சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! (18)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (18)

    — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —  

“இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை” 

எங்கே எது நடக்கும், என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்று தெரியாமல் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற பதற்றத்துடன் நாடகவிழாவை நடத்த வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு இருந்ததால் சில சம்பிரதாய விடயங்களையும் வழமைகளையும் தவிர்த்த்துக்கொண்டோம். 

செவ்வக வடிவமான விளையாட்டு மைதானத்தில், கிழக்குப்பக்கத்தில் நாடக மேடையை அமைத்திருந்தோம். அது மேற்குப் பக்கத்தை நோக்கி இருந்தது. மேடைக்குப் பின்னால், ஏழெட்டு மீற்றர் தூரத்தில் பனைமரம் ஒன்று நின்றிருந்தது. மேடையிலே நந்திவர்மனைச் சூழ்ந்த நெருப்புச் சுவாலை மேலெழுந்து, நாடகக் காட்சி பார்வையாளைகளைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தபோது, சில நொடிகளில் பனைமரத்தின் உச்சியும் பற்றி எரியத்தொடங்கியது. 

மேடையில் நந்திவர்மன் நெருப்பில் எரிந்ததும், மேடையின் பின்னால் பனைமரத்தில் நெருப்பு எழுந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக ஆரம்பித்து,  

ஏறத்தாழ ஒரே நேரத்தில் நடந்ததால், நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஏற்பட்ட பதற்றமும், பரபரப்பும் பரவசமாக மாறிற்று. அந்தக் காட்சியின்போது அல்லாமல் வேறு நேரத்தில் பனைமரம் பற்றியிருந்தால், மக்கள் எழுந்து தாறுமாறாக ஓடத்தொடங்கியிருப்பார்கள். இப்போதும்கூட – 48 வருடங்கள் கடந்த பின்னரும் – நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சு பதறுகின்றது. 

நடந்தது எதுவுமே, மேடையில் நடித்துக்கொண்டிருந்த எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த நாடகவிழாவுக்காக நாங்கள் அமைத்திருந்த பாதுக்காப்புத் தொண்டர்படை நண்பர்களும், பொலீசாரும் துரிதமாகச் செயற்பட்டு, பற்றியெரியும் பனையோலையின் எச்சங்கள் மேடையில் விழுந்துவிடாதபடி காப்பாற்றினார்கள். நடந்த அசம்பாவிதத்தின் எந்த அறிகுறியும் பார்வையாளருக்குத் தெரியாதபடி பார்த்துக்கொண்டார்கள். எவ்வித இடையூறும் இல்லாமல் நாடகவிழா தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. விழா முடிந்து பார்வையாளர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போதுதான் எனக்கும் இன்னும் சிலருக்கும் விடயமே தெரிவிக்கப்பட்டது. 

என்ன நடந்தது பனை மரத்தில் அந்தத் தீ எப்படிவந்தது என்பதைச் சொல்வதற்கு முன்னர், ஊரில் நடைபெற்ற சில சம்பவங்களைத் தெரியப்படுத்துவது அவசியமாகின்றது. 

நாடகவிழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்னர், தலைவர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு வரும்படி செய்தி அனுப்பினார். செய்தி வரும்போது மாலை இரவாக மாறிக்கொண்டிருக்கும் நேரம். பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய பாடசாலை மண்டபம் ஒன்றில் நாங்கள் நாடகப் பயிற்சியில் இருந்தோம். பயிற்சியில் இருந்த எல்லோரும், உடனே அங்கே சென்றோம். அவரது இல்லத்தின் முன் மண்டபத்தில் எங்கள் ஊரவர்கள் பலர் ஏற்கனவே நின்றுகொண்டிருந்தார்கள். எல்லோரும் எங்களுக்குத் தெரிந்தவர்கள்தான், எங்களுக்கு உறவினர்கள்தான். அவர்களில் வாய்ச் சண்டைக்கார௫ம் இருந்தார்கள், வன்முறைச் சண்டியர்களும் இருந்தார்கள். கடந்த தேர்தலில் இராசமாணிக்கம் அவர்களது தோல்விக்கு முற்றுமுழுதான காரணவான்களில் பலர் அங்கே நின்றிருந்தார்கள்.  

தலைவரிடம் அவர்கள் மிகவும் அழுத்தமாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வருகையைக் கண்டதும், சொல்லிவைத்ததுபோல பேச்சு நின்றுவிட்டது. 

“ஓ…வந்திற்றீங்களா? …வாங்க. உள்ளுக்குள்ள வாங்க” என்று அழைத்தார், இராசமாணிக்கம் அவர்கள். எல்லோரையும் ஒருமுறை புன்சிரிப்புடன் நோக்கினார். பின்னர் என்னைப்பார்த்து, “என்ன ஸ்ரீ…. இவங்க என்னென்னவோ எல்லாம் சொல்றாங்க…. என்ன நடக்குது?” என்று கேட்டார். 

“என்ன?… என்ன விசயம்… என்ன சொல்றாங்க…” என்று நான் கேட்டேன். 

அவர் பதில் சொல்லு முன்னரே, எங்கே எது நடந்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் நிற்கும் “தேர்தல்காலச் சண்டியர்” ஒருவர், உடனே,   ” நீங்கெல்லாம் இப்பிடி ஒரு பெரிய விழாவை ஆருட்டக் கேட்டுச் செய்யுறீங்க?” என்று கேட்டார். 

என் பின்னால் நின்றிருந்த நண்பர்களின் உதடுகள் துடிப்பதை உணர்ந்துகொண்ட நான், அவர்களைப் பேசவேண்டாமென்றும் நான் பேசுகிறேன் என்றும் சைகையால் சொல்லிவிட்டு, மிகவும் அமைதியாகக் கேட்டேன், “ஆருட்டக் கேட்கோணும் அண்ணன்?” 

“ஊரில எவ்வளவோ பெரிய ஆக்கள் இருக்கிறாங்க… அவங்களிட்டக் கேட்டயளா?” 

“ஏன் கேட்கோணும்? நாங்களும் இந்த ஊர்தானே? இந்த ஊரில ஒரு நாடக விழாவச் செய்யுறத்துக்கு மற்றவங்களிட்ட ஏன் கேட்கோணும்?” 

உடனே… அவர்களில் இன்னும் சிலர்… ஏதேதோ எல்லாம் சொல்லிக் கத்தினார்கள்.  

“எல்லா ஊர்களிலயும் டிக்கற் வித்திருக்கீங்க. நாளைக்கி ஏதாவது நடந்தா… ஊர்ர மானம்தான் போகும். இதுக்கெல்லாம் ஆரு பதில் சொல்லுற….” ஒருவர் சத்தமாகக் கேட்டார். “அதுதானே… அதுதானே..” என்று சிலர் ஒத்து ஊதினார்கள். 

இவ்வளவும் நடக்கிறது. இராசமாணிக்கம் அவர்கள் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டு, அவர்களையும் பேசவிட்டுக்கொண்டு கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார். 

நான் அவரைப் பார்த்துக் கேட்டேன். “இப்ப என்ன பிரச்சினை எண்டு எங்களுக்கு இன்னும் விளங்கல்ல. நீங்க வரச்சொன்னீங்க எண்டுதான் வந்தம், நாங்க இப்ப என்ன செய்யோணும் எண்டு சொல்லுங்க” என்றேன். 

“அவங்களிட்ட எல்லாம் நீங்க எந்த உதவியும் கேட்கல்லயாம் எண்டு சொல்றாங்க” 

“இதுவரையில அவங்கட உதவி எங்களுக்குத் தேவைப்படல்ல. தேவைப்பட்டாக் கேட்கிறமே….” 

அவர்கள் மத்தியிலேயிருந்து அந்த முந்திரிக்கொட்டை ஆக்ரோசமாகக் கேட்டது, 

 “எங்கட உதவி இல்லாம நீங்க எப்பிடி நடத்துறீங்க எண்டு பாப்பம்” 

எங்களில் ஒருவரான புலேந்திர அண்ணன்,  

” அப்ப நாடகத்தில நடிக்கிறதுக்கு ஒரு ஆள் வேணும்.. வாறயளா?” என்று, பட்டென்று கேட்டார். 

கொல்லென்ற சிரிப்பொலி எங்கள் பக்கத்திலிருந்து எழுந்ததை அவர்களால் தாங்க முடியவில்லை.  அதேவேளை கோபத்தோடு எங்களைத் தலைவர் பார்த்ததை, எங்களால் தாங்க முடியவில்லை. இரண்டு பகுதியிலும் சலசலப்பு எழுந்தது. நான் இரண்டடி முன்னே சென்று சற்று, அழுத்தமாகக் கூறினேன் 

“எங்களால இந்த விழாவை நடத்த முடியும் எண்டு நினைக்கிறம். இவங்களிட்ட உதவி கேட்கல்ல எண்டா… அது ஒரு குற்றமா….? இவங்களுக்கு உண்மையான ஊர்ப்பற்று இருந்தா, என்ன உதவி வேணும் எண்டு எங்களிட்டக் கேட்கலாமே… அத விட்டுற்று….” 

சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தார் தலைவர் இராசமாணிக்கம் அவர்கள். சற்றுக்கோபத்துடன், என்னைப்பார்த்து, ” என்ன நீ பெரிய ஹிட்லர் மாதிரிக் கதைக்கிறாய்? இவ்வளவு எதிர்ப்பு இருக்கக்குள்ள நீங்க எப்பிடி விழாவை நடத்த முடியும்?” என்று கேட்டார்.  

“ஐயா… இவங்க ஏன் எதிர்க்கிறாங்க எண்டு காரணத்த மட்டும் சொல்லட்டும். அதுக்கு என்ன செய்யோணுமோ நாங்க செய்யுறம். நாங்க இந்த ஊரில எவ்வளவோ வேலைகளைச் செய்து வாறம் எண்டு உங்களுக்குத் தெரியும். அது ஒன்டுக்கும் இவங்க யாரிட்டயும் நாங்க உதவி கேக்கல்ல. எங்களுக்கு உதவி தேவைப்பட்டாத்தானே கேக்க வேணும். இந்த விழாவை நடத்துறது சம்பந்தமாக உங்களோடதான் முதல் முதல்ல கதைச்ச நாங்க. அப்பதான் ரமணி அக்காவயும் நடிக்கக் கேட்டநாங்க…… இப்பவும், இந்த விழாவுக்குச் சில உதவிகளை, மற்ற மன்றங்களிட்டக் கேட்டிருக்கிறம். குமரன் கலாமன்றத்தில, நியூஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தில இருந்தெல்லாம் எங்களுக்கு உதவிகள் செய்யுறாங்க. அதோட, ( படித்த பெரிய அண்ணன்மார் சிலரின் பெயர்களைச் சொல்லி) அவங்கெல்லாம் உதவிசெய்யுறாங்க. இதுக்கு மேல நாங்க என்ன செய்ய வேணும் எண்டு தெரியல்ல….” 

எங்களது தரப்பின் நியாயம் அவருக்குத் தெரியாததல்ல. ஆனால், அவர்களைத் திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காகவே அவர் எங்களோடு கொஞ்சம் கடுமையாகக் கதைக்கிறார் என்பதை நான் மட்டுமல்ல நண்பர்கள் சிலரும் புரிந்துகொண்டோம். அவர் அவர்களது விசுவாசத்தை நம்புவதில் தவறில்லை. ஆனால், அவர்களது செயற்பாடுகளை இன்னும் நம்புவதுதான் எனக்குக் கவலையாக இருந்தது. இவர்கள் எல்லாம் இப்படியே அவரைச் சுற்றியிருந்தால், அடுத்த தேர்தலிலும் வெற்றிகிட்டாது என்பதை நான் அப்போதே உணர்ந்து கொண்டேன். அதற்கிடையில் இவர்களது நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் அல்லது அவரைவிட்டு இவர்களை அகற்ற வேண்டும் என்று நெஞ்சிலே ஒரு தீர்மானம் பிறந்தது. ஆனால் அவை எதற்கும் அவசியம் இல்லாமல், துரதிஸ்டவசமாக அடுத்த தேர்தலில் தலைவரே இல்லாமல் போய்விட்ட கொடுமையை வரலாறு பதிவு செய்துவிட்டமைதான் வேதனை. 

நான் சொன்னதைக் கேட்ட தலைவர், இரு பகுதியினரையும் மாறி மாறிப் பார்த்தார், பிறகு அவர்களைப் பார்த்துச் சொன்னார், “சரி..சரி… ஒரு பெரிய வேலையில இறங்கிற்றாங்கள். அது பிழைச்சிருமோ எண்டு நீங்க நினைக்கிறீங்க. அவங்கள் செய்யட்டும். நீங்களும் உதவி செய்யுங்க… எல்லாரும் சமாதானமாகப் போங்க” என்றார். 

நாங்களும் அரசியல்வாதிகளைப்போல அவர்களுடன்  சிரித்துக் கதைத்துவிட்டு, வெளியேறினோம். அப்போது, ஒரு குரல்…. இப்படிக்கேட்டது. “பாப்பம்… பாப்பம்.. இந்தவிழா எப்பிடி நடக்குதெண்டு.. பாப்பம்!” 

அந்த வார்த்தையைக் கேட்டதிலிருந்து எங்களின் மன அமைதி குலைந்து விட்டது. இவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எங்களுக்குத் தோன்றியது. அன்றிலிருந்து தினமும் இதுபற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தோம். அதே வேளை ஊருக்குள் பல்வேறு கதைகளைப் பரப்பிவிட்டார்கள். நாடகம் நடந்துகொண்டிருக்கும்போது பார்வையாளர் பகுதிக்குள் பாம்புகள் விடப்படும், வெளியே இருந்து தீப்பந்தங்கள் எறியப்படும், நடிகர்கள் சிலர் தாக்கப்பட்டு நிகழ்ச்சியில் பங்குகொள்ள முடியாமல் ஆக்கப்படுவார்கள்…. என்பதுபோன்ற பல கதைகள் பரவிக்கொண்டிருந்தன. என்னென்ன சிறப்பம்சங்களை நாடகங்களில் செய்யவேண்டும், எப்படியெப்படியெல்லாம் நாடகவிழாவை நடத்த வேண்டும் என்றெல்லாம் திட்டங்களைத் தீட்டுவதிலிருந்து திசைமாறி, எப்படியாவது விழாவை நடத்திவிடவேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். 

களுவாஞ்சிகுடி காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒரு முறைப்பாட்டைக் கொடுத்திருந்தோம்.  

எங்கள் நாடக விழாவன்று நாங்கள் கேட்காமலே நான்குபேர் தாமாகவே முன்வந்து எமக்கு மாபெரும் உதவிகளை நல்கினார்கள். நன்றியோடு அந்த நான்குபேரின் பெயர்களைப் பதிவுசெய்தே ஆகவேண்டும். அமரர் க. அல்பேட் சீவரெட்டினம் அவர்களும், அமரர் க.குமாரசாமி (ஆசிரியர்) அவர்களும் விழாவன்று காலையில் இருந்து, மேடை அமைப்புக்கள், திரைச் சீலைகளை ஓடவிடுதல், ஏற்றுதல், இறக்குதல், அவற்றில் செய்யப்படவேண்டிய தொழில் நுட்ப விடயங்களை அனைத்தையும் கச்சிதமாக அமைத்துச் செயற்பாட்டுக்குத் தயாராக்கித் தந்தார்கள். மற்றையவர்களான திரு.சு.விஜயரெத்தினம், திரு. வே.சுப்பிரமணியம் (பழுகாமத்தில் திருமணம் செய்து வாழ்பவர்) ஆகிய இருவரும், விழா ஆரம்பமாவதற்குச் சற்று முன்பிருந்தே, விழாவுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடாதபடியான பாதுகாப்பினை வழங்கினார்கள். அவர்கள் இருவரும் தாங்களாகவே இன்னும் சில இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு, முழு நேரமும் கொட்டகையின் வெளிப்பகுதியைச் சுற்றிவந்துகொண்டிருந்தார்கள். நான்கு காவலர்கள் (பொலீசார்) நாள் முழுவதும் மைதானம் முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.  

எங்கள் வாழ்வில் அதுவரை எவ்வித வன்முறைகளிலும் ஈடுபட்டறியாத நாங்களும், எங்களுடன் இன்னும் சில நண்பர்களும் வன்முறைகளை எதிர்கொள்வதற்குத் தயாராகச் சில ஏற்பாடுகளை இரகசியமாகச் செய்து வைத்திருந்தோம்.  

இந்தச் சூழலில்தான், தங்களது எந்த முயற்சிகளும் வெற்றியடையாத நிலையில், மக்களுக்குப் பீதியை உண்டாக்கி, விழாவைக் குழப்புவதற்காக, மேடையின் பின்னால் நின்ற பனைமரத்தில் தீவைத்திருக்கிறார்கள், அந்தத் தீயவர்கள்! 

நல்ல வேளையாக, நாடகக் காட்சியோடு அது ஒத்துப்போய், அவர்களது எண்ணம் நிறைவேறாமல்  போயிற்று. யாருக்கும் எதுவும் தெரியாதபடி, பனைமரத்தின் தீயை அணைத்து, எதுவுமே நடவாதபடியான ஒரு சூழலை எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். 

இந்த நாடக விழா பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர், நடைபெற்றிருந்தால் அதனைக் குழப்புவது அவர்களுக்குப் பெரிய விடயமாக இருந்திருக்காது. இவர்கள், அவர்களில் ஒருவரிடம் சொல்லி, அவர்கள் ஒரு கைக்குண்டினை வீசி விழாவைக் குழப்புவதற்காகப் பல உயிர்கள் பலியெடுக்கப்பட்டிருக்கும். மறுநாள் விழாவை நடத்திய நாங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்போம். வீசியவர்களே விசாரணையும் நடத்தியிருப்பார்கள். அல்லது ஒரு துண்டுக் காகிதத்தில் செய்தியொன்றை அனுப்பிச் செய்ய விடாமல் தடுத்திருப்பார்கள். யாரிட்ட கட்டளை என்று தெரியாமலே நாங்களும் நிறுத்தியிருப்போம்.  

விழா இனிதே நிறைவுற்றது. மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. 

காவலுக்கு வரும் பொலீசாருக்குக் கொடுப்பதற்கென்று, இரண்டு போத்தல் சாராயம் வாங்கி வைத்திருந்தோம். கடமையில் இருக்கும்போது கொடுத்தால் ஒருவேளை போதையில் மயங்கிவிடுவார்களோ என்று, கொடுக்காமல் வைத்திருந்தோம். விழா முடிந்ததும் கொடுக்க மறந்துவிட்டோம்.  

அந்த இரண்டு போத்தல்களுக்கும் என்ன நடந்தது?  நள்ளிரவு தாண்டி, அதிகாலை ஏறத்தாழ 2.00 மணியளவில், நண்பர்கள் சிலரின் அரங்கேற்றம் நடந்தது.  

(நினைவுகள் தொடரும்)