— வி. சிவலிங்கம் —
அன்பார்ந்த வாசகர்களே !
இத்தொடர் கட்டுரையின் ஆரம்பம் என்பது தற்போது வரையப்படவுள்ள புதிய அரசியல் யாப்புத் தொடர்பான விவாதங்களை நோக்கியதாகவே எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் மிக ஆதிக்கம் செலுத்தி வரும் சிங்கள பௌத்த பெருந்தேசிய இனமையவாதம் என்பது இன்றைய அரசியல் போக்கில் அதிகளவு தனது ஆதிக்கத்தை அடையாளப்படுத்தி வருகிறது. ஒரு புறத்தில் ஜனநாயக ஆட்சிக்கு அடையாளமாகக் கருதப்படும் பாராளுமன்றம், கட்சி பிரதிநிதித்துவ அரசியல், பாராளுமன்றமே அதி உச்ச அதிகார மையம் என்ற ஜனநாயக ஆட்சிக் கட்டுமான விளக்கங்கள் படிப்படியாக இன்றைய அரசியல் விவாதங்களில் மறைந்து வருகின்றன. மறு புறத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறை அதுவும் ஏகபோக அதிகாரங்களைக் கொண்ட சர்வாதிகாரியின் அதிகாரங்களுக்கு ஒத்ததான ஆட்சிமுறை மிக விரைவாகவே ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையிலிருந்து விலகி தனிமனித சர்வாதிகார ஆட்சிமுறையை நோக்கியதாக அல்லது தேர்தல்முறை மூலமான சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கை அரசியல் மாறிச் செல்கிறது. இவ்வாறாக ஆட்சிமுறை மாறிச் செல்கையில் இம் மாற்றங்கள் மக்கள் மத்தியிலும் ஏற்புடைத்தான மாற்றங்களாக எடுத்துச் செல்வது ஆட்சியாளருக்குத் தேவையாக உள்ளது. எனவே இம் மாற்றங்களுக்கான விளக்கங்கள் அல்லது கருத்தியல் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ‘ தேசிய சிந்தனை’ என்ற கருத்தோட்டங்களிலிருந்தே அவை பெறப்படுகின்றன எனவும், அவற்றின் பிதாமகர்களாக குணதாஸ அமரசேகர, நளீன் டி சில்வா என்போர் பிரசித்தி பெற்றவர்களாக உள்ளதாகவும் பார்த்தோம்.
அத்துடன் இத்தேசிய சிந்தனை என்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தினை முன்னிலைப்படுத்துவதாகவும், இவ்வாறான சிந்தனைக்கான வரலாற்று ஆரம்பம் துட்டகைமுனுவின் ஆட்சிக் காலத்திலிருந்து ஆரம்பமாவதாகவும் காணப்படுவதால் இவ்விவாதம் மேலும் சில வரலாற்று ஆய்வுகளுக்குள் செல்ல வேண்டும் என்பதால் விவாதம் அரசியல் யாப்பு விவாதங்களுக்கு அப்பால் செல்வது தவிர்க்க முடியாதது எனத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இக் கட்டுரைகளின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இன்றைய ஆட்சியாளர்கள் ஓர் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் இன்றைய ஆட்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இப் பயணத்தின் இலக்குகளும், அந்த இலக்குகளை அடைவதற்கான கோட்பாட்டு விளக்கங்களும் தெளிவாக புரிந்தால் மட்டுமே மாற்று ஏற்பாட்டினை அல்லது மாற்று அரசியலைத் தோற்றுவிக்க முடியும். குறிப்பாக தமிழ் அரசியல் மிகவும் வீரியமிழந்து வெறுமனே பாராளுமன்ற ஆசனங்களின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற நப்பாசையுடன் அவ்வப்போது எழும் பிரச்சனைகளுக்கு எதிர்வினைகளை ஆற்றுவதன் மூலம் மாற்றங்களைக் காணலாம் என்ற வகையில் தமிழ் – குறும் தேசியவாதத்தினை முன்னிலைப்படுத்திச் செல்வதால் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் அரசியல் ஓர் தோல்வியுற்ற அரசியல்பாதை என்ற வரலாற்றிற்குள் தள்ளப்படலாம். இவ்வாறான போக்கைத் தடுத்து மீண்டும் ஓர் வீரியமிக்க அரசியலைத் தேர்ந்தெடுப்பதாயின் இன்றைய அரசியலைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அதன் அடிப்படையிலேயே இக் கட்டுரை தொடர்கிறது.
துட்டகெமுனு – எல்லாளன்
கடந்த கட்டுரையில் இலங்கையின் சிங்கள – பௌத்த அரசுக் கட்டுமானம் என்பது துட்டகெமுனுவின் காலத்திலிருந்து ஆரம்பமாவதாகப் பார்த்தோம். குறிப்பாக எல்லாளனுக்கும், துட்டகெமுனுவிற்கும் இடையில் நடைபெற்ற போர் என்பது பிளவுபட்டிருந்த இலங்கையை இணைக்கும் போராகவே வியாக்கியானப்படுத்தப்படுகிறது. இவ் வரலாற்றினை இணைத்தே கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரும் அதன் வெற்றியில் இன்றைய ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸவின் பங்கையும் கூறி அவர் துட்டகெமுனுவின் சமாதியில் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டது துட்டகைமுனு போல கெமுனு படைப் பிரிவின் முன்னாள் தளபதியும், இன்றைய ஜனாதிபதியுமான தாமும் நாட்டைப் பிரிக்க இனி இடமளிக்க மாட்டோம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அவ்வாறான அடையாளப்படுத்தல் இடம்பெற்றதாகப் பார்த்தோம்.
ஆனாலும் ஐரோப்பியர்களின் வருகையும்,அவர்களது ஆட்சிக் காலமும் இந்த அரசர் காலத்து சிறப்புமிக்க ஆட்சியின் தொடர்ச்சியில் அதாவது ஏனைய இனங்களுடன் அமைதியாக செயற்பட்ட ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இடைக்கால தடையாகவே வர்ணிக்கின்றனர். மேற்குலக குடியேற்ற ஆதிக்க சக்திகளின் காலம் இந்த அமைதிக் காலத்தைக் குலைத்துச் சென்றதாகவும், இருப்பினும் எதிர் காலத்தில் கடந்த வரலாற்றுக் காலங்களில் சகல இனங்களும் அமைதியாக வாழ்ந்தது போல இனியும் வாழ முடியும் என்பதையே உணர்த்துகின்றனர். இதனடிப்படையில்தான் மேற்குலக கருத்துக்களை, விஞ்ஞான முடிவுகளை எதிர்க்கும் அதேவேளை தம்மால் மேற்குலகத்தை விஞ்சிய வகையில் உண்மையான சுதந்திரத்தையும்,அறிவையும் வழங்க முடியும் எனக் கூறுகின்றனர். இப் பின்னணியில் சிங்கள பௌத்த அரசின் அமைப்பு வடிவம் குறித்து தரும் விளக்கங்களை நாம் அவதானிக்கலாம்.
கடவுளால் தமக்களிக்கப்பட்ட மண் என்ற சித்தாந்தம்
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல சிங்கள மக்களே இலங்கையின் முதற் குடிகள் எனவும், அவர்களே கௌதம புத்தரின் போதனைகளைப் பாதுகாத்துப் பின்பற்றினார்கள் எனவும், இவ்வாறான சமாந்தரமான வரலாறு உலகின் எப்பகுதியிலும் இல்லை என்றவாறு விபரிக்கப்படுகிறது. இவை கிட்டத்தட்ட இஸ்ரேல் நாட்டில் வாழும் யூதர்களும் தாம் ஆக்கிரமித்துள்ள இடங்களைக் கடவுள் தமக்களித்த இடமாக, விவிலிய நூல்களில் அவை காணப்படுவதாகவும் கூறியே தமது ஆக்கிரமிப்புகளுக்கு விளக்கம் அளிப்பது போல, தாமே புத்தரின் போதனைகளைப் பாதுகாத்த மக்கள் என வாதிடுகின்றனர். இதுவே எவ்வாறு இஸ்ரேல் என்பது அந்த நாட்டில் பெருந்தொகையான அராபியர்கள் வாழ்ந்த போதிலும் அது யூதர்களின் நாடு எனக் கூறி அராபியர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவது போலவே இந்த வாதங்களும் செல்வதை நாம் காணலாம்.
அரசுக் கட்டுமானம் தொடர்பாக தெரிவிக்கையில் அரசர், பிக்குகள், மக்கள் என்ற மூன்று அம்சங்களே அதனைத் தாங்குவதாகவும் அவ்வாறான வகையில்தான் கடந்த 2000ஆண்டுகளுக்கு மேலாக தேசத்தின் நிர்வாகம் தொடர்வதாகவும் கூறும் அவர்கள், குடியேற்ற ஆட்சிக் காலத்தில் சிறிது காலம் குலைக்கப்பட்டாலும் நாடு எப்போதுமே ஒற்றை ஆட்சியாகவே செயற்பட்டதாக நிறுவ முயற்சிக்கின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டது போலவே ஒற்றை ஆட்சியாகத் தொடர்ந்து செல்லும் இலங்கையில் பௌத்த தர்மத்தின் அடிப்படையிலான மனிதநேய, சமத்துவ சமூகத்தைக் கட்ட முடியும் என எண்ணுகின்றனர். அது மட்டுமல்ல அவ்வாறான தார்மீக சமூகத்தை முதலாளித்துவத்தினால் அல்லது மார்க்ஸிஸத்தினால் உருவாக்க முடியாது என்கின்றனர்.
பல்வேறு மதங்கள் பின்பற்றப்படும் பன்மைத்துவ சமூகம் என்பதை நிராகரிக்கும் இவர்கள் சிங்கள பௌத்த அரசு என்பது பௌத்தத்தையும், அதன் கலாச்சாரத்தையும், சிங்கள மொழியையும் பாதுகாப்பதே அதன் கடமை என்கின்றனர். இவ்வாறான விளக்கங்களில் சில அடிப்படைகளை நாம் கூர்ந்து நோக்குவது அவசியமானது.
அதாவது இலங்கையின் ஆட்சிக் கட்டுமானத்தில் சிங்கள பௌத்தர் அல்லாத ஒருவர் ஆட்சியில் அமர முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. நாம் இன்றுள்ள இனவாத நிலமைகளை ஒரு கணம் மறந்து இவ் விவாதங்களினூடாக நாம் அறியும் சில உண்மைகளைப் பார்க்கலாம். சிங்கள பௌத்த அரசின் கடமைகளை வரையறுக்கும்போது யார் உயர் பதவியில் இருப்பது அவசியம்?என்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை. பதிலாக சிங்கள பௌத்த அரசு என்பது சிங்கள மொழியையும், பௌத்தத்தையும் பாதுகாத்தல் அதன் பிரதான கடமை என்கிறது. அந்நிய ஆதிக்கத்திலிருந்து அல்லது தலையீட்டிலிருந்து மொழியையும். மதத்தையும் காப்பது சிங்களவர்களது கடமை என உணர்த்துகிறதே தவிர அதன் தலைமை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
சிங்கள பௌத்ததுக்கு ஆபத்து?
இவ்வாறான ஒரு நிலைப்பாடு எவ்வாறு எழுந்தது? என்பதை நாம் வரலாற்று அடிப்படையில் நோக்குதல் அவசியம். அதாவது இலங்கைமேல் பல அந்நியர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களில் பல அரசர்கள் வெவ்வேறு மதத்தவர்களாகும். இருப்பினும் அந்த அரசர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளனர். இதனடிப்படையில் அவதானிக்கும்போது இலங்கை என்பது பன்மைத்துவ அடிப்படையிலான பல்வேறு மதங்களும், பல கலாச்சாரங்களும் செழித்து வளர்ந்த தேசம் என்பதை வரலாறு உணர்த்துகிறது. இதனை மறுத்துரைப்பதே இன்றைய பெருந்தேசிய இனமையவாதமாகும். அதாவது சிங்கள – பௌத்தத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஒருவகைப் பயப் பீதியே சிங்கள மக்களை ஒன்றிணைக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதமாக உள்ளது.
இதுவரை சிங்கள பௌத்தத்திற்குப் பாதுகாப்பு அவசியம் எனப் பேசிவரும் தேசிய சிந்தனையாளர்கள் அதன் பாதுகாப்பைக் கோருவது நியாயமானதாக இருப்பினும், இலங்கைத் தேசம் என்பது பல்லின மக்களும்,பல்வேறு மதங்களும் பின்பற்றப்படும் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதே பிரச்சனைக்குரிய அம்சமாகும். நாட்டில் மாற்று இனங்களான தமிழர்கள்,முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதை அங்கீகரிக்க மறுப்பதே ஏனைய இனங்கள் சிங்கள பௌத்த கோட்பாடுகளில் கொண்டிருக்கும் சந்தேகமாகும். இவ்வாறு அம் மக்கள் வாழ்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பது மட்டுமல்ல, அம் மக்களை இனவாதிகள் என இச் சிந்தனையாளர்கள் பட்டம் சூட்டுவது அதைவிட மோசமான செயலாகும்.
சிங்கள – பௌத்த அரசின் அரசியல் தலைமை
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல அரசுக் கட்டுமானம் இளவரசர் அசோக சக்ரவர்த்தியின் காலம் போலவே அரசர்,மகா சங்கம் அல்லது பிக்குகள், மக்கள் என்ற மூன்று தூண்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இவை பற்றிய விளக்கங்களைத் தரும்போது வாசகர்கள் இன்றைய மாற்றங்களையும் ஒப்பீடு செய்ய முடியும். கடந்த கட்டுரையின் இறுதிப் பகுதி இன்றைய ஜனாதிபதி என்பவர் அசோக கால வரலாற்றின் இருப்பிடமான அரசரின் அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவாரா? என்ற வினாவுடன் முடிக்கப்பட்டிருந்தது.
நினைவூட்டப்படும் வரலாற்று அரசியல்
இங்கிருந்து நாம் தொடரும்போது கடந்தகால வரலாற்றுச் சம்பவங்கள் பல இன்றைய அரசியல்வாதிகளால் அடிக்கடி நினைவூட்டப்படுவதை நாம் காணலாம்.
சிங்கள பௌத்த ஆட்சித் தலைவரின் கடமை என்பது மக்களைப் பாதுகாப்பது,நாளாந்த வாழ்வு பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்வது, மக்கள் மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் உள்ளதை உறுதி செய்வது என்பதாகும். இவற்றை மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான உற்பத்திப் பொருட்களை வழங்குவது, மக்களின் ஆத்ம உள வளர்ச்சிக்கான ஏதுக்களை வழங்குவது போன்றனவாகும்.
அதே போலவே பௌத்த மகா சங்கமும் அரசருக்கு ஆலோசனை வழங்குவதாகவும், தேவைப்படும்போது பாதுகாவலனாகவும், அரச அதிகாரம் மக்களுக்கு விரோதமாகச் செல்லாமல் தடுப்பதாகவும் செயற்படும்.
இவ்வாறு செயற்பட்ட அரசர்களையும் முன்மாதிரியாக அடையாளம் காட்டியுள்ளனர். உதாரணமாக, தேவநம்பிய தீசன், துட்ட கைமுனு, மகா பராக்கிரமபாகு போன்றவர்களாகும். இவர்களில் பலர் வேறு மதங்களை ஆரம்பத்தில் பின்பற்றியவர்களாக இருந்த போதிலும் அவர்கள் பெரும்பான்மை மதத்தவரான பௌத்தர்களையும், பௌத்த மதத்தையும், நாட்டின் எல்லைகளையும் பாதுகாத்தவர்கள் என அடையாளம் காட்டப்படுகிறது.
இப் பிரச்சனை தொடர்பாக சமீபகால வரலாறு ஒன்றினைத் தருவது பொருத்தமாக அமையும். அதாவது பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களையும், பௌத்த மதத்தையும், நாட்டின் இறைமையையும் பாதுகாக்கும் ஒருவரையே நாட்டின் தலைவராக மக்கள் ஏற்கிறார்களே தவிர அவர் எவர்? என்பது ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை எனக் கூறும் இந்த வரலாறு கடந்த சந்திரிகா பண்டாரநாயக்கா இன் ஆட்சிக் காலத்தில் நாட்டின் வெளிநாட்டமைச்சராக தமிழரான லக்ஸ்மன் கதிர்காமர் செயற்பட்டார். அவர் விடுதலைப்புலிகளைச் சர்வதேச அடிப்படையில் தடை செய்யுமாறு ஐ நா விலும், பல முக்கிய நாடுகளிலும் செயற்பட்டிருந்தார். அவ்வாறாக நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கும், பௌத்த மதத்திற்கும், தேசத்தின் பாதுகாப்பிற்கும் பாரிய அளவில் உழைத்தார் என சிங்கள அரசியல்வாதிகள் பலர் போற்றியிருந்தனர். இப் பின்னணியில் அவரை நாட்டின் பிரதமராக நியமிக்க சந்திரிகா முயற்சித்த வேளையில் அவரின் நியமனத்தை சிங்கள தேசியவாத சக்திகளான ஜே வி பி இனர் ஆதரித்திருந்தனர்.
அவ்வாறான ஒரு வாய்ப்பு இன்னமும் இலங்கையில் காணப்படுகிறதா? என்பதை வாசகர்கள் தீர்மானிக்கலாம்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு,சிங்கள – பௌத்த ஆட்சி என்பன 1815ம் ஆண்டு பிரித்தானியரின் வருகையால் அதுவும் கண்டி அரசு இறுதியாகக் கைப்பற்றப்பட்ட போது அதற்கு எதிராக யாரும் போராடவில்லை. ஆனாலும் இந்திய அரசர்களே நாட்டின் பாதுகாப்பையும். பௌத்த மதத்தையும் பாதுகாத்தார்கள் எனக் கூறி அதனை உறுதி செய்கின்றனர்.
இலங்கையின் கண்டி ராஜ்ய வரலாற்றில் இந்தியாவின் நாயக்க அரசர்களே இன்னமும் நினைவூட்டப்படுகின்றனர். உதாரணமாக விஜய ராஜ சிங்கன் என்ற நாயக்க அரசரைத் தமது அரசர் என இன்னமும் உரிமை பாராட்டுகின்றனர். இதனை உதாரணமாகக் காட்டியே தமிழர் ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியும் என வாதிக்கின்றனர்.
ஆனாலும் அரசர்களின் வரலாறு கண்டி அரசின் வீழ்ச்சியோடு முடிவடைந்தது. இலங்கையில் நாயக்க அரச வம்சத்தினரின் ஆட்சியின் வரிசையில் காணப்பட்ட பிரதான அரசர்களின் வரிசை பின்வருமாறு
விஜய ராஜ சிங்கன் – 1739 – 1747
கீர்த்தி சிறீ ராஜ சிங்கன் – 1747 – 1782
ராஜாதி ராஜ சிங்கன் – 1782 – 1798
சிறீ விக்ரம ராஜ சிங்கன் – 1798 – 1815
இறுதிக் கண்டி அரசனாகிய சிறீ விக்ரம ராஜசிங்கனின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிங்கள பௌத்தத்தையும், பெரும்பான்மைச் சிங்களவர்களையும் பாதுகாக்கும் விதத்தில் 1815 இன் பின்னர் யாரும் உருவாகவில்லை. 1848ம் ஆண்டில் சில எதிர்ப்புகளை புரன் அப்பு, கொங்கலியகொட பண்டா என்பவர்களால் நடத்தப்பட்ட போதிலும் அவற்றை பிரித்தானியர்கள் ஒடுக்கினர். பிரித்தானியர் மிகவும் திட்டமிட்டு அவ்வாறான சிங்கள பௌத்த தலைவர்கள் உருவாவதைத் தடுத்தார்கள் என நளீன் டி சில்வா பின்வருமாறு கூறுகிறார்.
‘…… 1848ம் ஆண்டின் பின்னர் சிங்களவர்களுக்கு ஓர் சரியான தலைமை இல்லை என்பது துரதிர்ஸ்டமானது. ஒரு குறுகிய காலத்தை தவிர அதாவது அநகாரிக தர்மபால பிரித்தானியர்களாலும், மற்றும் அவர்களால் நியமிக்கப்பட்டவர்களாலும் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
1817 -1818 ஆண்டு காலத்தில் சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் போது பிரித்தானியர்கள் சிங்களத் தலைவர்களைக் கொடுரமாக படுகொலை செய்ததோடு பதிலாக தமது முகவர்களை சிங்களவர்களுக்குத் தலைவர்களாக நியமித்தார்கள். இதனை ஏற்றுக் கொள்ளாத சாதாரண மக்களான புரன் அப்பு, கொங்கலகொட பண்டா போன்றவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் தலைவர்களாக அடையாளப்படுத்தப்படாதவர்கள் இந்த 1848 இல் நடைபெற்ற இரண்டாவது சுதந்திரத்திற்காக போராடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அக் காலப் பகுதியிலிருந்து ஆரம்பமாகிய ஆங்கில மயமாக்கப்பட்ட கலாச்சாரம் மற்றும் மத ரீதியாகவும், நிலத்தோடும் பிணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு பிரிவினரிடம் அவை சென்றன. அவர்களே பதவி மற்றும் சலுகைகள் பெற்றவர்களாக, சிங்களவர்களின் தலைவர்களாக பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டார்கள்…’
இவ்வாறாக கண்டி ராஜதானியின் தோல்வியும், பிரித்தானியர்களின் வருகையும் அதனைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டவர்களே சிங்கள மக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள் என வர்ணிக்கப்படும் வரலாறு ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சிகளின் வரலாற்றின் போக்கை உணர்த்தப் போதுமானவை.
இங்கிருந்தே நாம் இன்றைய அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் கருத்தியலை நோக்க வேண்டும். இதில் சிங்கள பௌத்த தேசியவாத ஈர்ப்பிற்குள் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் எவ்வாறு சிக்குண்டன? என்பதனையும், ஒரு புறத்தில் மேற்குலக லிபரல் அரசியல்,பொருளாதாரக் கோட்பாடுகளையும், மறு புறத்தில் சிங்கள பௌத்த தேசியவாதத்தையும் வெவ்வேறு பரிமாணத்தில் எடுத்துச் சென்ற பிரதான கட்சிகளான ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன தற்போது மக்களின் ஆதரவை இழந்து அநாதரவாக நிற்பதன் காரணமென்ன? இந்த இரு பிரதான கட்சிகளும் எடுத்துச் சென்ற இனவாதம் தற்போது பல்வேறு சிறு சிறு கட்சிகளிடம் சென்றடைந்த நிலையில் தேசிய நல்லிணக்கத்தையோ அல்லது தேசிய பொருளாதார அபிவிருத்தியையோ அடைய முடியவில்லையே ஏன்? கட்சி அரசியல் தோல்வியை அடைந்துள்ளதா?
(தொடரும்.)