— எழுவான் வேலன் —
‘பொத்துவில் இருந்து பொலிகண்டிவரை‘ எனும் செய்தியும் பத்தி எழுத்துக்களும் அது பற்றிய படங்களும் அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இவ்வாரப் பேசு பொருளாகும். ஆரம்பத்திலிருந்தே இவ்வூடகங்கள் தமிழர் போராட்டத்தை வர்த்தகப் பொருளாக்கி அதற்கான விளம்பரங்களை உருவாக்கி இலாபம் ஈட்டுவதை மிகச் சூட்சுமமான வர்த்தக நவடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. (இலாபம் என்பது இங்கு தனியே பொருளாதார அர்த்தத்தில் மட்டும் குறிப்பிடப்படவில்லை. தனிநபர் அல்லது கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள் என்பவற்றின் அரசியல், சமூக இருப்பு, குறிப்பிட்ட ஊடகங்களின் சமூக மட்டப் பரவல் அதன் பிரபல்யம் அதன் இருப்பு, அந்த ஊடகங்களின் வர்க்க அரசியல் என்பவை தொடர்பாகவும் கருத்தில் கொண்டே இலாபம் என்பது குறிப்பிடப்படுகின்றது.)
தமிழ் மக்களுக்கு யதார்த்தத்தை மறைத்து கற்பனாவாதங்களை உருவாக்குவதும் அந்தக் கற்பனாவாதங்களை யதார்த்தங்களாக உருமாற்றிச் செய்திகளாக்குவதும் பின்னர் அந்தக் கற்பனாவாத யதார்த்தத்தில் மக்களைக் கனவு காணவைப்பதுவும், இவ் ஊடகங்களின் பணியாக இருந்து வருகின்றது. இந்தக் கற்பனாவாத யதார்த்தத்துக்கு மாறாக உண்மையான யதார்த்தம் தொடர்பாகப் பேசுபவர்கள் தமிழினத் துரோகியாக முத்திரை குத்தப்பட்டு தண்டனையளிக்கப்படுகின்றனர். இந்தவகையில் ஈழத் தமிழர் போராட்டத்தின் திசை வழியைத் தீர்மானிப்பவைகளாக இவ்வாறான தமிழ் ஊடகங்களே இருக்கின்றன.
பொத்துவில் இருந்து பொலிகண்டிவரை எனும் அரசியல் இலாபவேட்டைப் போராட்டமும் யதார்த்தத்தை மறைத்து மக்கள் போராட்டமாக காட்சிப்படுத்தப்படுகின்றது. இந்தப் போலிக் காட்சிகளையும் கற்பனாவாதங்களையும் உடைத்து உண்மைகளைப் பற்றிப் பேசுவதற்கும் அதனை விளங்கிக் கொள்வதற்கும் நாம் முயல வேண்டும். இப்பத்தி அந்த உண்மையைப் பற்றிப் பேசுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறதே தவிர எவர் மீதும் தனிப்பட்ட கோபதாபங்களையும் விருப்பு வெறுப்புக்களையும் வெளிக்காட்டுவதோ அல்லது தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பேரினவாத அரசின் அடக்குமுறைகளையும் பாராபட்சங்களையும் தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி அதற்கெதிராகப் போராடும் தமிழர்களின் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துவதோ அல்ல.
அந்தவகையில் பின்வரும் இரு விடயங்களில் நாம் இந்தப் போராட்டத்தைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
1. போராட்டத்தின் தன்மை பற்றியது
2. இவ்வாறான போராட்டங்களில் தமிழர்களின் வரலாற்று அனுபவம் பற்றியது.
போராட்டத்தின் தன்மை பற்றியது
முதலில் போராட்டத்தின் தன்மை பற்றியதை நோக்குவோமாக இருந்தால் இப் போராட்டம் சிவில் அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டமாக காட்சிப்படுத்தப்படுகின்றது. உண்மையில் இது சிவில் அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட போராட்டமா? என்பதை எமது மனச்சாட்சிக்கு விரோதமில்லாது கூற வேண்டும்.
சிவில் அமைப்புக்கள் என்பன வானத்திலிருந்து விழுந்தவையல்ல. அவை மக்கள் மட்டத்தில் உருவான மக்கள் அமைப்புக்களாகும். அந்த மக்கள் அமைப்புக்கள் தங்கள் உறுப்பினர்களைக் கூட்டிக் கலந்துரையாடாமல் எந்த ஒரு தீர்மானத்துக்கும் வருவது கிடையாது. சிவில் அமைப்புக்களின் ஜனநாயகப் பண்பு அதுவாகும். இந்த இடத்தில் எமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன.
1. இப்போராட்டத்தை ஒழுங்குபடுத்திய சிவில் அமைப்புக்கள் யாவை?
2. இந்தச் சிவில் அமைப்புக்கள் தங்களுடைய உறுப்பினர்கள் மட்டத்தில் இந்தப் போராட்டம் தொடர்பான கலந்துரையாடல்களையும் தீர்மானங்களையும் எடுத்திருக்கின்றனவா? என்பது
நான் அறிந்தவரை மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களைப் பொறுத்தவரைக்கும்; ‘மட்டக்களப்பு பிரசைகள் சமூகம்‘ (Batticaloa Civil Society) ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்‘ ‘அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம்‘ என்பன வலுவான பரந்துபட்ட மக்கள் அங்கீகாரத்தினைக் கொண்ட சிவில் அமைப்புகளாக இருக்கின்றன. இவை தவிர ஒவ்வோர் பிரதேசங்களிலும் பல்வேறுபட்ட அமைப்புக்கள் செயற்படுகின்றன. ஆனால் இவை எவற்றிடமும் இவ்வாறான மக்கள் போராட்டம் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றதாகவோ அல்லது இந்த சிவில் அமைப்புகளின் சார்பாக அவற்றின் உறுப்பினர்கள் பங்கு கொண்டதாகவோ அறியமுடியவில்லை. இதனால் இது சிவில் அமைப்புக்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டமா என்பது தொடர்பான ஐயம் எழுகிறது.
எங்களுடைய அரசியல் தலைவர்களும் சரி, போராட்ட இயக்கத் தலைவர்களும் சரி தங்களுடைய அரசியல் இருப்புக்காக தமிழர் தரப்பு நியாயங்களைப் பயன்படுத்தி போராட்டத்தை வடிவமைத்து மக்களின் பெயரால்நடாத்தி வந்திருக்கிறார்களே தவிர மக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் அந்தப் போராட்டத்தின் தேவைப்பாட்டினை உணர்ந்து மக்களாக அந்தப் போராட்டங்களைக் தொடர்ச்சியாக நடாத்துவதற்கான அரசியலைச் செய்யவில்லை. இதனால் தனிநபர்கள் பயன் பெற்றார்களே தவிர, தமிழ் மக்கள் இருந்ததையும் இழந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்தப் போக்கின் தொடர்ச்சியே தற்போது இடம்பெற்றுவரும் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையான போராட்டமாகும்.
பொங்கு தமிழ்
கடந்த காலத்தில் இதனைவிடப் மிகப்பரந்தளவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம் ‘பொங்கு தமிழ்‘ ஆகும். அதனை ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் மிகப் பெரிய மக்கள் போராட்டம் எனப் புகழாரம் சூட்டி எழுதினார்கள். அப்போது நாம் அதனை இது மக்கள் போராட்டம் அல்ல, விடுதலைப்புலிகளின் தேவைக்காக விடுதலைப் புலிகளால் அல்லது அவர்களின் ஆதரவாளர்களினால் நடாத்தப்படுகின்ற போராட்டம் எனக் கூறியபோது நாம் உயிராபத்துக்கு ஆளானோம். ஆனால் வரலாறு அது யாருடைய போராட்டம் என்பதை நிருபித்தது. இல்லை, அது மக்கள் போராட்டம்தான் என வரிந்து கட்டிக்கொண்டு யாராவது வாதிடுவாரானால் அவரிடம் எழுப்புகின்ற ஒரேயொரு கேள்வி, ஏன் இப்போது மக்கள் பொங்கு தமிழை நடத்துகின்றார்கள் இல்லை? என்பதாகும். இதற்கான பதிலை அவர் சரியானமுறையில் தேடுவாராக இருந்தால் தற்போது நடாத்தப்படுகின்ற போராட்டத்துக்கும் இதே நிலைதான் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அதாவது இதனை முன்னின்று நடாத்துகின்றவர்களின் தேவை நிறைவேறுகின்றபோது அல்லது அவர்கள் மௌனமாகி விடுகின்ற போது போராட்டம் முடிவடைந்து விடுகின்றது.உண்மையான மக்கள் போராட்டம் யாருடைய தேவைக்காகவோ அல்லது யாருடைய உதட்டசைவுகளுக்காகவோ பார்த்திருப்பதில்லை. அது தன் இலக்கை அடையும்வரை தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த மக்கள் பிரவாகத்தினை எந்தவொரு சக்தியினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் உலகில் நடத்திய பல போராட்டங்கள் இதற்கு உதாரணமாகும். ஆனால் எமது தலைவர்கள் மக்களின் பெயரால் சிவில் அமைப்புக்களின் பெயரால் மக்களினுடைய போராட்ட நியாயத்தன்மைகளை வைத்து தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் எப்படி?
இவ்வாறு நான் கூறுகின்றபோது ஆயிரக்கணக்கானவர்கள் எங்கிருந்து கலந்து கொண்டார்கள் என்கின்ற எண்ணம் பலருக்கு உருவாகலாம். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குறைந்தது 500 பேரைச் சேர்ப்பது ஒன்றும் கல்லில் நார் உரிக்கும் செயல் அல்ல. அவ்வாறு சேர்க்கப்பட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்களாகத்தான் நான் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பார்க்கின்றேன். நாங்கள் எந்தக் கட்சியும் இல்லை ஆத்மார்த்த உணர்வில் கலந்து கொண்டோம் எனக் கூறுபவர்கள் மிகக் குறைவானவர்களாகத்தான் இருக்கமுடியும். குறிப்பாகத் தமிழ்த் தேசிய அரசியலைச் சார்ந்து இருக்கின்ற சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் போன்றவர்களையும் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் கட்சி போன்ற பல கட்சிகளின் பிரசன்னத்தை இப்போராட்டதின் ஆரம்பத்தில் காணமுடியவில்லை. இக்கருத்தினைச் சிலர் மறுத்து இன்ன இன்ன கட்சிகள் கலந்து கொண்டவைதான் என ஒரு சில கட்சிப் பிரதேச சபை உறுப்பினர்களை உதாரணம் காட்டலாம். எனது கருத்து என்னவெனில் மக்கள் போராட்டம் என்றால் அதில் மக்கள்தான் முக்கியம் பெறவேண்டுமே தவிர குறிப்பிட்ட கட்சியின் ஒரு சிலர் அல்ல என்பதாகும். கட்சிகளும் அதில் பங்குகொள்வதாக இருந்தால் எல்லாத் தமிழ் கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறன்றி சுமந்திரன் – சாணக்கியன் அணியே எல்லாவற்றையும் தீர்மானித்து இயக்குபவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் அது மக்கள் போராட்டம் அல்ல, ஒரு குறிப்பிட்ட கட்சியின் நலனுக்காக அக்கட்சியின் குறிப்பிட்ட சிலரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என்பதேயாகும்.
யாருடைய, யாருக்கான போராட்டம்?
இது யாருடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள, யாரால் நடாத்தப்படும் போராட்டம் என நோக்குவோமாக இருந்தால், இந்தப் போராட்டம் பற்றிய முதல் அறிவிப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களிடமிருந்தே எழுகின்றது. இதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறக்கூடியதாக இருக்கின்றது.
1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கற்றுக்கொண்ட படிப்பினை
2. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளல்
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாகியிருக்கும் உட்கட்சிப் பூசலில் மாவைக்கு எதிரான அணி தமிழ் மக்கள் மத்தியில் கதாநாயகர்களாக மேலெழுதல்
4. கிழக்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தினை நிரப்புதல்
5. எதிர்காலத்தில் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தினைக் கைப்பற்றுதல்
6. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரின் கவனத்தைப் பெறுதல்
என்பவற்றைக் குறிப்பிட முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கற்றுக்கொண்ட படிப்பினை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நல்லாட்சியில் எவ்வித நிபந்தனைகளுமின்றி அரசுக்கு முண்டு கொடுத்து சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு, தமிழர்களுடைய எந்தப் பிரச்சினைகளுக்கும் எவ்வித தீர்வையும் பெற்றுத்தராது காலத்தைக் கடத்தியமைக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சிறந்ததொரு பாடத்தினைக் கொடுத்திருந்தார்கள். இதனால் சரிந்த வாக்கு வங்கியைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு சரியான வேலைத் திட்டம் த.தே.கூட்டமைப்புக்குத் தேவையாக இருந்தது.
வழி செய்து கொடுத்த ராஜபக்சா அரசாங்கம்
இந்த வேலைத் திட்டத்துக்கான புறநிலை அரசியல் சூழலை ராஜபக்சாக்களின் அரசாங்கம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடன் களத்தில் குதித்து வந்த கறுப்புச் சட்டைக்காரர்கள் (வியாழேந்திரன் அணியினர்) தற்போது சுகபோகங்களில் மூழ்கியிருக்க அந்த வெற்றிடத்தினைக் கூட்டமைப்பினர் நிவர்த்தி செய்திருக்கின்றார்கள். அடுத்த தேர்தலில் காட்சியை மாற்றுவதற்கான செயற்திட்டமே இந்தப் போராட்டமாகும். சென்றமுறை பிள்ளையானுக்கு வேலைசெய்த ஒரு நண்பர் கூறினார். ‘இவனுகள் ஒன்றும் செய்றானுகள் இல்லை, கூட்டமைப்புக்காரன் என்னதான் செய்தாலும் எமது உரிமை விடயத்தை விட்டுக்கொடுக்க மாட்டானுகள் சர்வதேசம் வரைக்கும் அவனுகள்தானே கொண்டு போறானுகள்‘ என்று. இந்த நண்பரின் உரையாடல் காட்சிமாற்றத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டாயிற்று என்பதைக் காட்டுகின்றது. எங்களுடைய மக்களுக்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு வருதோ இல்லையோ தனது ஆதரவாளர்கள் நான்குபேரைக் கூட்டி வீதியில் நின்று போஸ்கொடுத்து சிங்கள அரசாங்கங்களுக்கு நாலு திட்டுத் திட்டினால் போதும் அவனைத் தலைவனாக்கிப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவிடுவோம்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளல்
அடுத்தது மாகாணசபைத் தேர்தலாகும். கிழக்கில் த.தே.கூட்டமைப்பு மிகப் பெரிய சவாலை இம்முறை எதிர்கொள்ளும் என்ற நிலை இருக்கிறது. அந்தச் சவாலை இலகுவாக்குவதற்கான புறவய அரசியல் சூழல் த.தே.கூட்டமைப்புக்கு இருக்கின்றது. பாராளுமன்ற, மாகாணசபைக் கதிரைகளுக்காக அரசியல் செய்யும் எந்தவொரு அரசியல் கட்சியும் புறவய அரசியல் சூழலை கணக்கிலெடுக்காது அரசியல் செய்ய முடியாது. அவ்வாறு கணக்கிலெடுக்கப்பட்ட அரசியல் சூழலின் வெளிப்பாட்டு வடிவமே இந்தப் போராட்டமாகும். அந்தவகையில் இம்முறை தமது கட்சிக்காக (மக்களுக்காக அல்ல) புறநிலை அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாக கையாள்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாகியிருக்கும் உட்கட்சிப் பூசலில் மாவைக்கு எதிரான அணி தமிழ் மக்கள் மத்தியில் கதாநாயகர்களாக மேலெழுதல்
இந்தப் போராட்டத்தில் இரா.சாணக்கியன், சுமந்திரன், கலையரசன் ஆகியவர்களே முன்னிலைப் படுத்தப்படுகின்றார்கள். இவர்கள் மாவை அணிக்கு எதிரானவர்கள் என்பதோடு ரெலோ அணியினரையும் புறந்தள்ளுபவர்கள். போராட்டத்தில் இவர்கள் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்படுவதைப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சாராரை அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதையும் செய்திகள் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது. ரெலோ தொடர்ந்தும் த.தே.கூட்டமைப்பில் இருப்பது தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ் மக்கள் மத்தியில் ரெலோவுக்கு இருக்கும் செல்வாக்கினையும் இதன் மூலம் இல்லாமல் செய்துவிடுவதற்கான நகர்வுகளையும் இப்போராட்டம் கொண்டிருக்கின்றது.
கிழக்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தினை நிரப்புதல்
கிழக்கில் வ.நல்லையா, கே.டபிள்யூ.தேவநாயகம், செ.இராசதுரை போன்றவர்களின் அரசியல் தலைமைத்துவத்துக்குப் பின்பு சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. இந்தப் பொதுக் கருத்து நிலையினை இல்லாமல் செய்து கிழக்கிற்கான தலைமைத்துவத்திற்குத் தன்னை முன்னிறுத்துவதற்கு இரா.சாணக்கியன் தனது முழுத்திறமைகளையும் பயன்படுத்துகின்றார். அவர் பாராளுமன்றத்தில் மும்மொழிகளிலும் ஆற்றிய உரை, அதில் முஸ்லீம்களின் ஜனாசாக்களையும் உள்வாங்கிக் கொண்டமை எல்லாம் அதற்கான உதாரணங்கள். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு தமிழ் வெகுஜனப் பத்திரிகை ஒன்றின் பத்தி எழுத்தாளர் கிழக்கின் தலைவனாக இரா.சாணக்கியனை முன்மொழிகின்றார். இதன் தொடர்ச்சியே போராட்டத்தில் இரா.சாணக்கியனின் நடவடிக்கைகளாகும். தனது படம் பொறித்த பதாகையினை தானே சுமந்து வரும் அளவுக்கு சாணக்கியன் அவர்களின் தலைமைத்துவ ஆசை இருக்கின்றது. இதனைச் சகித்துக் கொள்ள முடியாத மின்னிதழ் ஊடகமொன்று‘ சுகாசிடமிருந்து சாணக்கியன் அரசியல் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்‘ என்று செய்தி வெளியிட்டிருந்தது. இத்தனைக்கும் அந்த ஊடகம் த.தே.கூட்டமைப்பின் ஆதரவு ஊடகம் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும். இதற்கும் மேலாக முஸ்லிம் பிரதேசங்களுக்குள்ளால் ஊர்வலம் செல்லும் போது ஊர்வலத்தை விட்டு முன்னே சென்று முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதிலும் இரா.சாணக்கியன் அவர்கள் முந்திக் கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்தப் போராட்டம் இரா. சாணக்கியன் அவர்களுடைய நிகழ்ச்சித் திட்டத்தை மிகச் சரியாகக் கொண்டு செல்வதற்குப் பயன்படுகின்றது.
எதிர்காலத்தில் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தினைக் கைப்பற்றுதல்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் வயது மூப்பின் காரணமாக கூட்டமைப்பிற்குள் நடக்கும் உட்கட்சி முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டவராக இல்லை. அவருக்குப் பின்னர் யார் கூட்டமைப்பின் தலைவராக வருவது என்பதில் கூட்டமைப்புக்குள் கடுமையான இழுபறிநிலையுள்ளது. சுமந்திரன் கிழக்கைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றார். கிழக்கிலுள்ள கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்களும் சுமந்திரனுடன் கைகோர்த்துக் கொண்டே திரிகின்றனர். எனவே கிழக்குடன் சேர்த்து வடக்கிலும் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கைப் பெற்றுவிட்டால் கூட்டமைப்பின் தலைமை தங்களுக்குக் கிடைக்கும் எனச் சுமந்திரன் அணியினர் கணிப்பிடுகின்றனர். இந்தப் போராட்டத்தின் மூலம் அவ்வாறான ஒரு நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதும் அவசியமாகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரின் கவனத்தைப் பெறுதல்
கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் நோக்குகின்றபோது இலங்கை அரசாங்கம் ஐ.நா வின் அதிகாரத்துவம் மிக்க நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்டு நடக்கும்வரை இலங்கை அரசு எதையும் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. 2009ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்தபோது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் ஐ.நா வின் அனுசரணை பெற்ற பல மனிதாபிமான அமைப்புக்கள் வடக்கிலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்ட பின்னர்தான் யுத்தமே ஆரம்பித்தது. திருகோணமலையில் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த Action Contre la Faim எனும் அமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் கடந்த ஒரு சகாப்தத்துக்கும் மேலாக எந்தவிதமான நீதியும் வழங்கப்படவில்லை என்பதும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு தெரியாத விடயங்கள் அல்ல. இவை பற்றி நடவடிக்கை எடுப்போம் என ஒரு அச்சுறுத்தல் நிலையில் தங்களுடைய அதிகார வட்டத்தில் இலங்கை அரசை வைத்துக் கொள்வதே ஐ.நா.வின் அதிகாரத்துவம் மிக்க நாடுகளின் போக்காக இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது அல்ல. இந்த அதிகாரத்துவ நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது எமது பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்கள், அதற்காக எம்மையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்காகப் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள், சர்வதேச நாடுகளின் உளவுப் பின்புலங்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, தமிழ் மக்களின் பிரச்சினையை முன்வைத்து உள்ளூர் தமிழ் அரசியல்வாதி தொடக்கம் சர்வதேச நாடுகள் வரை நலன்பெறுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே தவிர தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று இந்த நாடுகள் தீர்மானித்தால் அதனை ஒர் இரவில் கூட செய்து முடிக்கலாம். ஆனால் அவர்களுக்குப் ‘பிச்சைக்காரனின் புண் போல‘ இங்கு பிரச்சினை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இலங்கையை தன்வசப்படுத்துகின்ற அரசியலைச் செய்து கொண்டிருக்கலாம் எனக் கணிக்கின்றனர். இந்தவகையில் இந்தப் போராட்டம் அவர்களுடைய தேவைக்காக நடத்தப்படுகின்ற போராட்டமாகவும் இருக்கின்றது.
இவ்வாறான போராட்டங்களில் தமிழர்களின் வரலாற்று அனுபவம் பற்றியது
அடுத்து நாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டியது இவ்வாறான போராட்டங்களில் தமிழர்களின் வரலாற்று அனுபவம் பற்றியதாகும். இந்த யாத்திரைகள், சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என தமிழர்களுக்குக் கிட்டத்தட்ட 75 வருடகால அனுபவமுண்டு. இந்த அனுபவங்களின் வாயிலாக நாம் புதிதாக எதையுமே கற்றுக்கொண்டவர்களாக இல்லை. அதே விடயத்தைத்தான் இன்னொரு தலைமுறை மேற்கொள்கின்றதே தவிர, சென்ற தலைமுறையினரின் தவறுகளைத் திருத்தி போராட்டப் பண்பில் மாற்றங்களைச் செய்து புதிய தடத்தில் போராட்டத்தினை நடாத்துவதாக இல்லை. உதாரணத்திற்கு தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிராக தமிழர்களுக்குச் சார்பாக 19 சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தினை நடத்த முற்படுகின்ற போது எமக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளையும் அந்த உறுப்பினர்களையும் எமது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உள்ளீர்த்திருத்தல் வேண்டும். ஆனால் எமது தலைவர்கள் அவர்களைப் புறந்தள்ளி விட்டுத் தமிழ் வீரம் பேசிக்கொண்டு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் மேற்கொண்டனர். இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டமைக்குக் காரணம் தமிழர்களிடம் தம்மை ஒரு வீரபுருசர்கள் எனக் காட்டுவதும் அதனூடாகத் தாங்கள்தான் தமிழ்த் தலைவர்கள் என்ற நிலையினைத் தக்கவைப்பதற்குமே தவிர தமிழ் மொழிப் பிரயோகத்திற்காக அல்ல.
இது போன்றுதான் இப்போதும் மகிந்த அரசுக்கெதிரான பல முற்போக்குச் சக்திகள் சிங்கள மக்களிடம் இருக்கின்றபோதும் இன்றைய தமிழ்த் தலைவர்கள் அவர்களைக் கவனத்தில் எடுக்காது தாங்கள்தான் தமிழ் மக்களின் வீரபுருசர்கள் என்று காட்டுவதற்கான போராட்டங்களாக இப்போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்துகின்றனர்.
ஒரே இடத்தில் பிராண்டும் தமிழ் தலைமைகள்
விலங்கு நடத்தைகளை ஆராய்வோர்‘தோற்றுக் கற்றல்‘என்றறொரு விதியினைக் கூறுவார்கள். அதாவது ஒரு விலங்கை அது வெளிவருவதற்கு ஒரு கள்ள வழியை வைத்து ஒரு கூட்டுக்குள் போட்டு அடைத்து வைத்தால் அந்த விலங்கு பல இடங்களில் வெளிவருவதற்கு முயற்சித்து தோற்றுத் தோற்று தோல்வியின் இறுதியில் அந்தக் கள்ள வழியைக் கண்டுபிடித்து வெளியேறும் என்பார்கள். அந்த விலங்கு ஒரே இடத்தில் ஒரே மாதிரிப் பிராண்டிக் கொண்டிருக்காது, அது பல இடங்களிலும் தான் வெளியேறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுதான் வழியை கண்டடைந்திருக்கின்றது.
இந்த விலங்கின் நடத்தை கூட எமது தலைவர்களுக்குக் கிடையாது. இவர்கள் 75 வருடகாலமாக ஒரே இடத்தில் ஒரே மாதிரித்தான் பிராண்டிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கார்ட்வோட்டில் இருந்த அந்த பிராண்டுகின்ற இடத்தை இவர்கள் பிராண்டுகின்ற சத்தத்தால் இரும்பாக்கி தற்போது மிகக்கனதியான உருக்காக்கி இருக்கின்றார்கள். இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தலைமுறை தலைமுறையாக பிராண்டிக் கொண்டிருந்தாலும் இவர்கள் அந்தக் கூட்டிலிருந்து வெளிவரப்போவதில்லை என்பது மட்டும் இவர்களுடைய நடத்தையினால் புலனாகின்றது.
நாம் எமது கடந்தகால போராட்டத் தவறுகள் காரணமாக இனங்களுக்கிடையில் மிகப் பெரிய இடைவெளிகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்கின்ற இனத்துவத்தினைக் கடந்து மனிதத்துவம் என்கின்ற ஒற்றைத் தன்மையில் இணையமுடியாதவர்களாக இருக்கின்றோம். இன்று முஸ்லிம்கள் இந்தப் போராட்டத்துக்கு வழங்கும் ஆதரவு என்பது அவர்களுடைய சுயநலத்துக்காகவே தவிர தமிழர்களுடைய மனிதார்த்துவ கோரிக்கைகளுக்காகவல்ல. தமிழ்ப் போராட்டக்காரர்களும் முஸ்லிம்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கின்றது என்பதைக் காட்டுவதின் ஊடாக வெகுஜனச் செல்வாக்கு ஒன்று கிட்டும் எனக் கணிப்பிடுகின்றனர். இவ்வாறு இந்தப் போராட்டத்திலும் அவரவர் நலன்களை முன்னிலைப் படுத்துகின்றோமே தவிர பொதுமனிதார்த்துவத்தை மதிப்பவர்களாக நாம் இல்லை. மொழியாலும் பிரதேசத்தாலும் பொருளாதாரத்தினாலும் இணைந்திருக்கின்ற முஸ்லிம்களைக் கூட எம்மால் மனிதார்த்துவ ரீதியாக வெல்ல முடியாமல் இருக்கின்றது. அதே போல் அவர்களால் எம்மை வெல்லமுடியாமல் இருக்கின்றபோது மொழியாலும் பிரதேசத்தாலும் பொருளாதாரத்தாலும் வேறுபட்டு இருக்கும் சிங்கள மக்களை மனிதார்த்துவத்தின் அடிப்படையில் இணைக்க முடியுமா எனும் கேள்வி எழுகின்றது.
சுயநலத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்குமான போராட்டமாக எமது போராட்டங்கள் இருக்கும் வரை எந்த முற்போக்குச் சக்தியும் எம்முடன் இணைந்து போராடப் போவதுமில்லை, எமது போராட்டங்கள் வெற்றியடையப்போவதுமில்லை. எப்போது நாம் எமது போராட்டங்களை பொதுமனிதார்த்துவத்துக்கு தேவையானதும் மற்றைய இனங்களை அச்சமூட்டாததுமான போராட்டங்களாக வடிவமைத்து அவற்றை மக்கள்மயப்படுத்தி மக்களிடம் கையளிக்கின்றோமோ அன்றைக்குத்தான் எமது போராட்டம் வெற்றிபெறும். அதுவே உண்மையான மக்கள் போராட்டமுமாகும்.
இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் களிமண் அத்திவாரத்தில் மாடிவீடு கட்ட முயற்சிக்க வேண்டாம். எமது களிமண் அத்திவாரத்தினைத் தோண்டி எறிந்து விட்டு புதிய தளத்தில் புதிய கற்கள் கொண்டு புதிய நுட்பம் கொண்டு மாடி வீடு கட்டுதல் வேண்டும்.