இலக்கு வைக்கப்படும் மட்டக்களப்பின் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள்

இலக்கு வைக்கப்படும் மட்டக்களப்பின் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள்

   — பார் மைந்தன் —   

இன்றைய நிலையில் தமிழ் தேசிய அரசியல் பேசுவது என்பது ஆபத்தை நோக்கிய, தனிநபர் தாக்குதலை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்ற போக்காக மாறிவருகின்றது. மாற்று அரசியல் அல்லது அபிவிருத்தி அரசியல்வாதிகளினதும் அதன் ஆதரவாளர்களினதும் இலக்குகள் கார்த்திகை மாதத்துக்கு பின்னர் தமிழ் தேசிய அரசியல் பேசுபவர்களை சுட்டி நிற்கின்றன. 

தமிழ் தேசிய உணர்வுள்ள இளையோரை குறிவைத்து நகர்த்தப்படும் அடக்குமுறைக்கு இந்த மாற்று அரசியலை முன்னெடுப்போரின் பங்கு இருப்பதை கார்த்திகை மாதத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவங்கள் உணர்த்தியுள்ளதை அதனுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டோர் சார்பில் கூறியதை அறிய முடிந்தது. 

எவ்வாறு இருந்த போதிலும் அதனை மட்டக்களப்பு சார் ஊடகங்களோ அல்லது புத்திஜீவிகளோ அது தொடர்பில் பேசக்கூட தயங்கியது போலவே எண்ணத்தோன்றுகின்றது. 

ஏன் அபிவிருத்தி அரசியலை ஆதரிக்கும் எழுத்தாளர்களை கொண்டுள்ள அரங்கம்‘ கூட வாய் திறக்கவே இல்லை. மாறாக அது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பேச்சை வேறுதளத்தில் நின்று பேசவே விரும்பியது. 

அரங்கம் பேசியது அவசியமானதே, ஆனாலும் அந்தப்பேச்சில் இவ்வாறான விடயத்தை அவசியமற்றது போலக்காட்ட நினைத்தது போலவே அரங்கத்தின் கட்டுரை பட்டும் படாமலும் தொட்டுச்சென்றதை நன்கு உற்று நோக்குவோர் புரிந்த கொள்வர். 

இது ஒருபுறம் இருக்க, தமிழ் தேசிய அரசியலை பேச நினைத்தாலே அதை எதிர்க்கும் தரப்பு அவர்களை யாழ் அடிமைவாதிகள் என்ற விமர்சனத்தை முன்வைத்து செல்லும் பழக்கத்தை வளர்த்து வருகின்றனர். அதை அரங்கமும் ஆங்காங்கே பிரதேசவாத கருத்துக்கு முன்னுரிமை கொடுத்து ஊக்குவிப்பதையும் காணவே முடிகின்றது. 

அதேவேளை இன்று இன்னொரு கருத்தையும் முன்வைத்து தங்களை புனிதப்படுத்த நினைக்கின்றனர்.  

அதாவது தமிழ் தேசியத்தை எதிர்ப்போர் எல்லோரும் புனிதர் என்று புனிதப்படுத்திக்கொள்ள பிரதேசவாதத்தை பேசிக்கொண்டு தங்களை தாங்களே துரோகிகள் என்று கூறி எதிர்க்கருத்தை எதிர்கொள்ள முனைகின்றனர். 

இங்கே ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். துரோகம் என்பதன் அர்த்தம் என்ன

நம்பிக்கைக்கு மாறாக செயல்படும் போதே அது துரோகம் ஆகின்றது. அந்தவகையில் பல துரோகிகள் மட்டக்களப்பிலும் இருப்பதை நாங்கள் மனசாட்சியுடன் சிந்திப்போமானால் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பெறுவோம். 

அதேபோல தன் இனத்தின் விடுதலைக்காக ஓர் இனம் போராடும் நிலையில்அதற்கு எதிராக செயற்படும் அந்த இனத்தை சார்ந்தோர் துரோகி என்று கூறுவது உலக வழக்கம். எனவே இவற்றில் பிரதேசவாதத்தை திணித்து, போலியாக பிரச்சாரத்தை முன்னெடுப்பதை அறிவார்ந்த சமுகம் ஏற்றுக்கொள்ளாது. 

அது ஒரு புறம் இருக்க இன்று ததேகூ சார்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டை தொடர்ந்து விமர்சிக்கும் போக்கு ஆரோக்கியமன்று என்பதை விமர்சகர்கள் புரிந்துகொள்ளும் நிலை எப்போது உருவாகும். 

இங்கே ஓர் பொய்யான பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகின்றது. தமிழ் தேசிய அரசியல் என்பது போலியான கோரிக்கை அல்ல. அது காலத்தேவை கொண்டே வலுப்பெற்றது. அதன் தேவை இன்றும் தமிழ் சமுகத்தை விட்டு போகும் அவசியம் உருவாகவில்லை என்பதை தற்கால செயற்பாடுகள் உணர்த்தி வருகின்றன. 

அதாவது தமிழரின் தொல்லியல் சார் வரலாறு அபகரிப்புதமிழர் பிரதேசத்தை கையகப்படுத்தும் வியூகங்கள் என தமிழருக்கு எதிரான இனத்துவ எதிர்ப்பு அரசிடம் என்றும் மாற்றம் காணவில்லை. இதை முழுமையான இணக்க அரசியலை விரும்பி செயற்படும் அரசியல்வாதிகளால் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கும் நிலை இல்லாத நிர்க்கதி நிலையில் இருப்பது அவர்களது தலைமறைவான அரசியல் போக்கும் அவர்களது செயற்பாடு உணர்த்தி வருகின்றது. 

ஒருவகையில் தமிழ் தேசிய அரசியல் வீழ்ச்சிக்கு தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளின் செயற்றிறன் அற்ற நிலை மற்றும் அவர்களிடம் காணப்படும் சுயநலப்போக்கும் காரணம் எனக்கூறப்பட்டாலும், அதை சுயநலமற்ற இளையோர் தம் கைகளில் எடுத்துச்செயற்பட வேண்டும். 

மாறாக தமிழ் தேசிய கொள்கை போலியானது என்ற விமர்சனம் போலியானது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

நாங்கள் தமிழ் தேசியத்துக்காக இழந்தவை சொல்லிலடங்காதவை. எனவே அந்த இழப்புக்கள் போலியான நோக்கத்துக்காக தியாகித்தவை அல்ல. தியாகித்தவர்களும் தத்தமது தேவை கருதி சென்றவர்களும் அல்ல. 

எவ்வாறு இருத்த போதும் இன்றைய தமிழ் தேசிய அரசியலில் இருப்போர் எவ்வாறு சுயநலவாதிகள் என்று விமர்சிக்கப்படுகின்றனரோ அதைவிட மோசமான சுயநலவாதிகளே இன்றைய அரசுடன் சேர்ந்து தத்தமது சுய அரசியலை செய்து கொண்டிருப்போரும் சுயநலவாதிகளே ஆவர். 

குறிப்பாக தமிழருக்கு எதிரான அடக்குமுறைக்கு அரசுடன் இருப்போர் மௌனித்து அல்லது அரசை பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதை ஆங்காங்கே காணவும் முடிகின்றது. 

அண்மையில் நடந்த தொல்லியல் ஆக்கிரமிப்பு சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் தலையிட்டதை முகநூல்கள் ஊடாக அவதானிக்க முடிந்தது. 

எனவே இன்றுள்ள நிலையில் ஊடகங்களும் ஊடகவிலாளர்களும் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுப்போரை மட்டும் விமர்சனத்தை மாத்திரம் முன்வைத்து செல்வது என்பது தமிழ் சமுகத்துக்கு ஆரோக்கியத்தை கொடுக்காது. மாறாக எங்கு தப்பு நடக்கின்றதோ அதை தட்டி கேட்கவும், தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தோள் கொடுக்கும் வகையிலும் செயற்பட வேண்டும். அதுவே எமது சமுகத்துக்கு ஆரோக்கியமாக அமையும்.