பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4)

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4)

      — விஜி/ஸ்டாலின் — 

நவீன உலகை தரிசிக்க கப்பலில் புறப்பட்ட பெரியார் 

சுயமரியாதை இயக்கத்தில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளைகளில் திடீரென்று பெரியார் காணாமல் போனார். சுமார் ஒரு வருடம் கழித்து அவர் திரும்பி வந்தபோதுதான் அவரது ஐரோப்பிய பயணம் பிரபல்யமானது.   

தனது அறிவுத்தேடலை விரிவாக்க உலகளாவிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஒரு நீண்ட பயணத்தை அவர் திட்டமிட்டார். மேலைநாடுகளின் அரசியல் பொருளாதார சமூக வளர்ச்சிக்குரிய காரணங்களை ஆராய்வதை நோக்காகக் கொண்டு பலநாடுகளுக்கு சென்றுவரும் நோக்கோடு அப்பயணத்தை ஆரம்பித்தார். பயணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் உலக புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதியையும் “லெனினும் மதமும்” என்கின்ற நூலையும் தனது குடியரசு பத்திரிகையில் தமிழாக்கம் செய்து தொடராக வெளியிட்டார்.    

1931ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி பிரெஞ்சு நாட்டைச்  சேர்ந்த ‘அம்புவாஸ்’ என்ற கப்பலில் தனது பயணத்தை தொடங்கினார் பெரியார். அவர் பயணத்தில் இருந்தபோது அவரது பத்திரிகைகளில் அந்த பயணம் பற்றிய செய்திகள் எதுவும் இடம்பெறாதவாறு பார்த்துக்கொண்டார். ரஷ்யா கம்யூனிசம் போன்ற வார்த்தைகள் அப்போதைய பிரித்தானிய காலனி அரசால் மிக கடுமையாக கண்காணிக்கப்பட்டமை இதற்கு காரணமாக இருக்கலாம்.  

இளமையில் செல்வந்தராயிருந்தும் பொதுவாழ்வில் வந்த பின்னர் சிக்கனத்தையும் எளிமையையும் கடைப்பிடிக்கத் தொடங்கிய பெரியார் “கஞ்சன்” என்று பெயரெடுத்தவர். பொதுப்பணத்தை வீணடிக்கக்கூடாது என்பதற்கு அவர் முன்மாதிரியாக இருந்தமையே அதற்கு காரணம். அதனால்தான்  மூட்டை முடுச்சுக்களை ஏற்றுகின்ற கப்பலின் நான்காம் வகுப்பு மலிவுவிலை பிரிவிலேயே அவர் பயணித்தார். முன்பின் அனுபவமில்லாத கடற்பயணம், காற்றும் குளிரும் வாட்டி வதைத்தன.  

இந்தப்பயணமானது முக்கியமாக இலங்கை, எகிப்து, ரஸ்யா, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன், போத்துக்கல், இங்கிலாந்து என்று சுமார் பத்து நாடுகளை தாண்டியது.  

முதலில் இலங்கையில் கப்பல் தரித்தபோது வெளியே சென்றுவருவதற்கு கிடைத்த ஆறுமணி நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கொழும்பு நகர் சென்று சிலரை சந்தித்துத் திரும்பினார். அதன் காரணமாக ஐரோப்பிய பயணம் முடிந்து வரும் வழியில் இலங்கையிலும் சிலகாலம் தங்கிச்செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டார்.  

சுமார் பன்னிரு நாட்கள் கப்பல் பயணத்தின் பின்னர் எகிப்தை வந்தடைந்தார். மனித இனத்தின் பெரும்சாதனைகளில் ஒன்றான சுயேஸ் கால்வாயின் பிரமாண்டத்தை பார்த்து அதிசயித்து நின்றார். எகிப்தில் சுமார் 11 நாட்கள் செலவிட்டு புராதன நகரங்களின் அழகினையும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளையும் பெரிதும் ரசித்தார். அலெக்ஸாந்திரியா துறைமுகமூடாக கிரீஸ் சென்றடைந்தார். அங்கு வரலாற்றுப் புகழ்பெற்ற ஏதன்ஸ் நகரம், சாக்கிரடீஸ், பிளாட்டோ போன்றவர்களின் நினைவிடங்கள், சிலைகள், வரலாறுகள், பல்கலைக்கழகங்கள் என்று ஒரு நிமிடம் கூட வீணடிக்காது சுற்றி வலம் வந்தார்.  

அதன் பின்னர் துருக்கி தேசத்தில் பெரியார் வந்திறங்கினார். சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்நாட்டை பீடித்திருந்த கொடிய யுத்தத்தின் வடுக்கள் இன்னும் காய்ந்திருக்கவில்லை. ஒட்டோமான் பேரரசின் இறுதி அத்தியாயங்களை வரலாறு எழுதி முடித்திருந்தது. கமால் பாஷாவின் தலைமையில் புதிய துருக்கி பல புரட்சிகர மாற்றங்களுடன் ஒரு மதச்சார்பற்ற தேசமாக எழுந்து நிற்கத் தொடங்கியிருந்தது.   

துருக்கியின் அகன்று விரிந்த சமவெளிகள் வயல் நிலங்கள் அனைத்தும் ஆசியா கண்டத்திலும் வணிக நகரமான கொன்ஸ்ந்தாந்துநோபிள் ஐரோப்பிய நிலப்பரப்பிலும் இருந்தது. புரட்சிக்கு முன்னரான வரலாற்றுக் காலங்கள் முழுக்க கொன்ஸ்தாந்துநோபிள் என்றறியப்பட்ட அந்த பட்டினம் இஸ்தாம்பூல் என்று அழைக்கப்படும் புதிய வரலாறு தொடங்கியிருந்தது.  

அந்த பட்டினத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சுதந்திர சதுக்கத்தில் எழுந்து நின்ற கமால் பாஷாவின் உருவச்சிலை பெரியாரை கவர்ந்திழுத்தது. கமல் பாஷாவின் தலைமையில் இடம்பெறத் தொடங்கியிருந்த மதபீடங்களின் அதிகாரம், மற்றும் மூட நம்பிக்கை போன்றவற்றுக்கெதிரான வேலைத்திட்டங்களை துருவித்துருவி அறிந்துகொண்டார் பெரியார். நிச்சயமாக  ஐரோப்பாக் கண்டத்தையும் ஆசியாவையும் பிரிக்கின்ற அந்த மார்மரா கடலின் வனப்பை ரசிப்பதற்கு அவருக்கு அப்போது நேரம் வாய்த்திருக்கமாட்டாது. அதனால்தான் பெரியாரின் பிற்கால உரைகளில் அடிக்கடி கமல் பாஷா நினைவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தார். 

ஸ்டாலின் பெரியாரை சந்தித்தாரா 

அவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளான பொதுவுடைமை ரஸ்யாவை பார்வையிடுவதற்கான நாட்கள் நெருங்கியிருந்தன. ஒடேசா துறைமுகம் சென்றடைந்த பெரியார் அங்கிருந்து உக்ரைன் வழியாக மொஸ்கோ நோக்கிய நெடுந்தூர ரயில் பயணத்தை ஆரம்பித்தார். பெப்ரவரி மாதம் 20 டிகிரி குளிரின் கொடுமை சொல்லிமாளாது. நதிப்படுக்கைகள் எல்லாம் உறைந்து கிடந்தன. அவற்றின் மீது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும், குதிரைவண்டிகளும் கூட தாராளமாக நடமாடிக்கொண்டிருந்தன. மொஸ்கோ வந்தடைந்த பெரியாருக்காக சோவியத்தின் ஒன்றியம் அவரை ‘அரச விருந்தினராக’ அங்கீகரித்திருக்கின்ற மகிழ்ச்சியான செய்திகாத்திருந்தது. தங்குமிடம், வழிகாட்டிக்குழு, மொழிபெயர்ப்பாளர் என்று வசதிகள் ஏற்பாடாகியிருந்தன. 

1932ஆம் ஆண்டு மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற “மே தின” ஊர்வலத்தை பார்வையிட்டு அங்கு ஜோசேப் ஸ்டாலின் முன்னிலையில் உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றார். அப்போது அவர் இந்தியாவின் நாத்தீக தலைவர் என்று அறிமுகம் செய்யப்பட்டார். அவரது உரையில் எல்லோரையும் போல சொந்தநாட்டு வரலாற்றுப் பெருமைகளைப் பேசி கைதட்டு வாங்க முயலவில்லை. வெட்கத்தை விட்டு உரையாற்றினார். 

சாதியக்கொடுமை காரணமாக தொடரும் ‘இந்திய மக்களின் ஏழ்மை நிலை’ பற்றி உருக்கமான உரை நிகழ்த்தி மக்கள் கூட்டத்தின் கண்ணீரை வரவழைத்தார். பெருந்தலைவர் லெனினின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவிடம் தொடங்கி அஸர்பைசான் எண்ணெய் வயல்கள், மொஸ்கோ மோட்டார் கம்பெனிகள், சர்வதேசத்தொழிற்சங்க அலுவலகம், மாபெரும் அனல் மின்நிலையங்கள், மக்கள் நீதிமன்றங்கள், கூட்டுப்பண்ணைகள், நாத்தீக பிரச்சார மையங்கள், நூதனசாலைகள் என்று பல இடங்களையும் பார்வையிட்டார். 

விவசாயிகள், மாணவர்கள், தத்துவவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பிரிவினரையும் கண்டுபேசி கம்யூன்கள் மற்றும் சோஷலிச கட்டுமானங்கள் போன்றவற்றின் அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டார்.  

சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி மிகையில் இவானோவிச் கலினினனை (mikhail ivanovich kalinin) சந்தித்து உரையாடினார். கிரம்ளின் மாளிகையில் மேதின நிகழ்வுக்காக வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பினையும் கூடவே பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சியும் நாத்திகர் சங்கமும் பெரியாரது ரஷ்ய சுற்றுலாவுக்கு பெரும் உறுதுணையாய் இருந்தன.  

ஸ்டாலினை சந்தித்து உரையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், இறுதி நேரத்தில் அது ரத்துசெய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. பெரியாருடன் பயணித்த இராமநாதன் என்பவரின் நடத்தைகள் சோவியத் புலனாய்வு அதிகாரிகளின் அதிருப்தியை சம்பாதித்தமையால் அந்த அனுமதி இரத்தானது. 

சுமார் மூன்று மாதகால அனுபவங்களோடு அந்த மண்ணை விட்டுவிலக மனமின்றி ரஸ்யாவை விட்டு வெளியேறினார் பெரியார். 

அதன் பின்னர் பிரான்ஸ் இங்கிலாந்து என்று பயணம் தொடர்ந்தது. லண்டனில் தொழிற்சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டியது. அங்கிருந்த ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் மத்தியில் இந்திய தொழிலாளர்களை பிரித்தானிய அரசாங்கம் நடத்தும் விதம் பற்றி விலாவரியாக உரையாற்றினார். லண்டனில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவை சந்தித்து பேசினார். வேல்ஸ் சென்று பார்வையிட்டு திரும்பினார்.  

ஸ்பெயின், போத்துக்கல், இத்தாலி என்று சென்ற பெரியார் அங்கும் இருக்கக்கூடிய கம்யூனிச சித்தாந்த தலைவர்களை சந்தித்தார். பார்சலோனாவில் இருக்கும் கொலம்பஸ் சிலை என்று எதையும் விட்டுவைக்காமல். பார்வையிட்டுக்கொண்டேயிருந்தார். 

ஜெர்மனுக்கும் பெரியார் சென்றார். அப்போது ஹிட்லர் ஆட்சிக்குவராத காலம். ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இப்போதெல்லாம் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் நிர்வாண சங்கங்கள் இருக்கின்றன. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சில இடங்களில் எல்லோரும் நிர்வாணமாகவே உலாவருவர். நிர்வாணமாக சூரிய குளியல் செய்வது என்பது இன்றைய காலத்தில் உலகெங்கும் சாதாரணமானதொன்று. ஆனால் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இவைபற்றியெல்லாம் அபச்சாரமான பார்வையே உலகெங்கும் இருந்து வந்தது. பேசாப்பொருட்களை பேசுவதுதானே பெரியாருக்கு கைவந்த கலை. ஜெர்மனியில் இருந்த நிர்வாண சங்கம் பற்றி அறிந்து அச்சங்கத்தினரையும் பார்க்க விரும்பினார். அவர்களை சென்றுபார்த்தார். ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் யாரும் துணிமணிகளுடன் செல்லமுடியாது. ஆகவே அவர்களை சந்திக்க நிர்வாணமாக செல்ல துணிந்தார். அவர்களை சென்று பார்த்து கலந்துரையாடினார். அவர்களோடு இணைந்து நின்று நிர்வாணமாக படங்களும் எடுத்துக்கொண்டார்.  

சுமார் ஒருவருடகால உலகச் சுற்றுப் பயணம் இறுதி கட்டத்துக்கு வந்திருந்தது. பிரான்ஸ் மார்சேல் துறைமுகத்திலிருந்து ‘ஹாரூன மாரு’ என்ற ஜப்பானிய கப்பலானது பெரியாரையும் ஏற்றிக்கொண்டு 17/10/1932 அன்று கொழும்பு வந்தடைந்தது.  

இலங்கையில் சுமார் இருபது நாட்கள் தங்கியிருந்த பெரியார் அதன் பின்னர் இந்தியா சென்றடைந்தார். 

இந்தியா திரும்பிய பெரியாருக்கு சமதர்மம் பற்றிய ஈடுபாடு அதிகமானது. தனது உலக சுற்றுப்பயணம் பற்றி தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுக்க சுமார் நாற்பது கூட்டங்களில் உரையாற்றினார். ‘அது புதியதோர் உலகம் அதுபோல் எங்கும் இதுவரை இருந்ததில்லை’ என்று கம்யூனிச ஆட்சிமுறையை புகழ்ந்தார். ஆனால் ‘அது எனக்கு புதிதல்ல. நான் இவ்வுலகு எப்படி இருக்கவேண்டுமென்று கனவு கண்டுகொண்டிருக்கின்றேனோ அது சாத்தியமானதுதான் என்பதையே நான் அங்கு அறிந்துகொண்டேன்’ என்றார்.  

‘சாமி கும்பிடுவதையல்ல “கும்பிடுகின்றேன் சாமி”’ என்பதை முதலில் கைவிடுங்கள் என்கிறார். ‘கனம்’,  ‘திரு’, ‘ஸ்ரீமதி’, என்று அழைப்பதைவிடுத்து அனைவரும் ஒருவரையொருவர் ‘தோழர்’ என்று விளிக்கவேண்டும் என்று சுயமரியாதை இயக்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார். பிரச்சார கூட்டங்களுக்கு செல்கின்றபோது பிறந்த குழந்தைகளை பெற்றோர்கள் பெரியாரின் கையினில் கொடுத்து பெயரிடச் சொல்வது வழமை. உலகச் சுற்றுப் பயணம் முடிந்து வந்த பின்னர் நடந்த அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், என்றவாறாக சமதர்ம தலைவர்களின் பெயரை சூட்டினார். அது மட்டுமல்ல ரஷ்யா, மொஸ்கோ என்றும் கூட பெயரிட்டுள்ளார் என்கின்ற நகைச் சுவையான செய்திகளும் பெரியாரின் வரலாற்றில் உண்டு.   

(பெரியாரின் இலங்கைப்பயணம் பற்றிய தனியான கட்டுரை அடுத்த பகுதியில்)