— விஜி/ஸ்டாலின் —
சுயமரியாதை இயக்கம்
ஐரோப்பாவில் உருவாகிய அறிவொளிக்கால சிந்தனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரூசோ, வால்டேயர், இம்மானுவேல் கான்ட், ஆடம் சிமித் போன்ற பல அறிஞர்களால் 18 ஆம் நூற்றாண்டில் வேகமாக பரப்பப்பட்ட அச்சிந்தனைகள் கடவுளின் பெயரில் கோலோச்சி வந்த பழமைவாதக் கோட்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாகின.
அதன் தொடர்ச்சியில் ‘கடவுள் இறந்து விட்டான்‘ என்று அறிவித்தான் நீட்சே என்னும் பேரறிஞன்.
இந்த அறிவொளி இயக்க சிந்தனைகளின் தாக்கம் தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் (theory of divine origin) அடிப்படையில் மன்னனானவன் கடவுளின் பிரதிநிதி என்று ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மன்னராட்சி தத்துவங்களை கேள்விக்குள்ளாக்கியது. பழமைவாத சிந்தனைகள் தூக்கி வீசப்பட்டன. மக்களாட்சி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற வாழ்வியல் நெறிகளை நோக்கி ஐரோப்பியர்கள் முன்னேறத் தொடங்கினர். முக்கியமாக அரசியல் என்பது முதன்முறையாக மதநீக்கம் செய்யப்பட்டது. கிறிஸ்தவ மதபீடங்களின் இடுக்குப் பிடிகளில் இருந்து மெதுமெதுவாக மக்களின் கைகளில் அதிகாரங்கள் சென்றடையத் தொடங்கின. கூடவே பண்பாட்டு கலாச்சார விழுமியங்களும் தனிமனித சுதந்திரத்தை மதித்து அனுசரித்து செல்ல வேண்டியனவாக புடமிடப்பட்டன. அதனுடாகவே ஜனநாயகம், தேசிய அரசுகள், சோசலிசம், மார்க்சிசம் போன்ற நவீன ஆட்சித்தத்துவங்கள் தொடர்ச்சியாக பிறப்பெடுத்தன.
இத்தகைய அறிவொளி இயக்கமொன்றின் தேவை இந்தியத் துணைக் கண்டத்தை பொறுத்தவரை நீண்டகாலமாகவே வெற்றிடமாக இருந்து வந்தது. இந்நிலையில்தான் 1925ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டுமென்று பெரியார் எடுத்த முடிவானது எதிர்காலத்தில் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தரப்போகின்ற அறிவொளி இயக்கமொன்றின் தொடக்கமாகவும் இருந்தது. அந்த இயக்கமானது சுயமரியாதை (self respect) இயக்கம் என்றழைக்கப்பட்டது.
சுயமரியாதைதான் மானிட விடுதலையின் அடிப்படை என்பதை நோக்காகக் கொண்டே இவ்வியக்கத்தை பெரியார் தொடங்கினார். மூட நம்பிக்கைகளின் பெயராலோ சாதி, மத, வர்க்கபேதங்களின் பெயராலோ பாலின வேறுபாடுகளின் பெயராலோ ஏன் கடவுளின் பெயராலோ கூட எந்தவொரு தனிமனிதனும் அவமானப்படுத்தப்படுவதையோ கீழ்மைப்படுத்தப்படுவதையோ எதிர்த்துப் போராடுவதே சுயமரியாதை இயக்கத்தின் பணி என்று அறிவித்தார் பெரியார்.
இன்றும் தேவை பகுத்தறிவு பெரியார்
எமது கீழைத்தேய நாடுகளில் இன்றுவரை மதத்தையும் அதன்பெயரில் சாத்திர சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகளையும் அரசியலில் இருந்து பிரித்தெடுக்க முடியாதிருக்கின்றோம். குறிப்பாக தமிழக மற்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் கடவுளின் பெயரிலான விதி, சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகள் கோலோச்சுவது குறைந்தபாடில்லை. இதன் காரணமாக இலங்கையில் மட்டுமல்ல புகலிடத்தமிழர்களை குறிவைத்தும் கோவில்களும் புதிய புதிய சுவாமிகளும் பிறப்பெடுக்கின்றார்கள். கிறிஸ்தவ மதப்பிரிவுகளின் எண்ணிக்கை புற்றீசல்கள் போல் பெருகிவருகின்றன. ‘இஸ்லாத்தின் எதிரிகள்’ என்று சொல்லி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து சொர்க்கம் செல்லமுனையும் வகாபிஸ்ட்டுக்களும் ஒழிந்தபாடில்லை. இவையனைத்துக்கும் காரணம் மதத்தின் பெயரிலான மூடநம்பிக்கைகள் இன்றுவரை தொடர்வதேயாகும்.
புகலிடத்தமிழர்களை குறிவைக்கும் இந்திய வருகை தரும் சோதிடர்களின் பொருளாதார சுரண்டல்கள் சொல்லிமாளாது. மதவாதிகளின் பிடியிலிருந்து அரசியலை விடுவிக்கமுடியாது திண்டாடுகின்றோம். இது இலங்கைக்கு மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகள் எங்கும் இதேநிலைதான். பெரும் கோடீஸ்வர்களாக ஆன்மீக தலைவர்களே இருக்கின்றனர். இவர்களே அரசியல் மையங்களை தீர்மானிக்கும் ‘கிங் மேக்கர்”களாகவும் வலம்வருகின்றார்கள்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்நிலையென்றால் கடந்த நூற்றாண்டின் நிலைமைகளை விபரிக்க வேண்டியதில்லை. மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர் தமிழர்கள். அந்த இழிநிலை கண்டே பெரியார் கொதித்தெழுந்தார். தமிழர்களின் இழிநிலைக்கு காரணம் இந்த மூடநம்பிக்கைகளே என்று குரலெழுப்பினார். சோதிடத்துக்கு ஆதாரமாக காணப்படும் நட்சத்திரம், லக்கினம், திதி, அர்ச்சனை, பரிகாரம் போன்ற அனைத்துமே இதிகாச, புராணங்களின் பெயரால் நடைபெறும் ஏமாற்றுவித்தைகள் என்கிறார். இவையனைத்துக்கும் கடவுளின் பெயரால் நியாயம் கற்பிக்கப்படுவது தகுமோ என்று கேள்வியெழுப்பினார். கூடவே இவற்றையெல்லாம் நான் சொல்வதற்காக அன்றி உங்களின் பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள் என்று மக்களை தூண்டினார்.
மனித வாழ்வின் துன்ப துயரங்களுக்கு அடிப்படைக் காரணம் முன்வினைப்பயன் காரணமான விதியே என்றும், அந்தவிதியானது இறைவன் வகுத்தவழி என்றும் நம்பும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை இந்த இழிவு நிலை தொடர்வதை தடுக்கமுடியாது என்கிறார்.
பிறவியிலே பேதம் சொல்லி நடந்துவருகின்ற தீண்டாமைக்கொடுமைகளுக்கு வர்ணாச்சிரம தர்மமே காரணமென்றால் இத்தகைய கோட்பாடுகள் யாரால் யாருக்காக உருவாக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பினார். “சதுர்வர்ண மயா சிருஷ்டம்” (நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்) என்று கண்ணன் ஊடாக பகவத்கீதையிலே அதற்கு பதில் கிடைத்தது.
சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பை தனது கொள்கையாக ஒரு போதும் வரித்துக்கொள்ளவில்லை. ஆனால் தீண்டாமையும், அக்காலத்தில் கடுமையாக இருந்த பால்ய திருமணம், விதவை வாழ்வு போன்ற பெண்கள் மீதான சமூக கொடுமைகளும் ஒழிய வேண்டுமென்றால் அவற்றை பாதுகாத்து சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கும் பகவத்கீதை, மனுஸ்மிருதி போன்ற புராண, இதிகாசங்கள் எல்லாம் ஒழிக்கப்படவேண்டும், மனிதனை மனிதன் இழிவு செய்யும் இந்த குப்பைகளையெல்லாம் உருவாக்கியது கடவுள்தான் என்றால் அந்தக்கடவுள் நமக்கெதற்கு? என்பதே பெரியாரதும் சுயமரியாதை இயக்கத்தினதும் வாதமாயிருந்தது.
அரசியல் துறையில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உருவாக வேண்டுமானால், அதற்கான முன்நிபந்தனை, குடிமை சமுதாயத்தில் (civil society) ஏற்படவேண்டிய மாற்றங்களேயாகும் என்பதை நோக்காகக்கொண்டே சுயமரியாதை இயக்கம் செயற்பட்டது.
தீவிர சுயமரியாதை பிரச்சாரங்களில் ஈடுபட்ட பெரியார் பல்வேறுவிதமான வார இதழ்களையும் மாத ஏடுகளையும் நாளாந்த பிரசுரங்களையும் அயராது வெளியிட்டுவந்தார். செங்கல்பட்டு, ஈரோடு, விருதுநகர் என்று மாநிலம் முழுக்க சுயமரியாதை மாநாடுகளை தொடராக நடாத்தினார். குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, நகரதூதன், விடுதலை, தமிழன், என்று பல்வேறு ஏடுகள் பரவலாக வெளிவந்தன.
“மனிதனை மனிதன் தொடக்கூடாது, கண்ணிலே படக்கூடாது, தெருவிலே நடக்கக்கூடாது, குளத்திலே தண்ணீர் எடுக்கக்கூடாது” என்கின்ற கொடுமைகளை தாங்கிக்கொண்டு இந்த இனம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காலந்தள்ள போகிறது? “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகின்றீர்கள்?முன்னேற்றத்துக்கு தடையாய் இருக்கும் மூடநம்பிக்கைகளை தூக்கி எறியுங்கள், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று முழங்கினார். அதுமட்டுமன்றி விதவைகளை நோக்கி மறுமணம் செய்ய தயங்காதீர்கள் என்கிறார். தேவதாசி முறையை நாம் ஒழிப்பதெப்போது? என்று கேள்வியெழுப்பினார். சுயமரியாதை மாநாடுகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்களையும் பெண்களையும், குறிப்பாக ‘விதவைகள்’, ‘வேசிகள்’ என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் விசேடமாக அழைத்தார்.
திருமணம் என்பதில் இருந்துவந்த நமது நடைமுறைகள் எல்லாம் இப்போது பார்ப்பன மயமாகிவிட்டன. தற்போதைய திருமண முறைகள் பெண்களின் விருப்பு வெறுப்புகளை விட சாதி, பொருளாதாரம் போன்ற அடிப்படைகளுக்கே முன்னுரிமை வழங்குகின்றன. இவற்றையெல்லாம் ஒழிப்பதானால் சுயமரியாதை திருமணம் மட்டுமே ஒரே வழியென்றார்.
சாதி வேறுபாடுகளின்றி, கோயிலின்றி, தாலியின்றி, பிராமணர்களின்றி சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளுங்கள் என பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் செய்ததோடல்லாமல் சுயமரியாதை திருமணங்களை அவரே முன்னின்று நடாத்த தொடங்கினார்.
சுயமரியாதை திருமணம்
1928ஆம் ஆண்டு முதலாவது சுயமரியாதை திருமணத்தை பெரியாரே முன்னின்று அருப்புக்கோட்டை என்னுமிடத்தில் நடத்திவைத்தார். அதன் தொடர்ச்சியாக பலர் புரோகித வழிமுறைகளையும் சாதியையும் மறுத்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதனால் பார்ப்பன பத்திரிகைகள் இவற்றை கேவலப்படுத்தி மக்களிடையே எதிர்ப்புகளை உருவாக்கின.
இதன் காரணமாக பல்வேறுவிதமான விமர்சனங்கள், சேறடிப்புகள், சண்டை சச்சரவுகள், தாக்குதல்கள் போன்றவற்றை பெரியாரும் தோழர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது. அதேவேளை இத்திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரமும் பெறமுடியவில்லை. அதன் காரணமாக சொத்துபிரிப்பு மற்றும் வாரிசு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தபோது பாரிய சிக்கல்களை தோற்றுவித்தது. நீதிபதிகளாயிருந்த பார்ப்பனர்கள் சுயமரியாதை திருமணங்களை சட்டப்படி ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பல்வேறு கட்டங்களில் தீர்ப்புகளை வழங்கினார். எனினும் சளைக்காது ஆயிரக்கணக்கான சுயமரியாதை திருமணங்கள் நடந்தவண்ணமே இருந்தன.
தமது சுயமரியாதை பிரச்சாரங்கள் மீதும் சுயமரியாதை திருமணங்கள் மீதும் வைக்கப்படும் அத்தனை கேள்விகளுக்கும் முகம்கொடுத்து ஒவ்வொரு கூட்டங்களிலும் பதிலிறுத்தார் பெரியார். அவரின் சிறப்பம்சம் என்னவென்றால் எதுகை மோனையுடனோ தத்துவார்த்த கோசங்களுடனோ உரையாற்றுகின்ற மேடை பேச்சாளராக அவர் இருக்கவில்லை. சாதாரண மக்களின் மொழியில் அவர்களுடன் உரையாடுவதாக அவரது பேச்சுக்கள் இருந்தன. அதனால் அவரின் கருத்துக்கள் இலகுவாக சாமானிய மக்களை சென்றடையத்தொடங்கின. காலப்போக்கில் தமது கொள்கைகளை மக்களுக்கு புரியவைப்பதில் அவர் வெற்றிகண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
அதேபோல வர்ணாச்சிரமத்தின் காவலர்களாக இருந்துகொண்டு இந்திய சுதந்திரம் கோருகின்ற தேசியவாதிகளால் ஒரு போதும் சமூகநீதியை பெற்றுத்தரமுடியாது என்பதனால் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நோக்கி வகுப்புவாரி இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து போராடினார். வீதி வீதியாக மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டங்களையும் கலகங்களையும் செய்தார். சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் பொருட்டு ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்தார் பெரியார். அவற்றில் பல வெற்றிகளையும் கண்டார்.
1928 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறையை அன்றைய நீதிக்கட்சி தலைமையிலான சென்னை மாகாண நிர்வாகம் முதன்முறையாக அறிமுகம் செய்வதற்கு பெரியாரின் இடைவிடாத போராட்டங்களும் உறுதுணையாகின. பட்டதாரிகளும், ஆசிரியர்களும், வக்கீல்களும், அரசு உத்தியோகஸ்தர்களும் முதன் முறையாக பிரமணரல்லாதோரிடமிருந்து உருவாகும் வரலாறு உருவாகியது.
அதேபோல தேவதாசி ஒழிப்புச் சட்ட முன் வரைபு ஒப்புதல் பெறுவதில் பல்வேறு விதமான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் குழப்பங்களையும் தாண்டி இந்தியாவில் முதல்தடவையாக 1930 ஆம் ஆண்டு நீதிகட்சியின் ஆட்சியில் முத்துலட்சுமி ரெட்டி வெற்றியடைவதற்கு பெரியாரது அயராத எழுத்துக்களும் ஆலோசனைகளும் பக்கபலமுமே காரணமாய் அமைந்தன.
சுயமரியாதை இயக்கமானது சாதிமுறைமையை காப்பாற்றுகின்ற கடவுளை நோக்கி கேள்வியெழுப்பினாலும் இறை நம்பிக்கையாளர்களை எதிர்க்கவோ எதிரியாக நோக்கவோ இல்லை. நாத்தீகர்களை மட்டும் தம்மோடு இணைத்துக்கொள்ளவில்லை. காரணம் கடவுளை ஒழிப்பதை விட சாதியை ஒழிப்பதே அவரது இலட்சியம் என்றுணர்ந்து செயலாற்றியது அவ்வியக்கம். தமிழர்களின் முன்னேற்றத்துக்கும் பொருளாதாரா மேம்பாட்டுக்கும் சாதியை ஒழிப்பதே முன்நிபந்தனை என்கிறார். தாம் கடவுளை எதிர்ப்பதற்கான காரணங்களை தெளிவாக மக்களுக்கு புரியவைத்தார்.
அதனால்தான் அவரது இயக்கம், மாநாடுகள், கொள்கை விளக்க கூட்டங்கள் அனைத்திலும் இறை நம்பிக்கை மிக்கவர்களும் தாராளமாக கலந்துகொண்டு ஆதரவளித்தனர். பலரும் அவருடைய நேர்மையையும் சாதியொழிப்பு என்கின்ற இறுதி இலக்கையும் புரிந்துகொண்டிருந்தனர். குன்றக்குடி அடிகளார் போன்ற பல ஆன்மீக, சைவ மத தலைவர்கள் கூட அவருடைய செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து பல்வேறு கட்டங்களில் பெரியாருடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
அதனால்தான் இன்றுவரை கடவுள் சிலைகளுக்கு அடுத்ததாக பெருமளவில் பெரியார் சிலைகளே தமிழ்நாடெங்கும் இருக்கின்றன. கடவுளை எதிர்த்த பெரியாரை கடவுளை நம்புகின்ற கோடிக்கணக்கான மக்கள் கடவுளுக்கு அடுத்ததாக இன்றுவரை கொண்டாடியும் வருகின்றார்கள்.