புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும்

புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும்

  — வேதநாயகம் தபேந்திரன் — 

”புங்குடுதீவானுக்கு புகையிலை வித்தகதையாகப் போயிட்டுது …” இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கைத் தமிழ்பேசும் பரப்பில்  பிரபலமான பழமொழி. 

உண்மையான பழமொழி சொல்மாற்றம் அடைந்து திரிபடைந்து விட்டது. 

புங்குடுதீவானுக்கு இலை விற்ற கதையாகிப் போனது என்பது தான் உண்மையான பழமொழி. அதனைப் பிற்காலத்தில் புகையிலையையும் சேர்த்துப் புதுப் பழமொழியாக்கி உலாவவிட்டு விட்டார்கள். 

புங்குடுதீவு வர்த்தகர்கள் புகையிலைக் கடைகளை வைத்திருந்ததாகப் பெருமளவில் அறியப்படவில்லை. அது போலப் புகையிலைத் தரகிலும் ஈடுபட்டதாகவும் அறியப்படவில்லை. 

அன்றும் சரி, இன்றும் சரி புங்குடுதீவு வர்த்தகர்களது சோற்றுக் கடைகளில் வாழையிலை போட்டுத்தான் சோறு கறிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். 

அதற்குத் தரமான வாழையிலைகளைத் தெரிவு செய்வதில் இவர்கள் வல்லவர்கள். 

சில வாழையிலை வியாபாரிகள் அல்லது விவசாயிகள் வாழையிலைக் கட்டின் முன்பகுதியிலும், பின் பகுதியிலும் தரமான வாழையிலைகளை வைப்பார்கள். நடுவில் பழுத்த, கிழிந்த தரம் குறைந்த வாழையிலைகளை வைத்து ஏமாற்றி விற்க முனைவார்கள். 

ஆனாலும் இவர்கள் வாழையிலைக் கட்டைப் பார்த்த உடனேயே இலைகளின் தரத்தை மதிப்பிட்டு உள்ளதைக் கூறும் வல்லமை உடையவர்கள். அதனால் இலையென அவர்கள் பேச்சுவழக்கில் அழைக்கும் வாழையிலையை ஏமாற்றி விற்கமுடியாது. 

“இதனால் தான் புங்குடுதீவானுக்கு இலைவிற்ற கதையாகிப் போனதென்ற” சொற்தொடரே புங்குடுதீவானுக்கு புகையிலை விற்ற கதையாகிப் போனது எனத் திரிபடைந்து விட்டது. 

அதனைச் சோடித்து புங்குடுதீவு வியாபாரி ஒருவருக்குப் புகையிலை விற்ற ஒருவர் அவரிடம் காசை வாங்க முடியாமல் ஊர்ஊராகத் திரிந்து அப்படியே கதிர்காமத்திற்கும் போனதாக இட்டுக்கட்டிய கதை ஒன்று உண்டு. 

12 கிராம சேவகர் பிரிவுள்ள புங்குடுதீவுமக்களில் பெரும்பாலானோர் வர்த்தகர்கள். நிலவளம் குறைந்த அவர்களது மண்ணில் விவசாயத்தை முழுவதுமாக நம்பிச் சீவிக்க முடியாது.  

ஒரு பகுதி மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டார்கள். சிறு தொகையானோர் உத்தியோகம். ஏனைய பெரும்பான்மையானோர் வர்த்தகர்களாக நாடு முழுவதும் இருந்தார்கள். 

அசைவ உணவுச் சோற்றுக் கடைகளுக்குப் புங்குடுதீவு மக்கள் பிரபலமானவர்கள். மிகவும் சுவையாகவும் காரமாகவும் சமைப்பார்கள். அதனால் இவர்களது சோற்றுக் கடைகளுக்கு நிறைந்த வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். (இலங்கையில் அசைவக் கடைகளை மச்சக் கடைகள் என்றே குறிப்பார்கள். உண்மையில் அங்கு மச்சமும்(மீன் உணவு) மாமிசமும் (இறைச்சி வகை) சேர்ந்தே கிடைக்கும். ஆனாலும் அவற்றை பொதுவாக மச்சக் கடை என்றே இலங்கையர் அழைப்பது வழக்கம்.) 

கொழும்பில் கூடப் பாருங்கள் எத்தனை சோற்றுக் கடைகள் இருந்தாலும் புங்குடுதீவு ஆட்களின் சோற்றுக் கடைகளுக்கெனத் தனியான வாடிக்கையாளர் கூட்டமொன்று இருக்கும்.  

அது போல யாழ்ப்பாண நகரிலும் புங்குடிதீவு வர்த்தகர்களின் சோற்றுக் கடைகளுக்கெனத் தனி மதிப்பு உள்ளது. 

மச்சச் சாப்பாட்டுக் கடைகள் என்றால் புங்குடுதீவுதான். அவர்களது கைப்பக்குவத்தில் மீன் உட்பட்ட கடலுணவுகள், இறைச்சி வகைகள் தனியானதொரு சுவையாக வரும். எனக்கும் பலமுறை சாப்பிட்ட அனுபவம் உள்ளது. 

ஆரம்பத்தில் வர்த்தக சமூகமாக இருந்த புங்குடுதீவு மக்கள் பின்னாளில் கல்வி, கலை, கைத்தொழில் யாவற்றிலும் சிறந்து விளங்கியவர்களாக உருவாகினார்கள். 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் மனைவி மதிவதனி புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஏரம்பு ஆசிரியரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தென்னிந்தியாவின் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் தென்னிலங்கையில் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். அப்போது யாழ்ப்பாணத்தின் தீவகப் பிரதேசங்களிலிருந்து அவர்களது கடைகளுக்கு வேலைக்குப் போனார்கள். 

பின்னாளில் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் தமது மனைவி பிள்ளைகளுடன் வாழ இந்தியாவுக்குத் திரும்பிய போது, நம்பிக்கையடிப்படையில் வியாபார நிலையங்களை கடையில் நின்ற விசுவாசம் மிக்க தொழிலாளிகளிடம் கொடுத்தார்கள்.  

அதனால் காலப் போக்கில் தீவக மக்கள் பெரும் வர்த்தகர் சமூகமாக உருவெடுத்தார்கள்.  

1977, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கெதிராகச் சிங்களக் காடையர்களின் இன வன்முறைகளுக்கு முன்னரான காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேச வர்த்தகர்கள் நாடெங்கும் கொடி கட்டிப் பறந்தார்கள்.  

1983 யூலை வன்முறைகள் யாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.  

இதனால் வளர்ந்த நாடுகளை நோக்கி ஏனையோரைப் போலப் புலம்பெயர்ந்தார்கள். அங்கும் வர்த்தக நிலையங்களைத் திறந்து தாயகத்தில் கிடைத்த அனைத்துப் பொருள்களையும் யாவரும் வாங்கக் கூடிய நிலைமையை உருவாக்கினார்கள். 

இன்றும் புலம்பெயர் தேசங்களில் தீவகமக்கள் பெரும் வர்த்தக சமூகமாக உருவாகி உள்ளனர். 

தென்னிந்தியத் தமிழர்களில் பழைய தலைமுறையினர் மச்சச் சாப்பாட்டுக் கடைக்கு மிலிட்டரி ஹோட்டல் என்றொரு பெயர் வைத்துள்ளனர். 

இன்றும் கூட மிலிட்டரி ஹோட்டல் என அழைக்கும் முறை உள்ளது. 

இரண்டாம் உலகப் போர் நடந்த 1939 முதல் 1945 வரையான காலப்பகுதியில் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் ஆயிரக்கணக்கில் அந்நிய நாட்டுப்படைகளை இந்தியாவின் பாதுகாப்புக்கென அழைத்து வந்தார்கள். 

வந்தவர்களுக்குச் சாப்பாடு கொடுப்பதற்கெனக் கடைகளைத் தேடினால் யாவும் மரக்கறிச் சாப்பாட்டுக் கடைகள் தான். மரக்கறிச் சாப்பாடுபடை வீரர்களுக்கு ஒத்துவரவில்லை. 

அதனால் படைவீரர்களுக்கு உணவு வழங்குவதற்கென அசைவ (மச்சம் மாமிசம்) சாப்பாட்டு ஹோட்டல்களை பிரித்தானிய அரசாங்கம் திறந்தது. மிலிட்டரி எனப்படும் படைவீரர்கள் சாப்பிட்ட ஹோட்டல்களை பொதுமக்கள் மிலிட்டரி ஹோட்டல் என அழைத்தார்கள். 

எமது நாட்டில் போர் நடந்த காலத்தில் பம்பலப்பிட்டியில் தென்னிந்திய வர்த்தகர் வேலு மிலிட்டரி ஹோட்டல் என்ற பெயரில் சாப்பாட்டுக் கடையொன்றைத் திறந்தார். 

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தையார் பெயரில் உணவுக் கடை திறந்துள்ளார்களென சிங்களப் பேரினவாதிகள் கூப்பாடு போட்டனர். அதனால் கடை மூடப்பட்டது. 

மரக்கறிச் சாப்பாட்டுக் கடையென்றால் நயினாதீவு வர்த்தகர்களுக்கெனத் தனித்துவமான ஒரு பெயர் உள்ளது. 

நயினாதீவு மக்களும் சரி, சாப்பாட்டுக்கடை வர்த்தகர்களும் சரி மரக்கறிச் சாப்பாடுகளை அறுசுவையாகச் சமைப்பதில் வல்லவர்கள். நயினை நாகபூசணி அம்மன் கோயில் அன்னதானச் சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு அது புரியும். 

நயினாதீவு 3 கிராம சேவகர் பிரிவுகளை உடைய பழந்தமிழ் கிராமம். இங்கு ஒரு காலத்தில் தமிழ் பௌத்தர்கள் இருந்தார்கள். நாகபூசணி அம்மன் கோயில் காரணமாக இந்தக் கிராமம் சைவ உணவில் பிரசித்தி பெற்ற கிராமமாக உள்ளது. 

இங்குள்ள மக்கள் கல்வியில் உயரிய சாதனைகளைப் படைத்துள்ளனர். இவர்கள் அளவு எண்ணிக்கையில் கல்விமான்கள் இலங்கையிலேயே இல்லையெனலாம். 

தீவக மக்களின் தனித்துவமான பண்பாடுகள் சாதனைகளைப் பற்றிச்சொல்லிக் கொண்டே போகலாம்.