மக்கள் அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் (சொல்லத் துணிந்தேன் -58)

மக்கள் அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் (சொல்லத் துணிந்தேன் -58)

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —  

சென்ற பத்தியில் (சொல்லத் துணிந்தேன்-57) ஆய்வு நோக்கில் இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் இரண்டு அணிகளை அடையாளப்படுத்தியிருந்தேன்.  

ஒன்று ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என நாமகரணம் சூடியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன இணைந்த முதலாவது அணி. இந்த அணி இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் உளப்பூர்வமாக அனுசரித்துப் போகாத இந்திய எதிர்ப்பு மற்றும் புலிகளின் ஆதரவு அணி. 

மற்றையது இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் தத்துவார்த்த ரீதியாக மேற்படி மூன்று கட்சிகளுக்கும் எதிரான- அரசியல் கோட்பாட்டு ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘பாசிச’ ப் போக்கினையும் ‘ஏகப்பிரதிநிதித்துவ’க் கோட்பாட்டையும் எதிர்க்கும் அதேவேளை இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் உளப்பூர்வமாக அனுசரித்துப் போவதில் இந்தியாவை ஆதரிக்கும் இரண்டாவது அணி. 

முதலாவது அணியானது, அரசியல் பிரதிநிதித்துவ வலுவைக் கூடுதலாகக் கொண்டுள்ள அணி. ஆனால் இந்த அணி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அணியாக உள்ளதால் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கைச்சாத்திகளான இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் இரண்டுமே இந்த அணியை உளப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. 

இரண்டாவது அணியானது ஒரு மாற்று அணியாகக் கொள்ளப்படத்தக்கதெனினும் முதலாவது அணியுடன் ஒப்பிடுகையில் அரசியல் பலமும் அரசியல் பிரதிநிதித்துவ வலுவும் குன்றிய அணி. அதாவது, தேர்தல்களில் இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் பெருவாரியான ஆதரவைப் பெறாத அணி. 

பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை அதன் முழுமையான அமுலாக்கலை எந்த இலங்கை அரசாங்கமும் விரும்புவதாயில்லை.  

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் புவிசார் அரசியல் நலன்களை வேறு வழிகளில் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்குமாயின் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல் அதற்குக் கட்டாயம் தேவையானதொன்றல்ல. 

உண்மையில் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல் யாருக்குத் தேவையெனில் அது இலங்கைத் தமிழர் தரப்புக்குத்தான். ஆனால், முரண்பாடு என்னவெனில், தமிழர் தரப்பு அதில் அசமந்தமாக இருப்பதுதான். இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கும் வரை பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலில் எதிர்காலத்திலும் கூட இலங்கை அரசாங்கங்கமோ அல்லது இந்திய அரசாங்கங்கமோ அவை எந்தக் கட்சி அரசாங்கங்களாக இருந்தாலும் கூட பாரிய அக்கறை செலுத்தப் போவதில்லை.  

பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல் யாருக்குத் தேவையோ அந்தத் தரப்பான தமிழர் தரப்பே அதில் அக்கறையில்லாமல் அல்லது அக்கறைக் குறைவாக அசமந்தமாயிருக்கும்போது ஏனைய இரண்டாம் மூன்றாம் தரப்பான இலங்கை அரசாங்கங்கத்திற்கோ இந்திய அரசாங்கங்கத்திற்கோ அதில் அக்கறையில்லாமல் போவதில் குறை காண முடியாது. நடைமுறை அரசியலில் அறம்- நியாயம்- தார்மீகப் பொறுப்பு- தர்மம் என்றெல்லாம் கிடையாது. தத்தம் நாட்டின்- சமூகத்தின்- பிரதேசத்தின்- கட்சியின்-தனிநபர் நலன்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்த யதார்த்தத்தை இலங்கைத் தமிழர் தரப்பு புறந்தள்ளிவிட்டு வெறும் உணர்ச்சிப் போக்கினால் எந்த அரசியல் இலக்கையும் அடைய முடியாது. கோவணத்தைக் காப்பாற்றிக் கொண்டுதான் பட்டு வேட்டிக்குப் போராட வேண்டுமேயொழிய பட்டு வேட்டிக் கனவில் கட்டிய கோவணத்தைப் பறி கொடுத்துவிடக்கூடாது. 

ஆனால், இலங்கைத் தமிழர் தரப்பானது கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாகக் கால தேச வர்த்தமானங்களைக் கணக்கிலெடுத்து அரசியல் வியூகங்களை அறிவுபூர்வமாக வகுத்துக்கொள்ளத் தவறியதால் இப்போது கோவணத்தையும் இழந்த அல்லது இழக்கும் நிலையில் வந்து நிற்கிறது. 

இந்தக் கட்டத்தில், கடந்த காலத்தில் நடந்தவைகள் ஒருபுறமிருக்க தற்போது தமிழர் தரப்பு வகுத்துக்கொள்ள வேண்டிய உபாயங்கள் குறித்து இப் பத்தியில் கூறவேண்டிய தேவை எழுந்துள்ளது. 

ஒர் உபாயம்; இப்பத்தியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முதலாவது அணியானது அரைத்த மாவையே அரைக்கும் தனது அரசியல் போக்கினை மாற்றி – வெறுமனே வீராப்புப் பேசுவதை நிறுத்தி – ‘புலிப்பாட்டு’ க்களையும் தவிர்த்துக்கொண்டு, இப்பத்தியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முதலாவது அணியுடன் அறிவுபூர்வமான அரசியல் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு அதனையும் இணைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமான ‘தமிழர் தரப்பு’ ஆக வடிவெடுத்து நடைமுறைச் சாத்தியமற்ற அல்லது சாத்தியமாவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கக் கூடிய விடயங்களில் பராக்குகளைச் செலுத்துவதைத் தற்காலிகமாகவேனும் தவிர்த்துக் கொண்டு, பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்காக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் ‘அரசியல் வியூகம்’ களை  வகுத்து அவற்றை வெகுஜன ரீதியாகச் செயற்படுத்த வேண்டும். 

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தனி நாடா? சமஷ்டியா? பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலா? என்று ‘கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை’ என்ற கணக்கில் தமிழர் தரப்பு குழம்பக் கூடாது. தந்திரோபாய ரீதியில் மீசையை மழித்துவிட்டும் கூழைக் குடிக்கலாம். கூழைக் குடித்து விட்டு சில நாட்கள் எடுக்குமென்றாலும் கூட அதற்குப் பின்னர் மீசையை வளர்த்துக் கொள்ளலாம். எனவே, இப்போதைக்கு மீசையை மழித்து விட்டுக் கூழைக் குடிப்பது போன்றதே தமிழர் தரப்பின் உடனடிக் குவிமையமாக பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாக அமுல் செய்யும் விவகாரத்தை மட்டுமே முன்னிலைப் படுத்துவது. இதனை மேற்கூறப்பட்ட அணிகளின் கட்சித் தலைமைப் பீடங்களே தீர்மானிக்க வேண்டும். தீர்மானம் எடுப்பது தலைவர்களின் கரங்களிலேதான் தங்கியுள்ளது. ஆனால் விட்டுக் கொடுப்புகளுக்கும்- ஒறுப்புகளுக்கும்- இழப்புக்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் தயாராக இல்லாத தன்முனைப்புமிக்க தமிழர்தம் தற்போதைய அரசியல் தலைமைகள்  அரசியல் அதிகாரத்தில்  உள்ளவரை இந்த உபாயம் சாத்தியப்பாடற்றதாகும். 

மற்றைய உபாயம் என்னவெனில், முதலாவது உபாயம்  சாத்தியப்படாதவிடத்து, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் இப்பத்தியின் முதலாவது பந்தியிலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது அணியை முழுமையாக ஆதரித்து வெற்றியீட்டச் செய்து அந்த அணியின் கரங்களில் அரசியல் பலத்தையும் அரசியல் பிரதிநிதித்துவ வலுவையும் ஒப்படைப்பதன் மூலம் குறைந்தபட்சம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் நடத்தக்கூடிய வகையில் காத்திரமான அரசியல் செயற்பாடுகளை- அது பரந்த அளவிலான வெகுஜனப் போராட்டமாகக் கூட அமையலாம்- முன்னெடுப்பதற்கான வழியைத்திறப்பதாகும். தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய மூடுநிலையை அல்லது தேக்க நிலையை அல்லது மந்த நிலையைக் களைவதற்கு இந்த அரசியல் ‘அறுவைச் சிகிச்சை’ ஒன்றுதான் அறிவுபூர்வமான மார்க்கமாகும். இந்த மார்க்கம் தற்போதைய தமிழ்த் தேசியத் தலைவர்களின் கைகளில் இல்லை. மக்களின் கரங்களில்தான் உள்ளது. எனவே தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான்.