— கலாநிதி.சு.சிவரெத்தினம் —
(தாய் மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பினரால் செங்கலடியில் நடாத்தப்பட்ட தாய் மொழி தின நிகழ்ச்சியில் என்னால் ஆற்றப்பட்ட உரையின் திருத்திய எழுத்து வடிவம்.
எனது உரை தமிழ் இலக்கியங்களின் நயவுரையாகவோ அல்லது தமிழ் மொழியின் இலக்கணச் சிறப்புப் பற்றியதாகவோ இருக்காது. தமிழ் பண்பாட்டின் சிறப்புப் பற்றியதாக இருக்கும்.)
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்‘ என்பான் பாரதி
‘தமிழுக்கும் அமுதென்று பெயர்‘ என்றான் பாரதிதாசன்
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை‘ என்றான் பாரதி
இவை தமிழ் உணர்ச்சியினால் உந்தப்பட்டு பாடப்பட்ட வரிகளல்ல, இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஆராய்ந்து கூறப்பட்ட ஆராய்ச்சி உரைகளாகவே இவற்றைக் கருதுகின்றேன்.
மொழி என்பது ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்ளும் ஒரு கருவி எனச் சிலர் வரையறுப்பர். ஆனால் தமிழ்மொழி தனியே பேசவும் கேட்கவும் மட்டும் உரித்தான ஒரு வர்த்தக மொழியல்ல. தமிழ் எமது அடையாளம்,
தமிழ் எமது வாழ்க்கை, தமிழ் எமது பண்பாடு, தமிழ் எமது கலை, தமிழ் எமது சிந்தனை, என்று எம்மால் பேசமுடியும்.
இன்று மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதையும் அவை பற்றி அடிக்கடி பேசப்படுவதையும் காண்கின்றோம். இந்த மனித உரிமை மீறல்களை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர்கள் கல்வி கற்றவர்களாகவும் உயர் பதவிகளில் இருப்பவர்களாகவும் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வகைப் பட்டவர்களை நோக்கித்தான் வள்ளுவர்,
‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பு இல்லாவர்‘ என நான்காம் நூற்றாண்டிலே கூறியிருக்கின்றார்.
எவ்வளவுதான் மனிதர்கள் அறிவுடையவராக இருந்தாலும் மனிதப் பண்பு இல்லாதவர்கள் மரத்தைப் போன்றவர்கள் என மிக அழகாகக் கூறியிருக்கின்றார். இந்த மனிதப் பண்பினை உலகுக்கு அழுத்திக் கூறியது தமிழ்ப் பண்டுபாடுதான் என்பதில் எமக்குப் பெருமையுண்டு.
இன்றைய உலகு இன, மத மோதல்களின் அரங்காக இருக்கின்றது. இதைத் தவிர்ப்பதற்காக பல்வேறுபட்ட அறிஞர்கள், அரசியல் மேதைகள், மதப் பெரியார்கள் இன, மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றியும் ஒற்றுமை பற்றியும் எடுத்துக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒற்றுமையினையும் எல்லோரும் ஒன்று என்கின்ற உயர்ந்த பண்பினையும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ என்று மிகச் சுருக்கமாக ஆனால் மிக ஆழமாக 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த கணியன் பூங்குன்றனார் எனும் தமிழரால்த்தான் கூறமுடிந்திருக்கிறது. இந்த ஒரு வார்த்தையைக் கடந்து எந்த மொழியும் ஒற்றுமை பற்றியும் புரிந்துணர்வு பற்றியும் கூறியிருப்பதாக நாம் அறியமுடியவில்லை. அந்தவகையில் ஒற்றுமையை உலகுக்கு உரைத்த சமுகமாக தமிழ்ச் சமூகம் இருப்பதையிட்டு நாம் பெருமைகொள்கின்றோம்.
மனிதர்கள் எவ்வளவுக்கு இரக்க சுபாவமும் கருணையுள்ளமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கும் தமிழ் பண்பாட்டைத்தான் உதாரணம் காட்ட முடிகிறது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்‘ என்கின்ற வள்ளாலாருடைய வார்த்தைகளில் அந்த கருணையினைக் காண்கின்றோம்.
இதுபோன்றே உயிர்கள் எல்லாம் எவ்வித குறைவுமின்றி இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தினையும் தமிழ் பண்பாட்டில் காண்கின்றோம்.
‘வான்முகில் வழாது பெய்க மலிவழஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவில்லாது உயிர்கள் வாழ்க‘ என்ற வரிகள் அந்த உயரிய பண்பாட்டை எமக்குக் காட்டுகின்றது. இப்படிப்பட்ட பண்பாட்டுக்குரியவர்களாக நாம் இருப்பதையிட்டு பெருமையடைகின்றோம்.
இறுதியாக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் வெற்றுச் சடங்காசாரங்களை தேவையில்லை மனித உள்ளம் தூய்மையானதாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றார்.
‘வெள்ளைநிற மல்லிகையோ?
வேறெந்த மாமலரோ?
வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல!
வேறெந்த மலருமல்ல!
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது!‘
இவ்வாறு உயரிய மனித நேயமெல்லாம் தமிழ் கொண்டிருப்பதையிட்டு பெருடைகின்றோம்.
தமிழ்ச் சமூகம் இயற்கையுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்ததுடன் அந்த இயற்கையை ரசித்த முறையினை தமிழ் மொழியின் மொழிவளம் உணர்த்தி நிற்கின்றது. இரண்டொரு உதாரணங்களைக் குறிப்பிடுவது பொருத்தமாகும்.
தேங்காயின் பருவங்களை நாம் பின்வருமாறு அழைக்கின்றோம்
1. குரும்பட்டி
2. குரும்பை
3. உப்புக்குரும்பை
4. இளனி
5. முட்டுக்காய்
6. வரிப்பழுத்த தேங்காய்
7. பழத் தேங்காய்
பெண்ணின் பருவங்களை பின்வருமாறு வகைப்படுத்தியிருக்கிறார்கள்
1. பேதை
2. வெதும்பை
3. மங்கை
4. மடந்தை
5. அரிவை
6. தெரிவை
7. பேரிளம்பெண்
பூவின் பருவங்களை பின்வருமாறு கூறுகின்றோம்
1. முகை
2. மொக்கு
3. அரும்பு
4. மொட்டு
5. மலர்
6. பூ
7. வி
தொல்காப்பியத்து மரபியலில் புறக்காழனவே புல்லென மொழிப‘ எனும் சூத்திரம் வருகிறது. இச்சூத்திரத்துக்கு நச்சினாக்கினியார் பின்வருமாறு பொருள் கூறுவார்.
‘புறத்துக் காழ்ப்பு உடையனவற்றைப் புல் எனவும் அகத்துக் காழ்ப்பு உடையனவற்றை மரம் எனவும் சொல்லுப‘ என்பார். அதாவது புறத்தே வைரமுள்ளதாய் உள்ளே சோற்றினைக் கொண்டவற்றை புல் என்கின்றார். தென்னை, பனை, கமுகு போன்றன இவ்வகைப்பட்டவையாகும். வெளியே சோற்றினையும் உள்ளே வைரத்தினையும் கொண்டவற்றை மரம் என்கின்றார். மா, பலா, முதிரை போன்றன இவ்வகைப்பட்டவையாகும்.
இவ்வாறு புல் எனக்குறிப்பிட்டவற்றை அடியொற்றியே சிங்களத்தில் தென்னையை ‘பொல்‘ எனக் குறிப்பிடுவதாகக் கூறுவர்.
பனை தமிழ்ப் பண்பாட்டில் இரண்டறக்கலந்த ஒன்று இதனால் பனை பற்றிய பெயர்கள் தமிழில் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட மரங்களின் மரபுப் பெயர் பட்டியலில் பனைக்கு 101 பெயர்கள் இருக்கின்றன. அப்பெயர்களில் இலங்கையில் பனைக்கு வழங்கப்படும் ‘வடலி‘ எனும் பெயர் இல்லை. அப் பெயரையும் சேர்த்தால் பனைக்கு தமிழில் 102 பெயர்கள் ஆகும். இவ்வாறு ஒரு மரத்துக்கு இவ்வளவு அதிகமாக பெயர்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்கமுடியும்.
ஐவகை நிலங்கள் பற்றிக் கூறுகின்றோம் அதில் ஒன்று மருதம் என்பதாகும். மருதம் என்பது வயலும் வயல்சார்ந்த இடத்தினையும் குறிப்பிடுவதாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் என்னிடம் உரையாடும்போது கூறினார் மருதம் என்பது மருத மரத்தை அடியொற்றி வைக்கப்பட்ட பெயர், மருத மரம் நல்ல தண்ணீரும் நல்ல மண்வளமும் கொண்ட இடத்தில்தான் வளரும். பயிர்ச் செய்கைக்கும் நல்ல தண்ணீரும் நல்ல மண்வளமும் முக்கியமானதாகும். எனவே அந்த மரம் வளர்வதற்கு உகந்த இடத்தினை அந்த மரத்தின் பெயரால் அழைத்தனர் என்றார்.
இவ்வாறு ஒரு விடயத்துக்கு பெயர் வைப்பதை தமிழர்கள் ஒரு இடுகுறியாக இல்லாமல் ஆழ்ந்த பொருளுடையதாகவும் அப்பெயர் இயற்கையுடன் இணைந்து உறவு கொண்டதாகவும் இருக்கத்தக்கதாக அவதானித்து பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்பதை அறியும் போது நம் உள்ளம் உவகையடைகிறது.
இவை காரணமாகத்தான் பாரதியாரும் பாரதிதாசனும் மேற்படி கூறியிருக்கிறார்கள்.
இந்த தாய்மொழி தினத்தில் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் தமிழின் பெருமை என்பது தமிழ் மொழியைப் பேசுவதால் மட்டுமல்ல. தமிழ் மொழியை ஒரு தொடர்பாடல் கருவியாக எவரும் கற்றுப் பேசிவிட்டுச் செல்லலாம். ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பவர்கள் தாம் தமிழர் என்று கூறுவதற்கு மேலே சுட்டிக்காட்டிய தமிழப் பண்பாட்டின் பெருமைகளைப் பேணுபவராக இருக்க வேண்டும். மனிதப் பண்பும், ஒற்றுமையும், கருணையும், அன்பும் உளத்தூய்மையும் இயற்கையை நேசிப்பவர்களாகவும் அதனுடன் இரண்டறக் கலந்து வாழ்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். அதுவே நாம் தமிழ் மொழிக்குச் செய்யும் தொண்டாகும். இதுவே எம் முன்னோர்கள் உலகுக்கு வழங்கிய கொடையாகும் அந்தக் கொடையினை தலைமுறை தலைமுறையாக கையளிக்கவேண்டிய பொறுப்பு இன்று எம்மிடம் இருக்கின்றது அதை இந்தத் தாய்மொழி தினத்தில் நினைவுகொள்ளோம். தமிழராய் வாழ்வோம்.
இறுதியாக பாரதியாரின் கவிதையுடன் எனது உரையை முடிக்கின்றேன்.
‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.
தந்தை அருள்வலி யாலும் – இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.‘
நன்றி