பொத்துவில்லும் பொலிகண்டியும்! இந்தியாவின் பின்னணியா? (காலக்கண்ணாடி 22)

பொத்துவில்லும் பொலிகண்டியும்! இந்தியாவின் பின்னணியா? (காலக்கண்ணாடி 22)

— அழகு குணசீலன் — 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி பல குழப்பங்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது. 

இலங்கையின் இன்றைய தேசிய அரசியல், பிராந்திய ஆதிக்கம், சர்வதேசிய அரசியல் சூழலில் இந்த பேரணிக்கும் இந்திய பிராந்திய ஆதிக்க அரசுக்கும் உள்ள உள்ளக தொடர்பு என்ன? 

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பேரணி இடம்பெற்று முடிந்துள்ளது. இன்றைய சூழலில் பல பக்க முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டியது அவசியமானது. 

துறைமுக விவகாரத்தில் இந்தியா திருப்தியாக இல்லை. வருகின்ற இந்தியத் தேர்தலில் குறிப்பாக தமிழகத் தேர்தலில் ஈழத்தமிழர் குறித்த தனது அக்கறையை ஏதோ ஒருவகையில் வெளிக்காட்ட வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. 

ஜெனிவாவில் இந்தியா எந்தப்பக்கம் என்பதை இன்னும் பிடிகொடுக்காமல் இழுத்து வருகிறது. இலங்கைத் தமிழ்தரப்பையும் திருப்திப்படுத்தி அதேவேளை தமிழக அரசியலிலும் ஈழத்தமிழர் மீதான தனது அக்கறையை பதிவு செய்து, துறைமுக விவகாரத்திற்கும் தனக்கு சாதகமான தீர்வையும், ஜெனிவாவில் இலங்கைக்கு சார்பான ஒரு தீர்வையும் நகர்த்த இந்திய இராஜதந்திரம் முயற்சிக்கின்றது. 

மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வை பல தடவைகளில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு வலியுறுத்திவிட்ட நிலையில், இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கருணா, பிள்ளையான், பஷீர் சேகுதாவுத் உடனான சந்திப்பு கிழக்குமாகாகாணம் தனித்துவ மாகாணமாக இருக்கும் என்பதை உறுதிசெய்கிறது. அதிகாரப்பரவலாக்கலில் இவர்களின் ஒத்துழைப்பும் இந்தியாவுக்குத் தேவை. ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா இதைச் சொல்லிவிட்டது. 

பிள்ளையான், கருணா, பஷீர் ஆகியோருடனான இந்தியாவின் பேச்சுவார்த்தை அவர்களின் அரசியலுக்கு கிடைத்துள்ள அங்கிகாரம். 

இப்போது துறைமுகவிடயத்தையும், ஜெனிவா விடயத்தையும் கையாள்வதே இந்தியாவின் நோக்கம். இதன் நகர்வுதான் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி. இந்த விடயம் இலங்கை அரசுடன் கொண்ட ஒரு உடன்பாட்டின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது. இதனால்தான் படையினர் வழமையான சம்பிரதாய தடையை செய்து பின்னர் வாளாவிருந்து விட்டனர். 

எல்லாம் ஒரு கண்துடைப்பு பெரிய இடத்து ஏற்பாடு. இது தமிழரசுக்கு தெரிந்துதான் இருந்தது. 

விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் அரசியலை இந்தியா ஏற்கவில்லை. அவர்களில் அதிக நம்பிக்கையும் கொள்ளவில்லை. பேரணி ஏன் பொத்துவில்லில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது?  இங்கு விக்கி, கஜே முக்கியம் பெறமாட்டார்கள் தங்கள் தலையாட்டி தமிழரசு முக்கியம் பெறும். 

பேரணியில் அரசியல் தீர்வுக்கோரிக்கைகள், கட்டாயமாகத் தவிர்க்கப்பட்டதும், மனித உரிமைமற்றும் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் கோசங்களாக்கப்பட்டதும் இந்தியாவின் ஆலோசனை. ஒருநாடு இருதேசம், சுயநிர்ணயம், போர்க்குற்ற சர்வதேச நீதிமன்ற விசாரணை இவை இந்தியாவுக்கு பிடித்தமானவை அல்ல. 

சிவில் சமூக அமைப்புக்களின் பெயரில், தமிழரசின் ஆதரவுடன் ஜெனிவாவுக்கு முன் ஒரு அழுத்தத்தை கொடுப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது. இந்தியா தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் ஆதரவாகச்  சமரசம் செய்யும். 

டக்ளஸ் தேவானந்தா ‘இப் பேரணி அரசாங்கத்திற்கு சாதகமானது’ என்றதன் அர்த்தம் இதுதான். இலங்கையில் ஜனநாயக, மனித உரிமை நிலைமைகள் மோசமாக இல்லை. கருத்துச்சுதந்திரம், மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம் கொரோனா காலத்திலும் அங்கிகரிக்கப்பட்டது. தமிழர்கள் வடக்கு கிழக்கில் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடமுடியும். பேரணியைக்கூட நாடாத்தமுடியும். 

மதத்தலைவர்களின் முக்கியத்துவம் இங்கு கவனிக்கத்தக்கது. 

வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளன. இவற்றில் எத்தனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது? எத்தனை கலந்து கொண்டன? மத அமைப்புக்களின் எண்ணிக்கை எத்தனை? 

சாவகச்சேரியில் பேரணியின் போது தமிழரசாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஏற்பட்ட முறுகலில் சமரசம் செய்யப்போய் தாக்கப்பட்டார் தந்தை செல்வாவின் பேரன் இளங்கோ. இவர் பேரணியின் வடக்குமாகாண இணைப்பாளர். இவருக்கு ஊடாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் காய்களை நகர்த்தியதா? 

ஆக, இந்தியா ஈழத்தமிழர்களுக்கும் நண்பன், இலங்கை அரசுக்கும் நண்பன். இருதரப்பின் நாணயக்கயிறும் இந்தியாவின் கரங்களில். 

பொத்துவில் – பொலிகண்டி பேரணி என்றவகையில் வெற்றி. 

ஆனால் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் இடையே மோதல். 

சாணாக்கியன், சுமந்திரன் மீது மக்கள் வெறுப்பு. மாவைக்கு மகிழ்ச்சி இந்தியா தனக்கு தேவையானதை கட்சிதமாகச் செய்திருக்கிறது. திருப்தி தானே? 

மறுபக்கத்தில் ஒருகல்லில் இரண்டு அல்ல மூன்று மாங்காய் தமிழர்களை மட்டுமல்ல ஜனாஸா, சம்பள உயர்வையும் இணைத்து முஸ்லீம்களுக்கும், மலையகமக்களுக்கும் பணி செய்து கிடக்கிறது இந்தியா. 

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒரு அரசியல் சக்தியாக இந்தியா எப்போதும் கருத்தில் கொள்ளவில்லை. அதனால் இந்தப்பிரிவினர் குறித்து அது அலட்டிக் கொள்ளப்போவதில்லை. 

  போத்தல் புதுசு ! கள்ளு பழைசு !! 

தமிழரசுக்கட்சியின் தமிழர் அரசியல் வரலாறு சாத்வீகப் போராட்டங்களால் எழுதப்பட்டது. 

சத்தியாக்கிரகம், வீதி மறியல், சிறி எதிர்ப்பு, தமிழரசு தபால் சேவை, பாதயாத்திரை, தீண்டாமை ஒழிப்பு, உண்ணாவிரதம் என பல வடிவங்களில் இவை இடம்பெற்றுள்ளன. 

குடியரசு அரசியல் யாப்பை எதிர்த்து தந்தை செல்வா காங்கேசன்துறையில் இருந்து உகந்தை வரை செய்த யாத்திரைதான் அகிம்சை போராட்ட வரலாற்றில் தமிழரசின் இறுதி சாத்வீக யாத்திரை என்று கொள்ள முடியும். 

இது தந்தை செல்வா தன் தள்ளாடும் வயதிலும், வார்த்தைகளை உரத்து உச்சரிக்கமுடியாத  நிலையிலும் இடம்பெற்றது. தந்தையின் வார்த்தைகளை அமிர்தலிங்கம் உரத்துச் சொல்லி தந்தை செல்வாவின் வார்த்தைகளுக்கு உயிர் ஊட்டிய காலங்கள் அவை. 

தந்தை செல்வாவின் மரணச்சடங்கு இறுதியாத்திரை 1977 இல் இடம்பெற்றது. அப்போது மெல்ல மெல்ல ஆயுதம் அகிம்சையை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தது.  

பின்னர் ஆயுதப்போராட்ட காலத்தில் சமாந்தரமாக  மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் இடம்பெற்றன. குறிப்பாக தீலிபனின் உண்ணாவிரதகாலம், பொங்குதமிழ் என்பவை குறிப்பிடத்தக்கவை. 

இப்போது முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டத்தின் பின் அவர் விட்டுச் சென்ற அந்தப் புள்ளியில் மீண்டும் வந்து நிற்கின்றோம் அல்லது கொண்டுவந்து விடப்பட்டுள்ளோம். ஆம்!. இது ஒரு மறுபிறப்பு. அதற்குப்பெயர் பொத்துவில்லில் இருந்து பொலிகண்டி வரை. 

தந்தை செல்வாவின் காலத்தால் அழியாத இரு வார்த்தைகளை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். 

1. தமிழீழம் என்பது வில்லங்கமான காரியம்தான்……. . 

2. தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்……. . 

தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய நிலையை விளக்க தீர்க்கதரிசனம் நிறைந்த இந்த வார்த்தைகள்போதுமானவை.  

பொத்துவில்-பொலிகண்டி : மறுபக்கம் 

மேலோட்டமாக பார்க்கின்றபோது ஆயுதங்கள் மௌனித்தபின் நடாத்தப்பட்ட, மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் பங்காளர்களான போராட்டம் இது. 

பெரும்பாலான ஊடகங்களும், ஆய்வாளர்களும் அதிகம் பயன்படுத்திய வாசகங்கள் இவை என்று கொள்ளலாம் 

 1. வடக்கும் கிழக்கும் இணைந்து விட்டது. 

 2.  தமிழ் -முஸ்லீம் உறவு இனி பிரிக்க முடியாத ஒன்று. 

3. சிங்கள அரசிற்கு இந்தப் பேரணி நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 4. ஜெனிவாவில் ராஜபக்சாக்கள் தப்பமுடியாது. 

5. தமிழ்த்தேசிய கட்சிகள் ஒற்றுமையின் சிகரமாகத் திகழ்கின்றன. 

ஆனால் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை இடம்பெற்ற கட்சி அரசியல் நிகழ்வுகளை கவனத்தில் கொண்டால் மேற்சொன்ன பல்வேறு விடயங்கள் குறித்து கேள்விகள் எழுகின்றன. 

இவை மிகைப்படுத்தப்பட்ட, உணர்வலைகளைத் தூண்டும் நேர்முகவர்ணனை பாணியிலான செய்திகளும் ஆய்வுகளும். மக்களையும்,அவர்கள் சார்ந்து நிற்கின்ற சிவில் சமூக அமைப்புக்களையும் அரசியல் மயப்படுத்தி கட்சி அரசியல் இலாப நட்டக் கணக்குக்கு அப்பால் நகர்த்தப்படுகின்ற தமிழ்மக்கள் விரும்பும் அரசியலாக இது இல்லை. 

தமிழர் அரசியல் வரலாற்றில் அகிம்சை, ஆயுதப்போராட்டங்களில் எப்போதும் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியலோ ஒற்றுமையோ நிலவியதில்லை.  

இது கட்சி அரசியல் போட்டி, கட்சி அரசியல் உட்கட்சிப் போட்டி, பிரதேச வேறுபாடு, சகோதர மாற்று இயக்க செயற்பாட்டு மறுப்பு, கூட்டுப் பொறுப்பை ஏற்க மறுத்து தனித்துக் குறைகாணல் அல்லது தனியாக உரிமைகோரல், கூட இருந்து குழி பறித்தல், என்ற பாதையில்தான் பயணித்து வந்துள்ளது. இந்த போக்கிற்கு பொத்துவில் முதல் பொலிகண்டிவரையும் விதிவிலக்கா என்ன?  

எனவே மேலெழுந்தவாரியான குறுங்கால வெற்றிக்கப்பால் இப்போராட்டத்தின் உள்ளார்ந்த நீண்டகால இலக்கிலான தமிழ்மக்களின் அரசியல் பயணத்தையும் அது தொடரவேண்டிய பாதையையும் இந்த அரசியல்வாதிகள் தங்கள் சுயலாப, சுயவிளம்பர, அரசியலுக்காக மக்களையும், சிவில் சமூக அமைப்புக்களையும் பயன்படுத்திவிட்டதாகவே கொள்ளவேண்டி உள்ளது. 

தீர்த்தம், ஆடித்திருவிழாவை முடித்துக்கொண்டு விட்டார்கள். மீண்டும் கொடியேற்றத்திற்கு வருவார்கள், திருவிழாவில் சாமியார்களுக்கு முன்னால் சென்று தங்கள் பதாதைகளை தாங்களே சுமப்பார்கள். 

ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்த இருவிடயங்கள் தமிழர் தாயகம் குறித்த தமிழ்த் தேசிய அரசியலின் அடிப்படைகள். கடந்த கால அரசியல் வரலாறு கசப்பான அனுபவங்களைத் தந்து இருக்கின்ற ஆறாத புண்கள். 

ஒரு போராட்டம் வழமைக்கு மாறாக கிழக்கில் இருந்து ஆரம்பித்து வெற்றிகரமாக வடக்கைசென்றடைந்திருப்பதால் வடக்கும் கிழக்கும் சகல கசப்புக்களையும் மறந்து இணைந்து விட்டன என்றும், முஸ்லீம் சகோதர்கள் தங்கள் ஆதரவை வழங்கியிருப்பதால் தமிழ், முஸ்லீம் உறவு இனிமேல் பிரிக்கமுடியாத ஒன்று என்றும் அடித்துச் சொல்வதும் மிகவும் ஆபத்தான மிகைப்படுத்தல்கள். 

இவை கிழக்கில் நிலவுகின்ற சமகால அரசியல் சூழ்நிலையைப் பிரதிபலிக்கின்ற சந்தர்ப்பம் சார்ந்த சிறிய மாற்றங்கள் அவ்வளவுதான். 

இதன் நீண்டகால வெற்றி என்பது உங்களின் எதிர்கால அரசியலிலும், சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டு ரீதியான நீண்டகால பிரதேச இணைப்பு, தமிழ், முஸ்லீம் இன உறவுத்திட்டங்களில் உள்ளது என்பதை கிழக்கு வடக்கிற்கும், முஸ்லீம்கள் தமிழர்களுக்கும் சொல்லியுள்ள செய்தி இது. 

பந்து வடக்கிற்கும், தமிழ்தரப்பிற்கும் அடிக்கப்பட்டுள்ளது. இனி நீண்டகால இலக்கை நோக்கி விளையாட வேண்டியது பந்துப்பக்கத்தின் பொறுப்பு. இல்லையேல் பொத்துவில் முதல் பொலிகண்டியும் பத்தோடு பதினொன்றுதான். வரலாறு வெறும் வெற்று வார்த்தைகளால் எழுதப்படும்.  

வடக்கில் போராட்ட களங்களுக்கு ஊடாக  இப்பேரணி திட்டமிட்டு நகர்தப்பட்டுள்ளது. கிழக்கிலும் இந்த பேரணிப்பாதையை போராட்டம் இடம்பெற்ற, இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்த படுவான்கரை பெருநிலப்பரப்பின் ஊடாக நகர்த்தி இருக்க முடியும். கரவாகுப்பற்றில் இருந்து கிட்டங்கி ஊடாக குடியேற்ற கிராமங்களை ஊடறுத்து, படுவான்கரை தாண்டி, புணானை வரை தொடர்ந்து வாகரையூடாக திட்டமிட்டிருக்கலாம். ஏற்பாட்டாளர்கள் இது பற்றி சிந்தித்தார்களா என்று தெரியாது. 

பேரணிப்  பிரகடனத்தில் உள்ள நிலம், குடியேற்றம், நீர்வளப் பங்கீடு, மற்றும் தொல்பொருள் ஆய்வு  போன்ற பிரச்சினைகள் எழுவான்கரை சார்ந்தவை அல்ல, படுவான்கரை சார்ந்தவை. தங்க வேலாயுதபுரம் முதல் இந்த பெருநிலப்பரப்பில் பல மனித அழிவுகள் வாகரைவரை இடம்பெற்றுள்ளன. இந்தப் பெருநிலப்பரப்பை பேரணி தரிசிப்பதற்கான வாய்ப்பை இது வழங்கி இருக்கும். 

ஊடகச் செய்திகளில் உள்ள ஆபத்து. 

ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட, நடுநிலையற்ற செய்திகள் சமூகத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை. மக்களை தவறான பாதைக்கு திசைதிருப்பக்கூடியவை. பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான செய்திகள் பிரச்சினைகளை குறைமதிப்பீடு செய்து அதன் முக்கியத்துவத்தை மறைத்து விடுகின்றன. 

பிரச்சினை முடிந்துவிட்டது மாதிரியான காட்சிப்படுத்தல் பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய செயற்பாடுகளை பின்தள்ளிவிடும். ஆனால் பிரச்சினை தீர்க்கப்படாத விடயமாக நீறு பூத்த நெருப்பாக இருந்து வாய்ப்பு வரும்போது தீயாய்ப்பரவும். 

முஸ்லீம்கள் பேரணியில் கலந்து கொண்டதும், பேரணி கிழக்கில் ஆரம்பித்து வடக்கில் முடிந்ததும்  ஒரு அடையாளப்படுத்தல். இப்படியும் செயற்படமுடியும் என்பதற்கான ஒரு குறியீடு. ஓட்டமாவடியில் அரசியல்வாதிகள் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதை, அமீர் அலி கலந்து கொண்டதை எந்த அரசியல் கேள்விக்கும் உட்படுத்தாமல் ஒரு ஊடகம் விளாசித்தள்ளியது. 

பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று விட்டு விடுவதற்கு இது ஒரு தனிநபர் விவகாரம் அல்ல. ஒரு சமூகப் பிரச்சினை. அருகருகே வாழும் இரு தேசிய இனங்களின் ஐக்கியம் தொடர்பானது.  

இதில் இன்னும் வேடிக்கையான விடயம் எப்போதும்  போன்று தமிழ் அரசியல் முஸ்லீம்களை தமிழ் பேசும் மக்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தையில் அழைத்து தமிழுக்குள் அவர்களை விழுங்க நினைப்பது. 

பேரணி முடிந்து விட்டது. ஜனாஸா விவகாரம் எங்கள் இருதரப்பினர் கைகளிலும் இல்லை. இணைந்து எதிர்ப்பைக்காட்டியிருக்கிறோம். எங்கள் கரங்களில் இருப்பது இரு சமூகங்களினதும் இன உறவை கட்டி எழுப்புவது. இனஉறவை அழித்ததில் தமிழ்தேசியத்திற்கும் பங்குண்டு. சிவில் சமூக அமைப்புக்களும், தமிழ்த்தேசியமும் பூனைக்கு மணி கட்டுவார்களா? 

வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களை நோக்கும் போது சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டதரப்பும்,  ஏற்கனவே பெற்ற அனுபவங்களின் ஊடாக திருப்தியற்று இருக்கும் இன்னொருதரப்பும் இந்த விவகாரத்தை மிக இலகுவாக பிரதேசரீதியான புறக்கணிப்பாகவும், மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகவும் இலகுவாகக் காட்டமுடியும். அப்படி ஒரு எண்ணப்பாட்டை பொத்துவில்லில் இருந்து பொலிகண்டி விட்டுச் செல்வது துரதிஷ்டவசமானது. 

சிவில் சமூக அமைப்புக்கள் ! 

தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள்!! 

பொத்துவில்லில் இருந்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது உண்மையில் சிவில் சமூக அமைப்புக்களை இனம் காணக்கூடியவாறு இருக்கவில்லை. எந்தெந்த அமைப்புக்கள் இணைந்திருக்கின்றன என்பதும் வெளிப்படையாக இருக்கவில்லை. பாதுகாப்புச் சூழ்நிலை இதற்குக் காரணமாக இருக்கலாம். 

சாணக்கியன் முன்னால் நகர இளைஞர்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். ஆரம்பத்தில் மக்கள் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு இருக்கவில்லை. ஆனால் நேர்முக வர்ணனைப்பாணி ஊடகங்கள் பேர்ளின் சுவர்தடையை தகர்த்து அல்லது சீனச்சுவரை தகர்த்து முன்னேறுவது போன்ற செய்திகளை ஏட்டிக்குப் போட்டியாக சொல்லிக்கொண்டன. 

ஒரு செய்தியாளர் ஜனாவைப் புறக்கணித்து சாணக்கியனையும், தனது முன்னாள் விரோதி சுமந்திரனையும் முதன்மைப்படுத்த, ஜனாவே தானாக நானும் சேர்ந்துதான் ஏற்பாடுகளைச் செய்தேன் என்று பின்னூட்டம் செய்யவேண்டியிருந்து. 

ஆக, பொத்துவில்லில் இருந்து குத்து வெட்டுத் தொடங்கி பொலிகண்டியில் கல் நாட்டும் போட்டியில் முடிந்துள்ளது. பொலிகண்டியை வெற்றிகரமாகச் சென்றடைந்தது பேரணிமட்டுமல்ல குத்துவெட்டும்தான்.  

திருகோணமலையில் குத்துவெட்டு ஒரு குறிப்பிட்ட உச்சக்கட்டத்தை அடைந்தது. அங்கு சிவில் சமூக அமைப்புக்களின் வெளிப்படையான பிரசன்னம் வெளிப்பட்டது. மதத்தலைவர்கள் முன்னால் செல்வதற்கும், அரசியல்வாதிகள் அவர்களை தொடரவும் கோரப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிசார் கோசங்களை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது. 

இதில் திருப்தியற்ற சுமந்திரனும், சாணக்கியனும் பேரணியை முந்தி தங்கள் பாட்டிற்குச் சென்றதாக பக்கச்சார்பற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. 

வடக்கில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் அணியினர் பேரணியில் பங்கேற்க நிலமை மேலும் மோசமடைந்துள்ளது. அரசியல்வாதிகள் பேரணியில் முன்னால் செல்ல முண்டியடித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், மக்கள், முன்னாள் போராளிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் அனைவரையும் தங்கள் பாராளுமன்ற கட்சி அரசியல் இருக்கைகளுக்காக துஷ்பிரயோகம் செய்யும் செயலாக இது அமைகிறது.  

இதில்  இன்னும் கேவலம் என்ன வெனில் முஸ்லீம்களின் ஜனாசா எரிப்பையும்,மலையக மக்களின் ஆயிரம்ரூபாய் சம்பள உயர்வையும் போடுகாய்களாக கோரிக்கை பட்டியலில் சேர்த்து தங்கள் அரசியலுக்கு அவர்களையும் பயன்படுத்தியது. இந்தியாவின் நலனுக்காக இது செய்யப்பட்டுள்ளது. 

சிவில் சமூக அமைப்புக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்து விட்டு, நேர்மையற்ற அரசியல்வாதிகள் கட்சி அரசியலை முதன்மைப்படுத்தி சிவில் சமூக அமைப்புக்களை பின்தள்ளும் திட்டமிட்ட சதி இது. நாங்கள் தான் பொத்துவில்லில் ஆரம்பித்தோம் பொலிகண்டியில் நாங்கள்தான் முடித்து வைக்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார்கள். கல் காட்டுவதற்கான காரணமாம் இது. 

சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூராது தடுத்து, ஆவடியில் கல்நாட்டி சிங்கள அரசை திருப்திப்படுத்த இருவரும் போட்ட திருகுதாளம் இது. 

இறுதியில் பொலிகண்டியில் சுமந்திரனும், சாணக்கியனும் நடந்து கொண்டமுறை இவர்களின் அரசியல் கபடத்தனத்தை வெளிச்சம் போட்டுள்ளது. முழுத் தமிழ் இனத்தையும் அவமதித்த அரசியல் அநாகரிகம். அற்பத்தனமான அரசியல்.  அரசியல் நாகரிகம், நேர்மை, அறம் ஆகியவை வெறும் வாய்ச்சொல்லில் இல்லை, செயற்பாட்டில் இருக்கிறது. 

சுமந்திரனும், சாணக்கியனும் நினைவுக்கல் நாட்டுவதற்கு தெரிவு செய்த இடம்  ஆலடி. இது மலசல கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் என்றும், சாணக்கியன் ஈழத்து வடிவேல் என்றும் ஒரு புகலிட செய்தி ஊடகம் பதிவிட்டுள்ளது.  

சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவு செய்த இடம்  செம்மீன் படிப்பகம் போராட்டக்காலத்தில் 55 பேர் கொல்லப்பட்ட ஒரு இடம் என்றும் அதுதான் பொருத்தமானது என்றும் மக்கள் கருதுகிறார்கள்.  

ஒட்டு மொத்தத்தில் இந்தப்பேரணி சுமந்திரனையும், சாணக்கியனையும் மன்னிக்க முடியாத அளவுக்கு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தி உள்ளது. இது எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன…? 

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா…….?