ஒளிப்பதிவாளர் நிவாஸ் மற்றும் The Loyal Man

ஒளிப்பதிவாளர் நிவாஸ் மற்றும் The Loyal Man

—  ஆரதி — 

இந்த வாரம் இரண்டு விசயங்கள். ஒன்று, ஒளிப்பதிவாளர் நிவாஸின் மரணம். இரண்டாவது The Loyal Man (விசுவாசமான மனிதன்) என்ற குறும்படம். 

ஒளிப்பதிவாளர் நிவாஸ்: 

நிவாஸ், 1970 களின் நடுப்பகுதியில் பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்தின் ஒளிப்பதிவு மூலம் தமிழ்சினிமா காட்சியியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கிவைத்தவர். அந்தப்படத்தின் மூலம் தன்னையும் தமிழ்ச்சினிமாவின் காட்சி அழகியலையும் புதிதாகக் காண்பித்தார் நிவாஸ். இப்பொழுது இந்தக் குறிப்பை மதிப்போடு எழுதுவதற்கும் இவையே காரணம். இதனால் நிவாஸ், சினிமாவின் காட்சி மொழியில் – ஒளிப்பதிவில் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பேசப்படுகின்றவராக இருக்கிறார்.  

“35mm ல் பெஸ்ட் கம்போசிஷன். அந்தப் படம் தான் வெற்று நிலத்தை இப்படியும் அழகுற காண்பிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியது. காரை வீட்டுக்கும் கட்டாந்தரைக்கும் எண்ணெய் வழியும்  தலைக்கும் வெற்று கருப்பு உடம்புக்கும் காமரா வழி உயிர்கொடுத்தார் நிவாஸ்” என்கிறார் திரைக்கதையாளர் அஜயன் பாலா. 

நிவாஸ் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள நடுக்காடு என்ற பேரூரில் பிறந்தவர். இயற்பெயர் சீனிவாசன். ஆனால், சினிமாவுக்காக நிவாஸ் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.  தொடக்கத்தில் சில மலையாளப்படங்களிலேயே வேலை செய்தார். ஆனாலும் 1976 இல் வெளியான “மோகினியாட்டம்” என்ற மலையாளப்படம் நிவாஸூக்குத் தேசிய விருதை சிறந்த ஒளிப்பதிவுக்காகப் பெற்றுக் கொடுத்தது. இதுவே பாரதிராஜாவுக்கு நிவாஸை அறிமுகமாக்கியது. அப்பொழுது நிவாஸ், சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் படித்துத் தேறியிருந்தார். 

16 வயதினிலேயே தொடர்ந்து “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற பாரதிராஜாவின் ஏனைய படங்களுக்கும் நிவாஸே ஒளிப்பதிவாளராகச் செயற்பட்டார். இதில் சிகப்பு ரோஜாக்களின் ஒளிப்பதிவு இன்றும் பலருக்கும் வியப்பூட்டும் ஒன்று. அந்தளவுக்கு அப்போதே ஹொலிவூட் படங்களுக்கு நிகராக அல்லது அவற்றுக்கு மறு கோணமாக ஒளிப்பதிவைச் செய்திருந்தார். தொடர்ந்து ஸ்ரீதரின் “இளமை ஊஞ்சலாடுகிறது”, கே. விஸ்வநாத்தின் சலங்கை ஒலியின் தெலுங்கு வடிவமான “சாகர சங்கமம்” உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவைச் செய்த பிறகு, தானே சில படங்களை நெறியாளராகி இயக்கினார். அதில் முக்கியமானது, “கல்லுக்குள் ஈரம்”. இடையில் மலையாளம், ஹிந்தி திரைப்படங்களிலும் நிவாஸ் ஒளிப்பதிவாளராக இயங்கியிருக்கிறார். 

தமிழ்ச்சினிமாவில் வின்ஸன்ட், அசோக்குமார், பாலுமகேந்திரா என்ற வரிசையில் முக்கியமான இன்னொருவர் நிவாஸ். நிவாஸையும் இழந்து நிற்கிறது தமிழ் – மலையாளச் சினிமா உலகம். நிவாஸூக்கு அஞ்சலிகள்.  

The Loyal Man (விசுவாசமான மனிதன்) 

இது குறும்படங்களின் யுகம் என்றே சொல்ல வேண்டும் போலுள்ளது. அந்தளவுக்கு ஏராளம் குறும்படங்கள் தினமும் புதிது புதிதாக வந்து கொண்டேயிருக்கின்றன. பலதும் வியப்பை ஊட்டுவன. கலையின் சிறப்பே வியப்பூட்டலில்தான் உள்ளது. இது பெரிய படங்களின் கதையை முடிவுக்குக் கொண்டு வந்து விடுமோ என்ற அஞ்சும் அளவுக்கு உள்ளது. கதை, அதை வெளிப்படுத்தும் முறை, நடிகர்கள், நடிப்பு, புதிய களங்கள், கமெராக் கையாள்கை, காட்சிகளின் தன்மை, பிற தொழில்நுட்பங்களின் சிறப்பு எனக் குறும்படங்கள் இன்று புதிய பரிமாணத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான குணவியல்புகளோடுதான் The Loyal Man (விசுவாசமான மனிதன்) என்ற படமும் வந்துள்ளது. 

பிரான்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் புலம் பெயர் தமிழ் வாழ்வின் இன்னொரு பக்கமான நிழல் உலகக் கதையைச் சொல்கிறது. பாரிஸ் நகரத்தில் தெரிந்தும் தெரியாமலும் செயற்படும் தமிழ் மாஃபியா உலகத்தின் ஒரு குறுக்கு வெட்டுமுகம் என்று இதைச் சொல்லலாம். புலம் பெயர் சூழலில் இன்றைய தமிழ் அடையாளமும் அதன் தன்மைகளும் எப்படியுள்ளன என்பதைப் புறச் சூழல் காட்சிகள் புலப்படுத்துகின்றன. அங்கங்கே ஒட்டப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகளும் படங்களும் பின்னணியாகப் பல சேதிகளைச் சொல்கின்றன. கூடவே பிற காட்சிகளில் மேவியொலிக்கும் தமிழ் சினிமாப் பாடல்கள் உண்டாக்கும் கேளிக்கை மனநிலையும். இதேவேளை போராட்டம், அதன் பிரதிபலிப்பாக இவை தமிழ்ப் பரப்பில் உண்டாக்கும் (புனித) அரசியல் அடையாளத்திற்கும் அப்பால் தமிழ்ச் சமூகத்தின் அக நிலைகள், அதன் வெளிப்பாடு என்பவை இந்தப் படத்தில் பேசப்படுகின்றன.  

மாஃபியா (ஷோபாசக்தி) ஒருவருக்கு ஆதி என்றொரு இளைஞர் விசுவாசியாக இருக்கிறார். விசுவாசி என்றால் கேள்விக்கு அப்பாலானவர் என்றே அர்த்தமாகும். ஆகவே அவர் தன்னுடைய தலைவரை (மாஃபியாவை)க் குறித்து எந்தக் கேள்விகளையும் ஆதி எழுப்புவதில்லை. எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஒரு வீரன். விசுவாசத்தின் நெறியாளனாகவே இருக்கிறார். 

ஆனால், வாழ்க்கை எப்போதும் நேர் கோட்டில் நாம் நினைத்தது போலச் செல்வதில்லை அல்லவா! அது ஆதியைச் சோதனைக்குள்ளாக்குகிறது. ஆதி தன்னுடைய தலைவனைச் சோதனைக்குள்ளாக்குகிறான். இதற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளும் பிரச்சினைகளுமே படம் நமக்குத் தரும் சேதியும் அனுபவமும். 

புலம்பெயர்ந்து செல்வோர் புதிய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மிகச் சவலானவை. அதிலும் பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் என்பது இதில் இன்னும் அழுத்தம் கூடியவை. அப்படித்தான் இதில் வரும் பெண்ணும் மிக வறிய குடும்பச் சூழலில், இலங்கையிலிருந்து பாரிஸூக்குச் சென்றிருக்கிறார். (அவடைய துயரம் தோய்ந்த முகம் மிக அழுத்தமானது) தன்னுடைய துயரத்தை ஒரு பாரச் சிலுவையைப் போலவே அவர் அங்கும் கொண்டு திரிகிறார். ஏதோ நிமித்தமாக அங்கே இந்த மாஃபியாவின் கைகளில் அவர் போய்ச் சேருகிறார். ஆனால், அவருக்கு இதெல்லாம் புரியவில்லை. தன்னுடைய சூழலை அவளால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி விளங்கிக் கொண்டாலும் உடனடியாக அதிலிருந்து அவளால் உடனடியாக விடுபட்டு விட முடியாது. வாழ்க்கையின் பின்னல்கள் எப்போதும் அப்படியானவைதானே! 

ஆனாலும் ஒரு கட்டத்தில் அவள் மிக அபாய நிலையைச் சந்திக்கிறாள். ஆனால், அந்த மாஃபியாக்களுக்கு இதொன்றும் புதியதல்ல. அவர்கள் தங்கள் வழமையைப் போல அதை எதிர்கொள்ள முற்படுகிறார்கள். இங்கேதான் பிரச்சினை நிகழ்கிறது. விசுவாசிகள் எப்போதும் எதற்கும் விசுவாசமாக இருப்பதில்லை. அவர்கள் மந்தையை விட்டு விலகும் ஆடுகளைப் போலாகும்போது சிக்கல்கள், பிரச்சினைகள் வேறு வடிவமாகின்றன. இங்கே ஆதி வேறு வடிவம் கொள்கிறான்.   

ஏறக்குறைய அரை மணிநேரப் படம்தான். ஆனால் ஒரு முழு நீளப்படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது. எழுத்தாளர் ஷோபாசக்தி உள்பட பத்துப் பேருக்குள் நடித்துள்ளனர். LAWRENCE VALIN படத்தை எழுதி இயக்கியுள்ளார். நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் The Loyal Man (விசுவாசமான மனிதன்) நாம் கவனிக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டிய ஓருலகத்தைத் திறந்து காண்பிக்கிறது. நமக்குள் ஒரு எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது.