— சி. சோமிதரன் —
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழங்காலத்து உயர்ந்த கட்டத்தின் முதல்தளத்தில் விசாலமானஅறை. ”தி பைசிக்கிள் தீவ்ஸ்” என்கிற திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. உலகின் சிறந்த படம் ஒன்றைப்பார்க்கிறோம் என்பது அந்தச் சிறுவர்களுக்குத் தெரியாது. அந்தச்சிறுவர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன் பின்னாளில் அந்த ஊருக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் பெருமை சேர்க்கப்போகும் இயக்குனர் ஆகப்போகிறார் என்பதும் அப்போது தெரியாது.
தென்னிந்திய சினிமாவில் ஒளிப்பதிவின் புதிய பார்வையை அறிமுகப்படுத்திய பாலுமகேந்திரா அவர்களின் திரைப்படத்துடனான ஊடாட்டம் அவரின் சிறுவயதுகளின் காட்சிகளில் இருந்துதான் தொடங்குகிறது. எங்களுடைய பள்ளி நாட்களில் பாடசாலை முடிந்தவுடன் பாலுமகேந்திரா சிறுவராகப் படம் பார்த்த அதே மிக்கேல் கல்லூரின் முதல்தளத்தில் தொலைக்காட்சிகளில் அருட்தந்தை மில்லர் சிறுவர்களுக்காக படங்கள் போடுவார். இதனை நான் சொன்னபோது “அதே ஃபாதர்தான் தங்களுக்கும் படம் போட்டார்” என்றார் பாலுசேர்.
2007இல் நான் பாலு சேரை முதன்முதலில் சந்தித்த போது அவர் என்னுடைய எரியும் நினைவுகள் ஆவணப்படத்தைப் பார்த்திருந்தார். அது யாழ்ப்பாண நூலக எரிப்புக் குறித்த படம். என் கைகளைப் பற்றிக் கொண்டவர், “அந்த நூலகத்தின் படிகட்டுகளில் உட்காந்து நான் படித்திருக்கிறேனடா. அந்த நினைவுகளும் அப்படியே இருக்கிறது. என் நினைவுகளைக் கதையாக்கவில்லை என்ற ஆதங்கமும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறது”என்றார்.
பல ஈழத்துப் புலம்பெயரிகளைப் போல அவர் தன் பால்ய நினைவுகளையும் ஊரையும் காவிக் கொண்டே இந்திய சினிமாவில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்திருக்கிறார் என்பது பின் வந்த காலங்களில் எனக்கும் இன்னும் தெளிவாகியது. அதற்குப் பிறகு நான் அவருடன் இணைந்து பணியாற்றத்தொடங்கிய பொழுது அவருக்கிருந்த மகிழ்வு, ஊர் கதைகளை தினமும் பேச ஒருவன் கிடைத்துவிட்டான் என்பதாகவே இருந்திருக்கும். மட்டக்களப்பு நகரத்தின் எல்லையில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய ஊரில் இருந்து புறப்பட்டு இந்தியாவின் திரையுலகின் வரலாற்றை அவரைத்த தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்கிற அளவுக்கு தன்னை நிலை நிறுத்தியவரின் பயணத்தை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
தன்னுடைய இளமைக் காலத்தின் நினைவுகளை தனக்குள் அசைபோட்டபடியேதான் அவர் இருந்தார். அவருடைய சினிமாக்களின் கதை மாந்தர்களும் காட்சிகளும்கூட ஏனைய தமிழ் சினிமாக்களில் இருந்து வேறுபட்டு இருப்பது அவருடைய பால்யத்தின் நினைவுகளை அவர் சேகரித்து வைத்திருந்ததின் வெளிப்பாடே. எனக்கும் அவருக்குமான உறவும் அப்படித்தான் தொடங்கிற்று. மட்டக்களப்பு மாமாங்கக் குளத்தை அங்குள்ள கண்ணகி அம்மன் கோயிலை, அந்த ஊரை, தெருவை அவர் அப்படியே நினைவு வைத்திருந்தார். 2010 இல் நான் மட்டகளப்புக்குப் போய் அவர் நினைவில் வைத்திருந்தவற்றைப் பதிவு செய்து வந்து அவருக்குப் போட்டுக் காட்டினேன். அப்படியே இருக்குடா என்று ஆர்வமானர். நீண்ட போர் காரணமாக அபிவிருத்தி என்ற பெயரில் ஊரில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தாததால், 1978 இல் அவர் கடைசியாகப் பார்த்த ஊரின் நினைவுகளை அவரால் அந்த காட்சிகளில் கண்டெடுக்க முடிந்தது.
நான் இந்த கட்டுரையில் நாடற்ற ஒரு வாழ்கையினை வாழ்ந்த அவருடைய நினைவுகளையே அதிகம் எழுதுகிறேன். அவரின் சினிமாக்களைப் பற்றி அவரே நிறையச் சொல்லிவிட்டார். ஆனால் அவரால் அதிகம் வெளிப்படுத்த முடியாதுபோன பக்கம் அவரின் மன உலகம். “மீன்குஞ்சுக்கு நீந்த மட்டும்தான் தெரியும், பறக்கத் தெரியாது. அதேபோல எனக்கு சினிமா எடுக்க மட்டுமே தெரியும்” என்பார். “நமக்கு பிடித்தமான ஒரு தொழிலைச் செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம். நமக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது, ஆகவே அதற்கு நேர்மையாக வேலை செய்ய வேண்டும்”. அவர் உலகத்தோடு தான் பேச விரும்பியதை சினிமா மொழியால் தன் சினிமாக்களின் ஊடாகப் பேசினார்.
பாலு சேர் ஒரு சுவரஸ்யமான மனிதர். அதே நேரம் சட்டெனக் கோபமும் உணர்ச்சி வசப்படுதலும் அவர் இயல்பு. செண்ஸிட்டிவ், பொசிஷிவ் கொண்டவர். கிரியேட்டர் எப்பவும் எக்ஸ்சென்றிக் ஆளாத்தான் இருப்பான் என்பார். என் திருமணத்தை அவர் நிகழ்த்தி வைத்தபோது என் மனைவியிடமும் இதையேதான் சொன்னர். ஒரு எக்ஸ்சென்றிக் கிரியேட்டரோடு வாழுறது அவ்வளவு இலகு இல்லை என்றார். அவருடைய முழுமையான பயணத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்று கேட்டபோதுகளில் எல்லாம் என்னிடம் ஏதேதோ காரணங்கள் சொல்லிமறுத்தார். நானும் விடாது கேட்டேன். ஒரு கட்டத்தில் சொன்னார். “என்னுடைய வாழ்க்கை அழுக்கும் குப்பையும் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது. அதை நான் காட்சிப் படுத்தவிரும்பவில்லை. நான் என்ன காட்சிப்படுத்த விரும்புகிறேனோ அதனை என் சினிமாக்கள் வாயிலாக நான் தந்துவிட்டேன் “.
ஆனால் அவருடைய வாழ்வின் பயணம் என்னைப் போல ஈழத்தில் இருந்து திரைத் துறை நோக்கிப் புறப்பட்டவர்களுக்கு அவசிமானதுதான். மைய நீரோட்டத்திற்க்குள் இருந்து கொண்டு தனித்துவமாக இயங்கியவர்.
பாலுமகேந்திரா தன்னுடைய 14 ஆவது வயதில் மிக்கேல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது பாடசாலை சுற்றுலாவுக்குச் செல்கிறார். அப்போது “பிறிட்ஜ் இன் ரிவர் காவய்” என்கிற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்குப் போகிறார்கள். அங்கேதான் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பைப் பார்க்கிறார். மழை என்று இயக்குனர் சொன்னவுடன் அந்த இடத்தில் மழை பெய்கிறது. என்னடா இது அதிசயமாக இருக்கிறதே. இயக்குனரால் எல்லாத்தையும் சிருஸ்டிக்க முடிகிறதே என்ற ஆச்சர்யம் அவருக்குள் புதிய உந்துதலை உருவாக்குகிறது. அவரது தந்தை வாங்கிக் கொடுத்த கமெராவில் போட்டோ எடுக்க ஆரம்பிக்கிறார். மட்டக்களப்பிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் அவரது கல்வி தொடர்ந்தது.
இலங்கையிலே படித்து வேலையும் கிடைத்துவிட்டாலும் அவருக்குள் இருந்த சினிமாப் படைப்பாளி வெளிப்பட்டுக்கொண்டே இருந்தான். ஒரு மீன் நீந்துவதுதானே அதன் இயல்பு, அதேபோல நான் சினிமா எடுப்பதற்கானவன் மட்டுமே என்பதை தனது இறுதிவரை சொன்னார். கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சினிமா கற்பதற்கு விண்ணப்பிக்கிறார். அப்போது அவர் எடுத்து வெளியாகியிருந்த சில புகைப்படங்களையும் அனுப்பிவைக்கிறார். இலங்கையில் ஒரு சிற்றூரில் பிறந்த அவரது திறமையைக்கண்டு வியந்த பல்கலைகழகம் அவரைத் தேர்வு செய்கிறது. ஆனால் பல்கலைகழகம் நிர்ணயித்த தொகையை அவரால் கட்ட முடியவில்லை. இதனைஅந்த பல்கலைகழகத்திற்கு கடிதமாக எழுதுகிறார். இப்படியொரு திறமையான மாணவனுக்கு உதவ வேண்டும் என எண்னினார் அந்த பல்கலைகழக தேர்வாளர். உங்களுக்கு அருகில் உள்ள இந்தியாவில் “புனா” என்ற ஊரில் ஒரு திரைப்படக் கல்லூரி இருக்கிறது அங்கு போய் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அப்படித்தான் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார் பாலுமகேந்திரா. அவர் இயக்குனர் படிப்புக்குத்தான் விண்ணப்பித்திருந்தார் என்றாலும் அவர் எடுத்திருந்த புகைப்படங்களைப் பார்த்து அவரை ஒளிப்பதிவுக்காக தெரிவுசெய்தனர். வேண்டா வெறுப்பாக ஒளிப்பதிவைப் படிக்கத் தொடங்கியவர் அதில் முதல் மாணவரானார். படிப்பு முடிந்து இலங்கைக்கு வந்தார். ஆனால் அப்போது மாறிக் கொண்டிருந்த சூழலும் காலமும் அவரை இலங்கையில் வேலைசெய்ய முடியாத நெருக்கடிகளைக் கொடுத்தாலும் அவர் இலங்கையில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனேயே இருந்தார். ஆனால் காலம் ஒரு கணக்குப் போட்டிருந்தது. மலையாள உலகின் உன்னத இயக்குனர்களில் ஒருவரான ராமுகரியத்திடம் இருந்து அழைப்பு வந்தது. உதவியாளராக சேருவதற்கான அழைப்பு என பயணமானவருக்கு வரலாறு வேறாக முடிவு செய்திருந்தது. நெல்லு என்கிற அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரானார். தொடர்ந்து நான்கு வருடங்கள் மலையாள சினிமாவில் வேலை செய்தார்.
ஒரு கட்டத்தில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவை நனவாக்குவதற்க்கு முடிவு செய்தார். அவரது முதல் படம் கோகிலா. மட்டக்களப்பு தமிழ் மண்ணில் வளர்ந்து புனாவில் மலையாளத்தில் ஒளிபதிவாளராக வேலை செய்த பாலுமகேந்திரா, தன்னுடைய முதல் படத்தைக் கன்னடத்தில் எடுத்தார். கமல்ஹாஸன் ஷோபா நடித்திருந்த அந்தப் படம்தான் நடிகர் மோகனுக்கு முதல் படம். கோகிலா சென்னையில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய கன்னடப்படம் என்ற பெருமைக்குரியது. அதற்கு முக்கிய காரணம் பாலுமகேந்திராவின் புதுமையான ஒளிப்பதிவு. அவரது முதல் மலையாளப் படத்தைப்போலவே இந்த படத்திற்க்கும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்தது. ஒளிப்பதிவுக்காக பல தேசிய விருதுகளும் மாநில விருதுகளும் அவரைத் தேடிவந்தன.
இரண்டாவதாக அவர் தமிழில் அழியாக கோலங்கள் என்ற படத்தை எடுத்தார். அழியாத கோலங்கள் அவரது பால்யத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் பாதிப்பில் இருந்து உருவாக்கியது. மூன்று சிறுவர்களைப் பற்றியது. மட்டக்களப்பில் பாலுமகேந்திராவின் வீடும் கவிஞர் காசிஆனந்தனின் வீடும் அருகருகே இருந்தன. இவர்கள் இருவரது நாண்பர் ஒருவர் மாமாங்கத் தீர்த்தக் குளத்தில் விழுந்து இறந்து விடுவார். அழியாத கோலங்கள் கதை இதனைத் தழுவியதே. மட்டக்களப்பில் அப்போது இவர்களுக்கு ஆதர்சமாகவும் நட்பான ஆசிரியராகவும் இருந்தவர் எழுத்தாளர் எஸ்பொ. சென்னையில் இவர்கள் மூவரோடும் ஒருசேர உரையாடுகிற சந்தர்ப்பம் எனக்குக்கிட்டியது. பாலுசேரின் மரணம் வரையில் எஸ்பொவும் பாலுசேரும் அடிகடி சந்தித்துக் கொள்வார்கள். என் மோட்டார் சைக்கிளில் எஸ்பொவை அழைத்துப் போவேன். பாலுசேர் தன்காரில் கொண்டு சென்று விடுகிறேன் என்றாலும் எஸ்பொ ஒத்துக்கொள்ளார். அது தன் இளமைக்கு இழுக்கு என்று மோட்டார் சைக்கிளில்தான் வருவார். மட்டக்களப்பின் கதைகளை இருவரும் பேச ஆரம்பித்தால் நாம் கண்டிராத அறுபதுகளின் மட்டக்களப்பு விரியும்.
வெள்ளைப் பாலத்தடியில் சாப்பிட்ட பொரித்த மீனில் இருந்து எஸ்பொ, காசிஆனந்தனை வைத்து மேடையேற்றிய நாடகங்கள் வரை கதை நீளும். எஸ்பொவும் காசி ஆனந்தனும் அரசியல்களத்தில் நின்றாலும் பாலுமகேந்திரா அரசியலில் இருந்து அந்நியப்பட்டே இருந்தார்.
1956 சிங்கள மட்டும் சட்டமோ அல்லது அதற்க்குப் பிறகான சிங்கள சிறி எழுத்துக்கு எதிரான போராட்டமோ ஏதோவொன்று நடந்துகொண்டிருந்தபோது பாடசாலைப் பகீஷ்கரிப்பை மட்டக்களப்பின் முக்கிய கல்லூரிகள் அறிவித்திருந்தன. ஆனால் வின்சண்ட் மகளீர் கல்லூரி மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லையாம். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என காசிஆனந்தன் முடிவடுத்தார். இளையவரான பாலுமகேந்திராவையும் கூட்டிக்கொண்டு படுவான்கரைக்குப் போனார். அங்கு வெடி செய்யும் இடத்தில் சிறுவர்கள் விளையாட்டாக வெடிக்கும் சிறிய எறிவெடிகளை ஐந்தை ஒன்றாக சேர்த்து பெரிய வெடியாக சில வெடி உருண்டைகளை எடுத்து வந்தார்கள். பாலு சேர் அதனை மடியில் வைத்திருக்க, காசி அண்ணன் சைக்கிளை மிதிருக்கிறார். வின்சண்ட் மதிலில் அதை எறிந்து விட்டு ஓட்டம் பிடித்ததாக ஒரு கதையைக் காசி அண்ணன் சொன்னர்.
பாலு சேருக்கு இலங்கைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், நாடற்றவராகவே வாழ்ந்த அவருக்கு அந்த வாய்ப்புகளும் ஆவணங்களும் கூட இருக்கவில்லை.
“டேய் பிரபாகரன் என்னை வன்னிக்கு வருமாறு அழைத்தார். படகிலே கொண்டு செல்வதாகச் சொன்னார். அங்குள்ளவர்களுக்கு சினிமா கற்றுக்கொடுக்க அழைத்தார்கள்”, என்றார். ஆனால் அவரால் அந்த வாய்ப்பைக் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் சினிமா கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தபோது சொன்னர். “ இதில் என் ஊர் பையன்களை பணம் வாங்காமால் சேர்த்துக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு சினிமா கற்றுக்கொடுக்கவேண்டும்”, என்று சொன்னார்.
பாலு சேர் எண்பதுகளில் மட்டக்களப்பில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து ஒரு கதை உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தப் படத்தை அவரால் எடுக்கமுடியவில்லை. என்னிடம் அந்த கதைகுறித்து அவர் சொல்லியிருக்கிறார். அவர் எப்போதும் சொல்வார் “என்னால் முழுமையாக ஒரு கதையை எடுக்கக்கூடிய சூழல் இல்லாதபோது என் மக்களின் கதையை சமரசங்களோடு அரைகுறையாக எடுக்க முடியாது”. உண்மையில் இந்தியக் குடிமகனாவோ இலங்கைக் குடிமகனாகவோ இல்லாமல் நெருக்கடிகளுக்கு வாழ்ந்த அவருக்கு அது சாத்தியமற்றுப் போனது. ஆனால் அவர் கனவை காலம் நிச்சயம் சாத்தியப்படுத்தும்.