விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

— வேதநாயகம் தபேந்திரன் — 

1999 ஆம் ஆண்டு; 

மூதூர் கட்டைபறிச்சானில் உள்ள எனது நண்பரின் திருமணத்திற்குச் செல்கிறேன். மணமகள் வீட்டில் திருமணம். தாலி கட்டுதல் உட்பட சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவெய்துகின்றன. 

மதிய உணவு சில்வர் பிளேட்டில் வருகிறது. வெள்ளைக்குத்தரிசிச் சோறு, ஆட்டிறைச்சிக் கறி, பருப்புக்கறி, கரட்சம்பல், கத்தரிக்காய் கறியுடன்கூடிய சுவையான உணவு. ஒரு பிடி பிடித்தேன். செக்கன்ட் சோறு அதாவது இரண்டாம் முறை சோறு தருவார்கள் வாங்கிச் சாப்பிடலாமென நினைக்கிறேன்.  

ஆனால் ஒருவர் வந்து சாப்பிட்ட பிளேட்டைத் தாருங்கள் எனக் கேட்டார். எனக்குச் சோறு போடுங்கள் சாப்பிடப்போகிறேன் என்றேன்.  

இல்லையில்லை, நீங்கள் பிளேட்டைத் தாருங்கள். வேறொரு பிளேட் தருகிறோம். அதில் சாப்பிடலாமென்றார். இதென்னடா புதினமாக உள்ளது என நினைத்துப் பிளேட்டைக் கொடுத்தேன். 

உடனேயே சாப்பிட்ட கை கழுவ ஒருவர் செம்பும் பிளாஸ்ரிக் பாத்திரமும் கொண்டுவந்தார். கைகளைக்கழுவினேன். 

இன்னொருவர் சில்வர் பிளேட்டுகள் கொண்டு வந்து ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டு போனார். இன்னொருவர் சுடச் சுட சம்பா அரிசிச்சோற்றைப் போட்டுக்கொண்டு வர இன்னொருவர் கட்டித் தயிரை கரண்டியால் வெட்டிச் சுடுசோற்றினுள் போட்டுக்கொண்டு போனார். இன்னொருவர் சீனியைப் போட இன்னொருவர் கனிந்த இதரை வாழைப்பழத்தை உரித்துப் போட்டுக் கொண்டுபோனார். 

சுடு சோற்றில் தயிரையும் வாழைப்பழத்தையும் சீனியையும் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டோம். உண்மையில் அது தேவார்மிதமாகத்தான் இருந்தது. 

விருந்தினர்களுக்குத்தான் மச்சச்சாப்பாடு. ஆனால் மாப்பிளை பொம்பிளைக்கு ஏழுவகை மரக்கறிகள் உள்ள பூதாக்கலம் தான் உணவு. பூதாக்கலம் என்பது மணமக்கள் ஒரே வாழையிலையில் ஒன்றாக உணவருந்துவதாகும். 

1998 ஆம் ஆண்டு; 

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்கிறேன். 

திருமணம் முடிய மணமகளின் வீட்டில் மதிய உணவுக்காகச் செல்கின்றோம். 

Self Serve எனும் சுயமாகப் பரிமாறும் முறை. சில்வர் பிளேட்டில் வெள்ளைக்குத்தரிசிச் சோறு, கோழிக் கறி, மரக்கறிகளை எனது விருப்பத்திற்கு விரும்பிய அளவில் சாப்பிடுகிறேன். 

மாப்பிளை பொம்பிளைக்குரிய பூதாக்கலச் சாப்பாடு இங்கும் மரக்கறிதான். 

யாழ்ப்பாணத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மரக்கறி உணவுகளைத்தான் திருமண நிகழ்வில் யாவருக்கும் வழங்குவார்கள். 

ஆனால் மட்டக்களப்புத் திருகோணமலையைப் பரம்பரையிடமாகக் கொண்டோர் மச்ச உணவுகளை வழங்குவது எனக்குப் புதினமாக இருந்தது. 

ஆனால் அது அவர்களது பாரம்பரியம். அதற்கும் தனியானதொரு வரலாற்றுப் பின்னணி இருக்கலாம். மச்சச் சாப்பாடு இல்லாமல் கொண்டாட இது என்ன விரதச் சாப்பாடா என்று அங்குள்ளவர்கள் கேட்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் கிறீஸ்தவ நண்பர்களது மங்கல நிகழ்வுகள் என்றால் நான் தவறவிட மாட்டேன். மச்சச் சாப்பாடுகளை ஒரு பிடி பிடிக்கலாம் அல்லவா. 

1998 ஆம் ஆண்டு; 

திருகோணமலையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியாப் பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். 

திருமண நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறேன். மணவறையில் கோட் சூட் அணிந்து மாப்பிளை மட்டும் தனியாக இருக்கின்றார். 

பள்ளிவாயலில் சமயப் பணியாற்றும் ஹத்தீப் அல்லது உலமா என்பவர் இஸ்லாமிய சமயாசாரப்படி திருமணப்பதிவை நடத்துகின்றார்.  

மணமகளின் தந்தையார் மணமகனுக்கு அடுத்ததாக திருமணப் பதிவுப்பத்திரத்தில் கையெழுத்து இடுகின்றார். 

திருமண ஒப்பந்தம் நிறைவேறியதும் மதிய உணவு.  

சஹன் எனப்படும் வட்ட வடிவமான சில்வர் தட்டு முன்பாக நான்கு பேராக அமர்ந்திருந்தார்கள். நடுவே சோறுபோட்டார்கள். அதனை ஒவ்வொருவரும் தமது வலது கையால் தமது பக்கத்திற்கென அள்ளி எடுத்தார்கள். 

தொடர்ந்து கறிகள் போடப்பட அப்படியே எடுத்துச் சாப்பிட்டார்கள். சகோதரத்துவத்தைக் குறித்த உணவு உண்ணும் முறையே அது. 

எமக்குத் தனித் தனிப் பிளேட்டுகளில் சோறு கறிகளைப் பரிமாறப்போவதாகக் கூறினார்கள். வேண்டாம் வேண்டாம். எமக்கும் அவ்வாறு உணவு தாருங்கள் என்றோம். தந்தார்கள். நாமும் சகோதரத்துவமாக உண்டோம். புதியதொரு மகிழ்வான அனுபவம். 

2002 ஆம் ஆண்டு; 

தம்பலகமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகிறேன். பிரதேச செயலர் விஜேசூரிய சேரின் மகனது திருமண நிகழ்வுக்காக கலேவெல எனும் ஊருக்குச் செல்கின்றோம். மாப்பிளை, பொம்பிளை கண்டிய ராஜ பரம்பரை முறையில் திருமண உடையணிந்து இருந்தனர். 

திருமண நிகழ்வு முடிந்ததும் விருந்து. அங்கு இரு பிரிவாக உபசரணை நடக்கின்றது. சிறியதொரு ஹோலில் உற்சாக போத்தல்கள், அதற்குரிய பைற்சுகள் வெள்ளமாகக் கரை புரண்டு ஓடுகிறது. சில இலட்சம் ரூபா செலவு தாண்டும் போல இருந்தது.   

தகப்பன், மகன் வித்தியாசமில்லாமல் சந்தோசத்தில் மிதக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது பொறாமையாக இருந்தது. 

பலவகை இறைச்சிகள், மீன்வகைகளுடன் அற்புதமான ஒரு மதியஉணவு.  

2012 ஆம் ஆண்டு;  

கிளிநொச்சிக் கடமைக்குச் செல்கிறேன். பூநகரி ஞானிமடப் பிரதேசத்தில் ஒரு வெளிக்கள நிகழ்வு. இரவு தங்கவேண்டிய நிலை. அப் பிரிவின் கிராம அலுவலர் இரவு உணவை ஏற்பாடு செய்தார். 

பனையோலையால் செய்யப்பட்ட தட்டுவத்தில் உணவு பரிமாறினார்கள். தட்டுவம் என்பது கள்ளுக் குடிக்கும் பிளாவை ஒத்த வடிவம். 

பிளா ஒரு பக்கம் முடிந்து கட்டப்பட்டிருக்கும். ஆனால் தட்டுவம் ஒரு பக்கம் சமனாக இரு இடங்களில் கட்டப்பட்டிருக்கும். 

பூநகரியின் வரலாற்றுப் பெருமை சொல்லும் மொட்டைக் கறுப்பன் அரிசிச்சோறு, மீன் கறி, கணவாய்க்கறி, நண்டுக்கறி, சுறா வறை, இறால் பொரியல், ஒடியல் பிட்டு, பருப்புக் கறி, கரட் சம்பல் என அமர்க்களமான சாப்பாடு. எமது ஸ்மார்ட் போனில் படங்களையும் எடுத்துக் கொண்டு மணக்க மணக்க உண்டோம்.  

2019 ஆம் ஆண்டு;  

திருகோணமலை நகரில் அரச பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எனது நண்பரின் மகளின் சாமத்திய வீடு எனப்படும் மங்கைப் பருவ மங்கல நீராட்டுவிழா. 

மண்டபமொன்றில் நடைபெற்றது. அறுசுவையுடன் கூடிய மாமிச உணவு. 

நிகழ்வு முடிந்து திரும்பும் போது எனது நண்பனை ரகசியமாகக் கேட்டேன் ”இது என்ன மச்சான் மச்சச் சாப்பாட்டுக்கு மாறிற்றியோ?” 

மச்சான் இஞ்சத்த ஆக்கள் மச்சத்தைத்தான் விரும்பிச் சாப்பிடுவினம். அதால நாங்கள் முந்தநாள் எமது வீட்டில் சடங்கு சம்பிரதாயக் கொண்டாட்டங்களைச் செய்தோம்.  

இன்று ஹோலில் யாவருக்கும் கொண்டாட்டச் சாப்பாடு மச்சம். நீ இஞ்ச இருந்த காலம் (1997 -2003) போல இல்ல இப்ப. எங்கட யாழ்ப்பாணத்தாக்களின்ர கலியாணமும் இப்படித்தான் நடக்குது” என்றான். 

இட மாற்றம் பண்பாட்டுப் பழக்கத்தை மாற்றுகிறது. 

இப்படியே ஊருக்கு ஊர் மாறுபட்ட திருமண முறைகள் இருக்கும். ஆனால், எங்கு போனாலும் ஒரு பிடி பிடிக்கலாம்.