— ஆரதி —
எல்லோரும் “வெளியே புரட்சித் தலைவர். வீட்டில் நடிகர் திலகம்” என்று இசையின் கவிதை ஒன்றில் ஒரு அடிவரும். கணவர்களின் – ஆண்களின் இரட்டை உலகத்தை இதை விடச் சிறப்பாக, பகடியாக வேறு எப்படிச் சொல்ல முடியும்? ஏறக்குறைய அப்படித்தான் The Great Indian Kitchen படத்தைப் பார்த்தபோதும் தோன்றியது.
இது ஒரு மலையாள மொழித் திரைப்படம். ஆனால், அச்சு அசலாக நம்முடைய கதையாக, நம் நிலையாக அப்படியே நமக்குப் பொருந்தியுள்ளது. சிறந்த எந்தக் கலை வெளிப்பாட்டுக்கும் இந்தப் பண்பிருக்கும். சினிமாவில் இது இன்னும் நெருக்கமாக இருப்பதுண்டு. அந்த நெருக்கத்தை The Great Indian Kitchen என்ற இந்தப் படமும் தருகிறது.
திருமணமாகி மணமகன் வீட்டுக்கு வரும் பெண், அந்தக் குடும்பத்துக்கு ஏற்ற மாதிரித் தன்னை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தமே கதை. இதில் அந்தப் பெண் வெறும் பொம்மையாக்கப்படுகிறாள். ஆனால், அதற்கு அவளால் முடியாமலுள்ளது. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இதில் அதிக சிக்கல்களில்லை. நிலைமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தம்மைச் சுதாகரித்துக் கொள்வதே பெரும்பாலான பெண்களுடைய வழக்கமாகவும் வாழ்க்கையாகவுமிருந்தது.
ஆனால், இன்றைய பெண்கள் அதற்குத் தயாரில்லை. கல்வியும் சமூக வளர்ச்சியும் பெண்களின் சுயாதீனத்தைக் குறித்து சிந்திக்கவும் எழுச்சியடையவும் வைத்துள்ளன. இந்த வளர்ச்சியினால் உண்டாகும் முரணே The Great Indian Kitchen.
வெளியே புரட்சி, மாற்றம், முன்னேற்றம் பற்றியெல்லாம் கதைக்கும் அல்லது இவற்றுக்காக முயற்சிக்கும் ஆண்கள், வீட்டில் மாற்றங்கள் ஏதுமில்லாத பழமைக்குள் ஊறிக்கிடக்கிறார்கள். குடும்பப்பாரம்பரியம், வழமை, இதென்ன பெரிய விசயம். இதெல்லாம் இயல்புதானே! என்றவாறு இருக்கும் –இயங்கும் ஆண்களாக இருக்கிறார்கள். வீட்டுப் பணிகளைச்செய்வதும் குடும்பத்தைப் பராமரிப்பதும் ஆணின் –ஆண்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதுமே பெண்களுடைய கடமை. அதுதான் அவர்களுடைய பொறுப்பு. அவ்வாறு வாழ்வதே பெண் வாழ்க்கை என இவர்கள் நம்புகிறார்கள்.
அப்படி நம்புவதால்தான் அவர்கள் பத்திரிகை படிப்பார்கள். வாட்ஸப்பில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பர். அல்லது முகப்புத்தகத்தில் எதையாவது நோண்டிக் கொண்டோ மேய்ந்து கொண்டோ இருப்பார்கள். அல்லது யாராவது நண்பர்கள் வந்தால் சுவாரஷ்யமாக கதைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படியே வெளியே கிளம்பி எங்காவது சுற்றி விட்டுக் களைப்போடு வருவதாக தண்ணீரோ தேநீரோ கோப்பியோ கேட்பார்கள். இரவுகூட தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதும் அதிலே போகும் விவாதங்களைக் கேட்பதும் அவர்களுக்கு முக்கியமாக இருக்கும். ஆனால், பெண்கள் இதற்கெல்லாம் அப்பாலானவர்கள். அதிலும் மனைவி என்று வந்து விட்டால், தேநீர் ஊற்றிக் கொடுப்பதில் ஆரம்பித்து சமைப்பது (மூன்று வேளைக்கும்) துணி துவைப்பது, வீட்டைத் துப்பரவாக்குவது, பாத்திரங்களைக் கழுவுவது தொடக்கம் படுக்கை விரிப்பது வரையில் அத்தனையும் செய்ய வேண்டும். இதொன்றும் புதியதல்ல. ஏனென்றால் நம்முடைய பெரும்பாலான குடும்பங்களின் அடையாளமும் நிலையும் இதுதான். ஒவ்வொரு நாளும் வேளையோடு எழுந்திருப்பதும் பெண்தான். பிந்தித் தூக்கத்துக்குச் செல்வதும் பெண்தான். அதற்கிடையில் ஓய்வொழிச்சல் இல்லாமல் அத்தனை வேலைகளையும் அவர்கள் செய்து தீர வேணும்.
இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் அவர்களுக்கு இரட்டைச் சுமை. ஒன்று வெளியே உள்ள வேலை. சம்பாத்தியத்துக்கானது. வீட்டில் வீட்டு வேலைகள், பிள்ளைகளையும் கணவரையும் பராமரிப்பது எனத் தொடங்கி படுக்கையை விரித்துச் சரி செய்வது வரையில் ஏராளம் ஏராளம் வேலைகள். வீட்டுக்கு யாரோ ஒருத்தர் வந்தாலும் அவர்களை வரவேற்று ஒரு தேநீர் கொடுப்பதாக இருந்தாலும் அதைப் பெண்களே செய்ய வேண்டும். எழுதப்படாத விதியாக – ஒரு நியதிபோல நாம் இதை ஆக்கி வைத்திருக்கிறோம். மட்டுமல்ல, இதில் எந்த மாற்றமும் வந்து விடக் கூடாது என்று இதைத் தொடர்ந்து பராமரித்துக் கொண்டுமிருக்கிறோம். இதொன்றும் புதியதல்ல. ஏனென்றால் நம்முடைய பெரும்பாலான குடும்பங்களின் அடையாளமும் நிலையும் இதுதான்.
இதையெல்லாம் தினமும் எந்தக் குறையும் இல்லாமல் செய்த பிறகுதான் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான எதையும் செய்யலாம். இல்லையென்றால், உனக்கு என்னதான் தெரியும் என்று தொடங்கி ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகி விடும்.
குடும்பம் என்ற அமைப்புக்குள்ளே பெண்களுக்கான இடம் என்பது மிகக் குறுகலானதாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை ஆண்களும் உணர்ந்து கொள்வதில்லை. பெரும்பாலான பெண்களும் பழகிய, வழமையான ஒன்றாகவே குடும்பத்தின் நன்மைக்காக என்ற எண்ணத்தில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து விடுகிறார்கள். இதையே The Great Indian Kitchen கேள்விக்குள்ளாக்குகிறது.
இதற்கு நல்ல உதாரணம், “அம்மா என்ன செய்கிறா?” என்று பிள்ளைகளிடம் கேட்டால், “வீட்டில் சும்மா இருக்கிறா” எனச் சொல்வார்கள். ஆனால் வீட்டிலிருக்கும் அம்மா தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை கிலோ அரிசியைச் சோறாக்கியிருப்பா?எத்தனை லீற்றர் தண்ணீரைக் கொதிக்க வைத்திருப்பா? எத்தனை ஆயிரம் இடியப்பத்தை, தோசையை, றொட்டியை, இட்லியை ஆக்கிப் போட்டிருப்பா? எவ்வளவு துணியைத் துவைத்துப் போட்டிருப்பா? எவ்வளவு நிலத்தைக் கூட்டிப் பெருக்கியிருப்பா? இப்படி எத்தனை உழைப்பு? ஆனால் இதெல்லாம் கணக்கில் இல்லை.
இதைக்குறித்து எந்தப் பிரக்ஞையும் (உணர்தலும்) அவர்களுக்குள் நிகழ்வதில்லை.
பெண்கள் என்றாலே சமைத்து போடவும் துணி துவைக்கவும் அப்பறம் இரவில் ..வும் என்ற நிலையில் தான் ஆண்களின் பகுத்தறிவும் படிப்பறிவும் உள்ளது.
அநேகமான ஆண்கள் நினைப்பது திருமணம் செய்வதே மேலே குறிப்பிட்ட செயல்களை செய்யத்தான் பெண்கள் என்று. இது எழுதப்படாத விதிமுறையாக இருக்கிறது. அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்குச் செருப்படி கொடுத்துள்ளது இந்தப்படம்.
“மாவு முடிஞ்சு போச்சுது ..வாங்கி கொண்டு வாறீங்களா?” என்றால்,
“அரிசி உளுந்து ஊறப்போட்டு அரைச்சு வச்சால் ஒரு கிழமைக்குப் போதும்.
அதைச் செய்யத் தெரியாதா? எப்ப பார்த்தாலும் கடைக்குப் போய்த்தான் எதையும் செய்யோணுமா?” என்று பதில் வரும்.
“வெங்காயம் தக்காளி அப்படியே குழம்புக்கும் பொரியலுக்கும் எதாவது பார்த்துக் கொஞ்சம் காய் கறி வேணும்” என்றால்
“இரவுக்கு என்ன செய்ய வேணும், நாளைக்கு என்ன செய்ய வேணும் எண்டெல்லாம் யோசிச்சு வாங்கி வைக்க மாட்டியா? கடைசி நேரத்துல அது வேணும் இது வேணும் எண்டு ஒரே இம்சை…” என்ற பதிலடிதான் கிடைக்கும்.
“வீடு பூரா துணிமணி..மடிச்சு வெச்சாதான் என்ன?” என்ற திட்டு வேறு.
இதற்கு “ஒரு செட் தோய்ச்சுக் காயிறதுக்குள்ள அடுத்த செட் வந்து குவியுது.. இருக்கிற நாலு பேருக்கு வீட்டுக்கு போடுறது, ஒபீஸ்க்கு போடுறது, வெளியே போடுறதுக்கு எண்டு தினமும் ஒரு மலை சேருது..” என்று யதார்த்தை – உண்மையைச் சொன்னால் –
“அதுக்கென்ன செய்யிறது? போடாம வெளியே போகட்டுமா?” என்று மறுத்தான் கிடைக்கும்.
போதாக்குறைக்கு – “ஒரு நாளாவது சிங்க்ல பாத்திரம் இல்லாம இருக்கா? ஏனிப்பிடிக் குவிஞ்சு போய்க் கிடக்கு?” என்ற கேள்வி வேறு.
“ரீ குடிச்ச கப், சமைச்ச பாத்திரங்கள், சாப்பிட்ட தட்டுகள் என்ற குறைஞ்சது அஞ்சு தடவ பாத்திரம் கழுவுகிறேன்.. கை வலிக்குது..” என்று நிலைமையைச் சொன்னால்…
“அப்பப்ப கழுவினா இவ்வளவு சேரவே சேராதே.. நீ சோம்பேறி. அதுதான் இப்பிடி… எங்கட அம்மாவும் அஞ்சு ஆறு பிள்ளைங்களைப் பெத்து வளர்த்து ஆளாக்கினவாதான். ஒரு நாள் கூட இப்படியெல்லாம் புலம்பினதே இல்லை” என்று கிடைக்கும் பதில்.
“அம்மாவுக்கு ஏதோ அவசரமாம்.. கொஞ்சம் பணம் அனுப்பினேன்” என்றால் –
“யாரை கேட்டு அனுப்பின? நீயும் உழைக்கிறாய் என்ற திமிர்தானே!” என்பார்கள்.
இப்படியே உன்ரை சமையல் போல வருமா என்று ஏமாற்றித் தந்திரமாக ஆதிக்கம் செய்வார்கள். அல்லது சமைக்கிறதுதான் ஒரே வேலை. அதைக் கூட உருப்படியா நீ செய்ய மாட்டியா? என்று திட்டி ஆதிக்கம் செய்வார்கள். ஒன்று உழைக்கும் மனைவியிடம் தந்திரம் செய்வது. அடுத்தது, வீட்டில் இருக்கும் மனைவியிடம் அதிகாரம் செலுத்துவது. சில விதிவிலக்குகள் காய்கறி நறுக்கி கொடுப்பது, தேங்காய் துருவிக் கொடுப்பது என்ற ஏமாற்றும். இப்படியே சம்பளமில்லாத வேலைக்காரிகளை அம்மா அக்கா மனைவி தோழி என்று கொஞ்சி, குலாவி அவர்கள் வேலை செய்ய மட்டுமே பிறந்தவர்கள் என்று அவர்களையே நம்ப வைத்து அல்லது அப்படி ஏற்க வைத்து காரியம் பார்க்கிற ஆண்களின் உலகத்தை – குடும்பம் என்ற அமைப்பின் சீர்கேட்டை உடைக்கிறது The Great Indian Kitchen. பெண்களைப் புரிந்து கொள்ள மறுக்கும் அவர்களுடைய உணர்வுகளை மறுதலிப்போரை கேள்விகளின் முன்னே நிறுத்துகிறது. வேறு யாரையுமல்ல, உங்களைத்தான்.