— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிர்வாண வழக்கு (விசித்திரமான முறையில்) நீதிமன்றத்துக்கு வந்தது. “எதிர் வீட்டுக்காரன் நிர்வாணமாக நிற்கிறார்” என்பதே குற்றச்சாட்டு. வழக்கை விசாரிக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர் சொன்னார், “என்னுடைய வீட்டில்தான் நான் அப்படி நின்றேன். என்னுடைய வீட்டுக்கும் வளவுக்கும் என் பேரில் உறுதியும் உண்டு”என.
நீதிபதி சொன்னார், “அது உங்கள் வீடா இல்லையா என்பதில்லை இங்கே பிரச்சினை. நீங்கள் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலோ வளவிலோ என்றாலும் கூட நீங்கள் பகிரங்கமான முறையில் அப்படி நிற்க முடியாது. அதற்கு பொது நியதியிலும் இடமில்லை. சட்டத்திலும் அனுமதியில்லை. ஆகவே நீங்கள் செய்திருப்பது குற்றமே. குற்றத்துக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று.
வேறு வழியில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாகி தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
இதை ஏன் இங்கே இப்பொழுது சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், சிலர் தங்களுக்குரித்தான காணியில் மரம் தறிக்கிறோம். மணல் அள்ளுகிறோம். எங்களுடைய காணியில் நாங்கள் பயிர் செய்வதைப்போல, வீடு கட்டுவதைப்போல, பனம் பாத்தி போட்டு கிழங்கு கிண்டுவதைப்போல இதுவும் ஒரு நடவடிக்கையே என்று சொல்லிக் கொண்டு இந்த வியாபாரங்களைச் செய்கிறார்கள்.
மண் கொள்ளை
இதற்கென்று பூநகரியிலும் மணற்காட்டிலும் அல்லிப்பளையிலும் இயக்கச்சியிலும் காணிகளை வாங்குகிறார்கள். இதில் தனியாட்களான பெரும் வசதியுள்ள முதலைகளும் உண்டு. அரசியல்வாதிகளும் உண்டு. அப்படி வாங்குகின்ற காணிகளில் முதலில் செய்கின்ற வேலை மணலை அள்ளி விற்பதே. இந்த மணல் விற்பனை முறைப்படி சட்டவிரோதமானது.
ஆனால், தனியார் காணியிலிருந்து மணலை எடுப்பதற்கு அனுமதி உண்டு. அதாவது, எங்களுடைய சொந்தக் காணியிலிருந்தே மணல் எடுக்கிறோம் என்ற ஒரு தோற்றப்பாட்டினைக் காண்பித்துக் கொண்டு இந்த வேலையை (விளையாட்டைக் காட்டுகிறார்கள்) செய்கிறார்கள்.
சிலர் இதற்கு இன்னொரு தந்திரோபாயத்தையும் (மற்றவர்களை முட்டாள்களாக்கும் நடவடிக்கை) கடைப்பிடிக்கிறார்கள். எப்படியென்றால், குறிப்பிட்ட காணிகளில் மீன் வளர்ப்புத்திட்டத்தை மேற்கொள்ளப்போகிறோம். ஆகவே அதற்கு நிலத்தை ஆழப்படுத்த வேண்டும். நிலத்தை ஆழப்படுத்த வேண்டும் என்றால் அங்கிருக்கும் மணலை அகழ்ந்து எடுக்க வேண்டும். அப்படி அகழ்ந்து எடுக்கும் மணலை என்ன செய்வது? அதையே விற்கிறோம்.
ஆகவே இது ஒரு பெரிய அபிவிருத்திச் செயற்பாட்டுக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியே தவிர, மணலை அகழ்ந்து விற்கும் சங்கதியல்ல என்று அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். அதாவது மணல் தொழில் களை கட்டத் தொடங்கியுள்ளது.
இது இங்கே ஆரம்பத்தில் சொன்னதைப்போல, என்னுடைய வீட்டில்தான் நான் நிர்வாணமாக நிற்கிறேன். என்னுடைய வீட்டுக்கும் வளவுக்கும் என் பேரில் உறுதியும் உண்டு” என்று வாதிடுவதைப்போன்றது. ஆனால், உங்களுடைய பரம்பரை உறுதிக்காணியாக இருந்தாலும் அதற்குள் நிற்கும் மரத்தை வெட்டுவதற்கே நீங்கள் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம். அந்தச் சட்டத்திலே ஓட்டை போட்டால் என்ன செய்வது?
இதைத் தட்டிக் கேட்பதற்கு அதிகாரிகளால் முடியாமலுள்ளது. அப்படி எந்த அதிகாரியாவது குரல் உயர்த்தினால் அந்த அதிகாரி கண்காணாத தொலைவுக்கு அனுப்பப்பட்டு விடுவார். வேறு கதையில்லை. உடனடியாகவே இடமாற்ற உத்தரவு மேலிடத்திலிருந்து வரும். அது ஏன் என்று அதையும் கேள்வி கேட்க முடியாது. ஜனாநாயகத்தில்(?) இதற்கெல்லாம் தாராளமாக இடமுண்டு. ஆனால், உங்களுக்கு இது புரியவில்லை என்றால், இதில் வாய்ப்பில்லை என்றால் நீங்கள் நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும்.
ஆகவே எந்த அதிகாரியும் வாயைத் திறக்கப்போவதில்லை. நமக்கெதற்கு வீண் பிரச்சினை என்று தெரியாத மாதிரி இருந்து விடுகிறார்கள். ஏதோ நடப்பது நடக்கட்டும். ஊருக்கு வந்தால் அதை ஊரவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். நம்முடையை தலையை எதற்காக வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
இதனால் தமக்கு வாய்ப்பான ஒரு சூழலை இந்த அதிகாரத் தரப்புகள் செய்து விடுகின்றன. பிறகென்ன? இவர்களுடைய காட்டில் மழைதான். மணல் விற்பனை, மர விற்பனை அமோகமே.
சூழல் கேடு பற்றி யாராவது பேசினால் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள். அல்லது அவர்களும் ஏதோ வகையில் பழிவாங்கப்படுவார்கள். குறிப்பாக ஊர் திரண்டு எதிர்ப்புக் காட்டினால், உங்கள் ஊருக்கு அபிவிருத்தி எதுவும் வராது. உங்கள் ஊரவர்களுக்கு வேலை வாய்ப்பே கிடைக்காது. உங்கள் ஊரின் வளத்தை வைத்துக் கொண்டு வாழுங்கள் என்று எச்சரிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் சனங்கள்தான் என்ன செய்ய முடியும்?
கேளுங்கள், எண்பது வயது முதியவர் ஒருவர் கண்ணீரோடு சொல்லும் கதையை – “ஏற்கனவே மணல் காட்டில் செய்தது போதாது என்று இப்பொழுது பூநகரிக்கு வந்து கௌதாரிமுனையிலும் அழிவைச் செய்யப் போகிறார்களா?” என்று கௌதாரிமுனையிலுள்ள சங்கரப்பிள்ளை என்ற முதியவர் துயரம் தோயக் கேட்கிறார்.
மணல் அகழ்வுக்கான வேலைகள் ரகசியமாக நடப்பதை அறிந்து அங்குள்ள சனங்கள் பதகளித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலியே பயிரை மேயலாமா என்று கேட்கும் குரல்களுக்கு பதிலே இல்லை. வியாபாரம் என்று வந்து விட்டால் அண்ணன் தம்பி என்ன தாய் பிள்ளை என்ன? எல்லாம் ஒன்றுதான். லாபம் மட்டுமே குறி. நியாயம், அறம், கண்ணியம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகி விடும்.
சங்கரப்பிள்ளைக்கு நெஞ்சு பொறுக்குதில்லை. எத்தனை அவலங்கள், நெருக்கடிகளுக்குள்ளால் தப்பிப்பிழைத்தது அந்த மண் (கௌதாரிமுனை)? சோழர் காலத்திலிருந்து எத்தனையோ படையெடுப்புகளையும் வெளியார் வருகைகளையும் சந்தித்த மண்ணல்லவா அது. அண்மைக்காலத்தில் கூட இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என்ற படையெடுப்புகளையும் கண்டு மீண்டது. ஆனாலும் கௌதாரிமுனையின் கட்டமைப்பு – மணல் மேடுகளின் இயற்கை அமைப்புக் கெடவில்லை. புலிகள் அதை மிகக் கவனமாக – வளமாக – அழகிய வனப்பாகப் பேணினார்கள்.
உண்மையும் அதுதான். அது ஒரு சுற்றுலாத்துறைக்குரிய சிறந்த மையம். மணல் மேடுகளும் பனந்தோப்புகளும் சிறு கிராமமும் கடலுமாக விளைந்த சிறந்த பரப்பு.
இப்பொழுதும் கௌதாரிமுனையில் சோழர்காலத்துச் சிவன் கோவில் ஒன்று உண்டு. சிதைந்த நிலையிலிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவம் குறைந்து விடவில்லை. அதை விட அங்கே அந்த நிலப்பகுதி எங்கும் அந்தக் காலத்துச் செப்பு நாணயங்கள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை அங்குள்ள சனங்கள் பொறுக்கி எடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். தவிர, இன்னும் பல வரலாற்று எச்சங்களும் உண்டு.
சோழர் காலத்துக்குப் பிறகும் முதலும் அங்கே மக்கள் வாழ்ந்தனர் என்பதால் தொடர்ச்சியான வரலாற்றுப் பெறுமதிகள் அங்கே உள்ளன.
மணல் அகழ்வு நடக்குமாக இருந்தால் இதெல்லாம் நாசமாகிப் போய் விடும். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் நடந்த மணல் அகழ்வினால் கொஞ்சப் பொருட்கள் இப்படி வீணாகிப் போயின. மிஞ்சியதையும் காவு கொள்வதற்குத் துடிக்கின்றன அரசியல் பூதங்கள்.
இதைப்போலத்தான் அல்லிப்பளையிலும் இயக்கச்சியிலும் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் என்ற போர்வையில் சூழ்ச்சிகரமான மணல் அகழ்வுப் பொறிக்குத் திட்டமிடப்படுகிறது. நன்னீர் மீன் வளர்ப்பை யாரும் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. அந்தத் திட்டத்தை சமூக ஒருமைப்பாட்டுடன், அந்தந்தக் கிராம மக்களின் அனுமதியுடன் மேற்கொள்ள வேண்டும்.
இந்தத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற இடங்களில் அதிகமானவை கடல் நீர் உட்புகக் கூடிய அபாயப் பிரதேசங்களாகும். அப்படியான பிரதேசங்களில் மணலை அகழ்ந்து எடுத்தால் சுற்றயலே பாழாகி விடும். ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பல இடங்கள் உவர் நீர்ப் பிரதேசங்களாகவும் சதுப்பு நிலங்களாகவுமே உள்ளன. நன்னீருக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் உள்ள நிலத்தையும் பாழாக்கினால் மிச்சமிருக்கும் நீரும் பழுதாகி விடும்.
இதையெல்லாம் கண்டுணர்ந்து தடுப்பது யார்? பூனைக்கு மணி கட்டுவது யார்? எப்படி என்பதே இன்றுள்ள கேள்வியாகும்.
இது ஒரு அபாய எச்சரிக்கை. அபாய மணியொலி. கேட்கச் செவியுள்ளோர் கேட்கக் கடவது. பார்க்கும் திறனுள்ளோர் பார்த்தறியக் கடவது. செயலாற்றத்திராணியுடையோர் செயற்படக் கடவது.