ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள்

ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள்

  — வி.சிவலிங்கம் — 

சிங்கள பெரும்பான்மைவாதம், இனவாதம்மதவாதம்ஜனநாயகம் 

ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் 

வரலாறு மீண்டும் எழுதப்படுவதில்லை. ஆனால் அது பலமான எச்சரிக்கைகளை எமக்கு விட்டுச் செல்கிறது. அவ்வாறே சிங்கள பௌத்த இனமையவாதம் தனது வரலாற்றினைத் துட்டகைமுனுவைக் கதாநாயகனாக வைத்தே தனது கதையை ஆரம்பிக்கிறது. அதே போலவே எல்லாளன் என்ற தமிழரசன் இலங்கையைப் பிரித்து ஆட்சி செய்ததாகவும் புனையப்பட்டிருக்கிறது.  

அதனடிப்படையில் துட்டகைமுனு என்ற சிங்கள பௌத்த தேசபக்தன் நாட்டை இணைக்கும் பொருட்டு பிரிவினைவாதிகளைத் தோற்கடித்து நாட்டை ஒற்றை நாடாக மீண்டும் இணைத்தான். நாம் இதனை மகாவம்சம் என்ற பௌத்த துறவி ஒருவரின் வரலாற்று நூலினை ஆதாரமாக வைத்து இன்றைய அரசியல் போக்குகளுக்கு ஏற்ற விதத்தில் மேலும் சில புனைவுகளை உள்ளடக்கி புதிய வரலாறு எழுதப்படுவதைப் பார்த்தோம்.  

அது மட்டுமல்ல, அசோக சாம்ராஜ்யத்திற்கு ஒத்ததான ராஜ்யம் இலங்கையில் நிலவியதாகவும், அந்த ஆட்சியின் கீழ் சகல இன மக்களும் அமைதியாக வாழ்ந்ததாகவும் பின்னர் ஐரோப்பியர்களின் வருகை அவ்வாறான சமூகக் கட்டுமானத்தைச் சீரழித்ததாகவும் பார்த்தோம். ஐரோப்பிய குடியேற்ற ஆட்சியார்களில் இறுதியாக ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய வேளையில் சிங்கள நில ஆதிக்கப் பிரிவினர், ஆங்கிலக் கல்வி, கிறிஸ்தவ மதமாற்றம் என்பனவற்றால் அதிகாரத்தின் உயர் மட்டங்களை எட்டிய பிரிவினர் சிங்கள மக்களின் தலைவர்களாக ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அறிந்தோம்.  

சுதந்திரத்துக்குப் பின்னரான இனவாதம் 

இவ்வாறான அரசியல் பின்னணியில் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னதான காலத்தில் இனவாதம் என்பது ஓர் பிரதான பாத்திரத்தை வகித்திருந்தது. நாம் ஏற்கெனவே சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ தே கட்சி போன்றன இனவாதத்தினை தமது அரசியல் தொழிற்பாடுகளுக்கு எவ்வாறு பயன்படுத்தினார்கள்?  என்பதனையும் ஆராய்ந்த நாம் இன்று இனவாதம் என்பது எவ்வாறு நிறுவனமயப்படுத்தப்படுகிறது?அதன் கருத்தியலின் அடிப்படைகள் என்ன? இன்று நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை எவ்வாறு துட்டகைமுனு ஆட்சியுடன் இணைக்கப்படுகிறது? நேற்றைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி படிப்படியாகத் தனது வரலாற்று அடையாளங்களை இழந்து இன்று பொது ஜன பெரமுன என்ற புதிய அடையாளத்தை நோக்கிச் செல்கையில் கடந்தகால அடையாளங்களில் எவற்றைச் சுமந்தும், எவற்றை விட்டும் செல்கிறது? என்பதை நாம் ஆழமாக அறிதல் அவசியமாகிறது. 

பஞ்சமகா பல வேகய 

கடந்த 70 வருடகால இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள பௌத்த தேசியவாதம் என்பது அதன் ஆரம்பத்தில் மத்திய அதிகாரத்திலுள்ள கல்விச் சமூகத்தினரதும், கிராமப்புற கல்விச் சமூகத்தினரதும் ஓர் இணைப்பாகவே காணப்பட்டது. சிங்களக் கிராமப் புறங்களில் பௌத்த பிக்குகள் பௌத்த மதப் போதனையாளர்களாக, ஒழுக்க வழிகாட்டிகளாகச் செயற்பட்டார்கள். அதே போலவே உள்ளுர் வைத்தியர்களே நோய், மற்றும் பல தொற்று நோய்களைத் தீர்ப்பவர்களாகச் செயற்பட்டார்கள். ஆசிரியர்கள் கல்வி வளர்ச்சியில் கரிசனை காட்டினர். இவ்வாறு சமூக முன்னேற்றத்தில் இப் பிரிவினர் செயற்பட்ட போதிலும் அவர்களுக்கான அங்கீகாரம் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் பின்னரே கிடைத்தது. அதனால் பிக்குகள் அல்லது சங்கம், ஆசிரியர்கள், வெதமாத்தயாக்கள் அல்லது உள்ளுர் வைத்தியர்கள், தொழிலாளர், விவசாயிகள் என்ற ஐந்து பிரிவினர்கள் பஞ்சமகா பல வேகய அல்லது ஐந்து பாரிய சக்திகள் என வர்ணிக்கப்பட்டார்கள்.  

பிரித்தானியாவில் கல்வி கற்ற பண்டாரநாயக்க கிறிஸ்தவ மற்றும்  நிலப் பிரபுத்துவ பின்னணியைக் கொண்டிருந்த போதிலும் அவர் கிராமிய உயர் மட்டத்தோடும் ஏற்ற வகையில் தனது அரசியல் பொருளாதார இலக்குகளை எடுத்துச் சென்றார். குறிப்பாக மேற்கத்தைய லிபரல் ஜனநாயக பொருளாதார கோட்பாடுகளில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த பண்டாரநாயக்கா சிங்கள பௌத்த அடிப்படைவாத சிந்தனைகளுடன் லிபரல் ஜனநாயக பொருளாதார கொள்கைகளையும் இணைத்தே எடுத்துச் சென்றார். ஆனால் சிங்கள பௌத்த அடிப்படைவாதமும், லிபரல் பொருளாதாரக் கோட்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்பட முடியாது என்பதை அவர் பதவிக்கு வந்த சில காலங்களுக்குள்ளாகவே பிக்கு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் உணர்த்தியது. அதே சிக்கலான நிலை இன்று வரை தொடர்கின்ற போதிலும் நாட்டின் நன்மை கருதி நாட்டின் அரசியலில் மதத்தைத் தூர வைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் சுதந்திரமடைந்த பல நாடுகள் வெகு தூரம் முன்னேறிவிட்ட போதிலும் பாகிஸ்தான், மியன்மார், இலங்கை போன்ற நாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.  

இலங்கையில் சிங்கள பௌத்த பேராதிக்க சிந்தனை, பெரும்பான்மை வாதம் என்பன லிபரல் ஜனநாயக கோட்பாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை ஒரு புறத்தில் தாராளமயப்படுத்தி சந்தைப் பொருளாதாரத்தை விஸ்தரிக்க எண்ணிய போதிலும் மறு பறத்தில் பெரும்பான்மை இனவாதத்தையும், சிங்கள பௌத்த அடிப்படை வாதத்தையும் இணைத்துச் செல்வதே ஓர் விபரீதமான அரசியல் பயணமாகும். அதாவது இனவாத பெரும்பான்மை வாதமும், பாராளுமன்ற லிபரல் ஜனநாயக பயணமும் ஒரு மகிழ்ச்சியான பயணமாக அமையவில்லை. பதிலாக நாட்டின் இதர தேசிய சிறுபான்மை இனங்கள் தமது இருப்பு என்பது நிச்சயமற்றதாகவும், உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டுச் செல்வதனையும் ஆழமாக உணர்கிறார்கள். 

பண்டாரநாயக்காவின் பாதை  

இதுவரை நாம் பேசி வரும் ‘ஜாதிக சிந்தன’ ( தேசிய சிந்தனை) பண்டாரநாயக்காவின் காலத்தினை சிங்கள பௌத்த மக்களின் விழிப்புக் காலம் என வர்ணிக்கின்றனர். பண்டாரநாயக்கா சமூகத்தின் பிரதான இயக்கு விசைகளுக்கு உரிய இடத்தை வழங்கினார் எனவும், பிரித்தானிய கிறிஸ்தவ, கலாச்சார மற்றும் பொருளாதார குடியேற்ற ஆட்சிக்கு எதிரான சுதந்திரத்தை நோக்கிய போராட்டத்திற்கு சக்தி வழங்கினார் எனவும், குடியேற்ற ஆட்சியாளரால் தோற்றுவிக்கப்பட்ட அநீதிகளுக்குப் பரிகாரம் வழங்குவதாகவும் அமைந்ததாகக் கூறுகின்றனர்.  

ஆனால் பண்டாரநாயக்காவின் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள் லிபரல் கோட்பாடுகளாக அமைந்தது எனவும், தேசிய பொருளாதார விருத்தியை வளர்க்கும் விவேகம் நிறைந்த அறிவுச் சமூகத்தை அவர் தரவில்லை எனவும் குறை கூறுகின்றனர். இருப்பினும் 1956இல் தனிச் சிங்களச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியதை வரவேற்ற போதிலும், அவர் 1957இல் பண்டா – செல்வா ஒப்பந்தத்தினை மேற்கொண்டது தனது அரசியல் அதிகாரத்தைத் தக்க வைக்கவும், தமிழ் தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தவுமே என்கின்றனர்.  

அமரசேகரவின் கருத்துப்படி பண்டாரநாயக்கா பல அரசியல் சவால்களை எதிர்கொண்டார் எனவும், அதன் அழுத்தங்கள் காரணமாக அவர் முதலாளித்துவ முகாமை நோக்கி நகர ஆரம்பித்தன் விளைவாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும், அதன் காரணமாகவே அவர் அவ்வாறான பாதகச் செயலிலிருந்து காப்பாற்றப்பட்டார் எனவும் கூறுகிறார். தேசிய சிந்தனையாளர் என வர்ணிக்கப்படும் இவர் பண்டாரநாயக்காவின் படுகொலை என்பது நியாயமானது என்றே கூறுகிறார். 

பிரதமர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் படுகொலையைத் தொடர்ந்து அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலம் என்பது அவரின் கணவரின் தொடர்ச்சிக் காலம் என்கின்றனர். 1970 – 1977 வரையான காலத்தில் ஏகாதிபத்திய ஆட்சியாளருக்கு எதிரானதாகவும், நாட்டில் சோசலிச, சிங்கள – பௌத்த பாரம்பரியத்தை ஆரம்பித்து வைத்த காலம் எனக் கூறுகின்றனர். இக் காலப் பகுதியில் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூ. கட்சி என்பனவும் இணைந்தே அரசு அமைத்தன. ஆனால் அக் கட்சிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.  

1972ம் ஆண்டு முன்மொழியப்பட்ட முதலாவது குடியரசு அரசியல் யாப்பு என்பது பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாகவும், நாட்டின் ஒற்றை ஆட்சித் தன்மையை உறுதிப்படுத்தியதாகவும் புகழுரை வழங்குகின்றனர்.  

ஜே.ஆர். ஜயவர்த்தன 

1977ம் ஆண்டு ஜே ஆர் தலைமையிலான ஐ தே கட்சி ஆட்சி ஆரம்பமாகிறது. இந்த ஆட்சிக் காலம் என்பது பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் ஆட்சிக் கட்டுமானத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ் ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் அதாவது 80களில் ‘தேசிய சிந்தனை’ என்ற  பெயரில் கட்டுரைகள் வெளிவருகின்றன. ஜே ஆர் தமது ஆட்சிக் காலத்தினை ‘தர்மிஸ்ரர்’ அரசு என வர்ணிக்கிறார். ‘யங்கி டிக்கி’ என அழைக்கப்படும் ஜே ஆர் அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர். ஆனால் இந்தச் சிந்தனையாளர்களோ மேற்குலக கிறிஸ்தவ ஆதிக்கத்தை முற்றாக எதிர்ப்பவர்கள். இந் நிலையில் அப்போதைய அரசியல் மாற்றங்களை எவ்வாறு நோக்கினர்? 

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே 60கள் என்பது இடதுசாரி அரசியலின் மிக முக்கிய பகுதியாகும். லங்கா சமசமாஜக் கட்சியினர் முதன் முதலாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு அமைத்து அரசாங்கம் அமைத்தனர். இருப்பினும் நெருக்கடிகள் அதிகரித்து அரசு வீழ்ச்சி அடையும் நிலை ஏற்பட்டது. கட்சித் தாவல்கள் இடம்பெற்றன. இவ்வாறாக ஓர் ஸ்திரமற்ற ஆட்சி ஏற்படுகிறது. அதே போலவே 1965ம் ஆண்டிலும் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் ஐ தே கட்சியுடன் தமிழரசுக் கட்சியும், வேறு சில கட்சிகளும் இணைந்து அரசு அமைத்தன. இருப்பினும் கூட்டு அரசிற்குள் தொடர்ந்து மோதல்கள் காணப்பட்டன. இதன் விளைவாக தமிழரசுக் கட்சி அக் கூட்டிலிருந்து வெளியேறியது.  

இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளும் போதுமான பெரும்பான்மையைப் பெறாத காரணத்தால் எந்த அரசாங்கமும் தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக முடிக்கவில்லை. இந்தப் பின்புலத்தில் 1966ம் ஆண்டு ஜே ஆர் புதிய அரசியல் கோட்பாட்டினை முன்வைத்தார். ஒரு பலமான நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்ட காலத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் விருப்பத்திற்கும், கற்பனைக்கும் இடம் கொடாமல் முடிவுகள் மக்களால் ஏற்க முடியாது போனாலும், பாராளுமன்றக் கட்சிகளால் ஏற்கப்படாவிடினும் தீர்மானம் எடுக்கும் வகையில் ஆட்சிக் கட்டுமானம் அமைதல் வேண்டும் எனக் கூறினார்.  

இதன் பிரகாரம் 1977ம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ‘தர்மிஸ்ரர் சமூகம்’ ஒன்றினை உருவாக்குவதாகக் கூறி ஆட்சி அமைத்தார். இவ்வாறு கூறி அவ்வளவு பெரும்பான்மையைப் பெற்ற அவரைப் பற்றி இச் சிந்தனையாளர்கள் அவர் தம்மைத் தாமே நாட்டிற்குப் பொருத்தமான தலைவர் என அடையாளம் காட்டினார் எனவும், தம்மை ஓர் நேர்மையான அரசராகவே காட்டிக் கொண்டார் எனவும் கூறும் அமரசேகர, ஜே ஆர் ஒரு இரட்டை வேடதாரி எனவும், ‘தர்மிஸ்ரர் சமூகம்’ என்ற கோட்பாட்டினை தனது சந்தர்ப்பவாத அரசியலிற்குப் பயன்படுத்துகிறார் எனவும், அது சிங்கள பௌத்த மக்கள் மத்தியிலே மிகவும் மதிக்கப்படுவதால் தனது தேர்தல் வெற்றிக்கு அதனைப் பயன்படுத்தினார் என்கிறார்.   

அமரசேகரவைப் பொறுத்த வரையில் ஜே ஆர் இனால் ஓர் உயர்ந்த, மனித நேய சமூகத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றலுள்ள நேர்மையான தலைவர் அல்ல என்றார். அவரால் முன்வைக்கப்பட்டுள்ள திறந்த பொருளாதாரக் கொள்கைகள் நீதியற்ற, சமத்துவமற்ற ஓர் சமூகத்தையே தோற்றுவிக்கும். அவரது அமெரிக்க சார்புக் கொள்கைகளும், நவ- ஏகாதிபத்திய குணாம்சங்களும் மனித நேயமிக்க, நீதியான சமூகத்தை உருவாக்க உதவாது எனவும், இவ்வாறான ‘தர்மிஸ்ரர்’ சமூக உருவாக்கக் கோட்பாட்டை அமெரிக்க சி ஐ ஏ இனரே கொடுத்திருப்பார்கள் என்கிறார்.  

ஜே ஆரின் ஆட்சிக் காலத்தைப் பற்றி நளீன் டி சில்வா கூறுகையில் அதுவும் குறிப்பாக தமிழர் பிரச்சனை குறித்துத் தெரிவிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகங்கள் என 13வது திருத்தத்தின் மூலம் ஏற்றுள்ளதுடன், அதன் பிரகாரம் மாகாணசபைகளை அமைத்து தமிழ் உத்தியோக மொழி எனவும் இந்தியாவின் அழுத்தங்களாலும், உந்துதல்களாலும் ஏற்றுக்கொண்டார்.  

இந்தியா பற்றி… 

இவ்வாறு 13வது திருத்தத்தினை அவர் ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம் 1983இல் ஏற்பட்ட கலவரத்தினால் ஏற்பட்ட அவமானங்களை மறைக்கவே அவ்வாறு ஒப்பமிட்டார் எனவும், அவ்வாறு ஒப்பமிட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதியை நீக்கியுள்ளதாகக் காட்டும் தந்திரம் எனவும் விபரிக்கின்றனர். குறிப்பாக அவ்வேளையில் பிரதான அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு மிகவும் மட்டுமட்டாக காணப்படும் நிலையில் யதார்த்த அரசியலைக் கவனத்தில் கொண்டு தமிழர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் ஆதரித்தார் எனவும் விமர்ச்சிக்கின்றனர்.  

இந்தியா தொடர்பாக அமரசேகரவின் கருத்துக்கள் யதார்த்தத்தைத் தழுவியதாக உள்ளன. ‘இந்தியா இலங்கையை எதிரியாகக் கருதியதில்லை. ஆனால் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த அயலவர் மட்டுமல்ல, இலங்கையின் நலன்களில் அக்கறையுடையவர். இந்த எண்ணத்துடன் செயற்பட்டால்தான் நாம் 13வது திருத்தத்தின் பாதகமான அம்சங்களைப் புறம் ஒதுக்கிச் செயற்பட முடியும். இந்தியாவை நாம் எதிரியாகக் கருதிச் செயற்பட்டால் அது பேரழிவையே ஏற்படுத்தும். இது இலங்கையின் இறைமைக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும்’ என எழுதியுள்ளார்.   

ஜே ஆரின் ஆட்சிக் காலம் என்பது உறவினர்களை ஆட்சிக்குள் உள்வாங்குவது அதிகரித்தும், தேர்தல் வன்முறைகள், முறைகேடுகள், நீதித்துறை மீதான தாக்குதல்கள், மக்கள் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் என்பன அதிகரித்துச் சென்றது. இதற்குப் பிரதான காரணம் நிறைவேற்று அதிகார முறைமையும், அவை பயன்படுத்தப்பட்ட விதமும் ஜனநாயக விரோத நிலமைக்கு இட்டுச் சென்றது என்கிறார்.  

ஐ தே கட்சியின் 1977 இல் ஜே ஆர் தலைமையில் ஆரம்பித்த புதிய அரசியல் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்குப் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தேர்தல் முறை மாற்றங்களும், சிறிய கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ வாய்ப்புகளும் இனவாதத்தை உக்கிரப்படுத்த உதவியது. இதுவரை காலமும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சிந்தனைகளை இப் பிரதான இரண்டு கட்சிகளுமே பயன்படுத்தி வந்தன. தற்போது சிறிய கட்சிகளுக்கும் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டதால் சிறிய கட்சிகள் உதாரணமாக சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில்ல, ஞானசார தேரர் போன்றவர்கள் தனி இனவாதத்தைப் பயன்படுத்தியே மக்கள் ஆதரவைப் பெற்றனர்.  

சிறு இனவாதக் கட்சிகள் 

இவ்வாறு சிங்கள பௌத்த இனவாதம் பெரும்பான்மைக் கட்சிகளிலிருந்து சிறிய கட்சிகளைச் சென்றடைந்த நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் தற்போது சிறிய இனவாதக் கட்சிகளுடன் கூட்டு வைக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டன. எனவே இன்று பிரதான கட்சிகளுடன் இனவாத சிறிய அரசியல் கட்சிகளும் அணி வகுத்துச் செயற்படுவதை நாம் காண்கிறோம். இதன் காரணமாக சிறிய இனவாதக் கட்சிகள் அல்லது இனவாத அமைப்புகள், பிக்கு அமைப்புகள் பல பிரதான கட்சிகளின் போக்கை மாற்றும் நிலைக்குச் சென்றன.  

உதாரணமாக, பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் இனவாதத்தை முழு அளவில் பயன்படுத்தியது. அக் கட்சியில் இணைந்துள்ள சிறிய இனவாதக் கட்சிகள் தனி நபர்களுக்கு எதிராகவும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைகளை விமர்சித்தும், கறுப்புச் சந்தை வியாபாரிகள் தமது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க தேர்தல் செலவுக்கு அளிப்பதும் என பல சம்பவங்கள் அதிகரித்தன.  

இவ்வாறாக இனவாதமும், பெருந்தேசியவாதமும், நவதாராளவாத ஜனநாயக அரசியலும் ஒன்றாக முரண்பாடில்லாமல் பயணிக்க முடியவில்லை. இனவாதமும், சிங்கள பௌத்த பெருந்தேசியவாதமும் அரசியல் கட்டுமானத்திற்குள் ஊடுருவி அதன் ஜனநாயக கட்டுமானங்களை ஊழல் மையங்களாக மாற்ற, ஊழல் என்பது குழு ஆதிக்கமாக மாற்றமடைய, அரச அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் இக் குழு ஆதிக்கத்தின் பாதுகாவலர்களாக மாற நாட்டின் ஜனநாயகக் கட்டுமானமும், பொருளாதாரக் கட்டுமானமும் முறிந்து விழும் நிலைக்குச் சென்றுள்ளன.  

தலையை ஆட்டும் வால்கள் 

இங்கு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் என்பது பிரதான கட்சிகளிடமிருந்து விலகி சிறிய கட்சிகளின் கைகளில் சென்றடைந்ததன் காரணமாக ஏற்பட்ட விபரீதங்கள் குறித்து நாம் ஆராய்தல் அவசியம். ஏனெனில் தற்போது சிறிய கட்சிகளின் தலைவர்கள் பிரதான கட்சிகளின் தலைமைத்துவங்களை மாற்றும்படி மிகவும் பகிரங்கமாகவே கோரும் நிலை என்பது வால் தலையை ஆட்டும் நிலைக்குச் சென்றுள்ளதை உணர்த்துகிறது. இவ் விபரங்களை ஆராயும்போது இதே நிலை தமிழ் அரசியலிலும் காணப்படுவதையும், அதனால் தற்போதுள்ள அரசியல் புறச் சூழலில் பொருத்தமான அரசியல் தீர்வை பிரதான கட்சிகளுடன் இணைந்து எட்ட முடியாத நிலைக்கு சிறிய கட்சிகளின் ஆதிக்கம் தடுத்து வருவதையும் கவனத்தில் கொள்ள முடியும்.  

கடந்த 30 வருட போர்ச் சூழல் தேசிய இனப் பிரச்சனைக்கான சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தத் தூண்டியது. ஆனால் போரை நடத்துவதற்கு சிறிய கட்சிகளின் உதவியுடன் சிங்கள பௌத்த இனவாத சக்திகளை உசுப்பேற்றி போருக்கான ஆளணிகளைப் பெற்ற பிரதான கட்சிகள் போர் முடிவற்றுச் சென்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து செல்லும் போக்கைத் தடுக்கும் நோக்கில் சர்வதேச உதவியுடன் போரை நிறுத்த முயற்சித்தார்கள்.  

இதன் விளைவாக 1990 முதல் அரசியல் சிக்கல்களை நீக்கும் நோக்கில் அரசியல் யாப்பின் மூலமாக மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்தனர். இவ்வாறான முயற்சிகளின்போது சிங்கள பௌத்த இனமையவாதிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு குறிப்பாக சிங்கள பௌத்த தேசியவாத பெரும்பான்மை வாதத்தினை முன்னெடுத்தார்கள். அதிகார பரவலாக்கத்திற்கு எதிரான நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் கூடாரமாக அமைந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மிதவாதப் பிரிவினரும், ஐ தே கட்சியின் மிதவாதப் பிரிவினரும் அரசியலமைப்பு மாற்றங்களை நோக்கிச் சென்ற போது அவற்றிற்கு எதிராக இரு கட்சிகளிடையே காணப்பட்ட சிங்கள பௌத்த இனவாத சக்திகள் கட்சித் தாவல்களை மேற்கொண்டனர்.  

இரண்டு பிரதான கட்சிகளிலும் காணப்பட்ட சிங்கள பௌத்த இனவாத சக்திகள் சிங்கள பௌத்த தேசியவாத பெரும்பான்மை வாதத்தினைக் கையிலெடுத்தனர். இந்த அணி திரட்சிக்குள் ஜே வி பி, சிகல உறுமய,ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறிய இனவாத, பெருந்தேசியவாத கட்சிகளும் இணைந்தன. இதனால் பெருந்தேசியவாத, பெரும்பான்மைவாத கட்சிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் இடையூறாக அமைந்தன. பிரதான கட்சிகள் மீளவும் தமது அரசியல் எதிர்காலம் கருதி தேசியவாத சகதிக்குள் வீழ்ந்தனர்.  

ஏற்கெனவே குறிப்பிட்டது போல சிங்கள பௌத்த தேசியவாதத்தினையும், லிபரல் ஜனநாயக பொருளாதாரக் கோட்பாடுகளையும் பண்டாரநாயக்கா இணைத்துச் சென்ற போதிலும், இப் பிரதான அரசியல் கட்சிகள் இனவாத அரசியலிலிருந்து தம்மை மீட்டெடுக்க முடியாத நிலையிலிருந்தார்கள். இங்கு மேற்குலக நவீன லிபரல் ஜனநாயக பொருளாதாரக் கோட்பாடுகளுடன், இனவாத அரசியல் இணைந்து பயணிக்க முடியாதது மட்டுமல்ல, அது படிப்படியாகவே சிங்கள பௌத்த பெரும்பான்மை வாதத்திற்குள்ளும் தன்னை அமிழ்த்திக் கொண்டது.  

இதன் விளைவாகவே அதாவது நாட்டின் ஜனநாயக பொருளாதார அரசியல் அதன் ஜனநாயக உட்பொருளைக் கைவிட்டு சிங்கள பௌத்த பெரும்பான்மை வாதத்திற்குள் அகப்பட்டதால் நாட்டின் இதர தேசிய சிறுபான்மை இனங்கள் அப் போக்கிற்கு எதிராக எழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிங்கள பௌத்த பெரும்பான்மை வாதத்திற்குள் சிக்குண்ட பிரதான கட்சிகள் போட்டி போட்டுச் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராக செயற்பட்டன. இதனையே 1972ம் ஆண்டு அரசியல் யாப்பிலும், 1978ம் அரசியல் யாப்பிலும் காண முடிந்தது.  

1990 ம் ஆண்டு பிரதான கட்சிகளின் மத்தியில் காணப்பட்ட மிதவாத சக்திகள் குறிப்பாக சந்திரிகா தலைமையிலான பிரிவினர் நாட்டின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு அரசியல் தீர்வினதும், சமாதானத்திற்கான தேவைகளையும் கருத்தில் கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். தமிழ் மக்களுக்கு நியாயமான, சட்டபூர்வமான பிரச்சனைகள் உண்டு என்பதையும், அதற்கான தீர்வுகளை வழங்க வேண்டுமெனவும் மிகவும் பகிரங்கமாகவே மக்களிடம் கோரினார். சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்ட சிவில் அமைப்புகள் அதற்காக கடுமையாக உழைத்தன. இதன் விளைவாக காத்திரமான அதிகார பரவலாக்கத்தின் அவசியத்தை அதுவும் அரசியல் அமைப்பு மாற்றத்தினூடான தீர்வை ஐ தே கட்சியும் ஏற்றுக் கொண்டது. 

ஆனால் படிப்படியாகவே தமது ஆதிக்கத்தை வளர்த்து வந்த கிராமப்புற இளைஞர்கள் தற்போது கல்வி அறிவிலும், சிங்கள பௌத்த ஆதிக்க அரசியலிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பிரிவினராக வளர்ந்துள்ள நிலையில் குறிப்பாக சிங்கள பௌத்த தேசியவாதம் என்பது சிறிய கட்சிகளின் அரசியல் வாகனமாக மாறியிருந்த சூழலில் மத்தியில் காணப்பட்ட அதிகார பிரிவினரால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. 1977ம் ஆண்டில் அறிமுகமான தாராளவாதத் திறந்த பொருளாதாரச் செயற்பாடுகள், அரசியல் யாப்பு மாற்றங்கள் போன்றன இச் சிங்கள பௌத்த பெரும்பான்மை வாதத்தை உக்கிரப்படுத்த உதவின.  

கிராமப்புறங்களில் உருவான சிங்கள தேசியவாத எழுச்சி 

நாட்டின் கிராமப் புறங்களில் பலமடைந்து சென்ற சிங்கள பௌத்த இனமையவாதம் பிரதான கட்சிகளின் போக்கையும் மாற்ற உதவியது. இதன் காரணமாக தேசிய இனப் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையையும் வலுவிழக்கச் செய்தது. குறிப்பாக பிரதான அரசியல் கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சி,ஐ தே கட்சி என்பவற்றின் தேர்தல் பலம் படிப்படியாக குறைவடைந்து சென்றதால் நாட்டின் வழமையான அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி கடந்த காலங்களில் தனது ஆதிக்கப் பிரதேசங்களாகக் கருதிய பகுதிகள் காலப் போக்கில் ஜே வி பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறிய கட்சிகளின் ஆதிக்கத்திற்குள் சென்றதால் அக் கட்சியின் தேர்தல் தொகுதி ஆதிக்கமும் குறைந்தது. தேர்தல் அரசியலில் இந்த இரு பிரதான கட்சிகள் மட்டுமே தமது செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறும் நிலையிலிருந்தன. ஆனால் மக்கள் ஆதரவு குறைந்து சென்ற நிலையில் ஜனநாயக மற்றும் தேசத்தின் நிதி முகாமைத்துவத்திற்கு யார் பதிலளிப்பது? என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.  

பிரதான கட்சிகள் மக்களின் ஆதரவை இழந்து செல்லும் நிலையில் சிங்கள பௌத்த பெரும்பான்மைவாத சக்திகள் தற்போது தமக்குள் ஏற்பட்டுள்ள போட்டிகளில் மிகத் தீவிர இனவாதத்தையும், பெருந் தேசியவாதத்தையும், பெரும்பான்மை வாதத்தையும் இணைத்துள்ளன. தற்போது எழுந்துள்ள பெரும்பான்மை வாதப் போட்டியில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சிந்தனைகளே கூர்மை அடைந்து செல்கின்றன.  

ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன அவ்வப்போது சமஷ்டி கோட்பாடுகளின் அடிப்படையிலான குறிப்பாக அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்பவற்றை ஏற்றுச் சென்றுள்ளன. இதற்குப் பிரதான காரணம் மத்தியில் அதிகாரம் படிப்படியாகக் குவிக்கப்பட்டு நாட்டின் தலைவர் சர்வாதிகாரியாக மாற்றமடையும் ஆபத்துகளைத் தவிர்க்கவே சமஷ்டி வழிமுறைகளை நோக்கினர்.  

பெரிய கட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தும் சிறு கட்சிகள் 

மேற்குறிப்பிட்டவாறான அரசியல் பின்னணியில் குறிப்பாக பிரதான அரசியல் கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ தே கட்சி என்பவற்றின் அரசியல் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து சிறிய கட்சிகளான ஜே வி பி, ஜாதிக ஹெல உறுமய போன்றன அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றமடைந்துள்ள நிலையில் அக் கட்சிகளின் அரசியல் போக்கினையும், மாற்றங்களையும் அவதானிப்பது அவசியமாகிறது. ஏனெனில் நாட்டின் சமாதானத்திற்கான சில திறப்புகள் அவர்கள் கைகளில் உள்ளன.                    

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல நாட்டின் அரச யந்திரத்தை நடத்த வேண்டிய பிரதான கட்சிகள் தமக்குள் கூறுகளாகவுள்ள இனவாத சக்திகளின் கோரிக்கைகளுக்குப் பணிந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே பலரும் எதிர்பார்த்தபடி அமெரிக்க மிலேனியம் நிதியைப் பெற அரசு ஒப்பமிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் நாடு மிகப் பெரும் நிதிப் பற்றாக்குறைக்குள் உள்ளது. ஆனால் இனவாத சக்திகள் மிகவும் கடுமையான அமெரிக்க எதிர்ப்பை நடத்தியதால் அக் கடனைப் பெற முடியவில்லை. அதே போலவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க இறுதிவரை இழுத்தடித்தனர். ஆனால் பௌத்த பிக்குகளும், அவர்கள் சார்ந்த தொழிற் சங்கங்களும் விதித்த கடும் எதிர்ப்புக் காரணமாக கொடுத்த வாக்குறுதியையும் மீறி இந்தியாவிற்கு வழங்க மறுத்தனர். அதே போலவே யப்பான் நாடு கொழும்பின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதத்தில் புகையிரத பாதை அமைக்க ஒப்புக் கொண்டது. அதன் அடிப்படையில் அதற்கான ஆரம்ப ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அரசிற்குள் இருந்த சில சக்திகள் யப்பானின் ஒப்பந்தத்தை நிராகரித்தன. தற்போது யப்பான் தனது ஆய்வுக்குரிய செலவுகளைத் தருமாறு கோரியுள்ளது. சமீபத்தில் அரசியல் அமைப்பில் 20வது திருத்தத்தினை அரசு மேற்கொண்டது. இதனை நிறைவேற்ற சுமார் 7 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. அதனை முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் வாக்களித்து நிறைவேற்றினர். ஆனால் இந்த முஸ்லீம் ஆதரவு குறித்து சிங்கள பௌத்த இனவாத ஆதரவு சக்திகள் அரசு ஏன் அந்த ஆதரவைப் பெற்றது? என விமர்ச்சித்தன. தனிச் சிங்கள மக்களின் அரசு என்றால் முஸ்லீம் ஆதரவு ஏன்? என வினவினார்கள். அவ் வேளையில் முஸ்லீம் ஆதரவு இல்லையெனில் எவ்வாறு 20வது திருத்தத்தினை நிறைவேற்ற முடியும்? எனப் பத்திரிகையாளர்கள் வினவியபோது தம்மால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூலம் நிரப்ப முடியும் என்றனர். இந்த அளவிற்கு இனவாத சக்திகள் ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தயாராக உள்ளனர்.      

இவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களில் சிறிய கட்சிகள் பாரிய ஆதிக்கத்தைச் செலுத்துவதால் அதுவும் பௌத்த இனவாத சக்திகள் அரசாங்கத்தின் மேல் அளவிற்கு அதிகமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதால் தற்போது பிரதான கட்சிகளால் தேசியப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. 20வது திருத்தம் வேண்டுமென்றார்கள். பெற்றுக் கொண்டார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்றார்கள். பெற்றுக் கொண்டார்கள். அவ்வாறு கிடைத்த பின்னரும் நாட்டில் ஏன் இந்தப் பிரச்சனைகள்?   


தொடரும்…