வடக்கு நீர் தேவைக்கான சுயமான தீர்வுகள்

வடக்கு நீர் தேவைக்கான சுயமான தீர்வுகள்

—  சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

Face Book இல் பகிர்வதை (Share)தவிர, வேறு எதையும் பகிர்வதென்பது மனிதர்களுக்குப் பெரிய சிரமமான காரியமாகவே உள்ளது. அது அதிகாரத்தைப் பகிர்வதாக இருந்தாலென்ன, உரிமைகளைப் பகிர்வதாக இருந்தாலென்ன, சொத்துகளை, பணத்தை, உடமைகளை என எதைப் பகிர்வதாக இருந்தாலும்தான். 

அப்படித்தான் தண்ணீரைப் பகிர்வதும் முடியாமலிருக்கிறது. 

இதனால், இனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை, சமூகப் பிரச்சினை, மதப்பிரச்சினை போல தீராத – தீர்க்கக் கடினமாக உள்ள இன்னொரு பிரச்சினை, நீர்ப்பிரச்சினை என்றாகியுள்ளது. 

ஆனாலும் மனிதர்களால் எல்லாப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் –எதற்கும் தீர்வைக் காணவும் முடியும் என்பதைப்போல இந்த நீர்ப்பிரச்சினையையும் தீர்க்க முடியும். அல்லது இதற்கும் தீர்வைக் காண முடியும். 

ஆனால், எதையும் தீர்க்காமல் அல்லது தீர்வு காணாமல், வெவ்வேறு காரணங்களுக்காக இழுத்தடிப்பதைப்போல – வைத்திருப்பதைப்போலவே தண்ணீர்ப் பிரச்சினையும் பேணப்படுகிறது. 

ஏனென்றால், இதுவும் ஒரு குறிப்பிட்ட தரப்பினருடைய நலனோடு சம்மந்தப்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் தமக்கு ஏற்ற வகையில் இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் கிளிநொச்சியிலும் நடக்கிறது. கேரளாவிலும் நடக்கிறது. கர்நாடாவிலும் நடக்கிறது. எகிப்திலும் நடக்கிறது. தென்னாபிரிக்காவிலும் நடக்கிறது. 

ஆனால், இதனால் எல்லா இடத்திலும் பாதிக்கப்படுவது பெருந்திரள் மக்களாகும். துயரமென்னவென்றால், இந்தப் பெருந்திரள் மக்களைப் பற்றி, அவர்களுடைய பிரச்சினையைப் பற்றிப் பொருட்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் நலனை மட்டுமே அரசியலாளர்கள் சிந்திப்பதாகும். இதுதான் வர்க்க நலன் என்பதாகும். மக்கள் நலனை முன்னிலைப்படுத்திச் செயற்படும் அரசியல் தரப்பினர் அதிகாரத்திலிருந்தால்தான் அவர்கள் மக்கள் நலன் நோக்கில் சிந்திப்பர். அப்படியில்லை என்றால், அவர்கள் தமக்கிசைவான தரப்பினரின் நலன் நோக்கில்தான் சிந்திப்பர். அதுதான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது. 

யாழ்ப்பாணத்தில் குடிநீர்ப்பிரச்சினை என்பது, ஒரு தீராப் பிரச்சினையாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அநேகமான குடும்பங்கள் குடிப்பதற்கான நீரை விலைக்கே வாங்குகின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு நிலை இருந்ததில்லை. தண்ணீரைக் காசுக்கு வாங்க வேண்டியதாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால், இப்பொழுது எல்லோருக்குமே குடிதண்ணீர் ஒரு பொதுப்பிரச்சினை என்ற நிலைக்கு வந்து விட்டது. 

முன்பு தீவுப்பகுதி வலி மேற்கு, வடமராட்சி, தென்மராட்சி, யாழ்ப்பாண நகரைச் சூழவுள்ள கடலோரப் பகுதி மற்றும் அரியாலை போன்ற பிரதேசங்களில் சில இடங்களில் மட்டுமே நல்ல தண்ணீருக்கான பிரச்சினை இருந்தது. இந்தப் பகுதிகளில் இருப்போரே குடிதண்ணீருக்காக கோயில் கிணறுகளையும் நல்ல நீர்க் கிணறுகளையும் நீர் விநியோகப் பிரிவினரையும் எதிர்பார்க்க வேண்டியிருந்தது. 

ஆனால், இன்று நல்ல நீர் வளத்தைக் கொண்டிருந்த சுன்னாகம், ஏழாலை, இணுவில் போன்ற இடங்களிலுள்ளவர்களே குடிதண்ணீரைக் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. காரணம், நிலத்தடி நீர் கெட்டுவிட்டது என்பதே. நிலத்தடி நீர் கெட்டுப்போனதற்கு ஒழுங்கான வடிகாலமைப்பு – கழிவகற்றற் பொறிமுறை இல்லை என்பன காரணமாகும். இது ஒரு பெருங்குறைபாடுதான். ஆனால், இதைத் தீர்த்தாலும் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் எதிர்காலத்தில் அங்குள்ள மக்களுக்குப் போதாது என்பதே உண்மை. 

அப்படியென்றால் இதற்கு மாற்றுப் பொறிமுறை – மாற்று வழி –மாற்றுத்திட்டம் என்ன? 

இதற்கு ஏராளம் பரிந்துரைகளும் பொறிமுறைத் திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. ஒன்று, முறைப்படுத்தப்பட்ட கழிவகற்றல் மற்றும் வடிகாலமைப்புப் பொறிமுறையை மேம்படுத்தி, நிலத்தடி நீரைப் பாதுகாப்பது. இரண்டாவது, முடிந்தளவுக்கு உவர் நீர்த்தடுப்பு அணைகளை நிர்மாணித்து சதுப்பு நிலம் மற்றும் உவர் மண்டல வெளிகளில் நன்னீரை – மழை நீரைத் தேக்குவது. இதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது. மூன்றாவது, வெளியிலிருந்து நீரைக் கொண்டு வருவது. இதற்காகவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மற்றும் திட்டமிடல் உதவியுடன் கிளிநொச்சி –இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகத்திட்டம் ஆலோசிக்கப்பட்டு, இரணைமடுக்குளம் 23000 மில்லியனில் நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயத் தேவைகளுக்கான நீர் போக மேலதிக நீரை யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது என்பதாக. 

ஆனால், இந்தத் திட்டத்தின் வழியாக நீர்ப் பகிர்வுக்கு இரணைமடுவின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மறுப்புத் தெரிவித்ததால் இது கிடப்பிற்குச் சென்று விட்டது. பதிலாக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி –தாளையடிக் கடலிலிருந்து கடல் நீரைச் சுத்திகரித்து நன்னீராக யாழ்ப்பாணத்துக்கு வழங்குவது என மாற்றுத் திட்டம் ஆலோசிக்கப்பட்டது. அதுவும் அங்குள்ள மீனவர்களால் நெருக்கடிக்குள்ளாகியது. இப்பொழுது அது மென்னுறக்கத்தில் உள்ளது. 

இவற்றைத் தவிர, இன்னொன்று பூநகரிக்குளத்தை நிர்மாணித்து அங்கிருந்து மேலதிகமாகவுள்ள தண்ணீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லலாம் என்பது. ஆனால், பூநகரியே வரட்சியில்தான் நூற்றாண்டாகத் தவித்துக் கொண்டிருக்கிறது. முதலில் அதனை உவரிலிருந்தும் வரட்சியிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். அதற்குப் பிறகே யாழ்ப்பாண நீர் விநியோகத்தைப் பற்றிச் சிந்திக்க முடியும். 

இது தனியே யாழ்ப்பாணத்தையும் அதனை அண்மித்த பூநகரியையும் மட்டும் ஆட்டிப் படைக்கும் நீர்ப்பிரச்சினையல்ல. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் கோடை காலங்களில் நிலவும் ஒரு பிரச்சினையே. 

இவ்வளவுக்கும் வடக்கில் போதிய அளவுக்குத் தாராளமாக நீர் வளமுண்டு. ஏறக்குறைய 50 வரையான நீர்ப்பாசனக் குளங்கள் உள்ளன. அதிலும் இரணைமடு, கட்டுக்கரை, வவுனிக்குளம், அக்கராயன்குளம், முத்தையன்கட்டுக்குளம் போன்ற பெருங்குளங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சரியான முறையில் நீர்ப்பகிர்வுக் கொள்கை இல்லாத காரணத்தினால், கோடைகாலத்தில் நீர்ப்பிரச்சினையும் நெற் செய்கை தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கையாளர்களுக்கு நீர்ப்பங்கீடு இல்லை என்ற நிலையும் தொடர்கிறது. இது அந்தந்த மாவட்டங்களிலேயே உள்ளது. 

இதையெல்லாம் கவனத்திற் கொண்டு “வட மாகாணத்தின் நீர் வளம், நீர்ப்பயன்பாடு, நீர்ப்பங்கீட்டுக் கொள்கை” பற்றிய ஆய்வு நூலொன்றை எழுதியிருக்கிறார் நீர்ப்பாசனப் பொறியியலாளரும் யாழ் பல்கலைக்கழக பொறியியற்துறை விரிவுரையாளருமான சு. சிவகுமார்.  இதை கிளிநொச்சி மக்கள் சிந்தனைக் களம் கடந்த வாரம் வெளியிட்டு வைத்துள்ளது. 

இந்த நூலில் வடக்கின் நீர்வளம் (நிலத்தடி நீர் உள்பட), சராசரி மழை வீழ்ச்சி, ஆறுகள், குளங்கள், அவற்றின் நீர்க்கொள்ளளவு, கொள்ளாமல் கடலில் விடப்படும் சராசரி நீர் எனப் பலவற்றையும் ஆய்வு செய்கிறது. அத்துடன், இந்த நீரின் பயன்பாடு எப்படியிருக்கும் என்றும் கூறுகிறது. குறிப்பாக குடிதண்ணீர், விவசாயத்துக்கான நீர், கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி (மேய்ச்சல் நிலம் உள்பட), காடு, மற்றும் பிற சூழலியல் தேவைகள் எனப் பலவற்றுக்கும் தேவை என்று குறிப்பிடுகிறது. தொடர்ந்து இவை ஒவ்வொன்றுக்கும் என்ன விகிதத்தில் நீர்ப்பங்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை உலகளாவிய நீர்ப் பயன்பாட்டுக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு நம்முடைய சூழலின் தன்மை – நிலைமைக்கு ஏற்ற வகையில் ஒரு திட்டத்தையும் முன்வைக்கிறது. 

இன்றைய  – எதிர்காலத்தைய தண்ணீர்ப்பிரச்சினைச் சூழலில் இது ஒரு முக்கியமான பணியாகும். பொருத்தமான காலச் சூழலில் பொருத்தமானதொரு ஆய்வுப் பணியைச் செய்திருக்கும் சிவகுமாருக்கும் அதை வெளிக் கொண்டு வருவதற்கு உதவியிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்துக்கும் நன்றி கூறிப் பாராட்ட வேண்டும். 


ஆனால், இந்த நூல் ஒரு முடிந்த முடிவல்ல. இது ஒரு ஆய்வு நூலாகப் பல விடயங்களைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டுகிறது. இந்த ஆய்வைத் தொடர்ந்து மறுபார்வைகளும் மேலதிக ஆய்வுகளும் வரலாம். அப்படி வருவது சிறப்பே. அதுதான் அறிவியற் செயற்பாடாகும். 

இப்பொழுது நம்முன்னே உள்ள ஒரு தலையாய பிரச்சினைக்கு இந்த நூலில் முன்வைக்கப்படும் சிந்தனைகள் வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றன என்பது முக்கியமானது. இதை ஒரு முன்னேற்றமாகக் கொண்டு எதிர்நோக்கப்படும் நீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். 

எல்லாப் பிரச்சினைக்கும் நாம் வேறு இடங்களை நோக்கிக் கைகளைக் காட்டுவதை விடவும் நம்மால் தீர்க்கக் கூடிய  – நாம் தீர்வு காணவேண்டிய –பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது நல்லது. இதற்கு 13 ஆவது திருத்தமோ அல்லது அதற்கான அதிகாரமோ வேண்டும் என்றில்லை. ஆனால், இதை நாம் தீர்க்காமல் விட்டால், முறையான நீர்ப்பயன்பாட்டுக் கொள்கையும் பங்கீடும் நிகழவில்லை என்றால், அந்த இடத்தில் மத்திய அரசு எதிர்காலத்தில் தலையிடக் கூடிய அபாயம் உண்டு. அது ஏற்கனவே இருக்கின்ற மாகாணசபை வழியாக இருக்கின்ற குறைந்த பட்சச் சுயாதீனத்தையும் இல்லாததாக்கிவிடும். 

இது நடக்காது என்றில்லை. வழமையாகச் சாதாரணமாகவே நீர்ப்பாசனத்துறையினரால் பராமரிக்கப்பட்டும் பங்கீடு செய்யப்பட்டும் வரும் இரணைமடுக்குளத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிரடியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்து திறந்து வைத்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இதற்கும் காரணம், தேவையற்ற அரசியல் தலையீடுகளே. அரசியல் தலையீடுகள் இல்லையென்றால், தண்ணீர்ப் பிரச்சினை சுலபமாகத் தீர்ந்து விடும்.