‘குழப்பத்தால் இரு இடங்களில் முடிந்த பேரணி’ –  (சொல்லத் துணிந்தேன் – 60)

‘குழப்பத்தால் இரு இடங்களில் முடிந்த பேரணி’ – (சொல்லத் துணிந்தேன் – 60)

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—  

‘ஒரு இடத்தில் தொடங்கி குழப்பத்தால் இரு இடங்களில் முடிந்த பேரணி’ 

சென்ற பத்தியில் (சொல்லத் துணிந்தேன்- 59) ‘பொத்துவில் -பொலிகண்டி’ பேரணி குறித்த சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பத்தியிலும் மேலும், சில விடயங்களைத் தொடரலாம். 

இப்பேரணி பற்றிய செய்திகள் கசிந்ததும் பொலீசார் நீதிமன்றங்களினூடாகத் தடை உத்தரவுகளைப் பெறத் தொடங்கினார்கள். சில பிரதேசத்து நீதிமன்றங்கள் பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுத் தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன. சில பிரதேசத்து நீதிமன்றங்கள் பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்திருந்தன. சில பிரதேசத்தின் நீதிமன்றங்கள் தடையுத்தரவைப் பிறப்பித்துவிட்டுத் தடை உத்தரவுகளையெதிர்த்துப் பின்னர் எதிர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் அவற்றை விசாரித்து ஏற்கெனவே பிறப்பித்த தடையுத்தரவுகளை ரத்துச் செய்துமிருந்தன.  

இவ்வாறு வெவ்வேறு பிரதேசத்து நீதிமன்றங்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருப்பதால் இப்பேரணி குறித்த நீதிமன்ற விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கவில்லையென்பதை அவதானிக்க முடிகிறது. 

சட்டத்தின் ஓட்டைகள் 

மழை பெய்து கொண்டிருந்த ஒரு நேரத்தில் திடீரென்று பொத்துவிலிலிருந்து சுமந்திரன்- சாணக்கியன் அணியினரால் பேரணி ஆரம்பிக்கப்பட்டு நகர்ந்து வருகையில் பொத்துவில் பொலிஸார் இடைமறித்து நீதிமன்றத் தடையுத்தரவை எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால், இத்தடையுத்தரவிலுள்ள சட்டப் பலவீனங்களால் பொலிசாரின் தடை உத்தரவை அசட்டை செய்துவிட்டுப் பேரணி தொடர்ந்து முன்னேறியிருக்கிறது. இந்த விடயத்தில் பொலிசார் வழமைக்கு மாறாக மெத்தனமாகவே நடந்து கொண்டுள்ளனர். பொலீசார் நினைத்திருந்தால் பேரணியில் கலந்து கொண்டவர்களைக் கைது செய்திருக்கலாம். தடியடிப் பிரயோகம் செய்திருக்கலாம். கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்திருக்கலாம். இவ்வாறு ஒன்றும் நடைபெறவில்லை. இந்தப் பேரணி விடயத்தில் அரசாங்கத்தைப் பொறுத்தவரை தங்கள் மீது கெட்ட பெயர் வந்துவிடாதபடி மிகவும் அவதானமாகவும் ஒவ்வொரு பிரதேசத்திலும் புத்திசாலித்தனமாகவுமே நடந்து கொண்டுள்ளது. ஆனால் சுமந்திரன்-சாணக்கியன் அணியினர் தாங்கள் தடையுத்தரவைத் தகர்த்தெறிந்துச் சட்டத்தை மீறிப் பேரணியை வழிநடத்தியதாகத் தம்பட்டம் அடிக்கின்றனர். 

இதில் வேடிக்கையென்னவென்றால் சட்டப் பலவீனங்களுக்குள்ளால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டுதான் இவர்கள் வீரம் பேசி வருகிறார்கள். ஒவ்வொரு பிரதேசத்திலும் குறிப்பிட்ட சில பிரமுகர்களுக்கெதிராகவே அவ்வப் பிரிவு நீதிமன்றங்களின் ஊடாகத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உதாரணமாகச் சம்மாந்துறைப் பொலிஸார் தங்கள் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பேரணிக்கான நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றிருந்தார்கள். இந்த எல்லைக்குள் வரும் காரைதீவு பிரதேச சபைத் தலைவர் ஜெயசிறில் என்பவருக்கும் இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால், அவர் சம்மாந்துறைப் பொலிஸ் எல்லைக்குள் பேரணியில் பங்கேற்பதைத் தவிர்த்துக் கொண்டார். 

அதேபோல், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குள் பேரணியில் பங்கேற்பதைச் சாணக்கியன் தவிர்த்துக் கொண்டார். சுமந்திரனுக்கெதிராக எந்த இடத்திலும் தடையுத்தரவு இல்லாததால் அவர் பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரை பேரணியில் கலந்து கொண்டார். 

தடையைத் தகர்த்து- சட்டத்தைத் தூக்கியெறிந்து இவர்கள் பேரெழுச்சிப் பேரணி நடத்திய ‘சீத்துவம்’ இதுதான்.  

அன்றுமுதல் தொடரும் அப்புக்காத்து அரசியல் 

‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயர்ப் பலகையின் கீழ் இத்தகைய ‘அப்புக்காத்து அரசியல்’ தான் இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களைக் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. 

இப் பேரணியானது பொத்துவிலிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட எல்லையைத் (வெருகல்) தாண்டும் வரை தமிழ்ப் பிரதேசங்களில் ஊர்ப் பொதுமக்கள் பெரிதாகக் கலந்து கொள்ளவில்லை. இந்தப் பேரணியில் சாதாரண ஊர் மக்கள் அவ்வளவாக அக்கறை கொண்டிருக்கவுமில்லை. இப்பேரணியில் கலந்து கொண்ட முன்னாள்/இந்நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாகத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடைய நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை/பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனத்திற்காகக் காத்திருப்பவர்களும் அத்தகையோரின் ஆதரவாளர்களும்தான் இப்பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கைக் கணியத்திற்குக்  கூடிய பங்களிப்பைச் செய்திருந்தனர். 

பாய்ச்சல் வீக்கமே இயல்பான விரிவல்ல 

பேரணி திருகோணமலை மாவட்டத்தில் நுழைந்தபோது அதாவது வெருகலை அடைந்த போது இப்பேரணியில் சிறிய பாய்ச்சல் ஒன்று நிகழ்ந்தது. அது ஏனெனில், தமிழ் ஊடகங்கள் இப்பேரணியை ஊதிப் பெருப்பித்துக் காட்டியதால் ஏதோ இந்தப் பேரணி மலையைப் பிளக்கப்போகிறதென்றெண்ணி நாமும் ‘பஸ்’ஸில் தொத்திக் கொள்வோமென்ற உளவியலில் உணர்ச்சி மேலீட்டினால்- உசுப்பேற்றத்தினால் ஓடிவந்து சிலர் கலந்து கொண்டதால்தான் இப்பாய்ச்சல் ஏற்பட்டது. இப்பாய்ச்சல் ஒரு வீக்கமேதவிர இயல்பான விரிவல்ல. தமிழர் அரசியலில் இது பழக்கப்பட்டதொன்று. இதனால்தான், பொத்துவிலுக்கு வராத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெருகலுக்கு வந்து தன் பங்குபற்றுதலைப் பதிவு செய்து கொண்டார். 

உண்மையில் இப்பேரணியில் சாணக்கியனின் பெயர் கூடுதலாக அடிபட்டது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் அவரது கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தோருக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது. அதேபோல்தான் இப்பேரணியில் சுமந்திரன் முன்னணி வகித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் உளமாறப் பிடிக்கவில்லை. சி.வி. விக்னேஸ்வரன் பார்வையில் சாணக்கியன் ஒரு ‘சின்னப் பொடியன்’. அதனால் அவர் சாணக்கியனைப் பெரிதுபடுத்துவதில்லை. இருந்தாலும்கூட இவர்கள் எல்லோரும் பேரணி ‘பஸ்ஸி’ல் மிதிபலகையிலாவது நின்று பயணம் செய்து விட வேண்டும் என்று இறுதிநேரத்தில் அதுவும் பேரணி கிழக்குமாகாண எல்லையைக் கடந்து வட மாகாணத்திற்குள் நுழைந்த பின்னர்தான் உஷாரடைந்தனர். ஆனாலும், சி.வி .விக்னேஸ்வரன் இப்பேரணியில் பெரியளவில் பங்குபற்றியதாகத் தெரியவில்லை. பேரணி வடமாகாணத்திற்குள் அதாவது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் நுழைந்த பின்னர்தான் இப்பேரணி கூடுதல் எழுச்சி பெற்றது. அதற்குக் காரணம் தமிழ் ஊடகங்கள் (சமூக வலைத்தளங்கள் உட்பட) இந்தப் பேரணியை ஆரம்பத்திலிருந்தே ஊதிப் பெருப்பித்துக் காட்டியதால் ஏற்பட்ட உணர்ச்சி மேலீட்டால் கணிசமான தொகையினர் ‘சும்மா’ தமிழ்த் தேசிய உசுப்பேற்றப்பட்டனர். இது வெறுமனே ஓர் உணர்ச்சி வெளிப்பாடுதான். 

முஸ்லிம் கட்சிகள் 

முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேரணிக்கு முழு ஆதரவையும் தெரிவித்து அக்கட்சியின் தலைவரே அறிக்கை விட்டிருந்தார். ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இவ்வாறு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து அறிக்கையிடவில்லை. 

ரிஷாட் பதியுதீனைப் பொறுத்தவரை இந்த அரசாங்கத்தினால் பழி வாங்கப்பட்டவராகவும் அதிகம் பாதிப்புக்குள்ளானவராகவும் காணப்படுகிறார். அதனால் அரசாங்கத்தின் மீது தனிப்பட்ட முறையில் ஆத்திரம் அடைந்திருந்தார். அதனை வெளிப்படுத்துவதற்கு இது அவருக்கொரு சந்தர்ப்பம். அவ்வளவுதான். அதனால் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் இப்பேரணியில் ஆங்காங்கே முஸ்லிம் கிராமங்களை இப்பேரணி ஊடறுக்கும்போது கலந்துகொண்டுள்ளனர். ஆனால் பொத்துவில் ஊரைச் சேர்ந்தவரும் அக்கட்சியின் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான முஷாரப் இப்பேரணியில் கலந்து கொள்ளவேயில்லை. அதேவேளை அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியில் வைத்துப் பங்குபற்றியுள்ளார். ஆனால் கட்சித் தலைவரான ரிஷாட் பதியுதீன் இதில் கலந்து கொள்ளவில்லையென்றே தெரிகிறது. கட்சியின் பிரதேச மட்டங்களிலோ அல்லது ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனோ கலந்துரையாடாமல் பேரணிக்கு ஆதரவளிக்கும்படி தன்னிச்சையாக அவர் அறிவித்தது தவறென்ற குற்றச்சாட்டும் அவரது கட்சிக்குள்ளும் முஸ்லிம் வட்டாரங்களிலும் இப்போது புகைந்து கொண்டிருக்கிறது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடன் ஒப்பிடும்போது இந்த அரசாங்கத்தால் அந்த அளவுக்குப் பழிவாங்கப்படாதவர்/ குறைந்தளவு பாதிப்புக்குள்ளானவர். அவர் அரசாங்கத்தை வெளிப்படையாகவோ மூர்க்கமாகவோ எதிர்ப்பதைத் தந்திரோபாயமாகத் தவிர்த்துக் கொண்டுள்ளார். அதனால் பேரணிக்கு ஆதரவு வழங்கும்படி அவர் எந்த அறிக்கையும் ஊடகங்களுக்கு விடவில்லை. ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மொகமட் நசீர் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனையில் வைத்துக் கலந்துகொண்டுள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் நடந்துகொண்ட விதத்தில் சற்றுக் கடுப்பாக அவருள்ளாரென்றும் தெரிய வருகிறது. அந்தக் கடுப்புத்தான் அவரை இப்பேரணியில் கலந்து கொள்ள உந்தியது போலும். ஆனாலும், பேரணி பொலிகண்டி வரை சென்று முடிவடைந்த பின்னர் ரவூப் ஹக்கீம் நல்ல பிள்ளையைப் போல் அதன் வெற்றியைப் பாராட்டித் தன்னைச் சுதாகரித்துப் ‘பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலுமாக’க் காட்டிக்கொண்டு  தமது வழமையான குணத்தைக் காட்டியுள்ளார். 

ஐக்கிய மக்கள் சமாதானக் கூட்டமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஹசன்அலி நிந்தவூரில் வைத்து இப்பேரணியில் இணைந்துள்ளார். அதேவேளை. அவரது கட்சியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ஏறாவூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவுத் இப்பேரணியில் கலந்து கொள்ளவில்லை.  

இப்பேரணியில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் சமூகமும் முழு அளவில் கலந்து கொள்ளவில்லை. கணிசமான முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்களென்றால் அதற்குக் காரணம் பேரணி முன்வைத்த கோரிக்கைகளிலொன்றாக ‘ஜனாஸா’விவகாரமும் அடங்கியிருந்ததேயாகும். இல்லாவிட்டால் இப்பேரணி முன்வைத்த ஏனைய காரணங்களுக்காகத் தமிழர்களுடன் அவர்கள் ஒருபோதும் கை கோர்த்திருக்கவேமாட்டார்கள். இந்த அரசாங்கத்தின் மீது தமிழர்களைப் போல் முஸ்லீம்களும் அதிருப்தியும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்களென்பது உண்மைதான். என்றாலும்கூட ‘ஜனாஸா’விவகாரம் இருந்திருக்காவிட்டால் முஸ்லிம்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்திருப்பார்களே தவிர இப்பேரணியில் பங்கு பற்றியிருந்திருக்கவேமாட்டார்கள். 

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் 

கல்முனையில் வைத்து இப் பேரணியில் கலந்து கொண்ட கல்முனைத் தமிழ் இளைஞர்கள் சிலரால் ‘கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும்’ என்ற கோசம் எழுப்பப்பட்ட போது இதில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குழம்பி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததாகவும் தகவலுண்டு. 

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைப் பொறுத்தவரை தமிழ் ஊர்களுக்குள்ளால் பேரணி வரும்போது ஊர்ப்பொதுமக்கள் அதில் கலந்து கொண்டது குறைவு. ஆனால், முஸ்லீம் ஊர்களில் வைத்து முஸ்லிம்கள் பங்கு கொண்டது தமிழ் ஊர்களை விடக் கூடியதாகவே இருந்தது. அதற்குக் காரணம் ‘ஜனாஸா’ விவகாரம்தான். 

பேரணி முடிவடைந்த இடத்தில் குளறுபடிகள் 

பேரணி முடிவடைந்த இடத்திலும் பல குளறுபடிகள் நடந்துள்ளன. பேரணியைப் பொலிகண்டியில் முடித்து வைப்பதா? அல்லது ஆலடி என்ற இடத்தில் முடித்து வைப்பதா? என்றொரு பிரச்சினை. இப்பேரணியைப் பொத்துவிலில் தொடங்கி வைத்த சுமந்திரன்- சாணக்கியன் அணிதான் பொலிகண்டியிலும் முடித்து வைக்கவேண்டும் என்ற பிரச்சினை. ஏனெனில், பேரணியை முடித்து வைத்துத் தாங்கள் பெயரெடுப்பதற்காக வேறொரு குழு திட்டமிட்டிருந்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்காரர்களுக்கும் (பல்கலைக்கழக மாணவர்கள் எனும் போர்வையில்) சாணக்கியனுக்குமிடையில் பிரச்சினை. சாணக்கியன் சாணக்கியமாக அங்கிருந்து தப்பி ஊர் வந்து சேர்ந்ததே பெரிய காரியமென்றும் சிலர் பேசிக் கொள்கிறார்கள். சாணக்கியனின் வாகனத்துக் கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்ட தாகச் செய்தி. ஓரிடத்தில் தொடக்கி வைக்கப்பட்ட பேரணி இரு இடங்களில் ‘ஒற்றுமை’ (?) யாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. சாணக்கியன் மீது ஏற்பட்ட வன்மங்களுக்கு யாழ் மேலாதிக்க சிந்தனைகளும் காரணமாகும். வடக்கைச் சேர்ந்த தாங்கள் இருக்க நேற்று வந்த கிழக்கைச் சேர்ந்த சாணக்கியன் மேலெழும்புவதா என்ற சிலரின் சிந்தனையோட்டம்தான் இந்தத் தகராறுக்குக் காரணமாகும். இப்படிப் பல உட்பூசல்களையும்-குளறுபடிகளையும்- குத்து வெட்டுக்களையும்- ‘ஊத்தை’களையும் உள்ளே வைத்துச் சுமந்துகொண்டுதான் ‘புண்ணுக்குப் புனுகு பூசுவது’ போல் ஊடகங்கள் இப் பேரணியைப் பேரெழுச்சியாகப் பெருப்பித்துக் காட்டின. இப்பேரணியில் பங்குபற்றிய பிரமுகர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குத் தங்களுக்கென்று தன்னலம் சார்ந்த தனியான நிகழ்ச்சிநிரலை வைத்துக்கொண்டுதான் இயங்கியுள்ளனரென்றே எண்ணத் தோன்றுகிறது.  

இந்தப் பேரணி முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்து சிவில் சமூக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனாலேயே இவ்வாறான பல குளறுபடிகளும் குத்து வெட்டுக்களும் உட்பூசல்களும் நிகழ்ந்துள்ளன. 

அண்மைக்காலமாக கிழக்கில் வடக்கைத் தளமாகக் கொண்ட அரசியல் சக்திகளின் ‘யாழ் மேலாதிக்கப் பிடி’ தளர்ந்து வருகிறது. கிழக்குத் தமிழர்கள் யாழ் மேலாதிக்க அரசியல் பிடியிலிருந்து தங்களை விடுவித்துத் தனித்துவமான அரசியல் பாதையொன்றை அவாவி நிற்கிறார்களென்பதைக் கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தப் பின்புலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்களை மீண்டும் யாழ் மேலாதிக்க அரசியல் பொறிக்குள் இழுப்பதையும் இப்பேரணி உள்ளார்ந்த நோக்கங்களிலொன்றாகக் கொண்டிருந்தது. அதனால்தான் இப்பேரணி கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதிலுள்ள நுண்ணரசியலைக் கிழக்குத் தமிழர்கள் உணர்ந்து கொள்வதும் அவசியமானது. 

1956இல் தமிழரசுக் கட்சி நடத்திய திருமலை யாத்திரையில் அதன் அரசியல் ரீதியான சரி பிழைகளுக்கப்பால் ஒருமுகப்பட்ட நோக்கும் உண்மைத் தன்மையும் இருந்தது. தலைவர்களின் நோக்கு என்னவாகவிருந்தபோதிலும் அதில் பங்கு கொண்ட பொதுமக்கள் தூய்மையான உள்ளத்துடன் பங்கு கொண்டார்கள். அதனால் அந்த யாத்திரையால் (நடைபவனி) அப்போது ஏற்பட்ட தமிழ்த்தேசிய எழுச்சிக்கு ஒரு ‘உண்மை முகம்’ இருந்தது. 

ஆனால். இப்போது நடந்து முடிந்துள்ள பொத்துவில்- பொலிகண்டி பேரணியில் பொய்மையும்- போலியும்-பங்குபற்றிய பிரமுகர்களின் தன்முனைப்பும்-தன்னலமும் நிறைந்திருந்தன. தமிழ் ஊடகங்கள்தான் இதனை ஏதோ என்றுமில்லாதவாறு தமிழ்த் தேசிய எழுச்சியென்றும் தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையென்றும் ஊதிப் பெருப்பித்துக் காட்டினவே தவிர உண்மையில் அப்படியல்ல என்பதை எதிர்காலம் உணர்த்தும். இப்பேரணி குறித்த மேலும் சில அவதானங்களை அடுத்த பத்தியில் (சொல்லத் துணிந்தேன்-61) பார்க்கலாம்.