— விஜி/ஸ்டாலின் —
பெரியாரின் ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணம் ஏறக்குறைய முடிவுக்கு வந்திருந்தது. இறுதியாக பிரான்சிலிருந்து கப்பலில் புறப்பட்டு 1932ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார். இலங்கையில் பல இடங்களில் அவருக்கு வரவேற்புகள் அளிக்கப்பட்டன. கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். சுமார் இருபது நாட்கள் அவர் இலங்கையில் தங்கியிருந்தார்.
கொழும்பை வந்தடைந்தவுடன் இலங்கை வர்த்தக சங்கத்தினர் சார்பில் அங்கு பெரியாருக்கு முதலாவது வரவேற்பு அளிக்கப்பட்டது.
மறுநாளே பெரியாருக்கு சட்ட சபை வளாகத்தில் விருந்தோம்பல் இடம்பெற்றது. அங்கு புத்த சமயம், சிங்கள சமூகங்கள் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு அரசியல் பிரமுகர்களுடன் நடந்த உரையாடலை பயன்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து வந்த நாட்களில் கொழும்பு பர்ஸியன் ஹோட்டலில் பெரியாருக்கு இன்னுமொரு வரவேற்பளிக்கும் நிகழ்வொன்றை தொழிற் சங்க முன்னோடியும் கல்விமானுமான அமைச்சர் பெரிய சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மேலும் பேராசிரியர்கள், மாணவர்கள், சிங்கள இளைஞர்கள் என்று பலதரப்பட்டவர்களுடனும் சந்திப்புக்களையும் மேற்கொண்டு இலங்கையில் அரசியல் சமூக பொருளாதார தன்மைகளை பற்றிய தகவல்களை திரட்டுவதில் ஈடுபட்டார். கூடவே தமது சுயமரியாதை இயக்கம், அதன் நோக்கம், செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களையும் நடாத்தத் தவறவில்லை.
இந்திய வம்சாவளி தமிழர்களும், மலையாளிகளும் கொழும்பில் நிறைந்திருந்த காலம் அது. வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முதலாளிகள், சில்லறை வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இவர்களில் இருந்தனர். இத்தகைய இந்தியர்களின் சார்பில் சுமார் இரண்டாயிரம் பேரளவில் கூடி கொழும்பு ‘எல்பின்ஸ்டன் பிக்ஸர் பாலஸில்’ பெரியாருக்கு மிகப்பெரியதொரு வரவேற்பு நிகழ்வை நடாத்தினார்கள். அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்ட பெரியார் தனது சுயமரியாதை கொள்கை விளக்க உரையொன்றை அவர்களிடையே நிகழ்த்தினார்.
இலங்கைப் பேருரை
டாக்டர் எஸ். முத்தையா (திருநெல்வேலி ஜில்லா ஆதி திராவிடர் நலச்சங்க தலைவர்) தலைமையில் காலிமுகத் திடலில் மிகப்பெரிய பொது கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. அங்கு திரண்டிருந்த சுமார் பத்தாயிரம் பொது மக்களிள் மத்தியில் மிகப்பெரிய உரையொன்றை நிகழ்த்தினார். அதுவே பெரியாரின் ‘இலங்கைப் பேருரை’ என்றழைக்கப்படுகின்றது.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அங்கு பேசிய பெரியார்;
“தோழர்களே எனது அபிப்பிராயத்துக்கும் முயற்சிக்கும் குறிப்பிடத்தக்களவு எதிர்ப்பு இருக்கின்றது என்பதை நான் அறியாமலோ, அல்லது அறிந்தும் அவைகளை மறைக்க முயலவோ இல்லை.” எனச் சொல்லி தனது உரையை ஆரம்பித்தார்.
“ஆனால் என்னை எதிர்ப்பவர்களோ சேறு பூசுபவர்களோ தடை போட முற்படுபவர்களோ மனித குலம் ஏற்றத்தாழ்வுகளுக்குட்பட்டு இழிநிலையில் கிடப்பதை மறுக்கமுடியாது” என்றார்.
“உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, அரசன்-பிரசைகள், அதிகாரி-குடிஜனங்கள், குரு-சிஷ்யன் என்பனவாகிய பல தன்மையில் வகுப்பு வித்தியாசங்களுக்கு ஆளாகி மேல்- கீழ்த் தரத்தோடு கட்டுப்பாடான சமுதாய கொடுமைகளாலும் அரசாங்க சட்டங்களாலும் கொடுமைக்குள்ளாகி வந்திருக்கின்றது-வருகின்றது என்பதை மாத்திரம் யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது என்று உறுதியாய் சொல்லுவேன்” என்றார்.
உலகம் முழுவதும் காணப்படும் பஞ்சம் பட்டினி, மற்றும் சமூகக்கொடுமைகள் அனைதுக்கும் மனிதர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சமூக அமைப்பே காரணமென்று சாடிய அவர், இத்தகைய சமூக அமைப்புகள் எப்படி உருவாகின்றன? என்ற கேள்வியை எழுப்பி “வேத, புராண, சரித்திர காலம் முதல் மனித சமூகமானது கடவுள், ஜாதி, மதம், தேசம்” என்று பிளவுபடுத்தப்பட்டிருக்கின்றது என்றும்,அந்த பிளவுகளிலிருந்தே மேற்படி உயர்வு தாழ்வுகள் கொண்ட படிமுறை சமூக அமைப்புக்கள் பிறப்பெடுக்கின்றன என்றும் தெளிவுபடுத்தினார். இதனை செய்துவருபவர்கள் உலகை ஆளுகின்ற ஒரு சிறிய கூட்டத்தினரே ஆகும் என்பதை குறிப்புணர்த்தினார்.
அத்தகைய சமூகங்களும், அதனால் விளையும் இன்னல்களும் கஷ்டங்களும் குறித்த ஒரு நாட்டினருக்கோ, மதத்தினருக்கோ, மட்டுமே உரியதல்ல. அவை எல்லோருக்கும் எக்காலத்துக்கும் பொதுவானவையாகவே இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டினார்.
ஆதிகால மனிதர்கள் எல்லாவற்றையும் பொதுவாகவே அனுபவித்தார்கள், ஆனால் காலப்போக்கில் மனிதர்களிடையே உருவான பேராசையும் சோம்பேறித்தனமுமே தனியுடமை சிந்தனைக்கு தொடக்கப்புள்ளியானது என்பதையும், அதன் காரணமாகவே அந்த சிறிய கூட்டத்தினர் மதத்தையும் தேசத்தையும் ஜாதியையும் கற்பித்து அவற்றின் பெயரால் பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கிவைத்தனர் என்கின்றார்.
இவையனைத்துக்கும் காரணம் பொருளாதார உள்நோக்குத் தவிர வேறெதுவும் இல்லை என்று ஆதிக்க வர்க்கங்களின் சூட்சியை அம்பலப்படுத்தினார்.
“தோழர்களே கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம், என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகளல்ல. ” அனைத்தும் கற்பிக்கப்பட்டவை, போலியானவை மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது இடைநடுவில் புகுத்தப்பட்டவையே என்று அடித்துரைத்தார் பெரியார். கூடவே சொன்னார் பசி, நித்திரை போன்ற உணர்ச்சிகள் மட்டுமே மனிதனுக்கு இயற்கையானவை மாறாக மதப்பற்று தேசப்பற்று ஜாதிப்பற்று எல்லாம் ஒரு சிறிய கூட்டத்தினரால் பெருந்தொகையான ஏழை எளிய மக்களை வருத்தி ஏமாற்றி பிழைப்பதற்காக உருவாக்கப்பட்ட கற்பிதங்களே அன்றி வேறேதுமில்லை என்கிறார்.
ஆனால், “இத்தகைய சூட்சிகளை யாராவது வெளிப்படுத்தக் கிளம்பிவிட்டாலோ உடனே அப்படிப்பட்ட காரியத்தை நாஸ்திகம் என்றும், மதத்துரோகம் என்றும், தேசத்துரோகம் என்றும், தேசியத்துக்கு விரோதம் என்றும், சிலர் சொல்லி அடக்கி விடப்பார்க்கின்றார்கள். இப்படி சொல்லி அடக்குபவர்கள் யாரென்று பார்த்தாலோ அவர்கள் மேல் நிலையில் இருந்து கொண்டும், சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல் சோம்பேறி வாழ்க்கையில் இருந்து கொண்டும், அந்நியன் பிறர் உழைப்பில் சுகமனுபவிக்கும் ஒரு சிறு கூட்டத்தாரும் மற்றும் அவர்களால் தங்கள் நிலைமையை காப்பாற்றிக்கொள்வதற்காக என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவர்களது கூலி பிரசாரர்களுமேயாவர்.” என்று விபரித்தார்.
பெருவாரி மக்கள் அனுபவிக்கும் ஏழ்மைக்கும் இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணம் தாங்கள் ஏமாற்றப்படுவதுதான் என்பதை உணராதவர்களாகவே நமது மக்கள் காணப்படுகின்றார். அப்படியான தெளிவை மக்கள் அடைந்துவிட கூடாதென்பதற்காகவே தான் கடவுள் செயல், தலைவிதி, ஆன்மா, பாவம், புண்ணியம், முன்ஜென்மம், சொர்க்கம், நரகம், தீட்டு, என்பவையெல்லாம் துணைபுரிகின்றன என்று விரிவாக பேசினார்.
தேசியம் என்றால் என்ன?
உலகெங்கும் தேசிய விடுதலைப்போராட்டங்கள் நிறைந்திருந்த காலம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சுதந்திரம், தேசவிடுதலை பற்றிய பேச்சுக்கள் பரபரப்பாக இருந்த நேரம். அக்காலத்தில்தான் தேசியம் என்றால் என்ன? என்பது குறித்து மிக தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ளுங்கள் என்று பெரியார் அம்மாபெரும் மக்கள் கூட்டத்தினரை கேட்டுக்கொண்டார்.
“தேசியம், என்பதும் முற்கூறியவைகளைப் போன்ற ஒரு போலி உணர்ச்சிதான் ஏனெனில் தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலக பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்துவரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்துக்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஸ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும், மற்றும் அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்கு பரிகாரம் தேடுவதை தடைப்படுத்தவும், ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகார பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூட்சியாகும்.”
“தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது”
ஆகவே “தேசம்” என்பதும் தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகளும் கடவுள், மதம் போன்றே ஒரு வகுப்பாருடைய சுயநலத்துக்கு ஏற்ற ஒரு சூழ்ச்சி வார்த்தை என்று சொல்ல வேண்டியதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.” என்றார்.
இவ்வேளையில் நவீன தேசியவாத சிந்தனையாளர்களில் முக்கியமானவராக கருதப்படக்கூடியவரும் “தேசியம் ஒரு கற்பிதம்” என்று சொன்னவருமான பெனடிக் ஆண்டர்சன் போன்றவர்கள் (Benedict Anderson 1936-2015) பிறப்பதற்கு முன்பே பெரியார் தேசியம் பற்றி சொல்லியுள்ள கருத்துக்கள் உண்மையில் ஆச்சரியப்படத்தக்கன.
பெரியார் ஒரு புலமைசார் புத்திஜீவியோ கல்விமானோ அல்ல என்பதை எண்ணும் போது அதெப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிந்தது?
அதுமட்டுமன்றி 1932ஆம் ஆண்டு சொன்ன அவரது வார்த்தைகள் அச்சொட்டாக இன்றைய தமிழ் தேசியத்துக்கும் பொருந்துகின்ற விந்தையை என்னவென்று சொல்லுவது?
இறுதியாக தனது உரையை;
“உலகில் கஷ்டப்படும் எல்லா மக்களும் ஜாதி, மதம், தேசம், என்கின்ற வித்தியாசமில்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள் அப்போதுதான் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என சொல்லி முடித்தார். உலகப்புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் (communist manifesto) அறிக்கையில் கார்ள் மாக்ஸ் ‘உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று விடுத்த அறிவிப்புக்கும் பெரியாரது இலங்கை பேருரையின் இறுதி வேண்டுகோளுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் இல்லையெனலாம்.
பெரியாரின் பகுத்தறிவு தத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ளவும் அவர் கொண்டிருந்த சமதர்மம் பற்றிய பார்வையை தெரிந்து கொள்ளவும் பெரியாரின் இந்த இலங்கைப் பேருரையானது ஒரு சிறந்த கையேடு எனலாம். சாதி ஒழிப்பை நோக்காக கொண்டு அவர் தொடங்கிய பகுத்தறிவு பாதை பொருளாதாரம் சார்ந்த வர்க்க பிரச்சினைகளிலும் கவனம் கொண்டிருந்தது. ஆனாலும் ரஸ்யா போன்ற நாடுகளில் அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பொருளாதார சமத்துவம் பற்றி மேலும் விரிவான பார்வைகளை அவருக்கு கொடுத்திருக்கவேண்டும் என்பதை இந்த இலங்கைப்பேருரை காட்டிநிற்கின்றது.
மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலும் பெரியார்
காலிமுகத்திடலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மலையகம் நோக்கி பெரியாரின் பயணம் தொடங்கியது. மலையகத்தில் வாழுகின்ற மக்களை கண்டுபேசும் நோக்கோடு ஹட்டன், கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி போன்ற இடங்களை சென்று பார்வையிட்டார். குறிப்பாக அவர்களின் வாழ்க்கை முறைகள், வேலைகள் மற்றும் கூலி நிலை பற்றி அறிந்துகொண்டார்.
மலையக மக்களின் தந்தை என்றழைக்கப்படக்கூடிய அறிஞரும் அரசியல்வாதியுமான நடேசய்யர் தலைமையில் ஹட்டன் நகரில் சுமார் மூவாயிரம் பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. (இலங்கையில் திராவிட மற்றும் பகுத்தறிவு இயக்க செயற்பாடுகளை பிறிதொரு பகுதியில் பார்ப்போம்.)
யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களை காணவும் பெரியார் ஆவல் கொண்டார். அதன்படி அங்கு சென்று 1932/ஒக்டோபர்/30,31 மற்றும் 1,2/நவம்பர் ஆகிய நான்கு நாட்கள் தங்கி பலரையும் கண்டு பேசினார். இந்த ஒழுங்குகளை யார் மேற்கொண்டார்கள் என்பதையோ அங்கு பெரியார் சந்தித்த தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பற்றிய தகவல்களையோ பெற முடியவில்லை. ஆனால் கொடிகாமம், பருத்தித்துறை போன்ற இரு இடங்களில் நடந்த பொது கூட்டங்களில் பெரியார் உரையாற்றியுள்ளதாக மட்டுமே தகவல்கள் கிடைக்கின்றன.
யாழ்ப்பாண சந்திப்புகளை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பெரியார் மேலும் ஒரு வாரம் கொழும்பில் தங்கியிருந்து விட்டு இந்தியா பயணமானார். நவம்பர்8 ஆம் திகதி தூத்துக்குடியை வந்தடைந்ததுடன் முடிவுற்ற அவரது உலக பயணமானது அப்போது பத்துமாதங்களையும் இருபத்தி ஐந்து நாட்களையும் கடந்திருந்தது.
(தொடரும்)