தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!! (காலக்கண்ணாடி – 23)

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!! (காலக்கண்ணாடி – 23)

 — அழகு குணசீலன் — 

தமிழன் என்று சொல்லடா ….! 

தலை நிமிர்ந்து நில்லடா………!! 

சமகால உலக அரசியலில் தனிநபர், சமூக அடையாளங்கள் மிகைப்படுத்தப்பட்ட ஒரு அந்தஸ்தைப் பெறுகின்ற போக்கு நிலவுகின்றது. 

இது கீழைத்தேய நாடுகளில் மட்டுமானதல்ல. மேலைத்தேய பழைமைவாத தேசியவாதங்களிலும் சமூகமொன்றின் அடையாளம் அல்லது அடையாளப்படுத்தலின் வகிபாகத்தினை குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை. 

“அடையாளம்” (IDENTITY) என்ற வார்த்தை பல்வேறுபட்ட வடிவங்களில், கோணங்களில் வியாக்கியானம் செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. 

ஒருவர் அடையாளம் பற்றிப் பேசுவாரேயானால் அதிலிருந்து அவர் எதனை விளங்கிக் கொள்கிறார்?அதற்குப் பின்னால் உள்ள கதையாடல்கள் எவை?  என்ற கேள்விகள் எழுகின்றன. 

இதற்கு வரலாற்றாளர்களும், சமூக விஞ்ஞானிகளும் தரும் பதில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர்களின் கருத்துப்படி : ஜதார்தத்த ரீதியான அணுகுமுறையில் பிரச்சினை உடையவர்கள் அல்லது முரண்படுபவர்கள் தங்களை அடையாளப்படுத்தல் ஊடாக பிரச்சினையை இலகுபடுத்த, திசைதிருப்ப முனைகின்றனர். மறுவார்த்தைகளில் சொல்வதானால் பிரச்சினைக்கு அடையாளச் சாயம் பூசப்படுகிறது. 

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி, கள்ளத்தோணி, மற்றும் எல்லாளன், துட்டகைமுனு, தேவநம்பியதீசன், கதையாடல்கள் சிங்கள, தமிழ் அடையாளப்படுத்தலில் இடம்பிடிக்கின்றன.  

இக்கதையாடல்கள் பாத்திரங்களைக்கொண்டு படைக்கப்பட்டவை. போர், போரில் வெற்றி, தோல்வி, வென்றவன் மாவீரன், தோற்றவன் இயலாதவன், காட்டிக்கொடுப்பவன் இப்படியான கதை நகர்வுகள் அவை. 

ஆரம்ப காலங்களில் ஒருவரின் பூர்வீகம் முக்கிய அடையாளமாக இருந்தது. ஒருவரின் குணாம்சம், கலாச்சாரம், மதம், மொழி……. இதற்கும் முன்னர் அவரின் சமூகக் குழுமம் ………. இப்படி பல அடையாளங்களை பட்டியல் இடமுடியும். 

இங்கு காலக்கண்ணாடி சில அடையாளப்படுத்தல்களை காட்சிப்படுத்துகின்றது. 

#. எங்கட யாழ்ப்பாணத்தில் நீர் எந்த இடம்? இதற்கான பதிலில் இருந்து வினாக்காரர் மற்றவர் பற்றி ஊரைக்கொண்டே பல அடையாளங்களைக் கண்டறிவார். மதம், சாதி, குடும்ப பூர்வீகம் போன்றவற்றையும் அவர் அறிந்து கொள்வார். 

#. மட்டக்களப்பார் பாயோடு ஒட்டவைத்து விடுவினம். இது ஒரு இட அடையாளத்தைத் கொண்ட ஒரு சமூகம் குறித்த இன்னொரு சமூகத்தின் குணாம்சம் சார்ந்த வெளிப்படுத்தல். 

#. இடம் கொடுத்தால் யாழ்ப்பாணத்தான் மடம் கட்டுவான். இதுவும் மற்றொரு சமூகத்தின் குணாம்சம் சார்ந்த அடையாளப்படுத்தல். 

#. சோனியை நம்பமுடியாது. அவன் தொப்பி புரட்டி. ஒரு சமூகம் குறித்த அடையாளப்படுத்தல் பார்வை. 

இது எனது அடையாளம்.. ஈழத்தமிழன் என்ற அடையாளம்.. பல அடையாளப்படுத்தல்களில் ஒன்று.. அடையாளம் என்பது இன்னும் பூரணத்துவமற்றதாகவும், இன்னும் முழுமைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. அடையாளம் இறப்பர் போன்று நெகிழ்ச்சி தன்மையும் விட்டுக்கொடுப்பும் கொண்டது. காலச்சூழலில் மாற்றங்களை உள்வாங்கக்கூடியது.  

இது முன்னைய காலங்களில் எதிர்காலத்திற்கான ஒரு வளமாகவும் கருதப்பட்டது. இவை தனிநபர் சார் அடையாளங்கள். 

உதாரணமாக:  

சாணக்கியனின் அமரர் எஸ்.எம். இராசமாணிக்கத்தின் பேரன் என்ற அடையாளப்படுத்தல். 

பிள்ளையானின் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுவர் போராளி என்ற அடையாளப்படுத்தல். 

ஜனாவின் முன்னாள் ரேலோ போராளி என்ற அடையாளப்படுத்தல். 

வியாழேந்திரனின் ஆசிரியர் என்ற அடையாளப்படுத்தல். 

இவை எல்லாம் அவர்களின் அரசியலுக்கு போடப்பட்ட வளங்கள் அல்லது பசளைகள். இவை கல்வி, தொழில், சமூகம், பொருளாதார நிலை குறித்த அடையாளப்படுத்தல்களாகவும் இருக்க முடியும். 

அடையாளத்தின் பிறப்பு  

“அடையாளம்” என்ற இந்த வார்த்தை மத்திய காலத்தில், 12ம் நூற்றாண்டில் பிறந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒத்த தன்மைகளைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதன்படி அந்த மக்கள் குழுமம் இனம் காணப்பட்டது அல்லது அடையாளப்படுத்தப்பட்டது. 

இருபதாம் நூற்றாண்டுகளில் இது கட்சி அரசியலில் ஒரு முக்கிய லேபல். பொருளாதார சந்தைப்படுத்தலில் பயன்படுத்தப்படும் லேபல் போன்று அரசியல் வியாபாரத்திலும் ஒட்டப்படுகின்ற ஒன்றாக மாறிவிட்டது. 

அரசு மொழி, மதம், கலாச்சாரம், பண்பாடு அற்றது. இவை மக்களுக்கு உரியவை. ஆனால் இலங்கை அரசியல் இவற்றைச் சுமந்துதான் பயணிக்கிறது. சிங்களம் அரசகரும மொழி, பௌத்தம் அரசமதம் போன்ற பெரும்பான்மையினரின் அரசியல் அடையாளப்படுத்தல்கள் காரணமாக சிறுபான்மைத் தேசிய இன அரசியலும் அதற்குப் போட்டியாக தங்கள் மொழி, மதம், கலாச்சாரம் போன்றவற்றைச் சுமந்தே தம்மை அடையாளப்படுத்த வேண்டியதாயிற்று. 

இது இருதரப்பையும் ஜதார்த்த அரசியல் அணுகுமுறைகளில் இருந்து விலக்கி வெறும் அடையாள அரசியலுக்குள் இழுத்துவிட்டுள்ளது.  

அடையாளங்கள் இன்றி அரசியல் செய்யமுடியாத நிலையில் பெரும்பான்மை, சிறுபான்மை தரப்புக்கள் உள்ளன. இந்த அடையாளங்களே சகலதரப்பினதும் அரசியல் முதலீடாக உள்ளது. 

மேற்குலகில்  அடையாள அரசியல் 

மாறும் காட்சிகள்………! 

பாராளுமன்ற ஜனநாயக(?) அரசியலுக்கு வழிகாட்டிய அரசியல் வரலாற்று செயற்பாடுகளை அவதானிக்கும் ஒருவர் அடையாள, அடையாளமற்ற அரசியலில் உள்ள வேறுபாட்டை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். 

குடியரசு, ஜனநாயகம், சோஷலிசம், ஜனநாயக சோஷலிசம், பசுமை, சமூகஜனநாயகம், சோஷலிச ஜனநாயகம், லிபரல், பழைமை, தொழிலாளர், சமத்துவம், சுதந்திரம், விடுதலை, புரட்சி போன்ற அரசியல் வார்த்தைப் பிரயோகங்கள் கட்சிகளின் பெயர்களில் உள்ளன. இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கட்சியின் கொள்கையை மேலெழுந்தவாரியாக விளங்கிக்கொள்ளமுடியும். இங்கு அரசியல் சித்தாந்தம் வெளிப்படுத்தப்படுகிறது. 

ஆனால் எமது இலங்கையில் காணும் காட்சிகள் முற்றிலும் வேறுபட்டவை. தமிழ், சிங்களம், பௌத்தம், முஸ்லீம், இஸ்லாம், உலமா போன்ற வார்த்தைகள் கட்சிகளின் பெயரில் இடம்பெறுகின்றன. இவை அரசியல் கோட்பாடுகள் எவற்றையும் தொனித்து நிற்பவையாக இல்லை. இவை சமூகம் சார்ந்த அடையாளங்களை முதன்மைப்படுத்துகின்றன. 

அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம் என்ற போதும், அரசியல் தத்துவார்த்த அணுகுமுறைக்கு அப்பால் சமூக அடையாளங்களே முதன்மைப்படுத்தப்படுகின்ற போக்கு நிலவுகின்றது. 

இது மக்களின் அரசியல் மயமாக்கத்தை சமூகம் சார்ந்த மொழி, மதம், கலாச்சாரம், பண்பாட்டிற்குள், மட்டுப்படுத்தி பூரணமான அரசியல் மயமாக்கத்திற்கு தடையாக உள்ளது. அரசியல் சித்தாந்த அணுகுமுறையை தவிர்க்கிறது.. மக்கள் கோட்பாட்டு அரசியலை தவிர்த்துத் திசை திருப்பப்படுகிறார்கள். 

இந்த நிலை அரசியலில் அடிப்படை அம்சங்களைத் தவிர்த்து இலகுவான, ஆழமற்ற, அடையாள அரசியல்தான் உண்மையான அரசியல் என்று காட்ட விளைகின்றது. மக்கள் மொழி, மதம், கலாச்சாரம், பண்பாடுதான் அரசியல் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 

சுவிஸ் முன்மாதிரி அரசியல்: 

உலகின் ஒரு சிறந்த சமஸ்டி ஆட்சி முறைக்கு சுவிற்சர்லாந்து முன்மாதிரியானது. சகல தீர்மானங்களும் மக்கள் கருத்துக்கணிப்பால் நிர்ணயிக்கப்படும் நேரடி ஜனநாயக நடைமுறை. பழைமைவாதிகள் அடையாளங்கள் பற்றி பேசினாலும் மக்கள் மிக விழிப்பாக இருக்கின்றனர். 

நான்கு தேசிய மொழிகளையும், மதங்களையும், பல்கலாச்சாரங்களையும் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் தங்களை மொழியாலோ, மதத்தாலோ அடையாளப்படுத்தாது சுவிஸ் நாட்டினராக அடையாளப்படுத்துவதை முதன்மைப்படுத்துகின்றனர். 

இந்த நாட்டில் ஒரேயொரு பெரிய கட்சி மட்டுமே தனது பெயரில் கிறிஸ்தவ மத அடையாளத்தை இதுவரை தாங்கி இருந்தது. எவாங்கலிக்கன் மக்கள் கட்சி என்று ஒன்று அது மிகவும் சிறியது. 

கிறிஸ்தவ மக்கள் கட்சி என்ற அந்தப் பெரியகட்சி பல ஆண்டுகளாக விவாதித்து அதன்பெயரில் இருந்து “கிறிஸ்தவம்” என்ற வார்த்தையை நீக்கி விட்டது. மக்கள் கிறிஸ்தவத்தை சமூக அடையாளமாகக் கூட கொள்ளாத நிலையில் அதற்கு அரசியல் அடையாள அந்தஸ்த்து எதற்கு.? என்ற கேள்வி இங்கு எழுப்பப்பட்டது. 

இளைய தலைமுறையினர் தேவாலய வரி செலுத்துகிறார்கள் இல்லை. இவர்கள் சுயவிருப்பில் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வெளியேறி மதமற்றவர்களாக வாழ்கிறார்கள். 

ஞாயிறு பிரார்த்தனைக்கு வயோதிபர்கள் மட்டுமே வருகிறார்கள். பாதிரியார் படிப்புக்கு எவரும் முன்வராததால் ஒன்றுக்கு மேற்பட்ட தேவாலயங்களை ஒரு பாதிரியார் பராமரிக்கவேண்டி உள்ளது. சில தேவாலயங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

கிறிஸ்தவம் என்ற அடையாளப்படுத்தல் சமகால அரசியல் போக்கிற்கு ஏற்றதாக இல்லை என்பதே அதன் வாதம். இங்கு ஏற்கெனவே குறிப்பிட்ட ஜதார்த்த அரசியலை நன்கு புரிந்து கொள்ள முடியும். 

உலகில் சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்கள் விரைவாக இடம்பெறும் காலம் இது.  

மேற்குலகில் மக்கள் மத நம்பிக்கையில் இருந்து விலகிச் செல்கிறார்கள். சொந்த மொழி என்பது இன்றைய கணனி மின்னியல் உலகில் அதன்பங்கை இழந்து வருகிறது. சமூகம் பல மொழிகள் பேசுவதாக மாறுகிறது. தாய்மொழிக்கான வியாக்கியானங்கள் மாறுகின்றன. 

புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இந்த இளைய தலைமுறையின் தாய்பேசிய மொழி முக்கியம் இழந்து, இளைய தலைமுறையின் கற்கை மொழி முதன்மை பெறுகிறது. 

இளைய தலைமுறை தமிழ்/ சிங்கள அம்மாக்கள் வீட்டில் பிள்ளைகளோடு தாம் வாழும் நாட்டு மொழியைத்தான் அதிகம் பேசுகின்றனர். இங்கு தாய்மொழியின் அர்த்தம் என்ன? 

தேசியத்திற்கு அப்பால் சர்வதேசியம் பேசு பொருளாகிறது. 

சமூகம் சமய கலாச்சார பாரம்பரியங்களில் இருந்து விலகிச் செல்கிறது. 

கிறிஸ்தவ மதம் அங்கிகரிக்காத கருக்கலைப்பு, ஒருபால் திருமணம், திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்தல், பெண்ணியம், பெண்கள் பாதிரியாராவதற்குள்ள தடை, குழந்தை பிறந்த பின் திருமணம் செய்தல் போன்ற கிறிஸ்தவ விழுமியங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. 

இந்த ஜதார்த்தத்தைப் புரிந்து கொண்ட கிறிஸ்தவ மக்கள் கட்சி சமகாலத்தில் கிறிஸ்தவ அடையாளங்களை ஏற்று அரசியல் நடாத்த முடியாது என்பதால், சமூக மாற்றங்களை காலத்தின் கட்டாயமாக அங்கிகரித்து மதம் சார்ந்த அடையாள அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டது. இது நடைமுறை ஜதார்த்தம் சார்ந்த அரசியல் செயற்பாடு. மக்களின் வழியில் அரசியல் நடாத்த முனைகிறது. சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு அடையாள அரசியல் தீர்வாகாது என்பதன் வெளிப்பாடு. 

அடையாளப்படுத்தும் கதையாடல்கள்: 

அடையாளம் தொடர்பான பாரம்பரிய கதைகள் மக்கள் இலகுவில் நம்பக்கூடியவை. ஒரு மாயாஜாலம் போன்று மக்கள் மத்தியில் அவை செயற்படும். முக்கியமாக ஒரு இனக்குழுமம் சார்ந்ததாயின் அது இன்னும் வெற்றியாக அமையும். 

இவர்கள் அன்றைய காலம் வேறு, இன்றைய காலம் வேறு என்பதை ஏற்க மறுப்பவர்கள். மாற்றங்களை உள்வாங்க தயாரில்லாதவர்கள். நெகிழ்ச்சி, விட்டுக் கொடுப்பு தன்மைகள் அற்ற பழமைவாதிகள். பெரும்பாலான அடையாளங்கள் எப்பவோ மறைந்து விட்டன என்பதை ஏற்க மறுப்பவர்கள். 

இன்றைய இலங்கையின் சகல சமூகங்களினதும் கலாச்சார அடையாளம் என்று எடுத்துக்கொண்டால் அன்றைய கலாச்சார அடையாளம் இன்று எந்த சமூகத்திலும் இல்லை. முழுமையாகக் கைவிடப்பட்டோ, பகுதியாக கைவிடப்பட்டோ, அல்லது பல்கலாச்சாரங்களின் கலவையாகவோத்தான் அவை உள்ளன.. ஈழத் தமிழ் சமூகம் தாயகத்தில் உள்வாங்கி இருக்கின்ற மேற்குலக கலாச்சார அடையாளங்கள் எவ்வளவு? ஆக. எது எங்கள் அடையாளம்?  

ஆக, தூய்மைத்தன்மையான அடையாளப்படுத்தல்கள் இன்றைய காலகட்டத்தில் பொய்யானவை. கீழைத்தேசங்களில் மேற்குலக அடையாளங்களும், மேற்கில் கீழைத்தேய அடையாளங்களும் பவனிவரும் காலம் இது. 

வரலாறு அற்ற அடையாளமும் இல்லை. 

அடையாளம் அற்ற வரலாறும் இல்லை. 

அடையாளம் என்பது ஒருவருக்கு மட்டும் உரியதல்ல. அது ஒரு பிரதி போன்றது. குறைபாடுடையதும், இடைவெளியைக் கொண்டதும். இதனால்தான் இதனை அரசியல் தான் வாழ்வதற்காக எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். 

இல்லையேல் அது படிப்படியாக மறைந்து போகும். இது அடையாள அரசியலுக்கு தற்கொலையாக முடிந்து விடும். 

எந்த அரசியல் அடையாளத்தைத் பற்றி பேசுகிறதோ அந்த அரசியல் ஜதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறது என்பது வரலாறு. 

ஆக, 

தமிழன் என்று சொல்லடா…? 

தலை நிமிர்ந்து நில்லடா…..?