— இரா.வி.ராஜ் —
ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள்/அரசியல் தொடர் போராட்டம் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” #P2P சிறுபான்மையினர் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பரிணாமம் எனலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் ஒரு விதமான செய்தியை மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புகட்டினர். ஆனாலும் அச்சுறுத்தல், கொரோனா அச்சத்துக்கும் மத்தியிலும் இப்போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டதன் மூலம் சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் கூறியிருக்கும் செய்தி நாம் எச்சந்தர்ப்பத்திலும் போராட தயாரானவர்கள், எமது ஒற்றுமையே எமது பலம் என்பதாகவே இருக்கமுடியும்.
இப்போராட்டம் மக்கள் பார்வையில் உணர்சிபூர்வமானதும், அநீதிக்கு எதிரானதாகவுமே இருந்ததே தவிர யார் அரசியலையும் ஒட்டியதாக இருக்கவில்லை. அரசியல்வாதிகள் இதனை தம் அரசியல் போக்கு சார்ந்ததாகக் காட்டவே பல சமயங்களில் முயற்சித்தனர். ஆனால் அது எல்லோர்க்கும் கைகூடவில்லை. இப்போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனரா அல்லது தோல்வி அடைந்தனரா என்பது இன்னும் சில காலம் கழித்து, அரசியல்வாதிகளினதும், சிவில் அமைப்பினதும் தொடர்செயற்பாட்டினை பொறுத்தே முடிவு செய்யலாம்.
சிவில் அமைப்புக்களின் முயற்சியால் மாத்திமே இப்போராட்டம் உண்மையாக ஒழுங்கு செய்யப்பட்டிருப்பின், மக்கள் சார்ந்து சிவில் அமைப்பினர் தமக்கான பலத்தினை மெதுவாக அதிகரிக்கும் கதவினை திறந்துள்ளனர் என்றே கூறவேண்டும். சிவில் அமைப்பு என்று வருகையில் முதலில் தமக்குள் இன, மத, கலாச்சார, மொழி, பொருளாதாரம் சார்ந்த கருத்தொற்றுமை ஏற்படுத்தி அதன் பின் அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வது என்பது வழக்கம். #P2P போராட்ட நடுவிலும் சரி இறுதியிலும் சரி சில குழப்பங்களுக்கு அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி சிவில் அமைப்பினரும் காரணமாக இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகையில் மக்களைப் பொறுத்தவரை சிவில் அமைப்புகள் மீதும் சில சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதது.
இப்போராட்டத்தில் இறுதி நிமிடம் வரை பங்கெடுத்தவர்களை விட, இப்போராட்டத்தை முகநூல் நேரலையிலும், வேறு ஊடகங்களிலும், தொடர்சியாக போராட்டத்தில் நின்றவர்களிடம் தொலைபேசி தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு தெரியும் போராட்டம் முடியும் தருவாயில் ஒரு பதற்றம் இருந்ததென்று. பொலிகண்டியை அண்மிக்கும் ஒரு கட்டத்தில் சாணக்கியன் முகநூல் நேரலையில் இருக்கையில், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகின்றனர் “அவர்கள் எல்லாம் முன்னுக்கு செல்கிறார்கள் நீங்கள் கட்டாயம் முடிவில் இருக்கவேண்டும்“என அவர்களின் ஆதங்கத்தை கூறுகின்றனர். அதற்கு “சாணக்கியன்சேர் எந்தப்பக்கம் போனவர் நான் அவர் போன இடத்துக்கே போகவேண்டும்”என வினவுகின்றார், மீண்டும் “சுமந்திரன் சேர் எந்தப்பக்கம் போனவர்“என்று கேட்டு அவர் சுமந்திரன் சென்ற பாதையில் செல்வது போல் இருந்தது.
ஆகவே இறுதி நேரத்தில் நடந்த குழப்பம் உண்மையில் அது அப்போதுதான் நிகழ்ந்ததல்ல இப்பிரச்சனை பல மணி நேரத்துக்கு முன்னரே எரிந்துகொண்டே இருந்திருக்கின்றது.
இறுதியில் சுமந்திரன் வெளிப்படையாகதான் உரையாற்றினாரா? “இங்கு வர வேண்டிய அவர்கள் மாறி வேறு இடம் சென்றுவிட்டனர், நாம் இரண்டானது / நம் ஒற்றுமை குலைந்தது இலங்கை அரசுக்கு தெரியக்கூடது, எங்களை அவர்களிடம் செல்ல அனுமதியுங்கள்“ என்பதன் உண்மைத்தண்மை, சாணக்கியன் “சதி நடந்துவிட்டது கல் காணாமல் போய்விட்டது… என்பதெல்லாம் இறுதி கட்டத்தில் கூறியதென்பது ஏற்புடையதா?
சிவில் சமூகத்தினரும், அவர்கள் அருகில் இருந்த அரசியல் தலைவர்களும் இப்போராட்டத்தில் மிகப்பெரும் பலமாக மக்களை ஒன்று சேர்த்ததில் பெரும் பங்காற்றினர். சாணக்கியனையும்,“ஆரம்பத்தில் முழு பங்களித்தவரும் அவ்வப்போதும் மக்களுக்கு ஊடகம் வாயிலாக தைரியத்தையும், உணர்வையும் தந்தவருமான, சுமந்திரனும் நிற்கிறார் நமக்கு சட்டரீதியான பலம் இருக்கும் என பல மக்கள் போராட்டத்துக்கு வர காரணமான சுமந்திரனையும் புறம் தள்ள நினைத்தது சரியா.? சிவில் சமூகத்தால் ஏன் இறுதி நிகழ்வை சரியாக நடத்த முடிவில்லை. போராட்டத்தின் எழுச்சிக்கு அவர்கள் இருவரும்தான் காரணம் என்பதை ஏற்கமுடியாது. ஆனாலும் அவர்களின் பங்கு மற்றவர்களை காட்டிலும் அதிகமானது போராட்டத்தில் பங்கேற்ற, பங்கேற்க முடியாமல் எழுச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் பலரும் இச் சிறு குழப்பத்தால் இலக்கை அடைந்தும் சோர்வடைந்துள்ளனர். சிவில் சமூக அமைப்பால் ஏன் மக்கள் பக்கம் நின்று சிந்திக்க முடியவில்லை. ஏற்பாட்டில் ஏன் அத்தனை குறைகள் ஐந்துக்கு மேற்பட்ட நாட்கள் இருந்தும், அத்தனை மக்கள் ஆதரவு இருந்தும் மேடை, விளக்கு, ஒலிபெருக்கி வசதி, ஊடகங்களுக்கான ஏற்பாடுகள் ஏன் சரிவர செய்யவில்லை என்கின்ற கேள்விகள் ஒவ்வொரு மக்கள் மனதிலும் இருக்கின்றது. இக்குறைகள் எல்லாம் சிவில் சமூக அமைப்பு சார்ந்ததே.!
சிவில் சமூக அமைப்பு என்பது குறைகளை அவ்வப்போது திருத்திக்கொண்டு மக்கள் நலம் சார்ந்து மாதிரமே இயங்கவேண்டும். ஏற்கனவே கிழக்கு தமிழர் ஒன்றியம் என்கின்ற அமைப்பு கிழக்கில் அரசியல் கட்சிகளை இணைக்க எத்தனித்து கடைசியில் சிறு பிள்ளைபோல் நடந்ததை நினைக்கையில் நம்பலாமா என்கின்ற அச்சம் இருக்கின்றது. கட்சிகளை இணைக்கப்போய் இறுதியில் தாம் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டது நகைப்புக்குரியது. அத்தோடு நீங்கள் போட்டியிட்டதால் பிரதான தமிழ் கட்சிகளில் வெற்றி வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டன என்பதெல்லாம் மக்களுக்கு அவர்கள் ஏற்படுத்திய இழப்புக்கள். சிவில் அமைப்பினருக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருந்தால் நீங்கள் தாராளமாக கட்சிகள் ஆரம்பித்து போட்டியிடலாம். ஆனால் நீங்கள் சிவில் அமைப்பாக கருதப்பட மாட்டீர்கள்.
சிவில் அமைப்பு மக்களின் உரிமை சார்ந்து, வாழ்வாதாரம், பொருளாதாரம், அரசியல், கல்வி சமுக, கலை, கலாச்சாரம், மதம், மொழி, விவசாயம் பாதுகாப்பு, அன்றாட பிரச்சனைகள் என பன்முகத்தன்மையுடன் பல முகங்களை கொண்டு மக்களை வளர்ச்சியடைய வைக்கவேண்டும்.
தேசியம், உரிமை, அபிவிருத்தி, நடைமுறை சாதியமானதை தீர்த்தல், பிழைப்புவாதம், இரட்டை முகம், வாக்கு வேட்டை என்று அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கொள்கை வைத்துக்கொண்டு செயற்படுகின்றன. இவர்களை மக்கள் நலம் என்கின்ற புள்ளியில் வைத்து அணுகி, மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர ஏதே ஒரு தரப்பின் கொள்கை சார்ந்து சிவில் அமைப்பு செல்ல எத்தனிக்குமாயின் அது மக்களை தற்கொலைக்கு தள்ளிவிடுவதற்கு சமன்.
சிவில் அமைப்புக்கள் அரசியலுக்கு அப்பால் மக்கள் நலனில் நின்று நகர்வுகளை மேற்கொண்டு மக்களின் மதிப்பினை சம்பாதிப்பதோடு மக்களை சகல துறையிலும் முன்னேற்ற பாடுபடவேண்டும்.
மிகப்பெரும் அரசியல், ஆயுத போராட்டத்தை நடத்திய நம் இனம் பிழைகளை அவ்வப்போது தட்டிக் கேட்காமையினாலும், பிழைகளை அவ்வபோது திருத்திக்கொண்டு இலக்கு நோக்கி செல்லாமையாலுமே பலதும் இருந்தும் அனைத்தயும் இழந்து மீண்டும் ஆரம்பப்படியில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் நிற்கின்றோம்.
“இங்கு யாருக்கும் யாரும் அரசனும் இல்லை யாருக்கு யாரும் அடிமையும் இல்லை”, இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்”, இலங்கை அரசுக்கும் பொருந்தும், சிவில் அமைப்புக்கும் பொருந்தும். அவரவருக்கான மரியாதை சமமாக வழங்கப்படவேண்டும்.