“புலி” விருது பெற்ற “கூழாங்கல்”

“புலி” விருது பெற்ற “கூழாங்கல்”

   — ஆரதி — 

“கூழாங்கல்” (Pebbles) திரைப்படம் மிக உயரிய விருதான “புலி” விருதினை (Tiger Award competition, International Film Festival Rotterdam ல் 2021 Tiger Award) வென்றுள்ளது. இந்த விருதினைப் பெற்ற ஒரேயொரு தமிழ்த்திரைப்படம் இதுவே.  

2017இல் இயக்குனர் சனல்குமார் சசிதரன் இயக்கிய “செக்ஸி துர்கா” என்ற மலையாளப் படத்துக்கு இந்த விருது கிடைத்திருந்தது. இப்பொழுது கூழாங்கல் இதைப் பெற்றுள்ளது. 

நெதர்லாந்தில் நடைபெற்ற 50 வது ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் இந்த விருதோடு சுமார் 35 லட்சம் இந்திய ரூபாய்கள் அளவுக்குப் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் இயக்கப்படும் சுயாதீனமான மற்றும் சோதனை சார்ந்த பரீட்சார்த்த திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக விருதுகளை Rotterdam வழங்கிவருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில் இயக்குனர் அருண் கார்த்திக்கின் “நசீர்” திரைப்படம் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான ‘நெட்பாக்‘ விருதை வென்றிருந்தது. 

“புலி விருது” கூழாங்கல் படத்துக்குச் சர்வதேச அளவிலான கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேவேளை மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் கலந்து கொள்ளவுள்ளதாக நடிகை நயன்தாரா தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்தே வெளியிடுகின்றனர்.  

அறிமுக இயக்குனர் வினோத் ராஜ் பி. எஸ் இயக்கி, யுவன் சங்கர் ராஜா இசைமைத்துள்ள “கூழாங்கல்” திரைப்படம், குடிகார அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான உறவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உறவிலுள்ள சிக்கல்கள், உணர்ச்சியும் நெகழ்ச்சியுமான உறவின் தருணங்கள், இதில் விளையும் தந்தைக்கும் மகனுக்குமிடையிலான அந்தரங்கமான வாழ்க்கை என பல விடயங்கள் கவனத்தைத் தருகின்றன. இந்தத் திரைப்படம் எளிமையான தலைப்பை கொண்டிருந்தாலும் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதை அம்சங்களையும், காட்சிகளையும் கொண்டுள்ளது. யுவனின் இசை படத்திற்கு கூடுதல் வலுவாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த விருது கிடைத்ததைப்பற்றி “எங்களின் கடின உழைப்பு, பொறுமை மற்றும் கனவு எல்லாம் இறுதியாக நிறைவேறியுள்ளது. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று உணர்ச்சி ததும்ப இயக்குனர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

மேலும் “இயக்குனர் வினோத்தின் கடின உழைப்பால் அவரது முதல் படத்திலேயே அவருக்கு இவ்வளவு பெரிய மரியாதை கிடைத்துள்ளது. அதோடு இது “ரவுடி பிக்சர்ஸ்” வெளியிடும் முதல் திரைப்படமாகவும் அமைந்துள்ளது. எனவே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். உங்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. வினோத் மற்றும் குழுவுக்கு நன்றி” என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. 

இப்படம் குறித்து ரோட்டர்டாம் (Rotterdam) விருதுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

இந்த எளிமையான படம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படத்தை பார்த்ததுமே எங்களுக்கு பிடித்து விட்டது. குறைந்தபட்ச எளிமையுடன் அதிகபட்ச தாக்கத்தை உருவாக்கி, படத்தின் இயக்குநர் தனது முக்கிய கதாபாத்திரங்களின் அதே நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது இலக்கை அடைகிறார். இதன் விளைவு தூய சினிமாஅதன் கடுமையான கதைக்கு மத்தியிலும் அழகிய நகைச்சுவையுடன் நம்மை கவர்ந்திழுக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

“கூழாங்கல்” படத்துக்கு டைகர் விருது கிடைத்தது குறித்து விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாவது: டைகர் விருதைப் பெறும் முதல் தமிழ்ப்படம் ‘கூழாங்கல்’. வினோத்தின் கடின உழைப்பு அவரது முதல் படத்திலேயே ஒரு மிகப்பெரிய கவுரவத்தை பெற்றுத் தந்துள்ளது. ரவுடி பிக்சர்ஸின் முதல் படம் இது. எனவே நாங்களும் அளப்பரிய மகிழ்ச்சியில் இருக்கிறோம். மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வினோத் மற்றும் குழுவினருக்கும் நன்றி. இந்த படம் என்னை மிகவும் வியப்படைய செய்துள்ளது. இந்த மாதிரியான படங்களால் தான் சினிமாவில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்” – என்றும். 

இதைத் தவிர, இது தொடர்பாக விக்னேஷ் சிவன் –நயன்தாரா ஜோடி இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மிக அரிதான ஒரு நாள்தான் இந்த விருது கிடைத்த நாள். ஒரு படைப்பைப் பார்த்துவியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமை  கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த ‘கூழாங்கல்’ எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. 

‘கூழாங்கல்’ பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. 

இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம். உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்…” என்று கூறியுள்ளனர். 

இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இயக்குநர் வினோத் ராஜ், இன்னும் கூடுதல் பொறுப்புடன் அடுத்த படங்களில் இயங்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

“போடா போடி” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். பின்பு  “வேலையில்லாத பட்டாதாரி” படத்தில் ஒரு சிறிய ரோலில் வந்து மக்களிடம் பரிச்சையமானார். பின்பு “நானும் ரவுடி தான்”, “தானா சேர்ந்த கூட்டம்” போன்ற படங்களை இயக்கி மக்களிடம் மிகவும் பிரபலமானார். 

இது மட்டுமில்லாமல் நயன்தாராவுடன் இணைந்து “ரவுடி பிக்சர்ஸ்” எனும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் அண்மையில் ஆரம்பித்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கி வெளிவந்த ‘பாவக்கதைகள்’ எனும் நெட்பிலிக்ஸ் அந்தோலோஜி வெப்சீரீஸில் ‘லவ் பண்ணா வுட்றனும்’ எனும் படம் திரைப்படப் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.