ஜே வி பி : கோட்பாடுகளும், அரசியலும்

ஜே வி பி : கோட்பாடுகளும், அரசியலும்

      — வி. சிவலிங்கம் — 

இதுவரை ‘விவாதக் களம்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரையாக வெளிவரும் இப் பத்தி இம்முறை ஜே வி பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் போக்குக் குறித்து ஆராய்கிறது. இலங்கையின் இன்றைய நவீன அரசியல் வரலாற்றில் இக் கட்சி ஓர் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. ஆரம்பத்தில் ஓர் மார்க்சிசக் கட்சியாக ஆரம்பித்து முதலாளித்துவ ஆட்சியைக் கவிழ்ப்பதற்கென ஆயுதப் போராட்டத்தை அவசர அவசரமாக நடத்தி அதில் தோல்வி கண்ட பின்னர், மீளவும் அரச மற்றும் ராணுவ அழுத்தங்கள் காரணமாக தலைமறைவாகி மீண்டும் ஓர் ஆயுதக் கிளர்ச்சியைத் தோற்றுவித்து அதன் காரணமாக பிரதான தலைவர்களையும் இழந்தனர்.  

சமூக ஜனநாயக செயற்பாடு 

இத்தனை தோல்விகளுக்கு மத்தியிலும் மீண்டும் அக் கட்சியை புதிய சிந்தனைகளுடன் குறிப்பாக மார்க்சிச சிந்தனைகளுடன் சிங்கள தேசியவாத அடிப்படைகளையும் இணைத்து நகர்த்துகின்றனர். நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக அவர்களிடத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறிப்பாக சமூக ஜனநாயக கோட்பாடுகளுடன் பயணிப்பதாகவே எனது பார்வை உள்ளது.  

இக் கட்சியின் அனுபவங்கள் என்பது இன்றைய 21ம் நூற்றாண்டிற்கான பல புதிய அம்சங்களோடு பயணிப்பதாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே ஜே வி பி யின் அரசியல் பாதையின் அனுபவங்களைத் தனியாக ஆராய முயற்சிக்கிறேன். இங்கு இலங்கையின் பழைய கட்சிகளான ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பவை படிப்படியாகப் பலமிழந்து செல்லும் நிலையில் இக் கட்சி மிகவும் கீழ் மட்டத்திலிருந்தே தனது கட்சி அமைப்புகளைக் கொண்டிருப்பதால் மாற்றங்களைக் கீழிருந்தே ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே ஐக்கிய இலங்கைக்குள் சகல தேசிய இனங்களும் சகவாழ்வு நடத்துவதற்கான நம்பிக்கை தரும் அரசியல் அணுகுமுறைகள் இங்கு உள்ளதா? என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.    

தமிழ் அரசியலும் ஜே.வி.யும் 

இவ் விவாதக்களத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல குறிப்பாக தமிழ் அரசியல் என்பது மிகவும் காத்திரமான கருத்தியலுடன் பிணைக்கப்பட்டால் மாத்திரமே அது அடிமட்ட மக்கள் மத்தியில் நீண்ட காலம் வாழும் தன்மையைக் கொண்டிருக்கும். இதுவே ஜே வி பியின் அரசியல் பயணம் தரும் பாடமாகும். சாமான்ய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய இலக்கிலிருந்து அவர்கள் விலகிச் செல்லவில்லை. உதாரணமாக மனிதனை மனிதன் சுரண்டும் அடிப்படைத் தன்மையைக் கொண்ட பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உருவானால் மாத்திரமே உண்மையான மாற்றம் ஏற்படும் என நம்பினர். இதன் காரணமாகவே முதலில் முதலாளித்துவ ஆட்சிக் கட்டுமானத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தினர். அப்போதுதான் முதலாளித்துவத்தின் பலமும், பலவீனமும் வெளிப்பட்டன. இரண்டாம் முறை தமது அரசியல் கோட்பாடுகளில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தினர். ஏனெனில் நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்களுடன் மக்களின் வாழ்வும், சிந்தனைகளும் மாற்றமடைந்து சென்றதால் கோட்பாடுகளையும் மாற்றும் தேவை ஏற்பட்டது.  

ஆனால் தமிழ் – குறும் தேசியவாதம் மக்கள் மத்தியிலேற்பட்ட அல்லது தேசத்தின் பொருளாதார மாற்றங்களைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. பாராளுமன்ற ஆசன இலக்கை நோக்கியே பாதைகள் வகுக்கப்பட்டன. இதனால் மக்கள் வெறுமனே வாக்கு யந்திரங்களாகவே கருதப்படுகின்றனர். மக்கள் அறிவூட்டப்பட வேண்டும் என்ற சிந்தனை அற்ற தலைமையே இன்றைய தமிழ் அரசியல் தலைமை ஆகும். 

இன்றுள்ள இலங்கையின் அரசியல் கட்சிகளின் வரலாற்றுச் சூழலில் ஜே வி பி என்பது இன வெறுப்பு அரசியலிலிருந்து தம்மைத் தூர வைத்துள்ளதோடு உண்மையாகவே தேசத்தின் சகல உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காகத் தம்மை அர்ப்பணித்திருக்கும் கட்சியாகவே கருத முடிகிறது. இக் கட்சி மிகவும் கடினமான அனுபவங்களினூடாகப் பயணித்தே ஓர் பாராளுமன்றக் கட்சியாக தம்மை மாற்றியுள்ளது. ஓர் அரசியல் கட்சியின் வெற்றியை வெறுமனே வாக்குப் பலத்தின் மூலம் அணுகுவதை விட, அதன் கொள்கைகள், கோட்பாடுகளில் காணப்படும் இறுக்கமான தொடர்ச்சியே அதன் பலத்தைத் தீர்மானிக்கிறது.  

தமிழர் பிரச்சினை மற்றும் நவபொருளாதார வாதம் 

கடந்த கட்டுரைகளில் சிங்களப் பெருந் தேசியவாதம், பெருந்தேசிய இனமையவாதம் என்பன இன்று சிறிய கட்சிகளிடம் சென்றுள்ள நிலமைகளையும், அதனால் ஏற்பட்டு வரும் சாதக பாதக நிலமைகளையும் அவதானித்தோம். ஜே வி பியைப் பொறுத்த வரையில் ஒரு புறத்தில் மார்க்சிச கோட்பாடுகளையும், மறு புறத்தில் சிங்கள தேசியவாதத்தினையும் இணைத்துச் செல்லும் அரசியல் என்பது முற்றிலும் புதிதான காலத்தில் புதியதான அணுகுமுறையாகவே காணப்படுகிறது. உதாரணமாக, 2001 – 2004ம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளைத் தோற்கடிப்பதில் மிக முக்கியமான பங்கினை இவர்கள் வகித்தனர். அதே போலவே அக் காலப் பகுதியில் ரணில் தலைமையிலான அரசு நவதாரளவாத பொருளாதாரக் கட்டுமானங்களை மேலும் பலப்படுத்தும் நோக்கில் தனியார் மயமாக்கல்,  தொழிற் சட்டங்கள் மற்றும் சந்தை நடைமுறைகளை மாற்ற எடுத்த முயற்சிகளை மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். ஒரு புறத்தில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை எட்ட முனைந்த போது அம் முயற்சிகளையும், நவதாராளவாத சந்தைச் செயற்பாடுகளைச் சீரமைக்க எத்தனித்தபோது அவற்றையும் எதிர்த்த நிலையில் அவற்றிற்கான மார்க்சிச விளக்கங்கள் எவ்வாறு அமைந்தன?என்பதை அறிவது தேவையாகிறது.  

ஆரம்பத்தில் ஜேவிபி 

இக் கட்சி 1966 – 1967 ம் ஆண்டுகளில் ஆரம்பித்த வேளையில் அதன் பிரதான குறிக்கோள் வர்க்க விடுதலையாக இருந்தது. தொழிலாளர்களை அரசியல் அடிப்படையில் அணி திரட்டி அதிகாரத்தைப் புரட்சி மூலம் கைப்பற்றுவது இலக்காக இருந்தது. ஆனால் இன்று வர்க்க விடுதலை பற்றிய உரைகள் காணப்படவில்லை. தொழிலாளர்களைப் புரட்சிக்குத் தயாராக்கும் அடிப்படைவாத புரட்சிகரக் கருத்துக்கள் இல்லை. காரணம் பாராளுமன்ற அரசியலுக்கான மாற்றங்களின் விளைவே அதுவென்பதைக் காண முடிகிறது. பாராளுமன்றப் பயணத்தின் மூலம் புரட்சியை ஏற்படுத்த முடியாது. இங்கு சிங்கள தேசியவாதம் பலமாக இருக்கையில் மார்க்சிச வாதத்தினை அதில் இணைத்துச் செல்லும் அரசியலையும் காண முடிகிறது. இவ் அணுகுமுறை வெற்றியளிக்கிறதா?  

70களில் ஆயிரக் கணக்கான சிங்கள இளைஞர்கள் புரட்சி நடத்துவதற்குப் பயிற்றப்பட்டார்கள். அதனடிப்படையில் 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசைக் கவிழ்க்கும் நோக்கில் நாட்டின் பல பொலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. இருப்பினும் மிகக் குறுகிய காலத்தில் ராணுவம் இக் கிளர்ச்சியை ஒடுக்கியது. பல ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டார்கள். சிறையிலிடப்பட்டார்கள்.  

ஆனால் மீண்டும் தம்மைப் புனரமைத்தார்கள். பலமான பாராளுமன்ற அரசியல் கட்சியாக தம்மை மாற்றி அமைத்தார்கள். 80களில் நாட்டின் பலமான மூன்றாவது அரசியல் கட்சியாக மாற்றமடைந்தார்கள். இருப்பினும் 1987ம் ஆண்டு மீண்டும் தலைமறைவாகச் செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சிங்களப் பகுதிகளில் வன்முறை அதிகரித்து அரசியல்வாதிகள் ஓடி ஒழித்தனர். அரசு தோல்வியை நோக்கிச் செல்வதாக உணர்ந்தது. இதன் காரணமாகவே இந்திய ஆதரவை நோக்கிச் சென்றார்கள். விடுதலைப்புலிகளுடன் சமாதானம் பேசினார்கள். தமிழ்ப் பகுதிகளில் இந்திய ராணுவத்தை வைத்துக்கொண்டு தென்னிலங்கையில் தனது ராணுவத்தின் மூலம் தனது மக்களையே ஒழித்தார்கள். இதனால் ராணுவம் தனது கொடுங் கரங்களால் மீண்டும் ஒடுக்கி முக்கிய தலைவர்களைக் கொன்றொழித்ததுடன் பிராந்திய ரீதியில் செயற்பட்ட பலரும், பொது மக்களும் கொலை செய்யப்பட்டார்கள். ஜே வி பி உடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட பலர் மரணத்திலும், சிறைகளுக்குள்ளும் முடிவடைந்தனர்.  

ஜேவிபியும் விடுதலைப்புலிகளும்  

இவ்வாறு முற்றாகத் துவம்சம் செய்யப்பட்ட பின்னரும் இக் கட்சியால் எவ்வாறு இன்று மிகவும் பலமுள்ள கட்சியாக செயற்பட முடிகிறது? விடுதலைப்புலிகளும் தமக்கென மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி வைத்துச் செயற்பட்டார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்களால் ஓர் கட்சியாக ஏன் மீள உருப்பெற முடியவில்லை? மக்கள் ஆதரவு குறைந்ததா? போராளிகள் இல்லையா? பணம் அற்று இருந்தார்களா? நிச்சயமாக இல்லை. அவர்களிடம் இயங்கு சக்தியை வழங்கும் ஓர் பலமான கோட்பாடு இருக்கவில்லை. ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற கோஷத்தைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. இதனால் அப் போராட்டத்தை நடத்த எவரும் மிஞ்சவில்லை.  

ஜே வி பியில் கட்சியின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் கட்சி மீளவும் செயற்பட்டது. எவ்வாறு அது சாத்தியமாயிற்று? கட்சி தனி மனிதர்களைச் சார்ந்திருக்கவில்லை. தனிநபர் வழிபாடு காணப்படவில்லை. மக்கள் சார்ந்த கொள்கைகளே வழிகாட்டியாக அமைந்தன.  

இதேவேளை ஜே வி பி பற்றிய கருத்துக்களை தொடர்ந்து பார்க்குமுன்னதாக, அது குறித்த வாதங்களை விளங்கிக்கொள்ள, தமிழர் விவகாரத்தில் இன்று ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படும் ஜெனிவா தொடர்பான நடவடிக்கைகளையும் நாம் உதாரணமாக ஆராய வேண்டியுள்ளது. 

ஜெனிவாவில் திசை தவறும் தமிழர் தரப்பு 

இன்று ஜெனீவா தொடர்பான வாதங்கள் நிறைந்துள்ள வேளையில் இப் படுகொலைகள் குறித்து யாரும் பேசுவதாக இல்லை. 1970களிலும், 80களிலும் சிங்கள இளைஞர், யுவதிகளைக் கொன்றொழித்த ராணுவம் கடந்த 30 ஆண்டுகாலப் போரில் ஒரு கையில் ஐ நா மனித உரிமைச் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்துப் போர் புரிந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. சிங்கள இளைஞர், யுவதிகளை மின்சாரக் கம்பங்களிலும். ஆறுகளிலும் கொலை செய்த ராணுவம் தமிழர்கள் மத்தியில் மனிதாபிமானத்தோடு நடந்ததாகக் கூறும் கதைகளை யார் நம்புவது? இங்கு யார் இப் படுகொலைகளின் சூத்திரதாரி என்பதை விட இலங்கை ஆட்சிப் பொறிமுறை என்பது மனிதர்களைக் கொல்லும் ஓர் யந்திரப் பொறிமுறையா?அல்லது அது ஜனநாயகப் பொறிமுறையா? என்பதே எம் முன்னால் உள்ள கேள்வி. இதனை உறுதி செய்ய வேண்டுமாயின் விசாரணைகள் அவசியம். அதன் மூலமே நாட்டின் மக்கள் (சிங்கள மக்கள் உட்பட) உண்மையை அறிந்து கொள்வார்கள். சிங்கள மக்களின் ஆட்சி எவ்வாறு சிங்கள மக்களைக் கொன்றது? இதனை அறியாமல் தடுப்பதே இன்றைய அதிகார வர்க்கத்தின் பிரதான சூழ்ச்சியாக உள்ளது. 

அனைவருக்கும் நீதி தேவை 

உதாரணமாக, கடந்த 30 வருடகாலப் போரின்போது ராணுவத்தால் மட்டுமல்ல, விடுதலைப்புலிகளாலும் பலர் கொல்லப்பட்டார்கள். இன்று விடுதலைப்புலிகள் இல்லை என்பதால் அவை பற்றிப் பேசமுடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அவ்வாறானால் அவர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை யார் கொடுப்பது? உள் முரண்பாடுகள் இன்னமும் தொடர்கின்றனவே, அவற்றை யார் அகற்றுவது? அதற்கு இன்னொரு தீர்மானமா? தமிழ் அரசியல் அரசைக் குற்றவாளியாக்கி தனது குற்றத்தை மறைத்து விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியைத் தடுக்கிறது. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லையே ஏன்? 

ஒரு வழியில் ஒற்றை ஆட்சிக்கு ஒத்துப்போகும் தமிழர் தரப்பு 

அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதாகக் கூற அதனை நோக்கித் தமிழ் அரசியல் தலைமைகளும் நகர்வதாகத் தெரிகிறது. இத் தீர்மானங்களில் இலங்கையில் ஓர் இனப் படுகொலை நடப்பதாகவோ அல்லது தமிழர்கள் என்ற அடிப்படையில் ஒடுக்கப்படுவதாகவோ எந்தத் தீர்மானமும் இல்லை. பதிலாக இலங்கையின் ஒற்றை ஆட்சிக் கட்டுமானத்தை மேலும் பலப்படுத்தும் முயற்சிக்குத் தமிழர்களும் ஆதரவு தருகிறார்கள். தற்போதுள்ள அரசியல் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டால் ஜனநாயகம் பிழைத்துவிடும் என்ற எண்ணத்திற்கு ஆதரவு வழங்குவதாகவே இவை உள்ளன. அமெரிக்கா தலைமையிலான அரசுகள் இதனையே உறுதி செய்ய முயற்சிக்கின்றன. அதனைச் சம்பந்தப்பட்டவர்கள் மூலமாகவே நிறைவேற்ற எண்ணுகிறது. இத் தீர்மானங்களில் தேசிய இனப் பிரச்சினையை வற்புறுத்தத் தமிழ்க் கட்சிகள் தயங்குகின்றன. இலங்கை அரசியற் கட்டுமானம் என்பது ஜனநாயக விழுமியங்களைக் கொண்டிருக்கவில்லை. அது ஒரு கொலை செய்யும் பொறிமுறை என்பதை வற்புறுத்தவில்லை. ஏன்?  அவ்வாறானால் தமிழ்க் கட்சிகள் ஜெனீவாவை நோக்கிப் படையெடுப்பதன் பின்னணி என்ன?ஜெனீவாத் தீர்மானங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைப் பேசும்படி யாரும் கோரவில்லையே ஏன்? தமிழ் அரசியல்வாதிகளுக்கோ அல்லது அரசிற்கோ இனப் பிரச்சினைகளில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதே தெளிவு. 

போர்க் குற்றம் என்பது இலங்கை அரசு சர்வதேச ஒப்பந்தங்கள் வாயிலாகவும், உள்நாட்டில் உள்ள அரசியல் யாப்பு. நீதித்துறை சட்டமூலங்கள் என்பவற்றிற்கு வெளியில் செயற்பட்டது என்பதை விசாரிப்பதாகும். அவ்வாறானால் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட ஜனநாயக ஏற்பாடுகளுக்கு அமைவாக செயற்படவில்லை என்பதையே நாம் வற்புறுத்துவது அவசியமானது. அரசு யந்திரமானது கொலைக் குற்றங்களை மேற்கொண்டது என்பதை ஏற்காத வரை சமாதானம் ஏற்படப் போவதில்லை.   

நிர்வாகக் கட்டுமானத்தை மாற்றும் முயற்சி   

இன்று ஜே வி பி இனது அரசியல் பயணம் என்பது நாட்டின் நிர்வாகக் கட்டுமானத்தை மாற்றும் முனைப்பாக அதுவும் பாராளுமன்ற வழிகள் மூலம் அதனை எட்ட முயற்சிப்பது மிகவும் அனுபவம் வாய்ந்தது. அவ்வாறாயின் எவ்வாறான சமூகக் கட்டுமானத்தை அவர்கள் காண விழைகின்றனர்? இன்று இலங்கையின் பழமை வாய்ந்த ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன படிப்படியாக மக்கள் ஆதரவை இழந்து செல்கையில் மூன்றாவது தரப்பு என எண்ணும் அளவிற்கு வளர்ந்துள்ள ஜே வி பி இன்னமும் பல பிரச்சினைகளுக்குப் பதிலைத் தர முடியாத நிலையிலுள்ளதாக எண்ணுகிறோம். 

உதாரணமாக, தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்பன பற்றியும், அதற்கான ஆரம்பமாக 13வது திருத்தமும் உள்ளது. பாராளுமன்ற அரசியல் யாப்பு வழிகள் மூலம் தீர்வுகளை எட்டுவதானால் இவைகளே பாதையாக அமையலாம். ஆனால்  இவற்றை அவர்கள் முற்றாக எதிர்க்கின்றனர். அவ்வாறானால் பதில் தீர்வு என்ன? நவதாராளவாத பொருளாதாரச் செயற்பாடுகளை எதிர்க்கின்றனர். அவ்வாறானால் எவ்வாறான பொருளாதாரக் கட்டுமானத்தை உருவாக்க எண்ணுகின்றனர்? நாட்டின் பொருளாதாரத்தைக் கலப்பு பொருளாதாரமாக மாற்ற எண்ணுகிறார்களா? அவ்வாறானால் இன்றைய பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் முன்னணி போன்றவற்றின் பொருளாதாரக் கொள்கைகளை விட வித்தியாசமானதா? அவ்வாறாயின் அது என்ன? இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தொடர்ச்சி என்பது இந்தியா சம்பந்தமானது. அவ்வாறான நிலையில் இந்தியா தொடர்பாக எதிர் நிலையில் நிற்பது ஏன்? தேசிய இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக எதனை முன்வைக்கிறார்கள்? இவ்வாறான பல கேள்விகளோடு இக் கட்டுரை தொடர்கிறது. 

(தொடரும்)