ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கையின் பதில்

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கையின் பதில்

‘பெரிய வல்லரசுகளின் பலப்போட்டியில் அப்பாவி இலங்கை பலியாக்கப்படுகின்றது’ 

(மூத்த செய்தியாளர் பி. கே. பாலச்சந்திரன்அவர்களால் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு எழுதப்பட்ட கட்டுரையை தழுவி தமிழில் தருபவர்சீவகன் பூபாலரட்ணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடருக்காக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டவை பற்றி, இலங்கை அரசாங்கம் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளது.  

இந்தக் கருத்துக்களின் மூலம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் தாம் கண்டுள்ளதாக இலங்கை கூறும்  முன்னேற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் ஆணையரின் கவனத்தை ஈர்க்கவும், ஐநா மனித உரிமைகள் ஆணையர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை மறுக்கவும் இலங்கை அரசாங்கம் முனைகிறது. 

ஒவ்வொரு குற்றச்சாட்டாக மறுத்து வெளியிடப்பட்ட இந்தக் கருத்தின் மூலம் ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் பக்கச்சார்பானவை என்றும் இலங்கை அழுத்திக்கூற முனைகிறது. ஐநா ஆணையரின் அலுவலகத்தின் சில கருத்துக்களும் பரிந்துரைகளும் இலங்கையின் இறைமையை மீறுவன என்றும், ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு ஆணைக்கு அப்பால் சென்று இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் அவை என்றும் இலங்கை கூறுகின்றது. 

www.counterpoint.lk என்னும் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் 30 பக்கங்களைக் கொண்ட பதிலறிக்கையானது, ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம், சாத்தியப்படாத (அல்லது அனுமதிக்கப்படாத) மற்றும் அரசியலமைப்புக்கு பொருந்தாத பொறிமுறைகளை புகுத்த முனையாமல் செயற்படுத்தப்படக் கூடிய நல்லிணக்க பொறிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றது. 

இதுவரை எட்டப்பட்ட விடயங்கள் 

இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் பேரவையை ஏமாற்ற முனைகிறது என்ற தொடரும் சர்ச்சையை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் நீதித்துறையின் கண்காணிப்பின் கீழ் செயற்படுகின்றது என்றும் அதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போனோருக்கான அலுவலகம் தனது நிதித்தேவை குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அரசாங்கம் காத்திருக்கிறது. 910 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ள இழப்பீடுகளுக்கான அலுவலகம், இதுவரை 16,275 விண்ணப்பங்களை பெற்றுள்ளது, அவற்றில் 4358 விண்ணப்பங்கள் கையாளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன, அவற்றுக்கு இதுவரை 142 மில்லியன் ரூபாய்கள் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் 290 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

பொதுமக்கள் காணி 92.22 வீதம் விடுவிப்பு 

போர்க்காலத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விவகாரத்தில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிவரை, 82.26 அரச காணியும், 92.22 வீதமான தனியார் காணிகளும் சொந்தக்காரர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுவிட்டன. போர் முடிவுக்கு வந்தபோது வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1311 சதுர கிலோ மீற்றர் காணி நிலக்கண்ணிகளால் நிரம்பியிருந்தன. அவற்றில் 98.7 வீதமானவை தற்போது கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பாலும், மதத்தலைவர்களின் எதிர்ப்பாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இருப்பினும் அதனை அரசாங்கம் மீல்பரிசீலனை செய்யவுள்ளது. 

மாற்றகால நீதி பற்றிய கற்பனைக் கோட்பாடு 

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான உள்ளூர் அல்லது சர்வதேச சட்ட பொறிமுறைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிடுவது பற்றி கருத்துக் கூறியுள்ள இலங்கை அரசாங்கம், மாற்றகால நீதி பற்றிய கற்பனைக் கோட்பாடுகளின் எடுத்துக்காட்டுகளின் நிமித்தம் சாத்தியமற்ற கடப்பாடுகளை சுமத்துவதற்குப் பதிலாக இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையிலான நல்லிணக்க நடவடிக்கைகளில் ஐநா மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது.  

சாத்தியமற்ற தீர்மானம் 

இரு தரப்பும் இணைந்த அனுசரணையில் மேற்கொள்வதற்காக இலங்கையின் முன்னாள் அரசாங்கம் ஒன்று ஒப்புக்கொண்ட தீர்மானம் ஒன்று இலங்கையின் அரசியலமைப்பின்படி செயற்படுத்த முடியாதது என்பதாலும் அதற்கு பொதுமக்கள் அங்கீகாரம் இல்லாததாலும் அதிலிருந்து தற்போதைய அரசாங்கம் பின்வாங்க நேர்ந்ததாகக்கூறி, அந்த இணை அனுசரணை தீர்மானத்தில் இருந்து தாம் பின்வாங்கியதை தற்போதைய அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது. 

ஐநா திட்டத்தின் மனித உரிமைகள் விவகாரத்தின் தேவைகளை தாம் தோல்வியின்றி ஏற்று கடைப்பிடித்து வருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. சித்ரவதைகளுக்கான ஐநா துணைக்குழு 2019இல் இலங்கைக்கு விஜயம் செய்தது. இதுபோன்ற ஏனைய ஐநா புலன்விசாரணைகளைப் போல இந்தக்குழுவுக்கும் அனைத்து விடயங்களையும் முழுமையாக அணுக ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னைய ஐநா குழு ஒன்றுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், தமது ஆணைக்குழுவுக்கு எந்தவிதமான கடத்தல்கள், சட்டவிரோத தடுத்து வைப்புகள், பாலியல் வன்செயல்கள் குறித்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். தேசிய புலன்விசாரணை பணியகம் (“National Investigation Bureau”) மக்களை பிந்தொடர்ந்து கண்காணிப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், அந்தப் பிரிவு போர் முடிவைத்தொடர்ந்து 2009இல் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பயங்கரவாதத்துக்கு துணைபோகும் அரசசார்பற்ற நிறுவனங்கள் 

சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற அமைப்புக்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதான குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த இலங்கை அரசாங்கம், கடந்த காலங்களில் அவை பயங்கரவாதத்துக்கு துணைபோன கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் அவை பொறுப்புக்கூறுவதையும், வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதையும் கண்காணிக்க ஒரு பொறிமுறையை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளது. அப்படியான சில அரசசார்பற்ற சில அமைப்புக்கள் பயங்கரவாதத்துக்கு நிதி சேர்த்ததாகவும் வெளிநாட்டு நாணைய மோசடிகளில் ஈடுபட்டு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதகமாக செயற்பட்டதாகவும் இலங்கை அரசு கூறுகின்றது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் (ஏப்ரல் 21,2019) விடயத்தில், “முறையான மற்றும் முறையற்ற வழிகளில் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகமும் அச்சமும் இருக்கிறது.” என்று அந்த அறிக்கை கூறுகின்றது. அத்தோடு வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கான முயற்சிகள் நடந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது. “இந்த முக்கியஸ்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.” 

இராணுவமயப்படுத்தல் 

ஜனாதிபதி கோத்தாபாய தலைமையில், அரச நிர்வாகத்தை இராணுவமயப்படுத்தல் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அரசாங்கம், எந்த பதவிக்கும் எந்த நபரையும் நியமிக்கும் விடயம் இலங்கை அரசாங்கத்தின் தனியுரிமை என்று கூறியுள்ளதுடன், அதில் தலையிடும் ஆணை(அதிகாரம்) ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்துக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது. தகமை, திறமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்த நியமனங்கள் நடந்துள்ளன. கட்டாய இராணுவ சேவையோ அல்லது கட்டாய ஆட்சேர்ப்போ இல்லாத நிலையில் இலங்கை ஒரு இராணுவமயப்படுத்தப்பட்ட அரசு அல்ல என்றும் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை சிறார் படையினரை கொண்டிருக்கவில்லை (விடுதலைப்புலிகள் மாத்திரந்தான் அப்படியான சிறார் போராளிகளை கொண்டிருந்தார்கள் என்று 1998இல் ஐநா அதிகாரியான ஒலரா ஒட்டுணு சுட்டிக்காட்டியிருந்தார்) என்று ஐநாவே சான்று வழங்கியுள்ளது. 

சிவில் கடமைகளில் இராணுவத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை, இராணுவத்தை எந்த பகுதிக்கும் நகர்த்துவதற்கும், எந்தக் கடமையை அதற்கு கொடுப்பதற்கும் இலங்கைக்கு இறைமை உரிமை உள்ளது என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. முன்னேறிய நாடுகள் கூட அவசர நிலைமைகளில், சிவில் நிர்வாகத்துக்கு உதவ இராணுவத்தை அனுப்புவது வழமை என்று இலங்கை கூறுகின்றது. காவல் கண்காணிப்பை குறைப்பது ஆபத்து என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அரசாங்கம், அதனால்தான் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதலால், 277 பேர் கொல்லப்படவும், 592 பேர் காயமடையவும் நேர்ந்தது என்றும் கூறியுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பரவலாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடந்தன என்றும் அவசர நிலை நீடித்து, மேலதிக இராணுவம் போடப்பட்டது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் குற்றஞ்சாட்டியிருந்தது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசாங்கம், “ஒரு படு பயங்கரமான” நிகழ்வுக்குப் பின்னர் அரசாங்கம் அவசர நிலையை பிரகடனம் செய்தது என்றும் நிலைமையை சீராக்க தன்னிடம் இருந்த அனைத்து வளங்களையும் பயன்படுத்தியது என்றும் கூறியுள்ளது.  

கொவிட் – 19 

கொவிட் – 19 தொற்றுநோய் நிலைமையை கையாள்வதில் “கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள்” காண்பிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, இந்த “கட்டமைப்பு ஏற்றத்தாழ்வு” முன்னேறிய நாடுகளில்கூட காணப்பட்டது என்று இலங்கை பதிலளித்துள்ளது. சவ அடக்கத்துக்கான தடை விஞ்ஞான அடிப்படையிலும், பொது நன்மைக்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக அது கூறுகின்றது. 

வகை தொகையற்ற செல் தாக்குதல்கள்  

2006 முதல் 2009 வரையிலான இறுதிக்கட்டப் போரில் வகை தொகையற்ற வகையில் செல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதான குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, பரணகம ஆணைக்குழுவுக்கான ஆலோசனைக்குழு (இது சேர் டெஸ்மண்ட் டி சில்லா, சேர் ஜெஃப்ரி நைஸ், இராணி கவுன்ஸில்(இங்கிலாந்து), டேவிட் எம் கிரேன் (அமெரிக்கா) மற்றும் அவருக்கு துணையாக ரொட்னி டிக்ஸன், மைக்கல் நியூட்டன் (அமெரிக்கா), மேஜர் ஜெனரல் ஜே ஹோல்ம்ஸ் ஆகிய சட்டத்தரணிகளை கொண்டது) அளவுக்கு அதிகமான இராணுவ சக்தி பிரயோகிக்கப்படவில்லை என்று கூறியிருந்தது. போர் வலயத்தில் அகப்பட்டிருந்த மக்களுக்கு உணவு மறுக்கப்படவில்லை என்று யுனிசெஃப் அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் ஜேம்ஸ் கிராண்ட் கூறியிருந்தார். “மோதல் நிலைமைகளில் விநியோகம் மனித நேயமானது” என்றும் கிராண்ட் கூறியிருந்தார். பொதுமக்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினர் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித நேயச் சட்டங்களின் எந்தச் சரத்தையும் மீறவில்லை என்று மைக்கல் நசபி பிரபு கூறியிருந்தார். 

தண்டனை நடவடிக்கைகள் 

தண்டனை நடவடிக்கைகளாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளவை குறித்து பேசியுள்ள இலங்கை அரசாங்கம், போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை இழுத்துச் செல்வது என்பது, “பொருத்தமற்றது மற்றும் தேவையற்றது” என்று கூறியுள்ளது. இது ஒரு இறைமையுள்ள நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையில்லாம தலையிடுவதாகவும், ஐநாவின் சாசனங்களுக்கு முரணானதாகவும் அமையும் என்றும் இலங்கை எச்சரித்துள்ளது. 

தடைகள்  

தனி நபர்களுக்கு எதிரான இலக்கு வைத்த தடைகள் பற்றிய பரிந்துரையை பொறுத்தவரை, உரிய நீதிமன்றம் அல்லது அமைப்பின் மூலம் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஒருவருக்கு எதிராக தடைகளை கொண்டு வர முயல்வது என்பது, “நாட்டை ஸ்திரமிழக்கச் செய்வதற்கான ஒரு அரசியல் சதி என்றும், தனி நபர் உரிமைகளை மற்றும் இயற்கை நீதிக் கொள்கைகளை மீறும் செயல் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. 

இலங்கையால் முன்னெடுக்கபட்ட நேர்மையான மற்றும் சாத்தியமான கடப்பாடுகளையும் மற்றும் அதன் அமல்படுத்தல்கள் மூலம் எட்டப்பட்ட விடயங்களையும் மறந்துவிட்ட ஐநா மனித உரிமையர் ஆணையர் அலுவலகம், எடுத்தெறிந்த போக்கில், அடாவடித்தனமான முடிவுகளுக்கு வருகின்றது என்பது இலங்கையின் கவலையாகும். 

“மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட விடயங்களுக்காக இலங்கை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் இலக்கு வைக்கப்படுகின்றது” என்பது இலங்கை அரசாங்கத்தின் கருத்து. பலரும் இணைந்த ஒரு நடவடிக்கையின் பலிக்கடாவாக இலங்கை மாற்றப்படுகிறது என்றும் அது கூறுகின்றது. அதாவது, பெரிய வல்லரசுகளின் பலப்போட்டியில் அப்பாவி இலங்கை பலியாக்கப்படுகின்றது என்று அது கோடிகாட்டுகின்றது.