‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய அரசியல்’- (சொல்லத் துணிந்தேன்—59)

‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய அரசியல்’- (சொல்லத் துணிந்தேன்—59)

    — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—   

03.02.2021 இல் பொத்துவிலில் ஆரம்பித்து 07.02.2021 இல் பொலிகண்டியில் முடிவுற்ற ‘பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரைக்குமான பேரணி’ குறித்துத் தமிழ் அச்சு ஊடகங்களும் மின்னிதழ்களும் சமூக வலைத்தளங்களும் மிகப் பிரம்மாண்டமான செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன/வெளியிட்டு வருகின்றன. 

எழுந்தமானமாகப் பார்க்கும் போது தமிழ் பேசும் இனத்தின் ஒன்றுபட்ட ‘பேரெழுச்சி’யாகத்தான் இது தோற்றம் காட்டுகிறது என்பது உண்மைதான். இந்தப் பேரணி வெற்றியா? தோல்வியா?  என்பதை ஆராயாமல் நடந்து முடிந்துள்ள இப்பேரணி பற்றிய எனது அவதானங்களை வெளிப்படுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும். 

1956 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘திருமலை யாத்திரை’ என அழைக்கப்பெற்ற பேரணி ஒன்றை இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தழுவியதாக நடத்தியது. வடக்கின் யாழ்குடா நாடு மற்றும் வன்னிப் பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட அணியும் கிழக்கில் அக்கரைப்பற்று தென்பகுதியிலிருந்து (திருக்கோவிலில் இருந்து அமரர் அறப்போர் ஆர்.டபிள்யூ. அரியநாயகம் தலைமையில்) புறப்பட்ட அணியும் திருகோணமலையில் ஒன்று சேர்ந்தமைதான் ‘திருமலை யாத்திரை’ என்பது. வரலாற்றுப் போக்கில் இந்த யாத்திரையின் நேர் விளைவுகள் என்னவெனில் வடக்குக் கிழக்குத் தமிழர்களைத் தமிழரசுக் கட்சி அணிதிரட்டியதும் அதன் பின்னர் வந்த எல்லாப் பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சி தனது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொண்டதும்தான்.  

எதிர் விளைவு என்னவெனில் தமிழரசின் குவிமையமாகத் திருகோணமலையைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளுக்குத் திருகோணமலையைத் தமிழர்களிடமிருந்து கைப்பற்றித் தம் வசப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தீவிரப்படுத்தியதால், திருகோணமலை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான பிரதேசங்கள் பௌத்த சிங்கள மயமாக மாறிக்கொண்டு/ மாற்றப்பட்டுக் கொண்டு வருவதாகும். மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய அரசியலால் வந்த வினை இது. 

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை 1949இல் அக்கட்சி தோற்றம் பெற்ற பின்னர் 1952 இல் சந்தித்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் கோப்பாய்த் தொகுதியிலும் (அமரர் கு. வன்னியசிங்கம்) கிழக்கில் திருகோணமலைத் தொகுதியிலும் (அமரர் ஆர். இராஜவரோதயம்) மட்டுமே வெற்றியீட்டியிருந்தது. அடுத்து வரும் தேர்தல்களில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கு அன்று இருந்தது. அதில் வெற்றியும் பெற்றது. 

கடந்த 05.08.2020 இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு வடக்குத் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வாக்கு வங்கிச் சரிவையும் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ‘பொத்துவில்-பொலிகண்டி யாத்திரை’ யின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. 

இது ஒருபுறமிருக்க, இந்த ‘P2P’ பேரணியானது அரசியல் கட்சிகள் அல்லாத சிவில் சமூக அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டதாகவும் ஊடகங்களில் காட்டப்படுகிறது.  

இப்பேரணி ஆரம்பித்து வைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சிவில் சமூக அமைப்புக்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இரகசியமாகவேனும் இப்பேரணியின் ஏற்பாடுகள் குறித்த முன்னோடிக் கலந்துரையாடல்களை நடத்தியதாகத் தகவல்கள் இல்லை. அன்றியும் குறைந்தபட்சம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்தானும் உள்ள குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உதாரணமாக ‘அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம், ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’, ‘அம்பாறை மாவட்ட இந்து நிறுவனங்களின் ஒன்றியம்’, ‘மட்டக்களப்பு சிவில் அமைப்பு’ போன்ற முன்னணி அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்கூட இப்பேரணியின் ஆரம்பத்தில் பிரசன்னமாயிருக்கவில்லை. மட்டுமல்ல, ஊர்ப் பொதுமக்களும் இதில் பங்கு பற்றியதாக இல்லை. இப்பேரணியை ஒழுங்கு செய்த சிவில் சமூக அமைப்புக்கள் எவை என்பது இன்றுவரை வெளித்தெரியாததொன்றாகவே இருக்கிறது. 

பேரணியைப் பொத்துவிலில் தொடக்கி வைத்தவர்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் (யாழ் மாவட்டம்), இரா. சாணக்கியன் (மட்டக்களப்பு மாவட்டம்), கலையரசன் (திகாமடுல்ல மாவட்டம்) ஆகியோரும் மற்றும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவர்), மற்றும் இந்து மதகுருவான வேலன் சாமிகளும் கத்தோலிக்க மதகுருவான எழில் அவர்களும்தான் முன்னிலை வகித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா. ஸ்ரீநேசன் ஆகியோரும் (மூவரும் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள்) இவர்களுடன் இணைந்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுள் தமிழரசுக் கட்சியை சேர்ந்த மா.நடராசாவைத் (மட்டக்களப்பு மாவட்டம்) தவிர வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை. கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் சந்திரசேகரம் ராஜனைத் தவிர வேறு எவரும் பொத்துவில் பக்கம் தலை காட்டவே இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் /முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவும் முன்னாள் பொதுச் செயலாளர் /முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்/ மாகாண அமைச்சர் கி.துரைராசசிங்கமும் இப்பேரணியில் இருந்து முற்றாக ஒதுங்கியிருந்துவிட்டனர். இவர்கள் இருவருக்கும் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் இல்லையாதலால் இதில் இருந்து ஒதுங்கி விட்டனர்போலும். கலந்துகொண்ட மேற்கூறப்பட்ட ஏனைய பிரமுகர்களில் வேலன்சாமியையும் ‘பாதர்’ எழிலையும் தவிர ஏனையோருக்கு மாகாண சபைத் தேர்தல்/ பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் உண்டு போலும். வேறு என்னவோவற்றிற்கெல்லாம் அடிக்கடி அம்பாறை மாவட்டத்திற்குக் ‘காவடி’ எடுக்கின்றவரும் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டம்) அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டவரும் தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா பேரணியை ஆரம்பித்து வைக்கத்தானும் அம்பாறை மாவட்டத்திற்கு (பொத்துவிலுக்கு) வரவில்லை. மட்டுமல்லாமல் குடுகுடுப்பைச் சாத்திரக்காரன் மாதிரி ‘போராட்டம் வெடிக்கும் போராட்டம் வெடிக்கும்’ என அடிக்கடி கூறிக்கொண்டு இருந்தவரும் இவர்தான். இப்போராட்டம் (பேரணி) வெடிக்காது என அவர் நினைத்துக்கொண்டிருந்துவிட்டார் போலும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான க.கோடீஸ்வரனும் இதில் பங்கு கொள்ளவில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நடத்தை இவ்வாறிருக்க இன்னொரு பங்காளிக் கட்சியான ‘டெலோ’ வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பேரணியை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தார். ஆனால், பேரணியை ஆரம்பித்து வைக்க அவரும் வரவில்லை. மட்டக்களப்பு மாவட்ட பா.உ. ரெலோவைச் சேர்ந்த கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அமைதியாக வந்து எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கலந்து கொண்டார். மற்றுமொரு பங்காளிக் கட்சியான ‘புளொட்’ ஐப் பொறுத்தவரை அதன் தலைவர் த.சித்தார்த்தன் பா.உ. ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக இருந்து விட்டார். அவருடைய கட்சிக்காரர் என்று எவரும் பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) ஐப் பொறுத்துவரை அக்கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் என்பவரே பொத்துவிலுக்கு வந்திருந்தார். அக்கட்சியின் தலைவரும் செயலாளருமான முறையே கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பா.உ. உம், கஜேந்திரன் பா.உ. உம் பொத்துவிலுக்கு வரவில்லை. 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைப் பொறுத்தவரை அதன் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் பா.உ னோ அல்லது அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரனோ பொத்துவிலில் பிரசன்னமாயிருக்கவில்லை. ஆனால் அக் கட்சியின் செயலாளரான வன்னி மாவட்ட முன்னாள் பா.உ. சிவசக்திஆனந்தன் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார். ஆனால், அவரும் பொத்துவிலுக்கு வரவில்லை. 

இந்தப் பின்புலத்தில் பின்வரும் கேள்விகள் எழுகின்றன. 

* இந்தப் பேரணியின் ஏற்பாடுகளில் உண்மையில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சம்பந்தப்படாமல் இது சிவில் சமூக அமைப்புகளினால்தான் ஒழுங்கு செய்யப்பட்டனவென்று ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டால், இப்பேரணியானது தமிழ்த் தேசிய இனத்திற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததெனின்- இப்பேரணி ஆரம்பித்த இடமான பொத்துவிலுக்கு எல்லாத் ‘தமிழ்த் தேசிய கட்சி’களினதும் தலைவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை முன்னணியில் விட்டுப் பின்னால் வந்து கலந்து கொண்டிருந்தால்தானே அது பேரெழுச்சியாக இருந்திருக்கும். சிவில் சமூக அமைப்புகளை உற்சாகப்படுத்துவதாகவும் இருந்திருக்கும். அது ஏன் நடைபெறவில்லை? 

* இன்னொரு வகையில் பார்த்தால், சிவில் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கருதப்படும் இப்பேரணியில் ‘தமிழ்த் தேசிய’க் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு இதனை அரசியலாக்கக் கூடாது. பொதுமக்கள் மட்டுமே கலந்து கொண்டு பொது மக்களால் மட்டுமே இப் பேரணி முன்னெடுக்கப்படட்டும் என்ற நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இருந்திருக்குமேயானால் அல்லது இருந்தது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் பொத்துவிலில் வைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், கலையரசன் மற்றும் ஜனாவும் அவர்களுடன் ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், யோகேஸ்வரன் மற்றும் சிறிநேசன் ஆகியோரும் ஏனைய கட்சி முக்கியஸ்தர்களும் மற்றும் பேரணியின் இடைநடுவில் ஒவ்வொரு இடங்களில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் ஏன் கலந்துகொண்டார்கள்? முழுக்க முழுக்கப் பேரணி விவகாரத்தைப் சிவில் சமூக அமைப்புகளிடமே விட்டிருக்கலாமே. பொதுமக்கள் சார்பில் இப்பேரணியின் ஆரம்பத்திலிருந்தே கலந்துகொண்டு முன்னணி வகித்த வேலன் சாமி மற்றும் கத்தோலிக்க மதகுரு ‘பாதர்’ எழில் ஆகியோர் தாங்கள் புற்றெடுக்கச் சுமந்திரன் குழுவினர் குடி கொண்டுவிட்டனர் என்ற வகையில் திருகோணமலையில் வைத்துக் குழம்பினார்கள்/ குற்றம் சுமத்தினார்கள் என்ற தகவலும் உண்டு. அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து மின்னிதழாக வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகை இப்பிரச்சனையைத் தொட்டுக்காட்டி இப்பேரணியை ஏற்பாடு செய்ததில் வேலன் சாமிக்கும் பாதர் எழிலுக்கும் சம்பந்தமில்லை. சுமந்திரன்- சாணக்கியன் அணிதான் இதன் சூத்திரதாரி எனும் தொனிப்படக் குறிப்பிட்டுச் ‘சுமந்திரன்-சாணக்கியன்’ அணியினரைப் போற்றித் துதிபாடியிருந்தது. 

இத்தகைய நிலைமைகளால் இப்பேரணியானது நன்கு திட்டமிடப்படவில்லையென்பதும்- தமிழரசுக் கட்சிக்குள்ளே மாவை சேனாதிராசா அணியினரை முற்றாக ஓரங்கட்டும் வகையிலும் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனக் கருதப்படும் ஏனைய கட்சிகளான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் செல்வாக்கிழக்கச் செய்யும் வகையிலும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே அதன் ஏனைய பங்காளிக் கட்சிகளாகத் திகழும் ‘ரெலோ’ வையும் ‘புளொட்’ டையும் கூட ஓரங்கட்டி தமிழரசுக்கட்சி ஒன்றையே முன்னிலைப்படுத்தும் வகையிலும்- எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தலைமைப் பீடங்களைச் சுமந்திரன்- சாணக்கியன் அணி கைப்பற்றும் வகையிலும் ‘தமிழ் பேசும்’ இனத்தின் ‘ஹீரோ’க்களாக சுமந்திரனும்–சாணக்கியனும் அரசியல் மேடையேறும் வகையிலும், சிவில் சமூக அமைப்புக்கள் எனும் போர்வையில் ‘சுமந்திரன்- சாணக்கியன்’ அணியினரால் ‘சுடுகுது மடியப்பிடி’ எனும் கணக்கில் அவசரம் அவசரமாகவே பேரணி நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் (இணையம்) தலைவரான எஸ். சிவயோகநாதன் என்பவர் கொடுத்த கயிறை சாணக்கியன் விழுங்கிக் கொண்டதாகவும் பின் அதன் தொடர்த்தேர்ச்சியாய்ச்  சாணக்கியன் கொடுத்த கயிறைச் சுமந்திரன் விழுங்கிக் கொண்டதாகவும் அதுவே இப்பேரணியின் ‘ரிஷிமூலம்-நதிமூலம்’ என்ற தகவலும் கிழக்கைச்சேர்ந்த சிவயோக நாதனுக்கு வடக்கிலிருந்து வேலன் சாமியும் ‘பாதர்’ எழிலும் உதவியுள்ளனர் என்ற விடயமும் இப்போது மெல்லக் கசிந்துள்ளன. இப்பேரணி பற்றிய மேலதிக அவதானங்களை அடுத்த பத்தியிலும் (சொல்லத் துணிந்தேன்-60) பார்க்கலாம்.