— சீவகன் பூபாலரட்ணம் —
இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதே எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பிபிசி ஆங்கிலம் மற்றும் குட்ஹவுஸ்கீப்பிங்.கொம் ஆகிய ஊடகங்களை தழுவி இந்த கட்டுரையை எழுதுகிறேன். ஆனால், இதில் முக்கியமாக விவாதிக்கப்படும் “sleep divorce” என்னும் சொல்லுக்கு என்ன தமிழ் சொல்லை பயன்படுத்துவது என்பதுதான் எனக்கு சிக்கலாகியது.
அதாவது இதனை தூக்க விவாகரத்து, நித்திரை விவாகரத்து என்று சொல்லலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், இதற்கு சரியான விளக்கத்தை தரக்கூடிய ஏதாவது வேறு தமிழ் சொல் இருந்தால் யாரும் பரிந்துரைக்கலாம். இப்போதைக்கு இந்தக் கட்டுரையில்“தூக்க விவாகரத்து” என்ற சொற்தொடரை நான் பயன்படுத்துகிறேன்.
சரி விடயத்துக்கு வருவோம். இது தம்பதிகள் குறித்த ஒரு பிரச்சினை. அதாவது அண்மைக்காலமாக உலகெங்கும் பேசப்படும் ஒரு விடயம் என்னவென்றால் தூக்கமின்மை காரணமாக பல தம்பதிகள், கணவன் மனைவி பிரிந்துபோகும் நிலை அதிகமாக ஏற்படுகிறதாம் என்பதாகும்.
அதாவது, கணவனோ, அல்லது மனைவியோ நல்ல குறட்டை விடுபவராக இருந்தால், அல்லது தூங்கும் போது யாராவது ஒருவர் போர்வையை முழுவதுமாக இழுத்துக்கொள்பவராக இருந்தால், அல்லது ஒருவருக்கு நல்ல குளிர்ச்சியான காலநிலை தூங்கும் போது வேண்டும் அடுத்தவருக்கோ கொஞ்சம் வெதுவெதுப்பான சூழல் வேண்டும் என்று இருந்தால், இதனால் அடுத்தவரின் தூக்கம் கெட்டு விடும். உதாரணமாக ஒருவர் நல்ல குறட்டை விடுபவராக இருந்தால், அதனால் அடுத்தவரின் தூக்கம் முற்றாக கெட்டுவிடும். அது அவருக்கும் அவரது துணைக்கும் இடையே பல சந்தர்ப்பங்களில் உடல்நிலையை, உணர்வு நிலையை கெடுத்து கிட்டத்தட்ட திருமண முறிவில் போய் முடிந்து விடுகிறது.
சரி, விவாகரத்து என்ற நிலைக்கு போகவில்லையானாலும், அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யம் முற்றாக இல்லாது போய் ஒரு வெறுப்புனர்வை தம்பதியிடையே இது ஏற்படுத்தி விடுகின்றது.
இப்படியான ஒன்றாகத் தூங்கும்போது ஏற்படும் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதுதான் இன்று தம்பதிகள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை.
அந்தப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகப் பரிந்துரைக்கப்படுவதுதான் இந்த “தூக்க விவாகரத்து”. அதாவது இருவரும் தனித்தனியாக தூங்குவது, பிரச்சினையை தீர்க்கும் என்பது அண்மைக்காலத்தில் ஆய்வாளர்களின் பரிந்துரை. அதாவது தூக்க விவாகரத்துச் செய்துகொண்டால், அது தம்பதிகளின் உறவைப் பாதுகாப்பதுடன், நிஜமான விவாகரத்தையும் தவிர்த்து விடும் என்பது ஆய்வாளர்களின் பரிந்துரை.
கொடுத்து வைத்தவர்கள்
உண்மையில் தம்பதிகள் ஒன்றாக தூங்குவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது பல சந்தர்ப்பங்களில் இருவருக்கும் இனிமையான, நிம்மதியான தூக்கத்தை தருவதுடன் புத்துணர்ச்சியையும் தரும். அவர்களின் பிணைப்பை அதிகரிக்கும். அவர்கள் மிகவும் நெருக்கமான காதலர்களாக தொடரவும் உதவும். ஆனால், அது எல்லாருக்கும் கொடுத்து வைப்பதில்லை. ஒருவர் பெருஞ்சத்தத்துடன் குறட்டை விடுபவராக இருந்தால் அடுத்தவரின் நிம்மதி போய்விடும். தூக்கமுந்தான். சிலர் படுக்கையில் ஒருவரை ஒரு பக்கத்துக்கு உதைத்துத் தள்ளி விடுவார்கள். சிலருக்கு அடுத்தவரின் உடற்சூட்டின் அளவு பிடிக்காது. இப்படி ஒன்றாக தூங்குவதில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படியான சூழலால் இந்த இருவரது உடல்நிலையும் பாதிக்கலாம், உறவும் பாதிக்க வாய்ப்பு உருவாகும். அதுதான் பிரச்சினை.
சில தம்பதிகளுக்கு ஆரம்பத்தில் ஒன்றாக தூங்குவது நிம்மதியா இருந்தாலும், வயது ஆக, ஆக அதில் சிக்கல்கள் உருவாகலாம். பெண்களுக்கு மாதவிடாய் நின்று போகும் காலங்களில் உடற்சூடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது அவரது கணவருக்கு தூக்கத்தில் இடையூறாக இருக்கலாம்.
ஒன்றாக தூங்குவதன் குழப்பமான வரலாறு
திருமணமான தம்பதி ஒன்றாக தூங்க வேண்டும் என்ற கடப்பாடு உண்மையில் வலுவாக ஏற்படுத்தப்பட்ட ஒரு சமூக நியதி அல்ல. இங்கு மேற்குலகில் விக்டோரியா மகாராணியின் காலப்பகுதிவரை குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக உறங்குவதுதான் பிணைப்பான ஒரு சமூகத்தை உருவாக்க வழி என்ற நிலை இருந்ததாம். குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக உறங்குவார்கள்.
இடைக்காலத்தில், தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் தரையில் குடும்பத்தோடு ஒன்றாகத்தான் தூங்குவார்களாம். ஆடு, மாடும் அவர்களோடுதான் தூங்குமாம். குளிரான ஊரில் வெதுவெதுப்பாக உறங்கவும் பாதுகாப்புக்கும் இந்த ஏற்பாடு உதவியுள்ளது.
15ஆம் நூற்றாண்டில்தான் கட்டில்கள் மேற்கில் அறிமுகமாகியுள்ளன. வசதி படைத்தவர்கள் தமது வசதிகளுக்கு ஏற்ப பெரிய அறைகளை கட்டி, அதில் ஒன்றாக கட்டில்களில் தூங்கினார்களாம். அப்போது எஜமான எஜமானிகளோடு, அவர்களது வேலைக்காரர்களும் பெண்களும் ஒன்றாக தூங்குவார்களாம். எஜமானுக்கு தேவைப்படும் போது உடனடியாக உதவுவதற்காக இந்த ஏற்பாடு.
ஆனால், 19 ஆம் நூற்றாண்டில்தான் தனித்தனியான கட்டில்களும், அறைகளும் அறிமுகமாகியுள்ளன. கிருமித் தொற்றுக்களை தவிர்க்கவும், பெண்களுக்கான புதிய சுதந்திரத்தை வலியுறுத்தவும் இந்த ஏற்பாடு படிப்படியாக வந்துள்ளது.
ஆனால், 1970 களின் பின்னர் பெண்கள் தனியாக தூங்குவது பழைய பாணி என்று சொல்லி மீண்டும் இரட்டைக் கட்டில்கள் அறிமுகமாகிவிட்டன. இந்த நிலை இன்றுவரை தொடர்கிறது.
உறவு தொடர உதவும் தனியான தூக்கம்
ஒருவருக்கு இரவில் 7 மணிநேரம் உறக்கம் அவசியம் என்று அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் என்னும் அமைப்பு பரிந்துரைக்கிறது. இது பாதிக்கப்பட்டால், அது உங்களது துணையுடனான உறவையும், உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தூக்க குறைபாடுகளும், உறவுச் சிக்கல்களும் ஒரே நேரத்திலேயே பெரும்பாலும் ஆரம்பமாவதாக 2016ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று கூறுகின்றது. ஒரு ஜோடியில் ஒருவரின் தூக்கம் அடுத்தவரின் இரவு நடத்தை குறைபாடுகளால் (குறட்டை போன்றவை…) பாதிக்கப்பட்டால், அடுத்த நாள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாக 2013 ஆம் ஆண்டின் மற்றுமொரு ஆய்வு கூறுகிறது.
ஜோடிகளை பொறுத்தவரை குறட்டை, ஒருவர் காலந்தாமதித்தும் அடுத்தவர் நேரத்தோடும் உறங்கச் செல்வது போன்ற பழக்கங்கள், இரவில் கட்டிலில் புரண்டு படுக்கும் பழக்கங்களும் ஜோடிகள் தனித்தனியான படுக்கையை நாடக் காரணமாகின்றன.
அதேவேளை, அவர்கள் தனித்தனியாக தூங்குவதால் (தூக்க விவாகரத்து!) அவர்களின் உறவு பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படுவதாகவும், அவர்களின் உடல் மற்றும் உளநிலைக்கு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதயம் மற்றும் இரத்தக்குழாய்களை பழுதுபார்க்கவும், சுகப்படுத்தவும், உடற்பருமனை குறைக்கவும், மூளையின் சிந்தனைத் திறன் மேம்பாட்டுக்கும், ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கவும் ஆரோக்கியமான தூக்கமும் உதவுகிறது என்று அமெரிக்காவின் தேசிய தூக்க அறக்கட்டளையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தூக்க விவாகரத்துக்கான ஏற்பாடு
உங்கள் துணையும் நீங்களும் தனித்தனியாக தூங்குவதுதான் வழி, அதாவது நீங்கள் இருவரும் தூக்க விவாகரத்தை செய்து கொள்வதுதான் உங்கள் உறவு நீடிக்க ஒரே வழி என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால், ஏன் அதனைச் செய்யப்போகிறீர்கள் என்பதையும், அது உங்கள் துணையை நிராகரிக்கும் ஒரு விடயமல்ல என்பதையும் நீங்கள் உங்கள் துணைக்கு விளக்கியாக வேண்டும். அவருக்கு நிலைமையை சுமூகமாக புரிய வைக்க வேண்டும். உங்கள் துணையை தள்ளிவைக்க நீங்கள் விரும்பவில்லை, அவருடனான உறவை தொடருவதற்காகத்தான் இந்த ஏற்பாடு, உங்கள் நித்திரை பிரச்சினைக்கான தீர்வே இது என்பதை அவருக்கு நீங்கள் புரிய வைக்கவேண்டும்.
இவை குறித்து நிறைய காலம் எடுத்து அலசி, ஆராய்ந்து, கலந்துரையாடி தூக்க விவாகரத்து செய்வது என்ற முடிவுக்கு நீங்கள் வரவேண்டும். அதற்கு நிறைய அவகாசம் அவசியம். உங்கள் துணையின் மனநிலை குழம்பாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேவேளை உங்கள் உடல்நிலையையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அதுமாத்திரமன்றி, நீங்கள் எடுக்கும் தூக்க விவாகரத்துக்கான முடிவு உங்கள் உறவையும் பாதுகாக்க வேண்டும். நிஜமான விவாகரத்தை தவிர்க்க வேண்டும்.
தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டும், உங்கள் இரவுகள் அமைதியாகட்டும், உங்கள் தழுவல் அதற்காக தவிர்க்கப்பட்டாலும் உறவு நிம்மதியாக நீடிக்கட்டும். காதல் வாழட்டும் தனியான தூக்கத்தால்.