— அழகு குணசீலன் —
கோப்பிசம் இல்லாத வீடு
“கோப்பிசம்” இந்த வார்த்தை மட்டக்களப்புத் தேசத்திற்கு நன்கு அறியப்பட்டதும், தனித்துவத்துவம் கொண்டதுமாகும்.
வீடுகள் கட்டப்படும் போது வெளிச்சுவர்கள் கட்டி எழுப்பப்பட்டு, கூரைக்கான கோப்பிசம் அமைக்கப்படாத நிலையில் அந்த வீட்டை மட்டக்களப்புத் தேசத்தார் கோப்பிசம் அற்ற வீடு என்பார்கள்.
ஒரு வீட்டிற்கு கோப்பிசம் இல்லாமல் இருப்பது தலையற்ற முண்டத்திற்கு சமமானது. ஒரு அரசியல் கட்சியைப் பொறுத்தமட்டில் அப்படியான கோப்பிசம் இல்லாநிலை சிந்திக்கின்ற ஆற்றலை சிதறடித்து விடுகிறது.
சிந்தனை ஆற்றல், தீர்மானங்களை எடுக்கின்ற தற்துணிவு, சமகால சமூக, பொருளாதார, அரசியல் சவால்களுக்கு முகம் கொடுத்து எதிர் நீச்சல் அடிக்கின்ற அரசியல் இராஜதந்திரம், பொறுப்பேற்றல், சுயவிமர்சன அரசியல் போன்ற அரசியல் தலைமைத்துவம் ஒன்றிடம் எதிர்பார்க்கின்றவற்றை செயலிழக்கச் செய்துவிடும்.
இது இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின்-தமிழரசுக்கட்சியின் பல வீனமான, மெத்தனப்போக்கை, ஆளுமையற்ற தலைமைத்துவத்தை, பதவியளவிலான தலைமைத்துவம் இருந்தும் இல்லாதது போன்று ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓடிக்கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியலின் பலவீனத்தை காட்சிப்படுத்துவதற்கான வார்த்தைப் பிரயோகம்.
அரசியல் தலைமைத்துவம் அற்ற ஒரு கட்சி, கோப்பிசம் அற்ற வீட்டுக்குச் சமமானது. தமிழரசின் வீட்டுக்கு இது சாடிக்கு மூடி வாய்த்தாற்போன்று
அப்படியே அற்புதமாகப் பொருத்திப் போகின்றது.
த.தே.கூ.அமைப்பின் சிதைந்த உட்கட்டமைப்பு !
****************************************************
விரால் இல்லாத குளத்தில் குறட்டை அதிகாரி !!
*******************************************************
தமிழரசு, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலை என்ன?
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மாவை தனது சகாக்களுடன் மார்ட்டின் ரோட்டில் கோலோச்சுகிறார். சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையிலான தலைமைத்துவ அதிகாரப்போட்டியில் இலவுகாத்தகிளி யார் என்பதை மக்கள் அறிவதற்கு இன்னும் நீண்ட காலம் இல்லை.
அதிகாரபலம் அற்ற பெயரளவிலான கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயா திருமலைக்கும் கொழும்புக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறார்.
தமிழரசுக்கட்சிக்குள்ளும், கூட்டுக்கட்சிகளுக்கு இடையேயும் எந்த குழப்பங்களும் இல்லை என்ற மாதிரியான பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிக்கின்ற நிலையில் அவரின் தலைமைத்துவம் செயலிழந்து விட்டது.
இடையிடை அரசாங்கத்திற்கு வாய்ச்சவால் அல்லது இந்தியாவுக்கு முதுகு சொறிதல் அவ்வளவு தான். மிஞ்சிப்போனால் ஜெனிவாவில் நாங்கள் தயார். நீங்கள் தயாரா….? என்ற ஜே.ஆர்.பாணியில் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற வெறும் சத்த வெடி வேறு.
சம்பந்தரின் கண்ணில் மண்ணைத் தூவி காய்நகர்த்தலைச் செய்கிறார் சுமந்திரன். அவரின் முதுமையைப் பயன்படுத்தி தன் கரங்களைப் பலப்படுத்தும் சூட்சுமம். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து பழரசம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கின்ற தாயக, தமிழக அரசியல்வாதிகளின் வரிசையில், தலைமை சாகும்வரை கதிரைக்கு காத்திருக்கும் அரசியல்வாதிகள்.
கூட இருந்து குழி பறிக்கும் இந்தக் குள்ளநரிக் கூட்டத்திற்குள் அப்பாவியாக சித்தார்த்தன். நடந்தாலும் புல்லுச்சாகாத மனிதன் என்று நாம் மிக அமைதியான சுபாவம் உடையவர்களுக்கு சொல்லுவோம். இங்கு இது சித்தார்த்தனுக்கு சாலப்பொருத்தம்.
மற்றைய வடக்கு, கிழக்கு பா.உ.க்கள் இருக்கிறார்களே, அவர்கள் கலங்கிய குளத்தில் குறட்டையோ, விராலோ பிடிக்கப்பார்க்கிறார்கள். இதற்கு கலையரசன் போன்றவர்கள் தூண்டிலில் போடப்படும் இரையாகத்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.
சாணக்கியனும், ஜனாவும் ஏட்டிக்குப் போட்டியாக எதையோ பொத்திப்பொத்திப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.
“என்ன பிடிக்கிறாய் சிஞ்ஞோரே ! எலிப்பிடிக்கிறேன் சிஞ்ஞோரே .
பொத்திப், பொத்திப் பிடி சிஞ்ஞோரே ! அது பூறிக்கொண்டோடுது சிஞ்ஞோரே!!” இது பண்டாரவன்னியன் காலக் கதையாடல்.
செல்வத்தின்குரல் மௌனித்துவிட்ட நிலையில்…… சிறிதரன்குரல் விரைவில் கூட்டமைப்பின் குரலாக……. மாவையின் குரல்வளையை நசுக்கப்போகிறது.
இப்படி தமிழ் தேசியம் பேசி பாராளுமன்ற இருக்கைகளைப் பெற்றுக் கொண்ட த.தே.கூ. பல துண்டுகளாகச் சிதைந்து, சிதறி, சீரழிந்து, சீத்துவம் இழந்து கிடக்கிறது.
தந்தை செல்வாவிற்கு பின்னர் அனைத்து அதிகாரங்களும் அமிர்தலிங்கத்திடம் குவிக்கப்பட்டது போன்ற ஒரு வரவை கட்டியம் கூறி நிற்கின்றது தமிழர் அரசியல்.
முதுமையும் தலைமைத்துவமும்
**************************************
சமூக, அரசியல் தலைமைத்துவங்கள் குறித்தும் அவர்களின் தீர்மானம் எடுக்கும் திறன் – ஆற்றல் குறித்தும் உடல், உளவியல் நிபுணர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் பொதுவாக இல்லை என்று சொல்லலாம்.
தலைமைத்துவ தகுதியும், சிந்தனை ஆற்றலும் இளமையிலும், முதுமையிலும் ஒரே அளவாக அமையமுடியாது. பழைய தலைமுறையினர் இளையதலைமுறைக்கு இடம் விட்டு சுயவிருப்பில் ஒதுங்கிக் கொள்கின்ற போக்கு தமிழர் அரசியலில் இல்லை. அப்படி ஏதும் இருப்பின் அது வாரிசு அரசியலாகவே இருக்கிறது..
முதுமை தலைமைத்துவத்தின் சிந்திக்கும், தீர்மானம் எடுக்கும் சக்தியை மட்டுப்படுத்துகிறது. நடைமுறைப்படுத்தலை மெத்தனமாக்கி, சரியான தந்திர உபாயங்களை கைக்கொள்ள தடையாகிறது. பொறுப்பேற்றலை தட்டிக் கழிக்கிறது. விரைவான தீவிர முழுநேர செயற்பாட்டை, ஒட்டு மொத்தத்தில் முதுமையினால் ஏற்படும் உடல், உள, மூளை சார் கழைப்பு தடுக்கிறது.
தந்தை செல்வாவுடன் விடை பெற்று விடும் என்று எதிர்பாக்கப்பட்ட வெறும் பொம்மை தலைமைத்துவம் சமூக, பொருளாதார, அரசியல் சவால்கள் நிறைந்த தேசிய, பிராந்திய, சர்வதேசிய சூழலில் ஒரு துர்ப்பாக்கியமாக தமிழர் அரசியலில் இன்னும் தொடர்கிறது.
கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக காலாவதியாகிப்போன பாராளுமன்ற அரசியல் தலைமைத்துவங்களில் தமிழ் மக்கள் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைக்கு காலக்கெடு விதிக்கப்படுகிறது.
சில ஊடகங்கள் குறிப்பிடுவது போன்று மும்மொழிகளிலும் வெளுத்து வாங்குகின்ற தேசியம் சார்ந்த மூன்று தலைவர்கள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள் என்று கூறுவது தலைமைத்துவம் குறித்த அரசியல் சமூக விஞ்ஞானம் சார்ந்த அணுகுமுறையல்ல. இந்த பார்வை தமிழ் மக்களின் இலக்கை திசை திருப்பிவிடக்கூடியது.
தமிழ்மக்களின் அரசியலை மூன்று வெவ்வேறு தேசிய வியாக்கியானங்களுடன் சில்லறை வியாபாரம் செய்யும் தலைவர்கள் ஜதார்த்தம்சார் பொதுக் கருத்து உடன்பாடு ஒன்றை எட்ட முடியாதவர்களாக உள்ளனர். மக்களின் அரசியல் நலனைவிடவும் கட்சி அரசியல் நலன் முதன்மை பெறுகிறது. இது ஜீ.ஜீ., செல்வா தொடக்கம் சுமந்திரன் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் வரை தொடர்கதை.
மகளிர் இல்லாத மட்டக்களப்பு………?
*******************************************
“பொ”னாவில் தொடங்கி “பொ”னாவில் பேரணி முடிந்தும், மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக அது இன்னும் பேசுபொருளாகவே உள்ளது. அதுவும் சிங்களதேசத்தின் பாராளுமன்றத்தில் இரு தமிழ்த்தேசியவாதிகள் போட்டிபோட்டுக்கொண்டு முறையிடுகிறார்கள்.
பேரணிப் பிரகடனத்தின் உள்ளடக்கம் கொழுக்கட்டையா? மோதகமா? என்றவாதப் பிரதிவாதம் இன்னும் தொடர்கிறது.
இந்தநிலையில் மாவையின் அணியினர் மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் எழுச்சிப் பட்டறை ஒன்றை நடாத்தி இருக்கின்றனர். இது சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் மாவை கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.
மட்டக்களப்ப்பின் முன்னாள் பா.உ பொன்.செல்வராசா தமிழரசின் மாவட்ட செயற்பாட்டிற்கு பொறுப்பாக மாவையால் நியமிக்கப்பட்டவர். இவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் “பொ”னாமுதல் “பொ”னாவரை பேரணியை சாணக்கியன் & கோ ஏற்பாடு செய்திருந்தனர். இதற்குப் பதிலடிதான் இந்தப் பட்டறை.
மட்டக்களப்பு முன்னாள் பா.உ.களும், முன்னாள் வேட்பாளர்களும் தமிழரசின் பிரமுகர்களும், இளைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
பட்டறையில் பூதக்கண்ணாடி கொண்டு தேடியும் மருந்துக்கும் பெண்களைக் காணவில்லை.
மகளிர் வோட்டுக்கு மட்டும், பட்டறைக்கு அல்ல என்று கொட்டு முரசே!
இந்த பட்டறையில் எந்த ஒரு பெண்ணும் கலந்து கொண்டதாக பதிவுகள் இல்லை. பெண்களுக்கு இடம் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல பட்டறையிலும் இல்லை என்று தமிழரசு மீண்டும் ஒருமுறை சொல்லி இருக்கிறது.
2020 சனத்தொகை மதிப்பீட்டின்படி மட்டக்களப்பு மாவட்ட மக்கள்தொகை 5,79,000. இதில் ஆண்கள் 2,76,000.(47.7 %) பெண்கள் 3,03,000 (52.3%).
இது தமிழரசுக்கட்சியின் தமிழரசிகளுக்கு சமர்ப்பணம்….!
பெண்கள் அமைப்புக்களுக்கு ஒரு சவால்……!
முப்பது ஆண்டுகாலம் ஆயுதப்போராட்டம் நடாத்திய ஒரு இனத்தில் இப்படி ஒரு சாபக்கேடு.
சிங்கள பேரினவாதத்திடம் இருந்து விடுதலை கோர தமிழரசுக்கட்சிக்கு என்ன அருகதை இருக்கிறது. உலகின் முதல் பெண் பிரதமரை தந்த சிங்கள மக்களிடம் இருந்து இவர்கள் கற்றுக்கொள்ள இன்னும் நிறையவே இருக்கிறது.
வருகிறது மாகாணசபைத் தேர்தல்! அதற்கான பட்டியல் வெள்ளோட்டம் இந்த பட்டறை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஆண்கள் பட்டாளம் மாகாணக் கதிரைக்கு பட்டறை நடாத்துகிறது.
ஒரு மங்களா …..?
ஒரு நளினி……..?
ஒரு சசிகலா…….?
ஒரு சந்திரா……..?
இவர்களைப் போன்று எதிர்காலத்திலும் இன்னும் பல பெண்களுக்கு இது ஒரு தொடர்கதை தான்.
மீன்மகள் பாடும், வாவிமகள் ஆடும், மட்டுநகர் அன்னையின் புதல்விகளே ………..!
நீங்கள் பெண்களுக்கான அரசியல் கட்சி ஒன்றை அமைக்கும் காலம் அதிதூரத்தில் இல்லை.
இது காலத்தின் கட்டாயம்….!
வரலாற்று கடமை..!!
வரலாற்று நியதி….!!!