வன்னி: தெருவில் காயும் நெல்

வன்னி: தெருவில் காயும் நெல்

  — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

பரந்தனிலிருந்து பூநகரிக்குச் செல்லும் வழியில் தினமும் பார்க்கிறேன், வீதி நெடுகவும் ஓரத்தில் நெல்லைக் காயப்போட்டிருக்கிறார்கள் விவசாயிகள். இது இந்த வீதியில் மட்டும்தான் நடக்கிறது என்றில்லை. வன்னியிலுள்ள பெரிய காப்பெற் வீதிகளெங்கும் நடக்கிறது. இந்த ஆண்டுதான் இது ஏதோ புதிதாக நடக்கிறது என்றுமில்லை. ஒவ்வொரு போகத்துக்கும் இதுதான் கதை. 

காரணம், நெல்லைக் காய வைப்பதற்கான களமேடு இல்லை என்பதே. அங்கொன்று இங்கொன்று எனச் சில களமேடுகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அந்தக் களங்களில் ஒரு நாளைக்கு ஒரு விவசாயியின் நெல்லைப் போட்டு எடுக்கவே போதாது. அதுவும் இவை 2015 க்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டவை. அதற்குப் பிறகு அப்படியான களமேடுகள் இன்னும் தேவையாக இருக்கும் என்று யாரும் சிந்திக்கவில்லை. குறிப்பாக கமக்காரர் அமைப்புகள் கூட இதைப்பற்றிப் பேசியதாக இல்லை. அப்படிப் பேசியிருந்தாலும் அதை நடைமுறைக்குக் கொண்டு வரும் அளவுக்கு அவை செயற்படவில்லை. இதனால், வேறு வழியில்லாமல் விவசாயிகள் தெருவுக்கு வருகிறார்கள். உண்மையில் அவர்களுடைய நிலைமையும் அதுதான். எல்லாவற்றுக்குமாகத் தெருவிலே நிற்க வேண்டிய நிலை. இதனால் நெல்லைக் காய வைப்பது மட்டுமல்ல, நெல்லை விற்பது கூடத் தெருவில் வைத்தே நடக்கிறது. 

நெல்லைக் காயப்போடுவதற்கு களங்களில்லை. அதை விட பொருத்தமான – நியாயமான – விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யும் ஆட்களில்லை. அதற்கான ஏற்பாடுகளுமில்லை. கூட்டுறவுச் சங்கங்கள் கூட இதற்கு இயலாமல் உள்ளன. விளையும் நெல்லை அந்தந்த மாவட்டங்களிலேயே அடுத்த கட்ட உற்பத்தியாக – முடிவுப் பொருட்களாக்கும் – பொறிமுறையில்லை. இப்படியே விவசாயிகளுக்கும் வழிகளில்லை. விவசாயத்தை நம்பி அடுத்த நிலையில் வாழுவோருக்கும் (அரிசியாக்கல், மாவாக்குதல், அவற்றைப் பொதியிட்டு வெளியே விநியோகத்தல், அரிசியில் வேறு பொருட்களைச் செய்தல் போன்றவற்றுக்கும்) வழிகளில்லை.   

இதனால் அறுவடை நடக்கும்போதே வயலில் வைத்தோ தெருவில் வைத்தோ தென்பகுதி வியாபாரிகளுக்கு நெல்லை விற்க வேண்டியிருக்கிறது. அவர்கள் கேட்கின்ற விலைக்கே நெல்லைக் கொடுக்கவும் வேண்டியுள்ளது. இதாவது பரவாயில்லை. உள்ளுர் வியாபாரிகள் இதையும் விடக் குறைவாக அல்லவா வாங்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அடிமாட்டு விலைக்குக் கேட்டால், உள்ளுர் வியாபாரிகள் தவிச்ச முயலடிக்க முயற்சிக்கிறார்கள். 

இதற்குக் காரணம், நெல்லுக்கு நிர்ணய விலை இல்லை என்பதே. அரசாங்கமும் இதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை. கமக்காரர் அமைப்புகளும் நியாயமான விலையை நிர்ணயிப்பதில்லை. இதனால் வியாபாரிகள் தங்கள் விருப்பு வெறுப்பு –நலன் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கிறார்கள். இப்பொழுது தினமும் 50, 100 ரூபாய் என்று விலையை குறைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த விலைக்காவது கொடுத்து முடித்து விடுவோம் என்பதே விவசாயிகளுடைய நோக்கமும்.  

நெல்லைக் காய வைத்து களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளும் போதுமானதாக இல்லை என்பதும் ஒரு காரணம். இன்னொரு காரணம், செய்கைக்கு (விதை நெல், உழவு, மருந்து, உரம் போன்றவற்றுக்கு) பட்ட கடனை அடைக்க வேண்டும் என்பது. இதனால் எப்படியாவது நெல்லை விற்றுத்தான் ஆக வேண்டும் என்ற நிலை. 

இதையெல்லாம் கவனத்திற் கொண்டு விவசாயிகளின் நலன்களைப் பேணும் திட்டங்களை உருவாக்குவதைப் பற்றி தலைவர்களும் சிந்திக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளும் சிந்திக்கவில்லை. கமக்காரர் அமைப்புகளும் சிந்திக்கவில்லை. ஆனால், தாங்கள்தான் விவசாயிகளின் காவலர்கள் என்ற கதைக்கு மட்டும் குறைச்சலில்லை. 

“இப்பொழுது மாவட்டங்களில் இருக்கின்ற களஞ்சியங்களே இன்னும் நிறையவில்லை. அதற்குள் நீங்கள் வேறு புதிய களஞ்சியங்களைப் பற்றிக் கதைக்கிறீர்கள்” என்று யாராவது அரசியல்வாதியோ அதிகாரியோ கமக்காரர் அமைப்பினரோ கேட்கலாம். 

இந்தக் களஞ்சியங்கள் ஏன் இன்னும் நிறையவில்லை? என்று சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்று நெல்லைக் காயவைக்கவே இடமில்லை. அப்படிக் காய வைத்தால்தானே களஞ்சியப்படுத்த முடியும். இரண்டாவது, கடன் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேணும் என்றால், களஞ்சியப்படுத்தி வைத்துக் கொண்டு காத்திருக்க முடியாது. மூன்றாவது காரணம், நிர்ணய விலைபற்றிய உறுதிப்பாடின்மை. இதனால் கிடைப்பதே நன்மை என்று அறுவடை முடிந்த கையோடு வயலில் வைத்தே விற்றுக் கணக்கை முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இப்படிப் பல காரணங்களுண்டு. தவிர, தொலைதூரத்திலுள்ள களஞ்சியங்களுக்கு நெல்லைக் கொண்டு செல்லும்போது ஏற்படும் ஏற்றுக்கூலி ஒரு பிரச்சினை. உதாரணமாக பூநகரியிலிருந்தும் பளையிலிருந்தும் இரணைமடுச் சந்திக்கு நெல்லைக் கொண்டு போவதென்றால்…! 

விவசாயிகளின் நலன், அவர்களுடைய பாதுகாப்பு, அவர்களின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படுவதாகக் காட்டிக்கொள்ளும் விவசாய அமைப்பினரும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, இதற்கெல்லாம் தீர்வைக் காணும் சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறார்களா? என்றால், இல்லையென்று நீங்கள் உதட்டைப் பிதுக்குவீர்கள். இந்த விசித்திரத்தில்தான் உள்ளது நம்முடைய கமக்காரர் அமைப்புகளின் திறன்களும் விவசாயிகளின் நலன் குறித்த அக்கறையும் கூட. இவர்கள் (கமக்காரர் அமைப்புகள்) விவசாயிகளுக்கு விசுவாசமாக இருப்பதற்குப் பதிலாக, அரசியல்வாதிகளுக்கே விசுவாசமாக இருக்கிறார்கள். அவர்களைத் தாஜா பண்ணிக் கொண்டு. உண்மையில் இவர்கள் விவசாயிகளுக்கு விசுவாசமாக இருந்து அரசியல்வாதிகளைக் கொண்டு வேலை செய்விக்க வேணும். ஆனால், அப்படிச் செய்யாமல் விவசாயிகளைக் கொண்டு அரசியல்வாதிகளுக்கே வேலை செய்விக்க முயற்சிக்கிறார்கள். இதற்குக் காரணம், அரசியற் பிரமுகர் நிலைக்கு கமக்காரர் அமைப்பினர் வளர்ச்சியடைந்ததேயாகும். அவர்கள் அப்படி அரசியற் பிரமுகர்களாக வரக்கூடாது என்று இங்கே சொல்லவில்லை. விவசாயிகளின் நலனைக் கவனித்துக் கொண்டு, அதற்கான உத்தரவாதங்களை உறுதிப்படுத்திக் கொண்டு தங்களுடைய அபிலாஷைகளைப் பற்றிச் சிந்திக்கலாம். 

மெய்யாகவே விவசாயிகளின் மீது கரிசனை இருந்திருந்தால் மக்கள் பிரதிநிதிகளாக இருப்போரும் கமக்காரர் அமைப்பினரும் இணைந்து ஆண்டுக்கு ஒரு நெற்களஞ்சியத்தையேனும் பிரதேச ரீதியாக நிர்மாணித்திருக்க முடியும். 

அப்படி நிர்மாணிக்கப்பட்டிருந்தால் இப்பொழுது கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் களமேடுகளையும் களஞ்சியங்களையும் நிர்மாணித்திருக்க முடியும். அல்லது கூட்டுறவுச் சங்கங்களை இதற்கு ஏற்றமாதிரி இணைப் பொறி முறையில் தயார்ப்படுத்தியிருக்க முடியும். குறைந்தது நெல் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளை ஒட்டியிருக்கும் ஒவ்வொரு கமநல சேவைகள் திணைக்களத்திற்கும் ஒரு களஞ்சியத்தையேனும் நிர்மாணித்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் ஏற்றி இறக்கும் செலவும் போக்குவரத்துச் செலவும் கூட மட்டுப்படுத்தப்படும். இந்த மாதிரி அல்லற்பாடுகளைத் தவிர்த்திருக்கலாம். 

ஆகக்குறைந்தது இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒவ்வொரு பதவிக் காலத்திலும் ஒவ்வொரு களஞ்சியமாக நிர்மாணித்திருந்தாலே பல களஞ்சியங்கள் கிடைத்திருக்கும். இதைப்பற்றியெல்லாம் விவசாயிகளும் சிந்திப்பதில்லை. அவர்களுக்கான கமக்காரர் அமைப்புகளும் சிந்திப்பதில்லை. எம்பிமாரும் சிந்திப்பதில்லை. 

இதைப்போலவே நெல்லிலிருந்து முடிவுப் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஏற்பாடுகள் எதுவும் இதுவரையில் செய்யப்பட்டதில்லை. அதைப்பற்றியும் கவனிப்போரில்லை. அதைச் செய்தால்தான் விவசாயப் பொருளாதாரத்தை இந்த மாவட்டங்களில் (வடக்கில் உயர்த்த முடியும்). இது தனியே நெல் விவசாயத்துக்கான பிரச்சினையல்ல. அனைத்து விவசாயத்துக்குமான பிரச்சினையாகும். 

ஆனால், “விவசாயிகள் நலன், அவர்களுடைய எதிர்காலம், அவர்களுடைய பாதுகாப்பு” என்று முதலைக் கண்ணீரை மட்டும் கூச்சமில்லாமல் விடுவார்கள் எல்லோரும். 

இதெல்லாம் ஒரு பக்கச் சேதி என்றால், மறுபக்கத்தில் அரசாங்கமும் விவசாயிகளைக் கை விட்ட நிலையில்தான். உரமானியம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்டளவு நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. பயிரழிவு ஏதாவது நடந்தால் அதற்கு நட்ட ஈடு கொடுக்கப்படுகிறது. இது பாராட்டப்பட வேண்டியதே. ஆனால். இதற்குப் பின்னே நடப்பதென்ன? பாடுபட்டு உற்பத்தி செய்யத நெல்லை – விளைச்சலை –உரிய விலைக்கு விற்க முடியவில்லை என்றால், உரிய சந்தைப்படுத்தல் வசதி இல்லை என்றால், அது செய்யும் அத்தனை உதவிகளும் பயனற்றவையே. ஆகவே, இதெல்லாம் ஒரு கண் துடைப்பு என்ற மாதிரியே உள்ளது. இதற்கும் பரிகாரம் காண வேண்டும். பூனைக்கு மணி கட்டுவது யார்? 

இன்னொன்றும் நடக்கிறது. வன்னியிலுள்ள விளை நிலங்களில் மூன்றில் ஒன்றிற்கும் அதிகமானவை, வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களுடையவை. அவர்களுக்கு இங்கிருந்து குத்தகைப் பணம் போகிறது. அதனால் தங்களுடைய அத்தனை நிலமும் விதைக்கப்பட வேண்டும். செய்கை பண்ணப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனக்குத் தெரிந்த லண்டன் வாசி ஒருவருக்கு கடந்த பெரும்போகத்துக்கான குத்தகை மட்டும் இலங்கைப் பணத்தில் ஆறு லட்சத்து அறுபது ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே இல்லாமல் நன்மைகளைப்பெறும் இவர்கள் கமக்காரர் அமைப்புகளைத் தவறாக வழிநடுத்துவதும் உண்டு. உதாரணமாக குறைந்த உழைப்போடு கூடிய வருமானம் தரக்கூடிய பயிர்ச்செய்கையில் விவசாயிகள் ஈடுபட முடியும். அப்படிச் செய்தால் விவசாயிகளின் சுமை குறையும். லாபம் பெருகும். ஆனால் இதற்கு புலம்பெயர் நிலச்சுவாந்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் தங்களுடைய அத்தனை நிலமும் செய்கை பண்ணப்பட வேண்டும். அப்பொழுதுதான் கொழுத்த குத்தகை கிடைக்கும் அல்லவா! 

இப்படித் தெருவிலே நிறுத்தப்பட்டிருக்கிற விவசாயிகளுக்கு பதில் என்ன? வழி என்ன?