இலங்கையை மிரட்டும் 5 நெருக்கடிகள்

இலங்கையை மிரட்டும் 5 நெருக்கடிகள்

      — கருணாகரன் — 

நாடு யுத்த காலத்தையும் விட மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது. முக்கியமாக ஐந்து நெருக்கடிகள். ஒன்று பொருளாதார நெருக்கடி.  

பொருளாதாரம் 

பண வீக்கம். நாளாந்த உணவுக்கே அல்லற்படுகின்ற பெருந்திரள் மக்களை விரைவாக உருவாக்கப்போகிறது. ஏறக்குறைய இப்போதே அப்படியான நிலைதான். இது அறுவடைக் காலம். இப்போதே உழுந்து, பயறு, நெல் – அரிசி எல்லாம் உச்ச விலையில்தான் உள்ளன. ஆனால், வழமையாக அறுவடைக்காலத்தில் இந்தப் பொருட்களெல்லாம் மலியும். அப்படி மலியவில்லை என்றால் எங்கோ கோளாறு உண்டு. இது அபிவிருத்திக் கனவுக்கு எதிரான ஒன்று. 

இனமுரண்பாடு 

இரண்டாவது, இனமுரண்பாட்டின் தீவிரம். வரவர இலங்கைச் சமூகங்கள் எதிரெதிர் நிலை கொண்டு செல்கின்றன. குறிப்பாக முப்பது ஆண்டுகளாக சிங்களத் தரப்பும் முஸ்லிம் தரப்பும் இணைந்து செய்த பயணம் இன்று சிதைந்து போயுள்ளது. அப்படித்தான் மலையக மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவும் விரிசலடைந்து செல்கிறது. தமிழ் – சிங்கள உறவு வழமையைப் போல பகை நிலையிலேயே தொடர்கிறது. போருக்குப் பிந்திய சூழல் என்று எந்த வகையிலும் உணர முடியாமலே பகையுணர்ச்சியும் இடைவெளியும் முரண்பாடுகளும் அதிகரித்துள்ளன. ஆக, போர்க்காலம், போருக்கு முந்திய காலம் போன்ற உணர்வே போருக்குப் பிந்தியும் உள்ளது. 

வல்லாதிக்க நெருக்குவாரம் 

மூன்றாவது, இந்திய – சீன ஆதிக்கப்போட்டியின் தலையீடுகள், விளைவுகள். நாட்டின் அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கூடாக தமது நலன்சார் நடவடிக்கைகளை இந்தியாவும் சீனாவும் தீவிர நிலையில் மேற்கொள்கின்றன. தொடக்கத்தில் அம்பாந்தோட்டையில் மட்டும் நின்ற சீனா, இப்பொழுது அனலைதீவு, எழுவை தீவு என்று வடக்கில் உள்ள தீவுப் பகுதிகள் வரையில் தன்னை விஸ்தரிக்கும் அளவுக்கு வந்துள்ளது. மறுவளமாக இந்தியா தனக்குச் சில பகுதிகள் – குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளும் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையமும் – வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது.  

இது உள்நாட்டில் பதற்றத்தையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட கால நோக்கில் இந்த வல்லாதிக்கப்போட்டி பாரிய நெருக்கடிகளை  உண்டாக்கப்போகிறது. 

சமூக குழப்பநிலை 

நான்காவது, மக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பகரமான சமூகச் சூழல். தமக்கான எதிர்கால அரசியல், பொருளாதார, சமூகப் பாதுகாப்புக் குறித்த குழப்பமும் அச்ச நிலையும். முக்கியமாக ஜனநாயகச் சூழலைக் குறித்த பதற்றம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நிர்வாக நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சிறுபான்மைத் தேசிய இனங்களின் எதிர்காலம் குறித்த நெருக்கடி என இது விரிந்து செல்கிறது. 

மனித உரிமைகள் 

ஐந்தாவது தொடரும் மனித உரிமைகள், மீள நிகழாமை, பொறுப்புக் கூறல், நீதி வழங்குதல் குறித்த பிரச்சினைகள். அதனால் உண்டாகியுள்ள (ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் அழுத்தம். 

இப்படியான நெருக்கடிகளால் மறுபடியும் நாடு கொந்தளிப்புக்குள்ளாகியிருப்பது என்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மையளிக்காது. மேலும் மேலும்நிலைமையை மோசமாக்கும். 

இதற்கு என்ன காரணம்? 

யுத்தம் முடிந்த பிறகு நாட்டை நிரந்தர அமைதியை நோக்கி வளர்த்துச் செல்லத் தவறியதே இதற்கு அடிப்படைக்காரணமாகும். ஆனால், யுத்த முடிவுக்குப் பிறகு நாடு, புதியதொரு வளர்ச்சிச் சூழலுக்குச் செல்லும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். அப்படித்தான் மக்கள் நம்ப வைக்கவும் பட்டனர். ஏனெனில் எல்லாப் பிரச்சினையும் போரினாலும் புலிகளாலும்தான் வந்தன என்றொரு எண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால், போரும் புலிகளும் இல்லை என்றால் நாடு சுபீட்சத்தை நோக்கியே செல்லும். மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் எல்லாம் தீரும், தீர்க்கப்படும் என்றுதான் மக்கள் நம்பினார்கள். இதற்கு ஏற்றவகையில் – அந்த நம்பிக்கையோடுதான் அடுத்த வந்த தேர்தல்களில் மக்கள் தங்களுடைய தெரிவுகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், மக்கள் அப்படி நம்பிய மாதிரி, பின்னர் வந்த நிலைமைகள் இருக்கவில்லை. ஆட்சிச் செயற்பாடுகள் அமையவில்லை.  

தவறிய அரசாங்கம் 

குறிப்பாக 2010, 2015 ஆகிய இரண்டு ஆட்சிக் காலமும் மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் நாட்டின் தேவைகளையும் எந்த அளவிலும் நிறைவேற்றவில்லை. நல்லவை நடக்கும் என்று காண்பிக்கப்பட்ட தோற்றப்பாடுகளுக்கு மாற்றான –எதிரான நிலைமைகளே நிகழ்ந்து முடிந்தன. இதனால்தான் தற்போதைய புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர். குறிப்பாக இன்றைய ஜனாதிபதி செயலூக்கமுள்ளவர் என்ற எதிர்பார்ப்பு பெரும்பான்மையானோரிடம் இருந்தது. அதனால்தான் உச்ச ஆதரவினை ஜனாதிபதிக்கும் இப்போதுள்ள அரசாங்கத்துக்கும் வழங்கினர். 

ஆனாலும் யுத்த முடிவுக்குப் பிறகு மேற்கொண்டிருக்க வேண்டிய பொறுப்புக் கூறல், பகை மறப்பு, நல்லிணக்கம், நீதி வழங்குதல் அல்லது பரிகாரம் காணுதல், தீர்வைக் கண்டடைதல், ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துதல், மக்கள் நலனையும் நாட்டையும் மீள் நிலைப்படுத்துதல் போன்றவை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இப்பொழுதும் இவை சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இதன் விளைவுகளே இன்றைய மேற்சொன்ன நெருக்கடிகளுக்கு காரணமாகத் தொடர்கின்றன. இதொன்றும் ரகசியமான சங்கதிகளோ, யாருக்கும் தெரியாத – புரிந்து கொள்ள முடியாத உண்மைகளோ அல்ல. 

அப்படியென்றால், ஏன் இவற்றை ஆட்சி அதிகாரத்திலிருப்போர் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கின்றனர்? ஏன் இவற்றைச் செய்து நாட்டை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு ஒரு நல்வாழ்வை உருவாக்கிக் கொடுப்பதற்கும் பிடிவாதமாகப் பின்னிற்கின்றனர்? 

இதுதான் இன்றுள்ள அடிப்படையான கேள்வி. 

அதிகார மனநிலையே இதற்கு அடிப்படைக் காரணம். இது ஒரு உளவியல் பிரச்சினை. மனப்பதற்றங்களிலிருந்தும் வர்க்க நலன்சார் சிந்தனையிலிருந்தும் அது உண்டாக்கும் மன நிலையிலிருந்தும் உருவாகுவது இது. 

மிக எளிய உண்மையும் உதாணமும், ஆட்சிக்கு வருவோரும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு முனைவோரும் ஏற்கனவே உள்ள இனவாத – வர்க்க நிலைப்பட்ட கட்டமைப்பை மீறிச் செயற்பட விரும்பாமையே ஆகும். அதை அப்படியே பேணிப் பாதுகாப்பதன் மூலமாகவே தங்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை இதில் தொழிற்படுகிறது. இதை மீறி, நாட்டுக்கும் மக்களுக்கும் நலன் தரக் கூடிய புதிய  – மீறலான வழிகளைத் தேர்வு செய்தால், அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களோ? அதை எதிர்த்தரப்பின் அரசியல் (இனவாத அரசியல் – முரண்பாட்டு அரசியல்) வென்று விடுமோ என்ற அச்சமும் தடுமாற்றமும் இவர்களை இனவாத – முரண்பாட்டு அரசியலுக்குள்ளேயே தேங்க வைக்கிறது. இதில் சிங்களத் தரப்பு, தமிழ்த்தரப்பு, முஸ்லிம்  தரப்பு எல்லாமே அடங்கும். எவையும் வேறுபட்டவை அல்ல. இதனால்தான் யுத்தத்திற்குப் பிறகும் முரண்பாட்டு அரசியல் (பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரான), இனவாத அரசியல் தொடருகின்றது. இந்த அரசியல் வழிமுறை தவறானது என்று சமூகம் சார்ந்தும் நாட்டின் முன்னேற்றம் குறித்தும் சிந்திப்போர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இதையே சர்வதேச சமூகமும் வலியுறுத்துகிறது. யுத்தம் நடந்த சூழைலைக் கொண்ட வரலாற்று அனுபவங்களும் இதையே – கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையையே – வலியுறுத்துகின்றன. 

நிலைமையை புரிந்துகொள்ளாத மக்கள் 

ஆனால், இதைக் கவனத்தில் எடுப்பதற்கு தயாரற்ற நிலையே நாட்டில் காணப்படுகிறது. இதற்கு மக்களும் ஒரு காரணமே. அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் தங்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து எதைக் கற்றுக் கொண்டார்கள்? என்று பார்க்க வேண்டும். மறுபடியும் இனவாத அரசியலை – முரண்பாட்டு அரசியலை வளர்த்தெடுக்கும் தரப்புகளை அவர்கள் எதற்காக அங்கீகரிக்கிறார்கள்? ஏன் ஆதரிக்கிறார்கள்? மக்களும் மக்களுக்கான ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள் எனப் பொறுப்பான நிலைகளில் இருப்போரெல்லாம் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? எப்படி இந்த நிலைமைகளுக்கான பொறுப்புக் கூறலைச் செய்யக் கூடியவர்களாக உள்ளனர்? 

ஆகவே இது ஒரு கூட்டுத் தவறுகளின் விளைவு. எனவே யுத்தத்திற்குப் பின்பும் நாடு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறது, பிற சக்திகள் நாட்டை பங்கு போடத் துடிக்கின்றன என்றால் அதற்கான கூட்டுப் பொறுப்பும் கூட்டுத் தண்டனையும் அனைவரையும் சேரும். ஆட்டுக்கு உள்ளதே குட்டிக்கும் என்று கிராமங்களில் சொல்வார்கள். அதுதான் இங்கேயும் உள்ளது. எனவே இதற்கு அனைவரும் இணைந்து பரிகாரம் காண வேண்டும். 

போட்டிபோடும் வெளிநாட்டு அரசுகள்  

இப்போது வடக்குக் கிழக்கில் இந்தியாவா சீனாவா செல்வாக்குச் செலுத்துவது என்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது. இது தனியே வடக்கிற்கும் கிழக்கிற்குமான பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த இலங்கைத் தீவுக்கும் இந்தப் பிராந்தியத்துக்குமான பிரச்சினையாகும். அதைப்போலவே அம்பாந்தோட்டை, கொழும்புத் துறைமுக விவகாரம் என்பது தனியே அரசாங்கத்துடனான பிரச்சினை கிடையாது. அதுவும் ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினையே. இதைப்போலவே ஜனநாயக நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்றவை எல்லாம் ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவின் நெருக்கடியாக  – அனைத்து மக்களுடைய நெருக்கடியாக – உள்ளது. இதில் எந்தப்பிரதேசமும் விடுபடுவதுமில்லை. தப்புவதுமில்லை. அப்படியே, எந்த ஒரு இனமும் தப்பிப் பிழைத்து விட முடியாது. சில விடயங்களில் இன ரீதியான அழுத்த வேறுபாடுகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பொருளாதார நெருக்கடி, ஜனநாயக நெருக்கடி, பிராந்தியப் பாதுகாப்பு நெருக்கடி, வெளிச்சக்திகளின் தலையீடு மற்றும் ஆதிக்க நெருக்கடி போன்றன எல்லாம் அனைவருக்கும் பொதுவானவை. குறிப்பாக அடிநிலை மக்களை கடுமையாகப் பாதிப்பவை. 

நிலைமையைப் புரிந்த தலைமை தேவை 

ஆகவே இதற்கு இதைப் புரிந்து கொண்டு துணிச்சலோடு காரியமாற்றக் கூடிய தரப்புகளே இன்று தேவை. அப்படியான தரப்புகளும் (கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும்) தலைவர்களுமே இலங்கையை மீட்டெடுப்பதற்கு தேவையாக உள்ளது. தூர நோக்கும் விரிந்த மனப்பாங்கும் உடைய தீர்க்க தரிசனமுடைய தலைவர்களும் தரப்புகளும் இல்லையென்றால் நாடு இதையும் விடக் கீழ்நிலையே நோக்கிச் சரியும். 

உண்மையைச் சொன்னால், யுத்தத்தின் அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு புதிய சூழலுக்கான அரசியலை – அரசியற் பண்பாட்டை உருவாக்கக் கூடிய தலைமைத்துவத்தின் தேவையே இன்று தேவை. அல்லது இன்றுள்ள தலைமைகள் இதற்கு ஏற்றவாறு தாம் மாறிக் கொள்ள வேண்டும். 

ஆட்சியதிகாரத்தில் யாரும் அமரலாம். அவர்கள், எத்தனை தடவையும் அதிகாரத்தில் இருக்கலாம். இதொன்றும் முக்கியமானதல்ல. அவர்கள், தமது காலத்தில் ஆட்சியை எப்படி நடத்திச் செல்கின்றனர் என்பதே வரலாற்றின் விளைவுகளை மதிப்பிட வைக்கும். வரலாற்றுச் சிறப்புகளையும் உருவாக்கும். மக்களின் நெருக்கடிகளை எவர் ஒருவர் குறைத்து அவர்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்கி உயர்த்தி விடுகிறார்களோ, அவர்களே வரலாற்று நாயகர்கள். அவர்களே உண்மையான தலைவர்கள். மக்களுக்கான சமூகப் பாதுகாப்பை எவர் ஒருவருடைய ஆட்சி சிறப்பாக உறுதிப்படுத்துகிறதோ அதுவே வரலாற்றுச் சிறப்பாகும். அதுவே அரசியல் மாண்புச் செயலாகும். இலங்கை அத்தகைய ஒரு நிலையையும் தலைமைத்துவத்தையும் கோரி நிற்கிறது.