— சிவா மு. ஈஸ்வரமூர்த்தி —
தாயகத்தில் பாடசாலைக்கு புதிய வரவாக எங்கள் குருத்துகள் இணையும் செய்திகளை ஊடகங்கள் வழியாக அறியமுடிகின்றது. கொரோனா பேரிடர் காரணமாக தை பிறப்பில் ஆரம்பமாகும் இந்த புதிய வரவு சற்று தாமதமாக இந்த வருடம் நடைபெற்றுள்ளது.
கால ஓட்டத்தில் ஏற்றபட்ட மாற்றங்கள்… வளர்ச்சிப் போக்கு… என்பவற்றை குழந்தைகளின் முதல்நாள் வருகையிற்கான நிகழ்ச்சி நிரலில் அவதானிக்க முடிந்தது. நான் 40 வருடங்களுக்கு முந்தைய நினைவுகளுடன் இதனை இணைத்துப்பார்க்கின்றேன்.
அனேகமாக எல்லாக் குழந்தைகளும் பாடசாலைக்குரிய சீரூடையில் இருப்பது அழகாகவும் அதேவேளை ஏற்றத்தாழ்வுகளைக் களையும் ஒரு அடையாளமாகவும் மாறி இருப்பது வரவேற்கத்தக்கது. கூடவே தமக்கான புத்தகங்களை; ஏன் சிறய அளவிலான சிற்றுண்டி, குடிப்பதற்கான பானங்களைதமது பையிற்குள் வைத்திருப்பதற்கு ஏதுவாக யாவரும் பையை(bag) காவுவதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
மனித உடலில் அதிகம் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டி உடல் உறுப்பான பாதங்களை காப்பதற்குரிய காலணிகளை யாவரும் அணிந்திருபதும் வரவேற்றகத்தக்கதாக அவதானிக்க முடிந்தது.
இவற்றில் பெரும் பகுதியை மாணவர்களுக்குகான அடிப்படைத்தேவை என்ற அடிப்படையில் அரசுகள் வழங்க வேண்டிய நிலையில் அவை முழுமையாக வழங்கப்படாத நிலையில் பெற்றோர்கள், தன்னார்வ நிறுவனங்கள், தனி நபர்கள் என்று இவற்றை பூர்த்திசெய்யும் செயற்பாடுகள் நடைபெறுவதாக அறியக்கிடைக்கின்றது. சமூகமாக சில பிரச்சினைகளை அணுகுதல், உதவிகளை மேற்கொள்ளுதல் என்பன நடைபெறுவது வரவேற்கத்தக்க விடயம்.
இதில் தமிழர் தரப்பில் புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்கள் பலரும் தம்மாலானா உதவிகளை வழங்குவதும் இதனை இணைப்புச் செயற்பாடாக தாயகத்தில் உள்ளவர்கள் செயற்படுவதும் நம்பிக்கை ஊட்டுவதாக அமைகின்றன.
வாய்ப்புகள் இல்லாத… வசதிகள் இல்லாத மாணவர்களுக்கான கல்வி ஆதாரங்களை முடிந்தளவில் செயற்படுத்தும் இந்த விடயங்கள் ஒரு சமூகம் பலம்மிக்க வழமான சமூகமாக தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு பாரிய உதவியினைச் செய்கின்றது.
சுயவிளம்பரம் என்பது இதற்குள் ஒரு சிறிய அளவில் நடைபெற்றாலும் உதவி சென்றடைத்தல் அல்லது பெற்றுக்கொள்ளல் என்ற விடயம் பெரும்போக்காக நல்ல விடயங்களை அறுவடை செய்யும் என்ற நல் எண்ணத்துடன் நாம் இதனை அணுகுவோம்…. வரவேற்போம்.
கூடவே என்னை மிகவும் கவர்ந்த ஒரு விடயமாய் முதல் நாளில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மரக்கன்று(கள்) கொடுத்து அதனை வளர்ப்பதற்கு ஊக்கிவிக்கும் செயற்பாடு அமைகின்றது. இந்த மிகப் பெரிய சிறந்த செயற்பாட்டை முன்னெடுப்பவர்கள் யாவருக்கும் வாழ்த்துகள்.
இந்தக் கன்றுகள் சுற்று சூழலுக்கு பெரிதும் உதவிகரமாக அமைந்து மனித வாழ்வியலை மேப்படுத்த உதவும். இந்தச் செயற்பாடு நட்ட மரம் தளிர்த்து பெரும் விருட்சமாக மாறும் போது பாரிய நல்ல தாக்கங்களை இந்த பூமிப்பந்திற்கு ஏற்படுத்தும். அந்த அறுவடை நாட்கள் சுகந்தமானவை.
கன்றுகள் வழங்கப்படும் போது அதனை எவ்வாறு பட்டுப் போகாமல் தொடர்ந்தும் பராமரிப்பது என்பதுவும், நீர் ஊற்றுதல் போன்ற விடயங்களையும் குழந்தை செல்வங்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் எடுத்துரைப்பதுவும் இங்கு முக்கியமாகின்றது.
அது குழந்தைகளுக்கான ஒரு சமூகப் பொறுப்பையும் சுற்றுச் சூழல் விடயம் சம்மந்தமான புரிதலையும் ஒரு பொறுப்பையும் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே ஊட்டுவதாக அமைகின்றது.
இவை எல்வாவற்றையும் விட தினம் தினம் வளரும் அந்த மரக்கன்றை பார்க்கும் குழந்தைகள் மனதில்…. புதுக் குருத்து… புதுத் தளிர்… இலை என்று கன்றில் இருந்து வரும் போது அதனைக்கண்டு குழந்தைகள் பரவசப்படும் மகிழ்வு அவர்களின் மனதில் ஏற்படும் கிளர்ச்சி நிச்சயம் ஒரு ஆரோக்கியமான உற்சாகமான தன் நம்பிக்கையை மன நிலையை ஏற்படுத்தும். இது எம்மால் உணரப்பட வேண்டிய உளவியல் விடயம் ஆகும்.
நேரடிப் பயன் தரும் மரங்களாக கன்றுகள் இருப்பது ஆரம்ப நிலையில் குழந்தைகளுக்கு அந்த கன்றின் மீது… மரத்தின் மீது.. பிடிமானம் அதிகம் ஏற்படுத்த உதவும். இதனைக் கருத்தில்கொண்டு இந்த குருத்துக் குழந்தைகளுக்கு அவ்வாறான கன்றுகளை வழங்குவதும் சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு பொதுவான மரக்கன்றுகளை வழங்குதல் என்ற முறைமையையும் கொண்டிருக்கலாம் என்பதை எனது கருத்தாக இங்கு பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
கன்றை வழங்குதல் என்பதுடன் எமது கடமை முடிந்து விட்டதாக பாடசாலை ஆசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நின்று விடாமல் அவை பட்டுப் போகாமல் வளர்ந்து விருட்சமாகின்றனவா என்ற அவதானிப்பில் ஈடுபடுவதே வழங்கலைவிட முக்கியம் பெறுகின்றது. இதனை குழந்தைகள் பெற்றோருக்கு அப்பால் சம்மந்தப்பட்வர்களும் அவதானிப்பில் ஈடுபடுவது மிகவும் அவசியம் ஆகின்றது.
எம் நாட்டுத் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பயன் தரும் மரங்களை நடுதல் என்பது இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். கூடவே அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சியாக இனம் காணப்பட்ட மரக்கன்றுகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். ஏன் புதிய இனக் கன்றுகளைக்கூட அறிமுகப்படுத்தலாம் தானே.
முன்பு ஒரு காலத்தில் நிழல் மரவள்ளி என்று ஒன்று நிழலுக்காக சந்திகளில் நாட்டப்பட்டன. அவை அதிக நீரை உறுஞ்சும்…? அதிக நிழல் தராத, பயன்பாடு மிகக் குறைந்த மரமாக இருந்தது இங்கு தவர்க்க வேண்டிய கன்றுகளுக்கான உதாரணமாக அமைகின்றது. துறைசார் நிபுணத்துவம் உடையவர்கள் இது பற்றிய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன்.
இவற்றிற்கு அப்பால் சொட்டு நீர் அல்ல நீரை விணாக்காமல் அளவாக பாவித்தல் ஏன் அவசியம் என்ற நீர் முகாமைத்துவத்தை இந்த இளம் குருத்துகளிடம் இருந்தே விழிப்புணர்வுகளை ஆரம்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
உலகில் இலங்கை போன்ற… யாழ்ப்பாணம் போன்ற.. தீவகம் போன்ற வரட்சியான பிரதேசங்களில் நீரை சரியாக முகாமைத்துவம் செய்தல் என்பது அத்தியாவசியமாகி நிற்கின்றது.
அளவுக்கு அதிகமான ஆளம் கூடிய குழாய் கிணறுகள் நிலத்தடி நீரை மாசுபடுவதுவதும்…. சுற்றுச் சூழல் மாசுபடுவதும் மனித வாழ்வை எவ்வளவிற்கு பாதிக்கும் என்பது குழந்தைகளுக்கு புரியும் படியாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.
சீருடை, கால் அணி, அவர்களுக்கான பை என்பனவற்றை வழங்குவதில் கற்றுக் கொள்வதில் வறுமை என்பதினால் தமது பெற்றோர்களால் வாங்கித்தர சாத்தியமில்லாத சூழல் ஏற்படும் போது குழந்தையாக இருக்கும் புதுதாக பாடசாலைக்கு போகும் ஒரு பிள்ளையின் மனநிலை பாதிக்கப்படாமால் எனைய மாணவர்களுடன் தன்னை ஒப்பிட்டு ஒரு தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளப்படாமல் ஒவ்வொரு குழந்தைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமான விடயம். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
பின்லாந்து போன்ற நாடுகளில் உள்ள கல்வி முறையான…..
# ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது…
# எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்…
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை…
# ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிறகலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு…
# முக்கியமாக, 13 வயது வரை புள்ளி அடிப்படையிலான தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது…
# ரிப்போர்ட் (Progressive Report Card) தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் ‘வன்முறை’ கிடையாது…
# இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை…
# மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்…
# முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்…
# கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்…
# அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது…
# அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்…
# அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்…
# ‘பிரத்தியேக வகுப்பு (Tuition)’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை…
என்பன நம் நாட்டுக் கல்வி முறையில் முழுமையாக இல்லை. ஆனாலும்…..
ஆசிரியர்கள், பெற்றோர்கள் தற்போது நடைமுறையில் பின்லாந்து கல்வி முறையில் சாத்தியப்படுத்தக் கூடிய நல்ல விடயங்களையாவது கைக்கொள்ள முயலுவது அவசியமாகின்றது.
பிள்ளைகளை கற்பதில் ஆர்வம் ஏற்படுத்தும் கையில் அவர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தாக கற்பித்தல் முறைமையினை முடிந்தளவிற்கு ஏற்படுத்தல் என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பின்லாந்து போன்ற வெற்றிகரமான.. முன்னேற்றகரமான கல்வி முறையினை இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறைக்கு கொண்டுவரும் வரையில் நடைமுறையில் இருக்கும் கல்வி முறையிற்குள் எவ்வாறு இவற்றைச் சிறப்பாக செயற்படுத்தலாம்…. அதன் தொடர்ச்சியாக புதிய முன்னேற்றகரமான கல்வி முறையை எப்படி ஏற்படுத்தலாம் என்ற முயற்சிகளை நாம் மேற்கோண்டே ஆகவேண்டும்.
எமக்கு தற்போது கிடைத்திருக்கும் அனுபவிக்கும் இலவசக் கல்வி முறை பெரிய வரபிரசாதமாக இருப்பதுவும் அதனை நாம் மிகவும் சரியான முறையில் பயன்படுத்துவதும் மிகவும் அவசியமாகின்றது.
இன்ரநார்சல் ஸ்கூல் என்ற ‘தரமான” கல்விக் கூடம்தான் எமக்கான சமூக அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் கொடுக்கும் என்று பெரியளவிலான பணத்தை கொட்டி எங்கள் குழந்தைகள் சுமக்க முடியாத கல்விப் பாரத்தை அவர்கள் தலையில் சுமையாக கட்டுவது தவறு. இதனை பெற்றோர்கள்… சமூகம் முழுமையாக நிராகரித்து சகலருக்குமான கல்வி அது சமமான சரியான கல்வி என்ற வகையில் எமது குழந்தைகளை நாம் புது நாற்றாக பாடசாலைகளில் நாட்டுவோம்.
புது நெல்லு புது நாற்றாக பாடாசாலையிற்குள் கரம் பற்றி அழைத்துச் செல்வோம்.
நாம் சிறுவர்களாக பாடசாலைக்கு புகும்போது இருந்த பயப் பிராந்தியை மாணவர்களிடம் தற்போது காணுவது அரிதாக இருப்பது முக்கியமானது. அவர்கள் கற்றலுக்காக புது உடைபோட்டு புதுப் பையுடன் புதுக்காலணியுடன் புதியவர்களை சந்திக்கும் ஆர்வத்துடன் பாடசாலைக்குள் புகும் ஆர்வத்தை நாம் தொடர்ந்தும் பேணி, சகலரையும் சமமாக மதித்து அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் கட்டியமைக்க சமூகமாக இணைந்து செயற்படுவோம்.
அது இந்த புது நெல்லு புது நாற்றாக ஆரம்பித்து எமக்கான அறுவடையை நிச்சயம் கொடுக்கும். இதுவே தேசிய உறுதிப்பாட்டை ஏற்படுத்தி ஒரு பலம்மிக்க சமூகத்தை வீழ்ந்து விடாத வீரமாக எழுந்து எம்மை மிளிரச் செய்யும்.
இறுதியாக மலையகம் பதுளையில் முதல் நாள் பாடசாலைக்குச் சென்ற சிறுவர் ஒருவர் வாகனம் ஒன்றில் மோதுண்டு மரணித்துள்ளார். அவருக்கான அஞ்சலியையும் செலுத்துகின்றோம். கூடவே பள்ளிக் கூடங்களுக்கு அருகில் குழந்தைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதினால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் வேகக்கட்டுபாட்டுன் சமூக அக்கறையுடன் செயற்படுமாறும் வலியுறுத்துகின்றோம்.