை இந்நிகழ்வுக்கு முக்கியத்துவம் வழங்கிச் செய்தியாக்கியுமிருந்தது.  

மட்டக்களப்பில் பணியாற்றிக்கொண்டு மாதமொருமுறை வார இறுதியில் மட்டும் வந்துபோகும் ஒருவரால் எப்படி நேர்த்தியாக இவ்விழாவை ஒழுங்கு செய்ய முடிந்துள்ளது என்பதையிட்டு எனக்கு எப்போதும் வியப்பாகவே இருந்துவந்தது. அவரிடமிருந்து ஒரு நூலகரின் தலைமைத்துவம் சார்ந்து கற்றுக்கொள்ள நிறையவே விடயங்கள் இருந்தன. 

நவாலிப் பிரதேச மக்களிடம் நூலகம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் பல வேலைத் திட்டங்களை ஜோன் செல்வராஜா மேற்கொண்டுவந்தார் என்பதற்கு வாழும் சாட்சியாக நான் உள்ளமையால் அவற்றை பதிவுசெய்ய வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. நவாலிப் பிரதேசத்தில் நூலகவாரம் ஒன்றை 26.12.1985 முதல் 30.12.1985வரை கிறிஸ்துமஸ் காலத்தில் அவர் ஒழுங்குசெய்து நிதி திரட்டும் பணியில் முழு நவாலிக் கிராமத்தையே ஈடுபடுத்தியிருந்தார். அவ்வாரத்தில் நடமாடும் நூல் விற்பனை நிலையமொன்றை அக்கிராமத்தில் ஏற்படுத்தியிருந்ததுடன், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பையும், பனைவள அபிவிருத்தி சபையினரின் கண்காட்சி/விற்பனைச் சந்தை ஒன்றையும் அங்கு ஒழுங்கு செய்திருந்தார். இந்த நிகழ்வுகளின் மூலம் அவரால் அந்த ஒரு வாரத்தில் மாத்திரம் ஆறாயிரம் ரூபா நிதி திரட்டித்தர முடிந்திருந்தது என்பதை 1985ஆம் ஆண்டுக்கான நவாலி வை.எம்.சீ.ஏ. ஆண்டறிக்கை சொல்கின்றது.  

Batticaloaniana 

நூலகர் ஜோன் செல்வராஜா தனது நூலகவியல் இடைநிலைப் பரீட்சைத் தேவைக்கு மட்டக்களப்பு தொடர்பானதொரு நூல் விபரப்பட்டியல் ஒன்றையே சமர்ப்பித்திருந்தார். பின்னாளில் அதனை விரிவாக்கி Batticaloaniana: A Bibliography of Batticaloa என்ற தலைப்பில் மட்டக்களப்பு நகரசபையின் வேண்டுகோளுக்கிணங்க தயாரித்து வழங்கியிருந்தார். நூற்பட்டியல் பதிவுகள் தொடர்பாக எனது உதவியையும் அவர் நாடியிருந்தார். இதனை விரிவாக அந்நூலின் முகவுரையிலும் குறிப்பிட்டு எனக்கு நன்றி தெரிவித்திருந்தார்.  

மட்டக்களப்பில் முதலாவதாக வெளியானதும் மட்டக்களப்பு பற்றி வெளிவந்ததுமான ஆவணங்களின் நூற்பட்டியலொன்று என்ற வகையில் பட்டிக்கலோனியானா முக்கியத்துவமானது. நூலகர் ஜோன் செல்வராஜா வார இறுதிகளில் நவாலிக்கு வரும் வேளையில் திருநெல்வேலியில் இருந்த எனது நூலகத்திற்கும் தவறாமல் வந்து உரையாடிச் செல்வது வழமையாகவிருந்தது. நூலகவியல் சஞ்சிகை, அயோத்தி நூலக சேவைகளின் பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வார்.  

தான் பிறந்து வளர்ந்த நவாலி மண்ணை மதித்து அம்மண்ணின் வாசிப்பை மேம்படுத்துவதில் மாத்திரம் அவர் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர் பணியாற்றிய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேசத்திலிருந்த கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத்துடனும் அவர் வாழ்வின் இறுதிவரை நெருங்கிய தொடர்பினைப் பேணிவந்திருந்தார். இயல்பாக அவரிடமிருந்த நாட்டுக்கூத்து பற்றிய ஆர்வமும் அறிவும் அதற்கு ஒரு மூலகாரணமாக இருந்துவந்துள்ளது. அதனால் அவ்வாச்சிரமத்தின் கிராமிய கலை இலக்கியப் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு அம்மக்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். 

கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத்தின் 31வது வருடாந்த விழா 09.09.1988இல் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கிரான் பெரியண்ணன் கலையரங்கத்தினர் ‘வருகையின் தூதன்’ என்ற வடமோடி நாட்டுக்கூத்து ஒன்றை மேடையேற்ற ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். கிறிஸ்தவ நற்செய்திகளை பாமர மக்களுக்குப் புகட்டும் வகையில் எழுதப்பட்ட நாட்டுக்கூத்தான ‘வருகையின் தூதன்’ என்ற முற்தூதர் யோவானின் சரித்திரத்தையே ‘வருகையின் தூதன்’ கிராமிய மணத்துடன் நாட்டுக்கூத்தாக்கியிருந்தனர். இதன் தயாரிப்பிலும் மேடையேற்றத்திலும் அக்கறையுடன் பங்கேற்றிருந்த செல்வராஜா, எனது ‘அண்டைவீட்டுக்காரரான’ பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களிடம் அடிக்கடி வந்து கூத்துப் பற்றிய அறிவை பட்டைதீட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  

இவ்விரு நிகழ்வுகளையும் நினைவுகூரும் வகையில் சிறப்புமலர் ஒன்றையும் வெளியிடும் பொறுப்பினை  ஜோன் செல்வராஜாவே ஏற்றிருந்தார். இம்மலரில் பிரசுரிக்கவென ‘ஈழத்து நாட்டுக்கூத்து மரபு’ என்ற தலைப்பில் தேர்ந்த நூல் விபரப்பட்டியல் ஒன்றினைத் தயாரித்து வழங்குபடி எனக்கு அவர் அன்புக் கட்டளையொன்றை முன்னரே இட்டிருந்தார். அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையைச் சேர்ந்த கலாநிதி இளையதம்பி பாலசுந்தரம் அவர்களிடம் ‘கத்தோலிக்க சமயமும் ஈழத்து நாட்டுக்கூத்து மரபும்’ என்ற கட்டுரையையும், கலாநிதி சி.மௌனகுருவிடம் ‘எமது நாடக மரபு’ என்ற கட்டுரையையும் மலரில் பிரசுரிப்பதற்காகக் கேட்டிருந்தார். நாங்களும் உரிய காலத்தில் அவரிடம் அவற்றை ஒப்படைத்திருந்தோம். 

கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத்தின் விழா 09.09.1988இல் சிறப்பாக நடந்து முடிந்த சில காலங்களின் பின்னர், 1989பெப்ரவரி மாதம் இறுதிப்பகுதியில் காலை ‘வருகையின் தூதன்- சிறப்பு மலரின்’ சில பிரதிகளை எடுத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு வந்து, எம் மூவரிடமும் பிரதிகளை ஒப்படைத்துவிட்டு, ஏற்கெனவே அச்சாகியிருந்த மட்டக்களப்பு நூல்விபரப் பட்டியலின் ஒரு பிரதியையும் எம்மிடம் தந்துவிட்டு மட்டக்களப்புக்குப் போவதாகக் கூறி விடைபெற்றுச்சென்றுவிட்டார். அதுவே நாம் அவரை சந்திக்கும் இறுதி நாளாக இருக்குமென்று நான் கனவிலும் கருதியிருக்கவில்லை. 

இதற்கிடையில் நூலகர் உரிய தினத்தில் பணிக்கு வரவில்லை என்பதை அறிந்த மட்டக்களப்பு மாநகரசபையினர், நவாலியிலுள்ள அவரது இல்லத்திற்கு அவரைப்பற்றி விசாரித்துத் தகவல் அனுப்பியதுடன் அவரைத் தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில் மார்ச் மாதம் 5ஆம் திகதி பொலநறுவை அரசாங்க வைத்தியசாலைச் சவச்சாலையில் அடையாளம் தெரியாத நான்கு தமிழர்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன என்று வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இவர்கள் பெப்ரவரி 27 முதல் மார்ச் 2ம் திகதி வரை பொலன்நறுவைப் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைகளின் போது உயிரிழந்தவர்கள் என அறியப்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர்களில் ஒருவரின் சடலம் மட்டுமே அடயாளம் காணப்பட்டிருந்தது.  

இது தொடர்பாக 06.03.1989 திகதி வெளிவந்திருந்த உதயன் செய்தி பின்வருமாறிருந்தது: 

பொலன்னறுவையில் நான்கு தமிழர்களின் சடலங்கள்‘ 

பொலன்னறுவை அரசாங்க வைத்தியசாலை சவச்சாலையில் நான்கு தமிழர்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருவரின் சடலமே இதுவரை அடையாளம் காணப்பட்டது.  

இதேவேளை பொலன்னறுவை பகுதியில் கடந்த சில தினங்களில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று ஏஜென்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு, திருக்கோணமலை முதலிய பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்களின் சடலங்களாக அவை இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இதேவேளை மட்டக்களப்புக்கு பஸ் மூலம் பயணம் செய்தபோது பொலன்நறுவையில் கொல்லப்பட்டவர்களில் நவாலியைச் சேர்ந்த ஜோன் செல்வராசா (வயது 42) என்பவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டது.  

இன்னொரு சம்பவத்தில் கிழக்கிலங்கை பல்கலைக்கழக மாணவனான நடேசன் மணிவண்ணன் என்பவரும் அதே பகுதியில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த சமயம் கொல்லப்பட்டார். இவர் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றுகொண்டிருந்தார்.’ 

மேற்கண்ட செய்தி எம்மை மிகவும் நிலைகுலையச் செய்திருந்தது என்பதில் சந்தேகமில்லை. மிகவும் வருத்தத்துக்குரியவகையில், நூலகர் சாமுவேல் ஜோன் செல்வராஜா அந்த பஸ்ஸில் பயணித்த தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இனவாதிகளால் 01.03.1989 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணச் சடங்கு நவாலியில் அவரது இல்லத்தில் நடைபெற்றிருந்தது. எனது நண்பனின், சக நூலகனின், அன்பானதோர் உடன் பிறவாத சகோதரனின் இறுதி அஞ்சலி உரையை ஆற்றவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருந்தது. எவ்வளவோ கூறவேண்டும் என்று தொடங்கிய அன்றைய மரணச்சடங்கின் அஞ்சலி உரை தொடங்கிய வேகத்தில் கண்ணீரில் கரைந்தே போய்விட்டது. 

தெய்வபக்தி மிகுந்தவரான சா.ஜோ. செல்வராஜா தமிழ்ப் பிரதேசங்களின் நூலக வளர்ச்சியில், நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அக்கறைகொண்டு செயற்பட்ட ஒரு துறைசார் நூலகர். அவர் இளவயதில் இல்லாதொழிக்கப்படாதிருந்தால் ஈழத்துத் தமிழ் நூலகத்துறை மேலும் பல நல்ல காரியங்களை அப்பெருமகனிடமிருந்து பெற்றுச் செழித்திருக்கும். நிறைந்த கனவுகளுடன் வாழ்ந்திருந்த அவர் வாழ்வே எமக்கு ஒரு கனவாகிப் போய்விட்டது.